வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, January 15, 2014

சினிமா 1913-2013 – 3. திரையரங்குகள் தந்தை சாமிக்கண்ணு வின்செண்ட்

இன்று சினிமாவில் கமல், ரஜினி படம் வெளிவருகிறது என்றால் நான், நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். காரணம், போட்ட பணத்தை ஒரு வாரத்தில் எடுத்து விடலாம் என்ற நம்பிக்கை. ஆனால், சினிமா என்பது வியாபாரமாக இல்லாத காலத்தில், வியாபாரம் தெரியாதவர்கள் மத்தியில் மக்களிடம் எப்படி சினிமாவை கொண்டு சென்று இருப்பார்கள் என்பதை ஆராய வேண்டிய ஒன்று.

3டி, அரோ 3டி, டிஜிட்டல் என்று பல வகை திரையரங்குகள் இருக்கிறது. ஆனால், ஆரம்பக்காலத்தில் படங்கள் ஓடியது டென்ட் திரையரங்குகளில் தான். அந்த டென்ட் கொட்டையில் படங்களை எடுத்து மக்களுக்கு கொண்டு சேர்த்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட் அவர்கள்.

ஒவ்வொரு மொழியின் திரைப்படங்களுக்கு ஒரு தந்தையிருக்கிறார். ஆனால், தென்னிந்தியாவில் சினிமாவை திரையரங்கு மூலம் கொண்டு சேர்த்த ஒரு தந்தை இருக்கிறார். அவர் தான் ”சாமிகண்ணு வின்செண்ட்”. அன்றைய காலத்தில் சினிமாவின் முக்கிய இடமாக கோவை நகரம் இருந்தது. 1905ல் ரயில்வே ஊழியராக இருந்த சாமிக்கண்ணு வின்செண்ட் அவர்கள் ’டு பாண்ட்’ என்ற பிரென்ச்காரரை சந்தித்தார். அவரிடம் இருந்து படங்களை திரையிட ஒரு பிலிம் புடோஜெக்டரையும், பிரென்ச் படமான "Life of Jesus Christ" வாங்கிக் கொண்டார். அந்த படத்தை ஊர் ஊராக சென்று திரையிட தொடங்கினார்.

குறைவான மக்கள் மட்டுமே படம் பார்க்கக் கூடிய புரோஜக்டர் மூலம் படம் திரையிடப்பட்டது. மக்கள் படத்தை பார்க்க ஆர்வமாக வந்தனர். குறிப்பாகம் ’ஏசு’ வரும் காட்சியை பிரம்பித்தனர். அப்போது படம் திரையிடுவதற்கு இடம் ஒன்று தான் மிக பெரிய குறையாக இருந்தது.

பெரிய இடத்தில் படத்தை திரையிட்டால் இன்னும் மக்கள் வருவார்கள் என்று திட்டமிட்டு, சாமிகண்ணு வின்செண்ட் தனது குழுக்களை கொண்டு மக்கள் படங்களை பார்க்க தற்காலிக டெண்ட் திரையரங்குகளை உருவாக்கினார். தென் இந்தியாவில் முதல் டூரிங் டாக்கிஸ் இப்படி தான் உருவானது.

பொதுவாக இது போன்ற டூரிங் தியேட்டர்கள் கொண்டு வரும் திரைப்படங்கள் டெண்ட் தியேட்டரில் திரையிடப்படும். சுமார் 1000 பேர் அமர்ந்து பார்க்கலாம். படத்தை 2 வாரம் ஓட்டுவார்கள். அதன் பிறகு அந்த படத்தை எடுத்துக் கொண்டு வேறு ஊருக்கு சென்று படம் திரையிடுவார்கள்.

ஒவ்வொரு முறையும் படத்தை திரையிட ஏற்பாடு செய்வதற்கு பதிலாக, நிரந்தரமாக திரையிட ஒரு தியேட்டரை உருவாக்க நினைத்தார். கோவையில் அதற்கான இடமும் சாமிகண்ணுக்கு கிடைத்தது.

