வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, April 27, 2016

தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணியை ஏன் ஆதரிக்கக்கூடாது ?

தமிழக அரசியலில் பலர் மதிக்கதக்க தலைவர்களில் வை.கோ மிக முக்கியமானவர். அரசியல் மட்டுமல்லாமல் இலக்கிய சொற்பொழிவிலும் முதன்மையாக திகழ்பவர். தி.மு.கவை என்ன எதிர்த்து விமர்சனம் செய்தாலும், பல தி.மு.கக்காரர்கள் இவர் மீது சாப்ட் கார்னர் இருப்பது மறுக்க முடியாது. அப்படிப்பட்டவர், உதிரிக்கட்சிகளை எல்லாம் ஒருங்கினைத்து ”மக்கள் நலக் கூட்டணி” என்று மூன்றாவது அணி தொடங்கியதும், தமிழக அரசியலில் மாற்று அணி முக்கியத்துவத்தை உணர்த்த சரியான தருணம் என்று பலர் பாராட்டினார்கள். 

’முக்கியமான நேரத்தில் தவறான முடிவு எடுப்பவர்’ என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்ப்பார்த்து கொண்டிருந்த நேரத்தில், ’விஜயகாந்த்’ தலைமையை ஏற்று மீண்டும் அதே விமர்சனத்திற்கு தொடர்கதை எழுதியிருக்கிறார். 

விஜயகாந்த் இல்லாத கூட்டணியாக இருந்திருந்தால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற அணியாக அமைந்திருக்கலாம். அல்லது வைகோ தலைமையிலான அணியென்றால் கொஞ்சமாவது நம்பிக்கை பிறந்திருக்கும். அரசியலில் பக்குவப்பட்ட வைகோ, திருமா, கம்யூனிஸ்ட் சகோதரர்கள் மத்தியில் பக்குவமல்லாத விஜயகாந்த் இருக்கிறார். அதுவும் தலைமை ஏற்றுயிருப்பது எந்த வகையில் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை. 

தே.மு.தி.க மக்களின் ஓட்டு பிரிக்கும் சக்தியாக இருக்கிறாரே தவிர மக்கள் நம்பிக்கை பெற்ற சக்தியாக இல்லை என்பதை மக்கள் நலக் கூட்டணிக்கு தெரியாதது இல்லை. அப்படிப்பட்ட கட்சியை தங்கள் கூட்டணியில் இழுத்தது தவறில்லை. ஆனால், ‘தலைமை’ கொடுத்திருப்பது ஏற்புடையதாக இல்லை.இவர்களை ஏன் ஆதரிக்கக்கூடாது என்பதற்கு சில விஷயங்களை பார்ப்போம்.

1. மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்த தே.மு.தி.க… ஒன்று மக்கள் நலக் கூட்டணி என்ற வட்டத்திற்கு நுழைந்திருக்க வேண்டும் அல்லது தே.மு.தி.க கூட்டணி கட்சிகள் என்ற புதிய வட்டத்தை உருவாக்கியிருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் ’தே.மு.தி.க – மக்கள் நலக் கூட்டணி’ என்று எதற்காக அழைக்க வேண்டும் ? ’மக்கள் நலம்’ வார்த்தையில் தே.மு.தி.கவுக்கு உடன்பாடு இல்லையா ? பிடிக்காதா ?

2. தே.மு.தி.க – மக்கள் நலக் கூட்டணி என்பது தேர்தலுக்கான கூட்டணி. வெளிப்படையாக சொல்வதென்றால் சந்தர்ப்பவாத கூட்டணி. கொள்கை அடிப்படையிலோ, செயல்பாடுகளிலோ வெவ்வேறாக இருப்பவர்கள். ஒரு வேளை வெற்றி பெற்றால், இந்த கூட்டணி அடுத்த ஐந்தாண்டு வரை தொடருமா என்பது சந்தேகம் தான். 

3. சாதாரன விஷயத்துக்கு உணர்ச்சி வசப்படக்கூடியவர் விஜயகாந்த். நாளை, பிரதமரிடமோ, வெளிநாட்டு தொழிலதிபர்களிடமோ தமிழ்நாட்டு நலன் குறித்து பேச்சு வார்த்தையில் பக்குவமாக நடந்துக் கொள்வாரா என்பது கேள்விக்குறி. சினிமாவில் நடிப்பது போல் உணர்ச்சிவசப்பட்டால் தமிழ்நாட்டு பெயர் என்ன கதியாகும் என்று யோசித்து பாருங்கள். 

