வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, July 18, 2012

பசியில்ல...!!

 குழந்தை பிறந்தவுடன் கணவர்-மனைவி இருவருக்குள் ஒரு சிறுமன பிரிவு ஏற்ப்படும். குழந்தை பார்த்துக் கொள்வதில் சண்டை வரும் என்பார்கள். ஆனால், எங்கள் வீட்டில் குழந்தை பிறந்ததும் எனக்கும், என் அம்மாவுக்கும் தான் பிரிவு ஏற்ப்பட்டது.

என் பெற்றோருக்கு ஒரே மகன் நான். எனக்கு மழை பிடிக்கும் என்பதாலோ என்னவோ ‘வருண்’ என்று பெயர் வைத்தனர். ’பசி’ எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியாது. பசி எடுக்கும் முன்பே சரியான நேரத்தில் சாப்பாடு வைத்துவிடுவார்கள். சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் ஏதாவது நொறுக்கு தினி வேறு. அம்மாவிடம் "பசியில்ல" என்ற வார்த்தை சொன்னது தான் அதிகம்.எனக்கு நல்லது என்பதை ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்வார்கள். அவர்களுக்கு பிடித்தது எல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள். ஆனால், எனக்கு பிடித்தது எது என்று அவர்கள் கேட்டதில்லை. அவர்களுக்கு பிடித்தது எனக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையை காப்பாற்ற அவர்களுக்கு பிடித்ததை எல்லாம் எனக்கு பிடித்ததாக மாற்றிக் கொண்டேன். என் திருமணம் உட்பட !

என்னுடன் படித்தவர்கள் எல்லோரும் காதல் திருமணம் செய்துக் கொள்ள நான் பெற்றோர்கள் பார்த்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டேன். அப்பாவின் விருப்பத்தை விட அம்மாவின் விருப்பம் தான் எனக்கு மிக முக்கியமாக தெரிந்தது. அம்மாவுக்கு அந்த பெண்ணை பிடித்ததால் திருமணத்திற்கு சம்மதித்தேன். திருமணம் ஆன புதிதில் மாமியார் – மருமகளுக்குள் பெரிதாக சண்டை வந்ததில்லை. எல்லாம் எனக்கு குழந்தை பிறந்தவுடன் மாறும் என்று எதிர்பார்க்கவில்லை.

என் மனைவி குழந்தையை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என்பதில் ஆரம்பித்தது சண்டை. யாரும் பிறக்கும் போதே அம்மாவாக, அப்பாவாக பிறப்பதில்லை. குழந்தைகள் கற்க கற்க நாமும் பெற்றோராக ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டு தான் இருக்கிறோம். வயதான பெற்றோருக்கு பொருந்தும்.

”டேய் வருண் ! அவ என்ன குழந்தைக்கு சரியா பால் கொடுக்க மாட்டேங்கிறா ?”.

மனைவியை கேட்டால், “இப்ப தான் ஒரு மணி நேரம் முன்னாடி கொடுத்தேன். அவங்க தூங்கிட்டு இருந்தாங்க. அடுத்த வாட்டி பால் கொடுக்கும் போது அவங்கள எழுப்பி பால் கொடுக்குறேன்.” என்பாள்.

வழக்கமாக எல்லார் வீட்டில் நடக்கும் சண்டை தான். இரண்டு சம வயதில் இருக்கும் பெண்களுக்கு ஒத்துவராத போது, 20 வருட வயது இடைவேளை இருப்பவர்களுக்குள் எப்படி ஒத்துவரும்.

அப்பா எப்போதும் அம்மா பக்கம் தான். ரிட்டையர்ட் ஆனவருக்கு மனைவியின் ஆறுதல் அவருக்கு அதிகமாக தேவைப்பட்டது.அம்மாவிடமும், மனைவியிடமும் சேர்ந்தாற்போல் நல்ல பெயர் எடுத்த எந்த ஆண்மகன் உலகில் இல்லை என்பதால், நானும் 'நல்ல பெயர்' வாங்க முயற்சியில் ஈடுப்படவில்லை. அவர்களின் சண்டைக்குள் நுழைவதுமில்லை.

