வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, January 5, 2011

புத்தக கண்காட்சி... ஐய்யா... கலைஞர் வரலை !!

எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் புத்தக கண்காட்சி மிக அமைதியாக தொடங்கப்பட்டது. கலைஞர் வராமல் பல வாசகர்களுக்கு நல்லது செய்திருக்கிறார். பெரிய கெடுப்பிடியில்லாமல் வார நாட்களில் எளிதாக நுழைவது போல் முதல் நாள் புத்தக கண்காட்சியிருந்தது.

சில புத்தக கடைகள் புத்தகத்தை அடுக்கி வைத்துக் கொண்டு இருந்தனர். இன்னும் சில கடைகள் திறக்கவேயில்லை. சில இடங்களில் புத்தகம் சீராக அமைக்கப்பட வில்லை. இருந்ததும், புத்தக கண்காட்சிக்கு நுழைந்ததும் முதல் நாள் ’எந்திரன்’ படம் பார்த்த ரசிகனின் சந்தோஷம் இருந்தது.

நுழைவாயில் இரண்டாவது ஸ்டாலாக ‘தினத்தந்தி’ கடை இருந்தது. ‘வரலாற்றுச் சுவடுகள்’ என்ற ஒரு புத்தகத்தை வைத்து ஸ்டால் வைத்திருக்கிறார்கள். ரூ.375/- மதிப்புள்ள புத்தகம் ரூ.300/- விற்கப்படுகிறது. 842 பக்கங்கள். வண்ண புகைப்படங்கள் கொண்ட புத்தகம். முதல் நாளே 40 பிரதிகள் விற்பனையானதாம். புத்தக கண்காட்சி முடிவதற்குள் 2000 பிரதிகள் விற்கலாம் என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கு பல வரலாற்று தகவல் இந்த புத்தகத்தில் உள்ளது. வரலாற்று பிரியர்கள் கண்டிப்பாக இந்த புத்தகத்தை வாங்குவார்கள் என்று நினைக்கிறேன். நானும் வாங்கிவிட்டேன்.

நாகரத்னா பதிப்பக புத்தகங்கள் இருக்கும் ஸ்டால் எண். 448க்கு சென்றேன். நாகரத்னா புத்தகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அடுக்கி வைத்திருப்பதை பார்த்தேன். வரும் நாட்களில் அப்படி இருக்குமா என்று சொல்ல முடியாது. 448ல் கொஞ்ச நேரம் செலவு செய்தேன். அதன் பின் வழக்கம் போல் கிழக்குக்கு சென்று பா.ராவுக்கு ஒரு அட்ட்டென்ஸ் போட்டேன். முகில், முத்துகுமார் இருவரிடம் இரண்டு நிமிடம் பேசிவிட்டு நகர்ந்தேன்.

அனைத்திந்திய எழுத்தாளர் சங்கள் (ஸ்டால் எண்.272) க்கு சென்றேன். கால் வாசி புத்தகங்கள் தான் இருந்தது. என்னுடைய புத்தகங்கள் எதுவும் வரவில்லை. நாளை தான் வரும் என்று சொல்லிவிட்டார்கள். தெரிந்திருந்தால் கையோடு என் புத்தகத்தை எடுத்து வந்திருப்பேன். பதிவர் உமாசக்தி வந்திருந்தார். ( என் புத்தகத்தை அவரை வாங்க வைத்திருப்பேன். தப்பித்துவிட்டார்.)

சில ஸ்டாலில் இருந்து புத்தக பட்டியலை வாங்கி வந்திருக்கிறேன். R&D வேலை செய்து என்ன புத்தக வாங்க வேண்டும் என்ற பட்டியலை தயார் செய்ய வேண்டும்.

இந்த முறை 646 அரங்குகள் புத்தக கண்காட்சியில் உள்ளது. ஆனால், பங்குப் பெற்ற நிறுவனங்கள் 376 மட்டுமே ! எந்த தடவையும் இல்லாமல் இந்த முறை உறுப்பினர்களுக்கு அதிக ஸ்டால் வழங்கியது போல் உள்ளது. உறுப்பினர் அல்லாதவர்கள் பங்கு தொகையை ரூ.14500 இருந்து ரூ.16500 ஆக உயர்த்தியும் 850 விண்ணப்பங்கள் வந்ததாக கேள்வி. பொதுவாக 20% உறுப்பினர் அல்லாதவர்களுக்கு அரங்கம் (தமிழ் 10% - பிற 10%) ஒதுக்குவார்கள். அப்படி உறுப்பினர் அல்லாதவர்களின் கடையில்க் கூட முன்னனி பதிப்பக பேனர்கள் பார்க்க முடிந்தது. முன்னனி பதிப்பகத்தின் புத்தகங்கள் தான் விற்பனைக்கு இருந்தது. இதனால், வாசகர்கள் பார்த்த புத்தகத்தையே பார்க்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர். அதிக புத்தகங்கள் வாசகர் பார்வைக்கு வராமல் போகிறது. வழக்கமாய் ஸ்டால் போடும் சிறு பதிப்பாளர்களுக்கு ஸ்டால் கிடைக்கவில்லை என்று இன்னொரு தகவல்.

பொருட்காட்சி தீவுதிடலில் நடத்தும் போது ஏன் புத்தக கண்காட்சியும் அங்கு நடத்தக் கூடாது. 850 விண்ணப்பங்களுக்கும் தீவுதிடலில் ஸ்டால் கொடுக்க முடியும் என்பது என் கருத்து. அப்படி செய்தால், தங்கள் பதிப்பக புத்தக விற்பனை பாதிக்கப்படும் என்று முக்கிய பொருப்பில் இருப்பவர்கள் நினைக்கலாம்.

இப்படியே போனால் மூவேந்தர் கையில் இருக்கும் சினிமாத்துறைப் போல் பதிப்பகத் துறையும் வந்துவிடும். சிறு பதிப்பாளர்கள் வெளியே தள்ளி முன்னனி பதிப்பகங்கள் ஆக்கிரமிப்பாக இருந்துவிடும்.

என்ன தான் புரட்சி, கம்யூனிசம் போன்ற புத்தகங்கள் வந்தாலும், அதை வெளியிட்டவர்கள் முதலாளிகள் தானே !

அடுத்த இரண்டு வாரங்களுக்கு பதிவு போட நேரம் இருக்குமா என்று தெரியவில்லை. அப்படியே பதிவு போட்டாலும் புத்தகத்தை பற்றி அல்லது புத்தக கண்காட்சி பற்றியதாக தான் இருக்கும்.

LinkWithin

Related Posts with Thumbnails