பிரபல கார்ப்ரேட் நிறுவனம் ஒரு நடிகனுக்கு பத்து கோடி சம்பளம் கொடுத்து பெரிய அளவில் படம் தயாரிக்கிறார்கள். அந்த படமும் பெரிய வெற்றி படமாக அமைந்து விடுகிறது. அதன் பிறகு அந்த நடிகனின் சம்பளம் பத்து கோடியாக மாறிவிடுகிறது. சிறு தயாரிப்பாளர்கள் அந்த நடிகனிடம் நெருங்க கூட முடியாது. இப்படி ஒவ்வொரு நடிகனின் சம்பளம் கார்ப்பேரட் நிறுவனத்தின் உதவியால் சம்பளம் உயர்வதை பார்த்த சிறு தயாரிப்பாளர்கள் புதுமுகங்களை வைத்து படம் எடுக்கும் சூழ்நிலை வருகிறது. ஒரு சில தயாரிப்பாளர்கள் போட்டி போடாமல் ஒதுங்கி விடுகிறார்கள். சில வருடங்கள் பிறகு அந்த நடிகனை வைத்து தயாரித்த கார்ப்ரேட் நிறுவனத்தின் படங்கள் தோல்வி அடைகின்றன. அந்த கார்ப்ரேட் நிறுவனம் தயாரிப்பு செலவை குறைக்க நடிகனின் சம்பளத்தை குறைக்கிறார்கள். அந்த நடிகன் தன் சம்பளத்தை பத்து கோடியில் இருந்து ஒரு பைசா கூட குறைக்க மனமில்லை. அதனால், அந்த கார்ப்ரேட் நிறுவனம் புதுமுகங்களையும், குறைவாக சம்பளம் வாங்கும் நடிகர்களை வைத்து படம் எடுக்கிறார்கள். எந்த தயாரிப்பாளர்களும் அந்த நடிகனின் சம்பளத்தை பார்த்து அவரை நெருங்குவதில்லை. இனி திரையுலகில் அவர் நீடிக்க வேண்டும் என்றால் அந்த நடிகன் தன் சம்பளத்தை குறைத்தாக வேண்டும். அது தான் அவனுக்கு இருக்கும் ஒரே வழி. இப்போது இருக்கும் மென்பொருள் பொறியியலாளர்களின் நிலைமையும் அதுவே !
மேலே குறிப்பிட்டுள்ள நடிகனின் சம்பளம் ஏற்றமும், இறக்கமும் காலம் காலமாக நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால், மென்பொருள் பொறியியல் வல்லுநர்கள் இப்படி ஒரு வீழ்ச்சியை சந்திப்பது இரண்டாவது முறை. (ஒரு சில இளைய பொறியியலாளர்களுக்கு 2000,2001 ஆண்டில் இப்படி ஒரு வீழ்ச்சி தெரிந்திருக்க வாய்ப்பில்லை). பல கார்ப்ரேட் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு இளசுகளுக்கு சம்பளத்தை அதிகமாக கொடுத்தனர். அதிக பணம் வருவதால் கார், வீடு, மனை என்று வங்கி கடன் மூலம் வாங்கிவிட்டனர். இப்பொது இருக்கும் பொருளாதார வீழ்ச்சியால் எந்த நிறுவனத்தாலும் அதிக சம்பளம் கொடுக்க முடியவில்லை. கொடுக்கும் சம்பளத்தில் வங்கி கடன், செல்வுகளுக்கு போதவில்லை. விளைவு... தற்கொலை.
ஐந்து எண்களில் சம்பளத்தை வாங்கியவர் மீண்டும் நிலைமை சீராகும் வரை நான்கு எண்கள் சம்பளத்தை வாங்க தோன்றுவதில்லை. மனம் சிறு குழந்தையை போல் ஐந்து எண்கள் நாடுவதால் ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் உழியர்களை அனுப்பிவிட்டு குறைவான சம்பளத்தில் குறைந்த தகுதியுள்ளவனை தேர்வு செய்து பயிற்சி கொடுக்கிறார்கள். அனுபவமுள்ள ஒருவனுக்கு கொடுக்க படும் சம்பளத்தை ஆறு புதியவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். இது போன்ற சம்பளங்கள் ஒர் இரு நடிகர்களுக்கு நடக்கும் போது பெரிதாக தெரிவதில்லை. ஆனால், ஒட்டு மொத்த மென்பொருள் துறைக்கே இப்படி ஒரு பாதிப்பு வந்ததால் எல்லோருடைய பார்வையும் இதன் மேல் இருக்கிறது.
இந்திய பொருளாதாரமே சரிவை சந்திக்கும் போது மென்பொருள் பொறியியலாளர்கள் தங்கள் சம்பளத்தை குறைக்கப்படும் சூழ்நிலையில் தள்ளப்படுகிறார்கள். அப்போது தான் அவர்கள் வேலை செய்யும் நிறுவங்கள் இயங்க முடியும். இன்னும் பழைய சம்பளத்தை எதிர்பார்த்தால் ஜெட் ஏர்வே, சதியம், டி.சி.எஸ் என்று உழியர்களை வெளியே அனுப்பும் நிறுவனத்தின் பட்டியலிட வேண்டியது தான்.
சரி ! இன்னும் எனக்கு ஐந்து எண் சம்பளம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இனிப்பு, சிற்றுண்டி போன்ற கடைகள் வைக்கலாம். கிண்டலாக சொல்லவில்லை. கிருஷ்ணா ஸ்வீட்ஸ், மிட்டாய், அடையார் ஆனந்த பவன் ஆரம்பமே சின்ன இனிப்பு கடைதான். சரவண பவன், அஞ்சப்பர் ஆரம்பம் சிற்றுண்டி தான். இவர்கள் வளர்ச்சி அண்ணா எழுதிய 'ஒர் இரவு' போல் வந்து விடவில்லை. இந்த நிலையை தொட அவர்களுக்கு ஒரு தலைமுறை உழைப்பு தேவைப்பட்டது. இன்று அந்த ஸ்தாபனத்தின் இரண்டவாது, மூன்றாவது தலைமுறையை பார்க்கிறோம்.
அவர்களை போல் களத்தில் இறங்கி கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். உங்கள் உழைப்பின் பலனை அடுத்த தலைமுறை அனுபவிக்கட்டும். இந்த தலைமுறையில் நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் சம்பளத்தை குறைத்து கொள்ள தான் வேண்டும். அதுவும் இல்லை என்றால் மென்பொருள் துறையை விட்டு வெளியே வந்து வேறு துறையில் கொடுக்கும் நியாயமான சம்பளத்தை வாங்கி வாழ்க்கை நடத்த வேண்டியது தான். இந்த அறிவுரை உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் தான். நானும் ஐந்து எண்கள் சம்பளம் வாங்கும் (வாங்கிய) மென்பொருள் பொறியியலாளர் தான்.
No comments:
Post a Comment