அடுத்த பிரச்சனை சமையல் கட்டில் தொடங்கியது. ஆரம்பத்தில், அம்மா மட்டுமே சமைப்பாள். கொஞ்ச நாட்களில் என் மனைவியும் சேர்ந்து சமைக்க தொடங்க, சுத்தமாக சமையல் அறையை வைத்துக் கொள்ளவில்லை. என் மனைவி சமையல் சரியில்லை என்று இன்னொரு பிரச்சனை. முதலில் அம்மா சமையல் மட்டும் தான் இருந்தது. இப்போது, அம்மா, மனைவி இருவர் சமையல். ஒருவர் சாதம் வைத்தால், மற்றவர் சாம்பார் வைப்பார். இருவர் போட்டியில் சாப்பாடு எவ்வளவு கேவலமாக இருந்தாலும், நானும், அப்பாவும் சாப்பிட பழகிக் கொண்டோம்.

ஆபிஸில் இருந்து வீட்டுக்கு வந்ததும் அம்மா பிரச்சனை ஆரம்பிப்பாள்.

“ஏம்மா நிம்மதி கெடுக்குற ?” கோபத்தில் கேட்டதற்கு, “பெத்த மகனோட நிம்மதிய அம்மா கெடுப்பாங்களா ? “ எங்கள் சண்டைக்குள் அப்பா நுழைவார்.

பெத்த மகனுக்கு பால் கொடுக்கவில்லை என்று அம்மா சண்டை போடுபொதெல்லாம் அப்பா அமைதியாக இருப்பார். ஒரு கட்டத்தில் சண்டை வரும் போதெல்லாம் எங்கள் தனிக்குடித்தனம் போக சொல்லி மேலும் பிரச்சனை வெடிக்கும்.

அப்பா, “நானா உன்ன வீட்ட விட்டு போக சொல்ல மாட்டேன். நீயா போகுறது உன் இஷ்டம்” என்பார்.

என் மனைவி, “உங்க அப்பாவுக்காக பொருத்துக்கலாம். பேரன் இல்லாம உங்க அப்பாவுக்கு கஷ்டமா இருக்கும். அவங்க ஒரே பையன தனிக்குடித்தனம் கூட்டிட்டு போன நாளைய சொந்தக்காரங்க என்ன தான் தப்பா பேசுவாங்க. உங்க அம்மா பண்ணது பெரிசா தெரியாது.” என்றாள்.

அப்பாவும், என் மனைவியும் தனிக்குடித்தனம் போக விரும்பினாலும், எங்கள் சொந்தக்காரர்கள் யாரும் தவறாக பேசக்கூடாது என்ற எண்ணம் தான் அதிகமாக இருந்தது.

ஒவ்வொரு சமயமும் சண்டையில் முடிவில் தனி குடித்தனம் பிரச்சனை ஆரம்பிக்கும். போக போக... “தனிக் குடித்தனம்” போக வைக்கவே பிரச்சனைகள் வெடிக்கும். இவர்கள் பிரச்சனையில் நான்கு வருடங்கள் போனதே தெரியவில்லை. வேலையில் அதிகம் கவனம் செலுத்தமுடியவில்லை. ஒரு கட்டத்தில் என் சொந்த வீட்டுக் கூட எனக்கு வாடகை வீடாக தெரிந்தது. வீட்டு செலவுக்கு நான் கொடுக்கும் பணம்…. ‘வாடகை’ எனக்கு தோன்றியது. அம்மாவிடம் பணத்தை கொடுத்து வந்த நான் என் அப்பாவிடம் மாத பணத்தை கொடுத்தேன். ஏதாவது ஒரு பிரச்சனை வெடிக்க, வீட்டில் இருப்பது எனக்கும் பிடிக்காமல் போனது. தனியாக சென்று விடலாம் என்பது தான் சரியான முடிவு.