1917ல் தென்னிந்தியாவில் முதல் நிரந்தர திரையரங்கான வெரைட்டி ஹால் என்ற திரையரங்கு உருவாக்கி படங்களை திரையிடத் தொடங்கினார். ( இந்த காலக்கட்டத்தில் சென்னை கெய்ட்டி, கிரவுன் தியேட்டர் எல்லாம் டெண்ட் திரையரங்கமாக இருந்தது.)

இன்றும், கோவையில் இந்த சாலையின் பெயர் வெரைட்டி ஹால் சாலை. ஆனால், வெரைட்டி ஹால் திரையரங்கில் தற்போதிய டிலைட் தியேட்டர் !!!

வெரைட்டி ஹாலுக்கு கிடைத்த வர வேற்பைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஊரிலும் நிரந்த திரையரங்குகள் உருவாக்க தொடங்கியது.

உதகமண்டலம், மதுக்கரை, ஈரோடு, அரக்கோணம் போன்ற படகுதிகளோடு நின்றுவிடாமல் கேரளாவிலும் பல திரையரங்குகள் தொடங்கினார் சாமிகண்ணு வின்சென்ட். இவர் தமிழகத்தோடு படத்தை திரையிடுவதை நிறுத்தாமல் ஆப்கானிதானில் பெஷாவர், பாகிஸ்தானின் லாகூர், பர்மாவின் ரங்கூன் என்று தெற்காசிய முழுக்க பயணம் செய்து படங்களை திரையிட்டார்.

பல படங்களை வெளிநாட்டில் இருந்து வர வழைத்து திரையிட்டார். பிறகு, படம் தயாரிப்பதிலும் இறங்கினார். ஆனால், படம் விநியோகத்தில் வெற்றிகரமாக செயல்பட்ட சாமிக்கண்ணு பட தயாரிப்பில் வெற்றிப் பெற முடியவில்லை. அதனால், பட விநியோகத்தில் அதிக கவனம் செலுத்தினார்.

இந்த காலக்கட்டத்தில் தமிழில் முதல் பேசும் படமான, தென்னிந்தியாவில் இரண்டாவது பேசும் படமான எச்.எம்.ரெட்டி இயக்கத்தில் “காளிதாஸ்” படம் வெளியானது. ரூ.8000 செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் ரூ.75000 வசூலானது. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் டி.பி.ராஜலஷ்மி. பின்னாளில், இவர் “சினிமா ராணி” என்ற அழைக்கப்பட்டார். தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குனரும், பெண் தயாரிப்பாளரும் இவரே !!!

பேசும் படங்களுக்கு கிடைத்த ஆதரவை உணர்ந்த சாமிகண்ணு செண்டரல் ஸ்டுடியோவோடு சேர்ந்து “வள்ளி திருமணம்” (1933) படம் எடுத்தார். “காளிதாஸ்” படத்தில் நாயகியாக நடித்த டி.பி.ராஜலஷ்மி இந்தப் படத்திற்கும் நாயகியாக நடித்தார்.

இந்த படமும் வசூலில் சக்கை போடு போட்டதால், பலர் பேசும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கினர். அதே ஆண்டில் தான் தென்னிந்தியாவின் கடைசி மௌனப்படமான “மார்தாண்ட வர்மன்” வெளியானது.

சாமிகண்ணுவை தொடர்ந்து ”முதலாளி” என்று அழைக்கப்படும் டி.ஆர்.சுந்தரம் அவர்கள் சேலத்தில் மார்டன் தியேட்டர் தொடங்கி (1935) சினிமாவுக்கு தமிழகத்தில் புதிய அடையாளமாக மாறினார்.

இன்று சினிமாவை பார்க்க பலர் படையெடுத்து வருவது முக்கிய காரணம் அன்று சாமிகண்ணு வின்செண்ட் சினிமாவை பிரோஜெட்டர் தூக்கிக் கொண்டு ஊர் ஊராக படங்களை திரையிட்டதால் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

கட்டுரைக்கு உதவியது : 
இந்து ஏப்ரல் 30, 2010 மற்றும் மார்ச் 22, 2011
பேசாமோழி – ஆவணப்படம். இயக்குனர் செந்தமிழன்

நன்றி : உரத்த சிந்தனை, ஜனவரி, 2014

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails