பதிவுலகில் முதல் முறையாக படம் வெளிவரும் இரண்டு வார முன்பே வரும் விமர்சனம்.எப்படியாவது ஒரு பணக்காரனுக்கு காவல்க்காரனாக வேண்டும் என்பது அர்ஜூனின் லட்சியம். அதனால், தன் ஹீரோயிசத்தை பயன்படுத்தி பெரிய தலைகளை கவர நினைக்கிறான். அவன் செய்யும் ஹீரோயிசம் எல்லாம் காமெடி பீஸாய் போகிறது.
பெரிய தாதாவாக இருந்து ரௌடிசத்தை விட்டு தன் குடும்பத்தோடு வாழும் ராஜ்கிரணுக்கு காவலனாக முயற்சிக்கிறான் அர்ஜூன். ராஜ்கிரண் மறுத்தும், பெரிய சிபாரிசுடன் வருகிறான். வேறு வழி இல்லாமல் அர்ஜூனை காவலனாக வேலைக்கொடுக்கிறார் ராஜ்கிரன். ஒரு சந்தர்ப்பத்தில் ராஜ்கிரண் உயிரை காப்பாற்றுகிறான் அர்ஜூன். அதனால், தன் மகள் மீராவின் காவலனாக அர்ஜூனை இருக்க சொல்கிறார்.
மீராவும், அவன் தோழி மித்ராவும் செல்லும் இடமெல்லாம் காவல்காக்கிறேன் என்ற பெயரில் அர்ஜூன் பின் தொடர்கிறான். அவன் தொல்லை தாங்க முடியாத இருவரும் முகம் தெரியாத பெண்ப் போல் அர்ஜூனின் செல்லுக்கு போன் செய்கிறார்கள். அர்ஜூனை காதலிப்பதாக சொல்கிறாள் மீரா. ஆரம்பத்தில் விளையாட்டாக போக ஒரு கட்டத்தில் அர்ஜூன் போன் பேசும் பெண்ணை காதலிக்கிறான். மீராவும் அர்ஜூனை காதலிக்க தொடங்குகிறாள். அர்ஜூன் காதலிப்பது தன்னை தான் என்று மீரா சொல்ல வரும் போது ராஜ்கிரண் அர்ஜூனை தன் மகளை காதலிப்பதை அறிந்து அடிக்கிறான். அர்ஜூனை காப்பாற்ற மீரா ராஜ்கிரணிடம் அர்ஜூன் காதலிப்பது தன் தோழி மித்ரா என்கிறாள். அர்ஜூனும் தன்னிடம் போனில் பேசியது மித்ரா என்று நினைத்துக் கொள்கிறான். மித்ராவும் வேறு வழியில்லாமல் தன் தோழிக்காக அர்ஜூனின் கரத்தை பிடிக்கிறாள்.
சில வருடங்களுக்கு பிறகு.... அர்ஜூனின் மனைவி மித்ரா இறந்துவிடுகிறான். இறப்பதற்கு முன் தன் மீராவைப் பற்றி தன் டைரியில் எழுதி வைத்ததை அர்ஜூனின் மகன் படிக்கிறான். மீராவை பார்க்க வேண்டும் என்று அர்ஜூனிடம் கேட்க, முதலில் மறுக்கும் அர்ஜூன் பிறகு சம்மதிக்கிறான். ( kuch kuch hota hai படம் ஞாபகம் வந்தால் நான் பொருப்பில்லை )
அர்ஜூன் தன் மகனோடு மீராவை பார்க்க வருகிறான். அர்ஜூனும், மீராவை இணைந்தார்களா ? அவர்கள் காதலுக்கு ராஜ்கிரண் சம்மதித்தாரா ? என்பது தான் மீதி கதை.
தீபாவளியில் வெளியாகும் 'காவலன்' படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
அர்ஜூனாக விஜய். தன் முந்தைய படங்களில் ஹீரோயிசம் என்ற பெயரில் காமெடி செய்தவர், இதில் காமெடி என்ற பெயரில் ஹீரோயிசம் செய்திருக்கிறார். செயற்கைத்தனமாக இருக்கிறது. கதையே இல்லாமல் சுறா, வேட்டைக்காரன் நடித்தவர் கொஞ்சம் கதை இருக்கிற படத்தை தேர்வு செய்திருக்கிறார். அதற்காக பாராடியாக வேண்டும்.
மலையாளத்தில் திலீப் இயல்பாக செய்த நகைச்சுவையை விஜய் சில இடங்களில் படு மொக்கையாக்கி விட்டார்.
மீராவாக அசின். பல இடங்களில் முதிர் கன்னியாக தெரிகிறார். அக்கா, அண்ணி கதாபாத்திரத்தில் தயாராகிவிட்டார் என்று தோன்றுகிறது.
அசினின் தோழியாக 'சூர்யன் சட்டக் கல்லூரி' நாயகி மித்ரா. மலையாளத்தில் செய்த அதே பாத்திரத்தை ஏற்று, கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
வேட்டி, சட்டையில் வந்த ராஜ்கிரணை கோர்ட், சூட் போட்டு அழகு பாத்திருக்கிறார்கள். ஆனால், பேச்சில் அதே கிரமாத்து நடை தான். அசினின் அம்மாவாக ரோஜா. 'நெஞ்சினிலே' படத்தில் விஜய்யுடன் ஆட்டம் போட்டவர், இதில் அவருக்கு அத்தையா...!! நினைக்கவே கொடுமையாக இருக்கிறது.
மலையாளப்படத்தில் ரீமேக் என்பதால் பல இடங்களில் மலையாள வாசம் இருக்க தான் செய்கிறது.
விமரசனத்துக்கு உதவியது :
பாடிகார்ட் ( மலையாளப்படம்)
விஜய் , அசின் முந்தைய படங்கள்
காவலன் படத்தின் வேலை செய்தவர்களின் பேட்டி படம் பார்க்காமல் விமர்சனம் எழுதியதை கண்டிக்க நினைப்பவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.
சொந்த கற்பனையில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் என்று வெளி மொழி படங்களை ரீமேக் செய்தால், படம் பார்க்காமல் விமர்சனம் எழுதுபவர்கள் வரத்தான் செய்வார்கள்.