வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, April 20, 2016

ஏ.வி.எம் ஸ்டூடியோ ஏழாவது தளம் + மாயா = தாரகை

முந்தைய தினம் நண்பர் விநாயக முருகன் என் பதிவின் பின்னூட்டத்தில் “வெகுஜன எழுத்து, இலக்கிய எழுத்து என்றெல்லாம் பிரித்து சொல்லும் இலக்கிய அத்தாரிட்டிகள் யார்?” என்று கேட்டார். 

”இது ஒரு நல்ல கேள்வி” என்பதோடு நான் ஜெகா வாங்க வேண்டியதாக இருந்தது. இலக்கிய உலகத்தில் யாரும், எதற்கும் அத்தாரிட்டி கிடையாது என்பது தான் என் கருத்து. ஒருவர் ”இது வெகுஜன எழுத்து, அது இலக்கிய எழுத்து” என்று கருத்து கூறினால் அதை ஏற்றுக் கொள்ள ஒரு கூட்டம் இருக்கிறது. அதேப் போல், “வெகுஜன எழுத்து, இலக்கிய எழுத்து இரண்டும் ஒன்று தான்” சொன்னாலும் அதை ஏற்று கொள்ள இன்னொரு கூட்டம் இருக்கிறது. 

அவரவர் ரசனைக்கும், வாசிப்பும் தகுந்தாற்போல் வெகுஜன எழுத்து, இலக்கிய எழுத்து பிரித்து பார்த்துக் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு, சுஜாதாவின் எழுத்து ஒரு சிலருக்கு இலக்கிய எழுத்தாக தெரியலாம். வேறு சிலருக்கு இலக்கிய எழுத்தாக தெரியலாம். வாசகன் தனக்கு பிடித்ததை தீர்மானிக்கும் உரிமை அவனுக்கு இருக்கிறது. அது அவனுக்கான சுதந்திரம். 

தமிழ்மகன் எழுதிய தாரகை நாவலுக்கும், வெகுஜன - இலக்கிய எழுத்துக்கும், மிக பெரிய தொடர்பு இருக்கிறது. 



தாரகை - இரண்டு நடிகையைப் பற்றிய கதை. ஒன்று தீபிகாவுடையது. இன்னொரு மாயாவுடையது. இரண்டும் ஒரே சமயத்தில் பயணிக்கிறது. ஏறக்குறைய இரண்டு கதையும் ஒரே மாதிரியாக தோன்றும். ஒரு சில விஷயங்களில் உண்மை இருக்கிறது. இன்னும் சில விஷயங்களில் பொய் கலந்திருக்கிறது. இதில் எது உண்மை, பொய் என்பதை தீபிகா – மாயாவுக்கு மட்டுமே தெரியும். அது தான் அவர்களுக்குள் இருக்கும் வித்தியாசம்.

தமிழ்மகன் “தாரகை” நாவலில் பலரது நடிகையை நகல் எடுத்து காட்டுகிறார். அவர்களின் வாழ்க்கையின் பிரதி எடுத்து நம்மோடு புத்தகமாக உரையாடுகிறார். அவளுக்கான நியாயத்தை நம்மிடம் சொல்கிறார். அவளின் நியாயத்தை நாம் கேட்கும் போது நமக்கான அறத்தை மறந்து அவளுடைய அறத்தை மட்டுமே வாசிக்கிறோம். 

’தாரகை’ வித்தியாசமான இலக்கியப்படைப்பாக தெரியலாம். ஆனால், ஏ.வி.எம் ஸ்டூடியோ ஏழாவது தளம், மாயா என்று இரண்டு வெகுஜன நாவலின் கலவை. 

தமிழ்மகன் 2006ல் எழுதிய ”ஏ.வி.எம் ஸ்டூடியோ ஏழாவது தளம்”, 2008ல் எழுதிய “மாயா” பலரது கவனம் பேராத நாவல்கள். இரண்டும் வெகுஜன இதழில் தொடராக வந்தது. ஸ்வாரஸ்யம் குறையாத விறுவிறுப்பானது. இரண்டுமே நடிகையைப் பற்றியது. வெகுஜன நாவல் வரிசையில் வரக்கூடியது. 

ஏ.வி.எம் ஸ்டூடியோ ஏழாவது தளம், மாயா இரண்டும் கலந்து, அதற்கான தொடர்பை உருவாக்கி, ஒரு சில திருத்தங்கள் செய்து இரண்டு நடிகையோடு ஒரே சமயத்தில் நம்மை வாசிக்க வைக்கும் ”தாரகை” நாவலாக தந்திருக்கிறார். 

இரண்டு வெகுஜன நாவலை கலந்து ஒரு அழகிய இலக்கிய படைப்பாக எப்படி உருவாக்க முடியும் என்பதற்கு ‘தாரகை’ மிகப் பெரிய உதாரணம். வெகுஜன நாவலை எப்படி இலக்கிய வரிசையில் கொண்டு வரலாம் என்பதற்கு முன் உதாரணமாக இருக்கிறது. 

என்னுடைய ரசனைக்கு, தாரகையை இலக்கிய படைப்பாகவும், ஏ.வி.எம் ஸ்டூடியோ ஏழாவது தளம், மாயா வெகுஜன படைப்பாகவும் பிரிக்கிறேன். மற்றவர்கள் தங்கள் ரசனைக்கு பிரித்துக் கொள்ளலாம். அதில் நான் தலையிட முடியாது. 

LinkWithin

Related Posts with Thumbnails