வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, July 24, 2012

மாற்றம் தந்த இந்திய சினிமா : 1. அக்ரஹாரத்தில் கழுதை

ஜான் ஆப்ரகாம் இயக்கிய ‘அக்ரஹாரத்தில் கழுதை’ படத்தை பார்க்க ஏற்பாடு செய்த தமிழ்ஸ்டுடியோ அருணுக்கும், ’பெரியார் கழக’ பிரின்ஸூக்கும் எனது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பதிவு ’அக்ரஹாரத்தில் கழுதை’ படத்தின் பற்றிய விமர்சனமே தவிர ஜான் ஆப்ரகாம்மின் ஆளுமையை விமர்சிக்கும் அளவிற்கு எனக்கு தகுதியில்லை என்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்லூரி விடுதியில் கழுதை வைக்கக் கூடாது என்று நடுத்தர வயது பேராசிரியர் நானுவிடம் (நாராயணசாமி) சொல்ல, இரண்டு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு தன் கிராமத்தில் கழுதையை விட செல்கிறார். பேராசிரியர் கழுதையை மூட்டை கட்டுவதில் இருந்து, பஸ்ஸில் பயணம் செய்யும் வரை கழுதையோடு அவரும் ஒதுக்கப்படுகிறார். ஊருக்குள் பேராசிரியர் மாட்டு வண்டியில் நுழையும் போது பிணத்தின் முன் ஆடியப்படி சவ ஊர்வலம் செல்கிறது.நானு அக்ரஹாரத்தில் தன் அப்பா, அம்மாவிடம் கழுதை தன்னை தேடி வந்த கதையை சொல்கிறான். கழுதையை பராமரிக்க ஒடுக்கப்பட்ட ஊமைப்பெண்ணை வேலைக்கு வைக்கிறான். தன் கழுதை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்லி பணம் கொடுத்து, ஊருக்கு செல்கிறான். நானு ஊருக்கு சென்றதும், அக்ரஹாரத்து விஷம சிறுவன் ஒருவன் செய்யும் வேலையால் ஒவ்வொரு முறையும் பழி கழுதை மீது வந்து விழுகிறது.

நானு ஊர் திரும்பியது அக்ரஹாரத்தில் கழுதையால் தன்னை திட்டி பேசுவதை சொல்லி அப்பா குறைப்பட்டுக் கொள்கிறார். நடுவில், கழுதையை பார்த்துக் கொள்ளும் ஊமைப்பெண் அந்த கிராமத்தில் இருக்கும் ஒருவனால் வஞ்சிக்கப்பட்டு கர்ப்பமாகிறாள்.

நானுவின் தம்பி தன் மனைவியுடன் வெளியூரில் இருந்து வர, தம்பி மனைவிக்கு வீட்டில் கழுதை இருப்பது பிடிக்கவில்லை. அக்ரஹாரத்தில் தங்கள் வீட்டைப் பற்றி கேவலமாக பேசுவதை சொல்லி கவலைப்படுகிறாள். அவர்களை திருப்திப்படுத்த நானு ஊமைப்பெண்ணின் பொருப்பிலே கழுதையை விட்டு செல்கிறான்.

ஊமைப்பெண் கர்ப்பமான நிலையிலும் கழுதைக்கு தேவையான உணவு வைக்கிறாள். சில மாதம் கழித்து ஊருக்கு திரும்பும் நானு, ஊமைப்பெண் அக்ரஹாரத்தில் இருப்பவர்கள் கழுதையை உள்ளூர் சலவை தொழிலாளியிடம் கொடுத்துவிட்டதாக சொல்கிறாள். இந்த நிலையிலும், நானு கர்ப்பமான ஊமைப் பெண்ணைப் பற்றி நானு விசாரிக்கவில்லை. கர்ப்பத்திற்கு காரணம் யார் என்று கேட்கவில்லை.

நானு சலவைத் தொழிலாளியிடம் இருந்து கழுதையை வாங்கி மீண்டும், ஊமைப்பெண்ணிடம் கொடுத்து விட்டு ஊருக்கு செல்கிறான். கர்ப்பமான ஊமைப்பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறக்கிறது. அடுத்த நாள், கோயிலில் இறந்த சிசு கிடப்பதை ஒரு பிராமினர் பார்க்கிறான். அக்ரஹாரத்தில் இருப்பவர்கள் ஊமைப்பெண்ணின் பாட்டியை விசாரிக்க, கழுதை தான் இறந்த சிசுவை கோயிலில் போட்டதாக சொல்கிறாள்.