அப்பா அப்போது சொன்ன அதே பதில் தான். என் மனைவி அப்பாவுக்காக ஆரம்பத்தில் சொன்னவள், “உங்க வீட்டு ஆளுங்கல கூப்பிட்டு தனிக்குடித்தனம் போவோம். தனியா போனதுக்கு அப்புறம் நான் தான் ப்ளான் பண்ணி உங்கள தனியாக கூட்டிட்டு வந்தேன் சொல்லுவாங்க”. அவளுக்கும் வீட்டில் இருக்க விருப்பமில்லை. என் மனைவிக்கு ஒரே பிரச்சனை. தன்னை யாரும் தப்பாக சொல்லிவிடக் கூடாது.

அம்மாவுக்கு மருமகளோடு ஒத்துபோகமாட்டேன் என்ற ஈகோ. நான் மனைவி சொல் பேச்சு ஆடுகிறேன் என்பாள். சொல்லப்போனால், திருமணத்துக்கு பிறகு தான் என் இஷ்டப்படி இருக்க தொடங்கினேன். நான் அம்மாவிடம் பேசும் போது, மனைவியை ஒரு வார்த்தைக் கூட பேசவிட மாட்டேன்.

“பொம்மளைய பேசவிட்டு வேடிக்கை பாக்குறான்” இன்னொரு வார்த்தை அம்மா வாயில் இருந்து பேச்சு வரும். ஆனால், அப்பா அம்மாவை பேச தடுப்பதில்லை.

ஒரு சமயத்தில், “ எத்தன வாட்டி வீட்ட வீட்டு போக சொல்லுறது. ரோஷம் கெட்டவன். இங்கையே தங்கி தின்னுக்கிட்டு இருக்குறது. அம்பளையா நீ “ என்று கேட்டாள் அம்மா. அதன் வார்த்தை அர்த்தம் புரிந்து தான் பேசுகிறார தெரியவில்லை. வார்த்தைகள் கொட்டிக் கொண்டே இருந்தாள். வாழ்க்கையே வெருத்து போவதுப் போல் இருந்தேன்.

எதனால் நான் அம்மாவுக்கு எதிரியாக தெரிகிறேன் ? நான்கு வருடங்களாக அம்மாவிடம் பேச்சை குறைத்த நான் ஒரேடியாக வெருக்க தொடங்கிவிட்டேன். நான் தனி குடித்தனம் செல்ல முடிவு எடுத்து, நண்பர்கள் ஒரு சிலரிடம் வீடு பார்க்க சொன்னேன். இரண்டு நாட்கள் கழித்து அப்பா, " நான் இருக்குற வைக்கும் இந்த வீட்டுல இருங்க. அதுக்கப்புறம் உங்க இஷ்டப்படி இருங்க."

அவரிடம் என்ன சொல்லுவது ? நாங்கள் என்னவோ தனிக்குடித்தனம் போக துடிப்பது போல் அப்பா பேசினார். இவ்வளவு உயிராக வளர்த்த அம்மா என்னை ஒரேடியாக வெருக்கிறார். அம்மாவை சமதானப்படுத்த முடியாத அப்பா, ஒவ்வொரு முறையும் என்னை சமாதானம் படுத்தினார். ஒவ்வொரு முறையும் நான் சமாதானம் ஆகும் போதும், அடுத்த அவமானத்திற்கு தயாராக வேண்டியதாக இருந்தது.

என்னுடைய கோபத்தை அம்மாவின் சமையல் மீது காட்டினேன். அம்மா சமைப்பதை தவிர்த்து, மனைவி சமைப்பதை மட்டும் சாப்பிடுவேன். என் மகனின் பள்ளி விடுமுறையில், என் மனைவி மகனுடன் அவள் அம்மா வீட்டு சென்றாள். அம்மாவின் சமையலைத் தான் சாப்பிட்டாக வேண்டும். வெளிப்படையாக அம்மாவின் சமையலை சாப்பிடாமல் இருக்க முடியாது. அப்படி செய்தால், அடுத்த பிரச்சனை தொடங்கும். வெறுப்போடு குறைவாக சாப்பிட்டேன்.

சிறு வயதில் அம்மாவின் பாசத்தால் குறையுள்ள சாப்பாட்டை ருசித்து சாப்பிட்டேன். இப்போது, ருசியாக இருந்தாலும் அம்மாவின் சாப்பாடு எனோ பிடிப்பதில்லை. அம்மாவின் நான்கு வருட வார்த்தைகளும், சண்டைகளும் அம்மாவிடம் எனக்கு பெரிய இடைவேளையை உருவாக்கிவிட்டது.

