குளிர் காலத்தின் அதிகாலையில், ஜன்னல் திறந்தும் உள்ளே அனுமதி கேட்காமல் நுழையும் பனிக்காற்று போல, கவிதையும் எழுதுபவரின் அனுமதி கேட்காமல்தான் படைப்பாய் பரவும்.
கவிதையின் சௌகரியமே இஷ்டத்திற்கு வளைத்து நெளித்துக் கொள்ள து சம்மதிப்பது தான். கவிதையைப் போல சொன்னபடி கேட்கும் குழந்தையும் இருக்க முடியாது. கவிதையைப் போல சொல் பேச்சு கேட்காத குழந்தையும் இருக்க முடியாது.
விழிப்பறிகொள்ளை புத்தகத்தை எழுதிய உமா சௌந்தர்யா, அவருடைய கணவர் மூலமாக பற்பல ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு அறிமுகமானவர். எனது தந்தையுடன் நூற்பாலையில் சேர்ந்து பணிபுரிந்த இனிய நண்பர் தான் உமா சௌந்தர்யாவின் கவிதைகளுக்கும் இன்று நண்பராய் இருக்கின்ற அவரது கணவர் திரு. முருகேசன்.
ஒரு பெண் குடும்பத்தின் பணைப்புகளுக்குள் மூழ்கி கிடக்கும் போது, தளக்குள் இருந்து ஏதோ ஒரு தனித்துவத்தை உலகின் பார்வைக்கு பதிவுசெய்வதற்காக வெளியே வருவது மிக மிக ஆரோக்கியமாக, விழி அரங்கங்கள் நிரம்ப, கைதட்டல்களால் வரவேற்கக் கூடிய ஒன்று.
அலுவலகங்களோ, குடும்பங்களோ சம்பாத்தியம் இல்லாத அல்லது சமாத்தியத்துடன் கூடிய கை விலங்குகள்தான் பெண்களுக்கு. அதையும் மீறி, ஆத்மாவின் பாடலை படைப்புகளாய் வெளிவரச் செய்யும் பெண்மைகள் போற்றப் பட வேண்டியவை.
இந்த கவிதை தொகுப்பிற்குள்,
"என் வானம்
திரண்டு கிடக்கிறது
உன் நினைவுகள்
எப்போது வேண்டுமானாலும்
பெய்யாலாம்
விழிகளில் மழையாய்..."
என்ற கவிதையில் இதயமும் சேர்ந்து நனைந்தது.
"சிதைந்து போன
இதயத்தை தூக்கிக் கொண்டு
ஒடோடி வருகிறேன்
உடைந்த உன் மனதை
அள்ளிக்கொண்டு அப்போது தான்
சென்றதாய்
அக்கம் பக்கம் தகவல்
திரும்பும் வழியில்
கிடைக்கலாம்
இன்னொரு இதயம்
உனக்கோ எனக்கோ"
இந்த தொகுப்பில் பளிச்சென்று மனதில் பதியம் போட்டுவிட்டு ஒடிப்போன ஒரு ஆழமான நிகழ்ச்சியின் ததும்பல் இந்த கவிதை.
"குவளையில் தேநீர்
அருந்தும் சாக்கில்
விழிகளால் என்னை
உறுஞ்சும் உன் உயிர்"
இந்த கவிதையில் சொற்களுக்குள் உணர்ச்சியை பிசைந்து தருகிற கலப்பியல், உமா சௌந்தர்யாவிற்கு கை வந்திருக்கிறது. அத்னால்தான் தலைப்பிலே கூட, வழிப்பறிக் கொள்ளை என்ற வழக்கு வார்த்தையை உடைத்து, விழிப்பறிக் கொள்ளை என்ற பெயரை உருவாக்க முடிந்திருக்கிறது.
வார்த்தைகளில் புதிது செய்வது ஒரு படைப்பாளனுக்கு மிக மிக அவசியம். அப்படி அழகான திரிபுகள் பல, இத்தொப்பிலே வாசல் கோலத்தின் புள்ளிகளை போல, மிக நேர்த்தியாய் வைக்கப்பட்டிருக்கிறது.
மழைக்காலத்தில் சில்லென்று ஆடிக்கொண்டிருக்கும் துளசி இலைகள் மாதிரிதான் நல்ல கவிதைகளை படிக்கும்போது மனதிற்குள் ஒரு கம கம வாசமும், சில்லென்ற மனோநிலையும் பதமாக உருவாகும். விழிப்பறிக் கொள்ளையில் அப்படி ஒரு மனோநிலை உருவாகிறது.
தொடர்ந்த எழுத்து முயற்சி இன்னும் அழகான படைப்புகளை நோக்கி உமா சௌந்தர்யாவை அழைத்துச் செல்லும் என்று நம்புகிறேன். அவருடைய முதல் படைப்பிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
நம்பிக்கையுடன்,
பா.விஜய்
**
நாகரத்னா பதிப்பக சார்பில் உமா சௌந்தர்யா எழுதிய "விழிப்பறிக் கொள்ளை" - காதல் கவிதை நூலுக்காக வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்கள் எழுதிய அணிந்துரை.
1 comment:
திரும்பும் வழியில்
கிடைக்கலாம்
இன்னொரு இதயம்
உனக்கோ எனக்கோ"
அருமை நன்றி .
Post a Comment