4. விஜயகாந்த் கலைஞரை போல் தனது கூட்டணி கட்சிகளுடன் சுமுகமாக இருப்பாரா? அல்லது ஜெயலலிதாவை போல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பாரா ? என்று பார்த்தால் இரண்டுமே இல்லை. அவர் தனித்து இயங்கக் கூடியவர். எல்லோரும் ஒரு திசையை நோக்கி பயணித்தால், அவர் வேறு பக்கம் செல்லக்கூடியவர். தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான பிறகும், அவர் அப்படி செயல்பட்டால் 100% மறு தேர்தல் வரும் என்பதில் சந்தேகமில்லை. 

5. மூத்த பத்திரிகையாளர் ஞாநி அவர்கள் “விஜயகாந்த் கலைஞர், ஜெயலலிதாவை போல் மோசமானவர் இல்லை” என்கிறார். அரசியலில் நல்லவர், கெட்டவர் என்பதை விட நிர்வாகத்திறமை மிக்கவரா என்பது மிக முக்கியம். அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழக அரசு அதிகாரிகளிடம் வேலை வாங்கக்கூடியவரா ? முக்கிய அரசியல் முடிவுகளுக்கு சரியான முடிவு எடுக்கக்கூடியவரா ? பொருளாதார திட்டத்தை வளர்க்கக்கூடியவரா ? 

மொத்தத்தில் விஜயகாந்த் கலைஞர், ஜெயலலிதாவை விட ஆளுமை திறமை கொண்டவரா என்றால் ’இல்லை’ என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு சாட்சியாக, அவரது எம்.எல்.ஏ கட்சியில் இருந்து விலகி அம்மா பக்கம் சாயும் போது அவர்களை கட்டுப்படுத்த முடியாமல், ஜெயலலிதாவை சந்தித்ததை சொல்லலாம். தற்போது சந்திரகுமார் பிரச்சனையை கூட விஜயகாந்த்தை விட வைகோ தான் அதிகம் பேசியிருக்கிறார். 

6. ’தே.மு.தி.க – மக்கள் நலக் கூட்டணி’ என்பது விஜய்காந்த் உழைப்பால் உருவான கூட்டணியல்ல. வை.கோவின் உழைப்பால் உருவானது. ஒவ்வொரு கட்சி தலைமையிடம் பேசி வை.கோ உருவாக்கியது. தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய கூட்டணியை வை.கோ அப்படியே விஜயகாந்த் தலைமைக்கு கொடுத்திருக்கிறார். தான் முதல்வராக வேண்டும் என்பதற்கு உழைக்காத விஜய்காந்த் மக்களுக்காக உழைக்க போகிறாரா ? 

7. விஜயகாந்த் ஊடகத்தின் மீது நம்பிக்கையற்றவர். தனது கட்சியாளர்களை எந்த விவாத நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள அனுமதிக்காதவர். கேமிரா முன் “த்தூ” துப்ப தயங்காதவர். அப்படிப்பட்டவர் முதல்வரானால் ஊடகத்தினரை சந்திப்பாரா ? மக்கள் ஊடகத்தின் வழியாக கேட்க நினைக்கும் கேள்வியை பதிலளிப்பாரா ? ஊடகத்தை ஒரே அடியாக புறக்கணிப்பாரா ? என்பது தெரியவில்லை. 

8. தங்கள் பிரச்சாரத்தில் த.மு.க, அ.தி.மு.க விமர்சிக்கிறார்களே தவிர தங்கள் தேர்தல் அறிக்கையை முன்னிருத்தி பிரச்சாரம் செய்வதாக தெரியவில்லை. தங்கள் தேர்தல் அறிக்கையை விட மக்கள் அதிருப்தி தான் தங்களுக்கு ஓட்டு வங்கி நினைப்பவர்கள், தங்களின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவார்களா ? 

