தம்பி சண்முகசுந்தரத்தின் கவிதை வரிகளில் “போராளிகளின் துப்பாக்கிகளில் இருந்து வரும் தோட்டாக்களுக்கு நிகரான வலிமை கொண்டுள்ளன”. எட்டிப் பார்க்கும் தூரத்தில் இருக்கும் நம் சொந்தங்களின் அவலங்களைத் தீர்க்க முடியவில்லையே என்ற இயலாமையில் மண்ணுக்கேற்ற வீரமும் மானமும் தம்பியின் கவிதைகளில் இயல்பாய் இருக்கின்றன.
நான் சிறுவயதில் என் சொந்த மண்ணிலிருந்து என் ஈழ உறவுகளை எப்படிப் பார்த்தேனோ அதே பார்வையில் என் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இந்த கவிதை வரிகள் அமைந்துள்ளது.
முகவை மண்ணின் உப்புக்கலந்த காற்று என் உறவுகளின் உணர்வை பிரதிபலிக்கும். அந்த உப்புக்கான உணர்ச்சியோடு தம்பியின் கவித்துவம் அமைந்துள்ளது.
ஓயாத அலைகளென ஆரம்பித்து ‘சங்கார நிசமென சங்கே முழங்கு’ என்று என் மூத்தவன் பாரதிதாசன் சொல்லுவதைப் போல் ஈழ மக்களின் போராட்டங்களின் நியாயங்களையும் தீர்வையும் அழகாய் சொல்லியுள்ளார்.
”எத்தனை உயிர்களை கொடுத்தோம்
இன்னும்
எத்தனை உயிர்களை வேண்டுமென்றாலும்
கொடுப்போம்
ஒருபோதும் நிற்காது
ஓயாத அலைகள்”
என்று தமிழரின் வீரத்தைப் பறைசாற்றியுள்ளார்.
காந்தி தேசம் கொடுத்த ஆயுதத்தில் புத்த தேசம் குண்டு போட்டு கொன்றது காந்தியும், புத்தனும் குற்றவாளிகளாய், தமிழ் மக்களின் நீதிமன்றத்தில், காந்தியும் புத்தனும் எங்களுக்கு உதவவில்லை. அதனால் தான் பகத்சிங்கை துணைக்கு அழைத்தோம் என்று நம் பக்கத்தில் உள்ள நியாயத்தையும் காந்தி தேசத்திலிருந்து புத்த தேசத்திற்குச் சொல்லியுள்ளார்.
சிங்களவின் இனப்பசிக்கு எங்களின் உரிமைகளை இழிந்தோம், உடமைகளை இழந்தோம், உயிரையும் கொடுத்தோம். ஆனால், இன்னும் இந்த தேசங்களின் தனி நாடு கேட்பது தவறென்கிறது என்பதை தம்பியின் வரிகள் அழகாய் சொல்லுகிறது.
“தனிநாடு கேட்பது தவறா ?
அப்படியானால்
உலக நாடுகளே ஒன்றினையுங்கள்”
தம்பியின் இந்த வரிகளில் எங்களின் கோபமும் எங்களின் நியாயமும் தென்படுக்கின்றது.
தம்பி உன் உணர்வுகளோடு இறுதியாய் எங்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்தைப் போல் அழகாய் இந்த கவிதைகளுக்கு முடிவுரை கொடுத்துள்ளாய்.
”இன்று
நாளை
நாளை மறுநாளென்று
என்றேனும்
ஒரு நாள்
நடைமுறைக்கு வரும்
தனி நாடென்னும்
நேற்றைய தீர்மானம்”
என்று தம்பி சண்முக சுந்தரத்திற்கு வாழ்த்துக்கள்.
என்றும் உங்கள் அன்பு உடன்பிறப்பாய்,
சீமான்
**
நாகரத்னா பதிப்பக சார்பில் கருவை சு.சண்முகசுந்தரம் எழுதிய "பிணம் தின்னும் தேசம்" - ஈழ கவிதை நூலுக்காக செந்தமிழன் சீமான் அவர்கள் எழுதிய அணிந்துரை.
No comments:
Post a Comment