அலுவலக வேலை இரவு 11 மணி வரை வேலை செய்து வீட்டுக்கு வந்தேன். சாப்பிடக் கூட நேரமில்லை. அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் எந்த ஓட்டலும் இல்லை. எல்லாம் முடி இருந்தது. வீட்டுக்கு வந்ததும் ஏதாவது சாப்பிடலாம் என்று இருந்தேன்.

அம்மாவிடம் " பசிக்குது சாப்பாடு இருக்கா ? " கேட்டால் எதாவது எடுத்துக் கொள்ள தோன்றியது. எனக்கு அம்மா இப்போது மூன்றாவது மனுஷி தான். கதவை திறந்தது, " ஏன் இவ்வளவு நேரம். ஏதாவது சாப்பிட்டியா ? " என்று அம்மா கேட்டாள்.

" ஆபிஸ் வேலை ஜாஸ்தி. அங்கையே சாப்பிட்டேன்." என்றேன்.

 என் முகத்தை பார்த்து கண்டு பிடித்து விட்டார் என்று நினைக்கிறேன்.


 "சாப்பிட நா ஏதாவது செஞ்சி தரட்டா ?" என்றாள்.

உள்ளுக்குள் ஒரு மாதிரியாக இருந்தது.

”பசியில்ல..." என்றேன்.

10 comments:

கோவை நேரம் said...

அருமை..உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கறீர்..

சிட்டுக்குருவி said...

என்னசார் குழப்பிட்டே போறீங்களே என்றிருந்தேன் இறுதியில் அழகான ஒரு தவிப்பை சொல்லி முடித்து விட்டீர்கள்

சிட்டுக்குருவி said...

இருவர் போட்டியில் சாப்பாடு எவ்வளவு கேவலமாக இருந்தாலும், நானும், அப்பாவும் சாப்பிட பழகிக் கொண்டோம்.
//////////////////

செம செம டயலாக்

சிட்டுக்குருவி said...

சந்தோஷ் சுப்பிரமணியம்....

சிட்டுக்குருவி said...

முடிவா என்ன சொல்லுறீங்க நான் திருமணம் முடிக்கமுமா வேண்டாமா...? :)

Gobinath said...

அருமையாக உணர்வுகளின் போராட்டத்தை வடித்திருக்கிறீர்கள். இப்போ முடிவா என்னதான் சொல்ல வாறீங்க என்றும் சொல்லிடுங்க.

குகன் said...

எடுத்தோம் கவுத்தோம் முடிவு எடுக்க முடியுமா ? அந்த முடிவ தெரியாம தான் நானும் குழம்புறேன். என்ன மாதிரி பல பேர் குழம்பிட்டு இருக்காங்க... !!!

குகன் said...

// சிட்டுக்குருவி said...
முடிவா என்ன சொல்லுறீங்க நான் திருமணம் முடிக்கமுமா வேண்டாமா...? :
//

இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு உங்கள தயார் படுத்திட்டு கல்யாணம் பண்ணிக்கொங்க... அப்ப தான் அடிவாங்கும் போது மனசு வலிக்காது.

ஹாலிவுட்ரசிகன் said...

மனைவி என்ற பிரச்சினை (இதுவரை) இல்லையென்றாலும் வீட்டில் தங்கி இருக்கும் சொந்தக்காரர்கள் விடயத்தில் நீங்கள் கூறிய சில விடயங்கள் எனக்கும் நடந்ததுண்டு. அருமையாக உங்கள் உணர்வுகளை சொல்லியிருக்கிறீர்கள். :)

//இருவர் போட்டியில் சாப்பாடு எவ்வளவு கேவலமாக இருந்தாலும், நானும், அப்பாவும் சாப்பிட பழகிக் கொண்டோம்.//

இது ஒரு சாம்பிள். :)

திண்டுக்கல் தனபாலன் said...

இதெல்லாம் வாழ்வில் சகஜம் நண்பரே !

பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

பாடல் வரிகளை ரசிக்க : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

LinkWithin

Related Posts with Thumbnails