முதலில், நம்ப மறுக்கும் அக்ரஹாரத்தினர்கள் பிறகு கூலி ஆட்களை வைத்து அந்த கழுதையைக் கொள்ள சொல்கிறார்கள். ஊருக்கு திரும்பும் நானுவிடம், விஷம சிறுவன் கழுதை கொன்றதை கூறுகிறான். இறந்த கழுதை உருவம் அக்ரஹாரத்து பிரமனர்களுக்கு தெரிவதாகவும், அதற்கு கோயில் கட்ட முடிவு எடுத்திருப்பதாகவும் சொல்கிறான். கழுதையை கொல்ல சொன்ன பிரமனரே கழுதை தெய்வ அம்சம் கொண்டதை சிலாகித்து பேசுவதை நானு கேட்கிறான்.

நானு ஊமைப்பெண்ணை தேடி செல்ல, அவள் கழுதையின் தலை மண்டை ஓட்டை கொடுக்கிறாள். நானு கழுதையின் மண்டை ஓட்டை ஒடுக்கப்பட்ட கூட்டத்தினரிடம் கொடுக்க, அவர்கள் மனிதர்கள் சவ ஊர்வலத்தில் ஆடுவது போல் கழுதை மண்டை ஓட்டை நடுவில் வைத்து ஆடுகிறார்கள்.

இறுதியில், நானுவும், ஊமைப்பெண்ணும் அக்ரஹாரத்துக்கு தீயிட்டு கொளுத்துகிறார்கள்.

தேசிய விருதுப் பெற்ற இந்த படம் இரண்டும் முறை தூர்தர்ஷனில் போடுவதாக அறிவிக்கப்பட்டு அன்றைய ஜானதிபதி வெங்கட்ராமனால் தள்ளி வைக்கப்பட்ட செய்தியை ஆர்.ஆர். சீனிவாசன் கூறினார். வெளியான புதிதில் பல விமர்சனங்கள் சந்தித்ததையும் கூறினார். தகவலுக்கு நன்றி சீனிவாசன் !!!

படம் திரையிட்ட முடிந்த பிறகு பல விமர்சனங்கள் மனதில் எழுந்திருக்கும். காலத்தில் நலம் கருதி அவை எல்லாம் விவாதிக்காமல் இருந்துள்ளது என்று தோன்றுகிறது.

இறந்த சிசுவை பாட்டி தூக்கி செல்ல, அடுத்த நாள் கோயிலில் சிசு கிடக்கிறது. அப்படி என்றால் பிணத்தை எடுத்து சென்ற பாட்டி ஏன் கோயிலில் போட வேண்டும் ? பிரமனர்கள் செய்யும் தவறை கழுதை மீது போடுவது போல், ஊமைப்பெண்ணின் பாட்டி செய்கிறாள். கிழவியை தவிர்த்து அக்ரஹாரத்தில் இருப்பவர்கள் மட்டும் தண்டிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் ?

ஒடுக்கப்பட்ட பிரிவில் சேர்ந்த பெண், மூன்று முறை கைப்பிடித்து இழுத்தால் ஆசைக்கு இனங்கிவிடுவாளா ? தந்தை பெயர் தெரியாமல் பிறக்க போகும் குழந்தையை நினைத்து வருந்துவது போல் ஒரு காட்சிக் கூட இல்லையே !! ஒடுக்கப்பட்டவர்கள் கற்பைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று சொல்லும் எண்ணத்தை உருவாக்குகிறது.

பார்ப்பனர்களின் பழக்க வழக்கங்களை துணிச்சலாக விமர்சனம் செய்து காட்சிப்படுத்தியதில் ஜான் ஆப்ரகாம் பாராட்டு பெற்றாலும், ஊமைப்பெண் பாத்திரப்படைப்பில் பல விமர்சனங்களுக்கு ஆளாகிறார்.

ஒரு கழுதையை கொன்றதிற்காக அக்ரஹாரத்தை எரிக்கும் பேராசிரியரும், ஊமைப்பெண்ணும்… அது வரை காட்டிய பாத்திரப்படைப்பையே சந்தேகிக்க வைக்கிறது. பேராசிரியராக வரும் எம்.பி.சீனிவாசன் மிகவும் அமைதியாகவும், பொறுமையாகவும் இருக்கும் பாத்திரமாக வருகிறார். கழுதை கொன்ற செய்தியை கேட்கும் போது கூட முகத்தில் பெரிய அதிர்ச்சியோ, பதட்டமோ, கோபமோ காட்டவில்லை. அப்படிப்பட்டவர் மனதில் அக்ரஹாரத்தை எரிக்க கூடிய வன்மத்தை ஏற்றுக் கொள்ளுபடியாக இல்லை.

அதேப் போல், ஊமைப்பெண் தன்னை ஏமாற்றி குழந்தை கொடுத்தவனை எதுவும் செய்யாமல் இருக்க, பணத்திற்காக பாரமரித்த கழுதையை கொன்றதற்காக அக்ரஹாரத்தை எரிப்பது ஏற்றுக் கூடியதாக இல்லை.


