உலகில் சமத்துவமான ஒரு சில விஷயங்களில் சினிமாவும் ஒன்று. பணியாற்றுபவர், திரையரங்கு போன்றவற்றில் பாகுபாடு இருந்தாலும், படம் பார்க்கும் மக்களுக்கு சந்தோஷம் கொடுப்பதில் ‘சினிமா’ என்று பேதம் பார்த்தில்லை.
இணையத்தில் தொடர்ந்து படித்திருந்தாலும், புத்தகமாக படிப்பதில் ஒரு தனி சுகமே இருக்கிறது.
புத்த ஆரம்பத்திலே, ' நல்ல கதை மட்டும் வெற்றி பெற உதவாது' என்று உணர்த்திவிடுகிறார்.
கோலிவுட்டை பற்றி எழுதும் போது சுவையான அனுபவம், படங்கள் பற்றிய தகவல், வியாபார உத்தி என்று பல விஷயங்கள் விளக்கும் போது 'கேபிள்' நம்மோடு பயணம் செய்கிறார். ஆனால், ஹாலிவுட் பற்றி சொல்ல தொடங்கியதும் ஆசிரியராகிவிடுகிறார் . ஒவ்வொன்றுக்கும் விளக்கும் போது அவர் நகைச்சுவை நடை கொஞ்சம் மறைந்து நம்மிடம் இருந்து அந்நியப்படுகிறார்.
இலங்கை யுத்தம் தமிழ் படங்களுக்கு இன்னும் அதிக எதிர்பார்ப்பு ஏற்ப்படுத்தியது என்று சொல்லும் போது எதார்த்த உண்மையாக இருந்தாலும், ஒரு குற்றவுணர்வு நம் உள்ளே தொன்றிக் கொள்கிறது.
ஹாலிவுட்டில் இருந்து டெக்னாலஜி மற்றும் கற்றுக் கொண்டால் போதாது, அவர்களின் வியாபார திறமையை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த புத்தகம் உணர்த்துகிறது.
சினிமா பற்றி தெரியாதவர்கள் கூட இந்த புத்தகம் படித்து பிறகு சினிமா தெரிந்த மாதிரி பேச தொடங்குவார்கள் என்று நினைக்கிறேன்.
விநியோகஸ்தர்கள் பற்றி சொல்லும் போது ஏமாற்றும் தயாரிப்பார்களை எச்சரிக்கை கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.
ஸ்னேகாவின் முதல் படம் 'விரும்புகிறேன்'. ஆனால், 'என்னவளே' முதலில் வெளிவந்து ஒரு புதுமுக இயக்குனர் அவரை அறிமுகப்படுத்திய புண்ணியத்தை கட்டிக் கொண்டார். அதே போல், கேபிள் முதலில் எழுத தொடங்கிய 'சினிமா வியாபாரம்' தான். ஆனால், 'லென் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்' சிறுகதை தொகுப்பை முதலில் கொண்டு வந்து அவரை அறிமுகப்படுத்திய புண்ணியத்தை அடியேனுக்கு கிடைத்தது. அவரின் சிறுகதை இந்நேரம் இரண்டாம் பதிப்பு வந்திருக்க வேண்டியது. முதல் பதிப்பை மார்க்கெட்டிங் செய்ய தெரியாமல் அவரின் புத்தகத்தை தேக்கி வைத்துவிட்டேன். (யாராவது 'புத்தக வியாபாரம்' புத்தகம் எழுதியிருக்காங்களா ?) ஆனால், 'சினிமா வியாபாரம்' அவரை பல பேரிடம் கொண்டு சென்றுள்ளது.
இந்த புத்தகத்தை பற்றி சொல்லும் போது சங்கரின் உழைப்பை பற்றி சொல்லியாக வேண்டும். நிச்சயமாக சினிமாவில் அடிப்பட்டு, கை சுட்டுக் கொண்டவர்களால் தான் இது போன்ற படைப்பை படைக்க முடியும். 'சினிமா வியாபாரம்' அவரின் உழைப்புக்கு கிடைக்க வேண்டிய நியாயமான வெற்றி தான்.
சங்கர் சிறுகதை தொகுப்பு போது அவரோடு ஏற்ப்பட்ட சுவையான அனுபவத்தை சொல்லியாக வேண்டும். 'லென் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்' சிறுகதை தொகுப்பில் 12 சிறுகதைகளும் பரத்தையர்களை பற்றியோ அல்லது செக்ஸ் பற்றியோ சொல்லும் கதைகளமாகவே அமைந்தது. அதில் ஒரே ஒரு கதை சம்மந்தமில்லாமல் ஒட்டிக் கொண்டது. அது நல்ல கதையாக இருந்தாலும், மற்ற கதையோடு இது அந்நியப்பட்டு இருப்பதை என்னால் உணர முடிந்தது. கண்டிப்பாக படிக்கும் வாசகர்களும் உணர்ந்திருப்பார்கள். அந்த கதை நூலில் இடம் பெற எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அந்த சிறுகதை எழுத பல தகவல் சேகரித்ததாகவும், அதற்காக உழைத்ததையும் ஒரு பதினைந்து நிமிடம் மேல் எனக்கு விளக்கினார். இருந்தும், என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.
இறுதியில், என்னுள் இருக்கும் எழுத்தாளன் பதிப்பாளனை வென்றுவிட்டான். 13வது கதையாக 'நண்டு' கதையை அந்த புத்தகத்தில் இணைத்துவிட்டேன். எந்த நேரத்திலும் தன் உழைப்பை விட்டுக் கொடுக்க விரும்பாதவர் சங்கர்.
'சினிமா வியாபாரம்' - 350 பக்கங்களுக்கு மேல் வர வேண்டிய புத்தகம், 142 பக்கங்களில் வந்திருக்கிறது. அடுத்த எடிஷனில்... மன்னிக்கவும் ரிவிஷனில் விலையோடு பக்கங்களும் அதிகமாக இருந்தால் நன்றாக இருக்கும்.
2 comments:
நன்றி..
//
இணையத்தில் தொடர்ந்து படித்திருந்தாலும், புத்தகமாக படிப்பதில் ஒரு தனி சுகமே இருக்கிறது.
//
இது உண்மைதான்,ஒத்துக்கறேன்:)
Post a Comment