9. விஜயகாந்த் - மக்கள் நலக் கூட்டணி பெரும்பான்மையோடு வெற்றிப் பெற்றால் நல்லது. ஒரு வேளை. விஜயகாந்த் - மக்கள் நலக் கூட்டணி 70-80 சீட் வெற்றி பெறுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். திமுக அல்லது அதிமுக தேர்தலில் 90- 100 சீட் வெற்றி பெறுகிறது. இன்னொரு கட்சி 40-50 என்று வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். 

 அவர்கள் தி.முக. / அதிமுக ஆட்சி அமைக்க அவர்களை ஆதரிப்பார்களா அல்லது தாங்கள் ஆட்சி அமைக்க ஆதரவைக் கேட்பார்களா ? அப்படி முக்கியமா பிரச்சனை வரும் பட்சத்தில் ஒன்றுக்கு ஆறு கருத்து உருவாகும். கூட்டணி உடைய அதிக வாய்ப்பு இருக்கிறது. மீண்டும் தேர்தல் தான். 

10. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி ஒன்று உண்டு. “Known devil is better than Unknown Angel”. விஜயகாந்தோ, ம.ந.கூட்டணியோ எந்தக் காலத்திலும் தெரியாத தேவதை என்று சொல்லமுடியாது. தி.மு.கவுக்கு, அ.தி.மு.கவுக்கும் மாறி மாறி ஆதரவு தெரிவித்தவர்கள். இந்த முறை பேரம் படியவில்லை என்பதால், எல்லோரும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாற்று கட்சி என்கிறார்கள்.

எல்லாவற்றிக்கும் மேலாக, தனது அரசியல் வாழ்க்கையில் கோவில்பட்டியில் நடந்துக் கொண்டது போல் வைகோ இதற்கு முன் நடந்துக் கொண்டதில்லை. இது வரை சம்பாதித்த பெயரையெல்லாம் இந்த தேர்தலில் அடகு வைத்திருக்கிறார். இந்த தேர்தலில் தோல்வியுற்றால், தி.மு.க – அ.தி.மு.க அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ம.தி.மு.க தோல்விற்றால் அடுத்த தேர்தல் வரை கட்சி இருக்குமா என்பது தெரியவில்லை. 

 “தி.மு.க ஜாதி வெறியை தூண்டுகிறது” என்கிறார். ஏன் அ.தி.மு.க இப்படி செய்யமாட்டார்களா ? கடந்த ஐந்து வருடங்களாக ஜாதி அடிப்படை வன்முறைகள் அதிகரித்திருக்கிறது. தர்மபுரி எரிப்பு, காதல் ஆணவக்கொலை, தலித் பெண் டி.ஜி.பி தற்கொலை என்று பல சம்பவங்கள் இருக்கிறது. 

“தி.மு.க – அ.தி.மு.க ஜாதி வெறியை தூண்டுகிறது” என்றோ, அல்லது “இரண்டு பெரிய கட்சியின் கூட்டு சதி” என்றோ சொல்லியிருக்கலாமே ! இரண்டு கட்சியை எதிர்த்து போட்டியிடும் போது ஒரு கட்சியை மட்டும் குறிப்பிட்டு தாக்கி பேசுவது ஏன் ? அ.தி.மு.க அதிருப்தி ஓட்டுகளை பெற்று, மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமைக்க உதவி செய்யவா ? 

மொத்தத்தில்  பக்குவமில்லாத, எளிதில் உடைந்துவிடக்கூடிய தே.மு.தி.க – மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு அளித்து வாக்களிப்பதை விட வழக்கம் போல் தி.மு.க – அ.தி.மு.கவுக்கே வாக்களிக்கலாம். அல்லது சுயேட்சை வேட்பாளர், 49 ஓவுக்கு வாக்களிக்கலாம்.

2 comments:

Muthu Nilavan said...

உங்கள் கருத்து தவறென்று மே-19இல் உணர்வீர்கள் நண்பரே! எனினும் உங்களின் விரிவான ஆய்வுக்குப் பாராட்டுகள்.

THEVESH M said...

உங்கள் விரிவான ஆய்வின்மூலம் ஏன் ம.ந.கூட்டணியை ஆதரிக்கக்
கூடாது என்பதை சரியாகக்கணித்து தெரிவித்துள்ளீர்கள்.வை.கோ
செல்லாக்காசு என்பதை இத்தேர்தல் உறுதிப்படுத்தும்.

LinkWithin

Related Posts with Thumbnails