இப்போது தான் 2007 ஆண்டு முடிந்தது போல் இருந்தது. உடனே 2009 ஆம் ஆண்டு நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் என்றால் நம்ப முடியவில்லை. வேகமான உலகத்தில் கால சக்கரம் அதி வேகமாக சுழன்றுக் கொண்டு இருக்கிறது. தமிழ் சினிமாவின் வேகம் உலக தரத்தை நோக்கி செல்லும் முயற்சியில் ஈடுப்பட தொடங்கியிருக்கிறது. கிராமத்தில் நிலத்தை விற்று படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் எல்லாம் மறைந்து பல கார்ப்ரேட் நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் சினிமா தயாரிப்பில் நுழைந்து இருப்பது இந்த ஆண்டு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பல நடிகர், நடிகைகளின் முகத்தில் சந்தோஷம் வர தொடங்கியிருக்கிறது. சரி ! இந்த வருடம் வெளிவந்த படங்களை ஒரு பார்வை பார்ப்போம்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினி, கமல் படம் ஒரே ஆண்டில் வெளிவந்துள்ளது. நடிப்பில் மட்டுமே ரஜினியை ஒவர்டேக் செய்த கமல், இந்த ஆண்டு வசூலிலும் முந்திவிட்டார். கமலின் 'தசாவதாரம்' இந்த ஆண்டு மிக பெரிய வசூல் குவித்த படம் என்று சொல்ல வேண்டும். பாடல் வெளியீட்டு விழாவிற்கு ஜாக்கிச்சானை வரவழைத்து உலகின் முழு பார்வையை தமிழ் சினிமா மீது பட வைத்திருக்கிறார். (பாவம் ரவிசந்திரன் ! 'Oscar' என்ற தன் நிறுவனத்தின் பெயரை 'Ascar' என்று மாற்ற வேண்டிய நிலைவந்தது.)
பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்திய ரஜினியின் 'குசேலன்' படம் பெரிய தோல்வியை தழுவியது. 'பாபா' படத்திற்கு பிறகு ரஜினிக்கு தோல்வி அடைந்த படம். சில அரசியல் காரணங்களாலும், ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததாலும் 'குசேலன்' தோல்விக்கு காரணம் என்று சொல்லலாம். ( படத்தை வாங்கியவர்கள் நிஜமாகவே குசேலனாக மாறிவிட்டதாக கேள்வி)
இந்த வருடம் ரஜினி படமே தோல்வி அடைந்து விட்டதால் பலர் களத்தில் குதிக்காமல் இருந்துவிட்டனர். பிரஷாந்த், விக்ரம், ஆர்யா ( பீமா மற்றும் ஓரம் போ நீண்ட நாள் கிடப்பில் இருந்து வெளிவந்த படம்) போன்றவர்கள் இந்த வருடம் போட்டியில் இறங்கவில்லை. விஜய் (குருவி), அஜீத் (ஏகன்), விஜய்காந்த் ( அரசாங்கம்), மாதவன் (வாழ்த்துக்கள்), விஷால் ( சத்யம்) போன்ற நடிகர்கள் அட்டடென்ஸ் கொடுப்பது போல் இந்த வருடம் ஒரு படம் மட்டும் நடித்திருக்கிறார்கள். பெரிதாக சொல்லுவதற்கில்லை.
ஜீவாவின் 'தெனாவட்டு', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்' சமிபத்தில் தான் வெளிவந்திருப்பதால் அதன் வெற்றியை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், இந்த படத்தை வெளியிட்டவர்களின் தொலைக்காட்சியில் இதற்கு முதல் இடம் கிடைக்கும் என்பதில் எந்த வித சந்தேகமில்லை.
எப்போதும் இல்லாமல் இந்த வருடம் புதியவர்கள் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்கள். 'சுப்பிரமணியபுரம்' மற்றும் 'சரோஜா' பெரிய நடிகர்கள் இல்லாமல் கதை, திரைக்கதையால் வெற்றி பெற்ற படங்கள். 'காதலில் விழுந்தேன்' முதல் இரண்டு வாரம் நல்ல வசூலை குவித்துள்ளது. 'பொய் சொல்ல போறோம்', 'ராமன் தேடிய சீதை' இந்த வருடத்தின் சிறந்த குடும்ப படங்கள் என்று சொல்லலாம். கதைக்கு முன்னுரை கொடுத்தால், கதாநாயகர்கள் யாராக இருந்தாலும் படம் வெற்றி பெறும் என்பதற்கு இந்த படங்களே உதாரணம்.
தனுஷ்யின் 'யாரடி நீ மோகினி' , 'ஜெயம்' ரவியின் 'சந்தோஷ் சுப்பிரமணியம்' வெற்றிப்படமாக மட்டுமில்லாமல் நல்ல குடும்ப படமாகவும் இருந்தன. ஒரு சில இடங்களில் பெண்களை முகம் சுழிக்க வைத்தாலும் 'அஞ்சாதே' நட்பு, கடமை என்று இரண்டும் கலந்த வெற்றிப் படம்.
நடிகைகளில் பிரியாமணிக்கு பருத்தி வீரனில் நடித்ததிற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. நடிகைக்கு தமிழ் படத்திற்கு என்று கிடைத்திருப்பது நான்காவது முறை. நயந்தாரா கவர்ச்சியில் என்ன புதுமை செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார். மற்றப்படி தமிழ் சினிமா நல்ல நடிகையை தேடிக் கொண்டு தான் இருக்கிறது.
எழுத்தாளர் சுஜாதா, நடிகர் எம்.என். நம்பியார், நடிகை பத்மினி அவர்களின் மரணம் தமிழ் சினிமாவின் துயர பக்கங்களாக இந்த வருடம் இருக்கிறது. அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்.
பழைய வெற்றிய படங்களின் தலைப்பை வைத்து புது படங்கள் வருவதால் அந்த தலைப்பை மட்டுமல்ல பழைய படத்தின் வெற்றியையும் கெடுத்துவிடுகிறது. அடுத்த வருடமாவது சொந்தமாக தலைப்பை யோசித்து படம் வெளியிட்டால் நன்றாக இருக்கும். 2009 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவை எப்படி இருக்கபோகிறது அடுத்த வருடம் பார்ப்போம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் !!
( நன்றி : தமிழ்.சிஃபி.காம்
http://tamil.sify.com/columns/fullstory.php?id=14815216 )
No comments:
Post a Comment