’வேதம் புதிது’ படத்தை சென்சார் போர்ட்டுக்கு போட்டு காட்டிய பிறகு, பாரதிராஜாவிடம் “படம் நல்லா இருக்கு, எதுக்கும் இந்த படத்த காஞ்சி சங்கரசாரியாருக்கு போட்டு காட்டுங்க…” என்றார்களாம். அதற்கு பாரதிராஜா, “காஞ்சி சங்கரசாரியார் எப்போ சென்சார் போர்ட் மெம்பரானாரு…” என்றார். தனது நிலையில் மிகவும் தீவிர இருந்தார் பாரதிராஜா.

‘வேதம் புதிது’ படத்திற்கு முன்பே ‘அக்ரஹாரத்தில் கழுதை’ படம் வெளிவந்துள்ளது. அப்படியென்றால், எந்த அளவிற்கு பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டை ஜான் ஆப்ரகாம் எதிர்க் கொண்டு இட்ருப்பார் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.  தேசிய விருதுப் பெற்றும், தூர்தரிஷனின் போட அனுமதிக்க வில்லை. இது பார்ப்பனியர்களின் ஆதிக்கமே தெரிகிறது.

கண்டிப்பாக அன்றைய காலக்கட்டத்தில் மிக துணிச்சலான படம் தான். பார்ப்பனர்களை சாடியதற்காக இந்த படத்தை பாராட்டலாமே தவிர கொண்டாடும் கூடிய படைப்பாக இந்த காலத்தில் தெரியவில்லை.

**

ஒவ்வொரு மாதம் மூன்றாவது சனிக்கிழமை அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி யில் ”மாற்றம் தந்த இந்திய சினிமா” நிகழ்வு நடக்கும். நண்பர்களுடன் அவசியம் கலந்துக் கொள்ளவும்.

3 comments:

எனது கவிதைகள்... said...

அய்யா இந்த "அக்ரஹாரத்தில் கழுதை’ படம் எங்கு(DVD) கிடைக்கும்!


உண்மைவிரும்பி.
மும்பை.

KANTHANAAR said...

DD யில் போடவில்லை அதனால் பார்ப்பனர் ஆதிக்கம் என்கிறீர்கள்.. நான் அதை ஏற்கவில்லை.. பொதுவாக பார்ப்பனர்கள் ஆதிக்கம் என்றால் முற்போக்கு பட்டம் கிட்டும் அதனால் எளிதாக அந்த சொற்றொடர்களை அனவரும் பயன் படுத்துவது போல நீங்களும் பயன் படுத்துகிறீர்கள்..
அது உண்மை என்றால்
(1) அம்பேத்கர் கார்டூன் போட்ட புத்தகத்தை உடனே மத்திய அரசு வாபஸ் பெற்றதே அதனால் தலித் ஆதிக்கம் எனலாமா..? (2) சல்மான் ரூஷ்டி புத்தகம் சாத்தான் கவிதையை மத்திய அரசு பல வருடங்களுக்கு முன்பு தடை செய்தது அதனால் முசுலீம் ஆதிக்கம் எனலாமா...? (3) ஷா பானு வழக்கில் மத்திய அரசு பயந்து கொண்டு ஷரியத்தில் கை வைக்க மாட்டேன் என்றதே உடனே இஸ்லாம் ஆதிக்கம் எனலாமா...
அதனால் அவ்வப்பொழுது மத்திய அரசுகள் தனக்கு உகந்த வகையில் customize செய்து கொள்கிறது.. அதனால் ஒரு குறிப்பிட்ட ஆதிக்கம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.. (முதலில் நானும் அப்படி நம்பியிருந்தேன்.. தற்போது தெளிவடைந்து விட்டேன்)
R கந்தசாமி

குகன் said...

உங்களுடைய 2 மற்றும் 3 கேள்விக்கு பதில்... காங்கிரஸ் என்றும் இஸ்லாம் ஓட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் என்பது வரலாறு. அதன் பிரதிபலிப்பே அதற்கான நடவடிக்கை. இதே நடவடிக்கை பி.ஜே.பி அரசிடம் நீங்கள் எதிர்பாக்க முடியாமா ? கட்சி தகுந்தால் போல் நடவடிக்கை மாறும்.

முதல் கேள்விக்கு பதில்... தலித் உணர்வுகளை மதிக்காததால் தான் சில ஆதிக்க வேறியினர் அம்பேத்கரை அவமானம் படுத்தும் விதமாக கார்டூனை பாடத்திட்டத்தில் சேர்த்தனர். எதிர்ப்பு வந்ததும் நீக்கிவிட்டார்கள். ஆதிக்கம் அல்ல... தலித் உணர்வுகளுக்கு (குறைப்பட்சம் இதுலாவது) மதிப்பு கொடுத்திருக்கிறார்கள். அதே வருடம், நேரு மௌன்ட் பேட்டன் மனைவிக்கு சேவகம் செய்யும் கார்டூனை ஏன் பாடப் புத்தகத்தில் சேர்க்க வில்லை. அதை யாராவது கேட்டார்களா ?

LinkWithin

Related Posts with Thumbnails