நான் பாரதியானால்
நடிகன் பிறந்தநாள் கொண்டாடும் இத்தினத்தில்
ஒரு நாள் தமிழுக்காக உழைக்கச் சொல்வேன் !
நான் பாரதியானால்
நெய்வேலி மின்சாரம் போல்
கடனாய் கொடுத்த வீரத்தை
மீண்டும் உடம்பில் பாய்ச்சிடுவேன் !
நான் பாரதியானால்
ஆறு ரீட்டர் பூகம்பம் தாங்காத கட்டிட நடுவில்
அணு உலை எழுப்புவதை தடுத்திடுவேன் !
தமிழன் அராய்ச்சி பொருளாய் மாறுவதை
வேடிக்கை பார்க்க மாட்டேன் !
நான் பாரதியானால்
நினைவுச் சின்னங்களாக இருக்கும் இடங்களை
மக்கள் நினைவலையில் பதியவைத்திருப்பேன் !
நான் பாரதியானால்
மக்கள் புரட்சி
ரஷ்ய, அரபு நாடுகளில் மட்டுமல்ல
தமிழனுக்கும் பொதுவென்று
உணர்த்தியிருப்பேன் !
நான் பாரதியானால்
தமிழனை தமிழனே வஞ்சிக்கும் சூழலில்
தமிழனுக்கு ஒரு நாட்டை உருவாக்கி தந்திருப்பேன் !
நான் பாரதியானால்
ஆடை குறைப்பில் போட்டிகள் நிறுத்தி
அறிவை வளர்க்கும் போட்டிகள் நட்த்துவேன் !
பொருட்காட்சியில் இருக்கும் தமிழ் பாரம்பரியத்தை
இன்று வரை வாழ வழி வகுத்திருப்பேன் !!
நான் பாரதியானால்
டாஸ்மார்க் அரசு நடத்துவதை நிறுத்தி
விவசாயத்தை அரசு நடத்தச் சொல்வேன் !
மூடு விழா மட்டும் அரங்கேரும் வேளையில்
திறப்பு விழா செய்ய அரசுக்கு கட்டளையிடுவேன் !
நான் பாரதியானால்
தமிழனை ‘தமிழன்’ என்று உணர வைப்பேன் !!
”நான் பாரதியானால்”
என்ற கற்பனைக்கு இங்கு முற்றுபுள்ளி வைக்கிறேன்
என் வீட்டுக்கு
ஆட்டோ அடியாட்கள் வரவிரும்பவில்லை
பைத்தியக்காரன் என்று
பகடி வார்த்தைகளை கேட்ட விரும்பவில்லை
இறுதியாக,
என் மரணத்திற்கு
பதினொரு பேர் வர விரும்பவில்லை
நான் நானாக இருக்கிறேன்
பாரதி என்றும் சரித்திரமாக இருக்கட்டும் !!
11.12.11 அன்று கன்னிமாரா நூலகத்தில் நம் உரத்தசிந்தனை அமைப்பு பாரதியார் பிறந்தநாளுக்காக நடத்திய கவியரங்கில் வாசித்த கவிதை. கவிதைக்கு ரூ.200/- பரிசு கிடைத்தது.
No comments:
Post a Comment