சென்னை புத்தக கண்காட்சி நெருங்க நெருங்க, எல்லா பதிப்பகங்களும் மண்டை உடைத்துக் கொள்வது “அடுத்து நாம் என்ன புத்தகம் போட வேண்டும்?” என்பது தான். பதிப்பாளரிடம் அதிகம் கேட்கப்படும் கேள்வி, “ என்ன புத்தகங்கள் வெளியீட போறீங்க?” என்பது தான்.
நான் அதிகம் மண்டை உடைத்துக் கொள்ளவில்லை. காரணம், பதிப்பகத்தை தொழிலாக நினைக்கவில்லை. பதிப்பகத்தில் நான் அதிகம் கவனம் செலுத்தவில்லை. இரண்டாவது கேள்விக்கு பதில் இரண்டு புத்தகம். இரண்டுமே கவிதை.
விழிப்பறிக் கொள்ளை - உமா சௌந்தர்யா
பக். 80, விலை. ரூ.40
ஒரு பதிப்பகம் கவிதை நூல் வெளியீட முடிவு செய்ய பிறகு, கண்டிப்பாக ஒரு காதல் கவிதை தொகுப்பு நூல் அவர்கள் வெளியீட்டு பட்டியலில் இருப்பது நல்லது. புத்தக கண்காட்சிக்கு காதல் கவிதைக்கு என்று ஒரு தனி இளைஞர்கள் கூட்டம் வருகிறது. யார் எழுத்தாளர்கள் என்று பார்ப்பதில்லை. காதல் கவிதை புத்தகங்களை வாங்கிவிடுகிறார்கள் அல்லது அங்கேயே முழுமையாக படித்து வைத்து விடுகிறார்கள்.
அப்படி காதல் கவிதை வெளியீடலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது நண்பரும் குறும்படம் இயக்குனருமான பொன்.சுதா மூலம் அறிமுகமானவர் உமா சௌந்தர்யா அவர்கள். “காதல் கவிதை” நூல் என்றது பெரும்பாலும் ஆண்கள் தான் எழுதியிருக்கிறார்கள். பெண்கள் பார்வையில் காதல் கவிதை நூல்கள் மிக குறைவாகவே வந்துள்ளது.
காதல் கவிதை பெண் பார்வையில் படிக்கும் போது ஸ்வாரஸ்யமாக உள்ளது. குறிப்பாக தொகுப்பில் என்னை கவிர்ந்த கவிதை.
எனக்காக நீ செய்த
எதுவும் எனை
வசீகரிக்கவில்லை
எல்லாம்
எனக்காகவே செய்தாய்
என்பதைத் தவிர.
**
நுணலும் தன்
வாயால் கெடும்
நானும்தான் உன்
காதலை சம்மதித்து
ஆண் பார்வையில் வெற்றி பெறும் காதல் கதை, பெண் பார்வையில் வெற்றி பெறுவதில்லை. (உதாரணம், அழகி, பூ படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்). காதல் ஆண் கோணத்தில் வாசித்த வாசகர்களுக்கு பெண் கோணத்தில் இருந்து வாசிக்க இந்த கவிதை புத்தகம் உதவும் என்று நம்புகிறேன்.
பிணம் தின்னும் தேசம் - கருவை சு.சண்முகசுந்தரம்
பக். 80, விலை. ரூ.40
ஈழப் போர் முடிந்து விட்டது என்று எதிரிகள் குரல் எழுப்பினாலும் இன்னும் முடியவில்லை என்று தமிழகத்தின் குரல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஈழ தொடர்பான கட்டுரை நூல் அல்லது விமர்சன நூல் கொண்டு வர வேண்டும் என்று எண்ணிய போது, தம்பி கனியம் செல்வராஜ் மூலம் அறிமுகமானவர் கருவை சு.சண்முகசுந்தரம்.
கவிதை நூல் என்று சண்முகசுந்தரம் சொல்லும் போது நான் ஆர்வமில்லாமல் இருந்தேன். அவர் எழுதியதை வாங்கும் போது கூட எனக்கு ஆர்வமில்லை. படித்தவுடன் கண்டிப்பாக இந்த நூலை நான் தான் வெளியீட வேண்டும் என்று முடிவே செய்துவிட்டேன். பல பக்கங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளை விட, இவரின் ஐந்து வரி கவிதைகள் இதயத்தை பதம் பார்த்துவிடுகிறது.
குறிப்பாக கீழ் காணும் கவிதைகள்...
மனைவியைப் பிரிந்து
துறவு பூண்டான்
புத்தன்
பூட்டிய வீட்டிற்குள்
அத்துமீறும்
புத்தனின் பிள்ளைகள்
**
பசி வந்தால்
பத்தும் மறக்குமாம்
மறக்கவில்லை
நாங்கள்
தனிநாடு.
**
தமிழன் என்பதால் தாக்கப்பட்டோம்
அதைக்கண்டு
நாங்கள் வளர்த்த மாடுகள்
”அம்மா!” வென்று கத்தி
கண்ணீர் வடித்தன.
மாடுகளையும்
அவர்கள்
விட்டபாடில்லை.
**
இன்னும் பல கவிதைகள் தொட்டாக்களாக வரவிருக்கிறது.
“ஓயாத அலை” என்ற தலைப்பில் வந்த கவிதை தொகுப்பை, “பிணம் தின்னும் தேசம்” என்று தலைப்பை மாற்றினேன். நெல்லை ஜெய்ந்தா, அப்துல் காதர் அவர்கள் அணிந்துரையை பக்கத்தின் காரணமாக குறைக்க வேண்டியதாக இருந்தது. மற்றப்படி, சண்முகசுந்தரத்தின் படைப்பில் பதிப்பாளராக நான் கை வைக்க மனம் வரவில்லை. நாகரத்னா பதிப்பகத்தில் வெளிவந்த நூல்களில் எனக்கு மிகவும் மன நிறைவு கொடுத்த நூல் "பிணம் தின்னும் தேசம்” தான். கண்டிப்பாக இந்த நூலுக்கு ஒரு விருது உண்டு என்று என் உள்மனம் சொல்கிறது.
***
இரண்டு கவிதை நூலும், சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்படுகிறது. நூல் வெளியீட்டு பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
நூல் வாங்க விரும்புபவர்கள் tmguhan@yahoo.co.in என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
3 comments:
வாழ்த்துக்கள் குகன்..
நல்ல வெளியீடு வாழ்த்துக்கள் குகன்.
வாழ்த்துக்கள் குகன்
Post a Comment