வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, March 31, 2017

Office ( 2015 – Korean Thriller movie )

ஒருவனுக்கு அலுவலகத்தில் வேலை கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் எல்லாம் கிடைத்த மாதிரி. அதில் வரும் வருமானத்தில் தனது குடும்ப சந்தோஷத்தை கவனித்து கொள்ள முடியும். தேவைகளை நிறைவேற்றி கொள்ள முடியும். கடைசிக் காலத்திற்கு திட்டமிட முடியும். ஆனால், அதே அலுவலக வேலை அவனுக்கு மன அழுத்தத்தையும் கொடுக்கும். குடும்ப சந்தோஷத்தையும் கெடுக்கும். இன்றைய காலக்கட்டத்தில் அலுவலக வேலை, குடும்ப வாழ்க்கையை சிதைத்து கொண்டிருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. இரண்டையும் சமமாக நடத்துபவனால் மட்டுமே வெற்றிக்கரமாக வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியும். 

அப்படி பலரது வாழ்க்கையை தீர்மானிக்கும் அலுவலகத்தை சுற்றி நடக்கும் கதை தான் “Office”. 

அலுவலகத்தில் வீட்டுக்கு வரும் கிம் தனது அம்மா, மனைவி, மகன் என்று மொத்த குடும்பத்தையும் சுத்தியலால் அடித்து கொலை செய்து தலைமறைவாகிறான். 

அடுத்த நாள் காவலர்கள் அவன் வேலை செய்த அலுவலகத்தில் அவனைப் பற்றி விசாரிக்கிறார்கள். யாரும் அவனைப் பற்றி தவறாக சொல்லவில்லை. எந்த விதமான கெட்டப் பழக்கமோ, கள்ளத் தொடர்போ இல்லை. அலுவலகத்தில் அடுத்த சீனியர் மேனேஜராக வரக்கூடிய லிஸ்டில் இருப்பவன். பணியின் அழுத்தம் காரணமாக இப்படி செய்திருக்கலாம் என்று ஆரம்பத்தில் போலீஸ் சந்தேகப்படுகிறது. 

அதே அலுவலகத்தின் ஒப்பந்த ஊழியராக இருக்கும் மி-ரே தனது வேலை நிரந்தத்திற்காக கடுமையாக உழைப்பவள். விசாரணையின் போது தனது வேலையை காப்பாற்றிக் கொள்ள மி-ரே கிம்மைப் பற்றி எதுவும் சொல்லாமல் மறைக்கிறாள். 

சீனியர் மேனேஜர் சேலஸ் ரிப்போர்ட் தயாரிக்க வேண்டிய வேலையை கிம்மிடம் கொடுத்திருந்தார். இப்போது அவன் இல்லாததால் கிம்முக்கு அடுத்தப்படியாக இருப்பவனிடம் இந்த வேலையை கொடுக்கிறார். 

காவலர்கள் விசாரணையின் போது கொலை நடந்த அன்று அலுவலகத்தின் ரெக்கார்ட்டான சி.சி.டி.வி காமிரா புட்டேஜ்யை பார்க்கிறார்கள். அதில், தனது குடும்பத்தை கொலை செய்த கிம் மீண்டும் அலுவலகத்திற்கு வந்தது தெரிகிறது. ஆனால், மீண்டும் அலுவலகத்தை விட்டு செல்லவில்லை. அப்படியென்றால் அவன் அலுவலகத்திற்குள் எங்கையோ மறைந்திருக்கிறான். அந்த சமயத்தில் சேல்ஸ் ரிப்போர்ட் தயாரிக்க வேண்டியவன் கொல்லப்படுகிறான். மீட்டிங் நடக்கும் இடத்தில் அவனது பிணம் கிடக்கிறது. தொடர்ந்து சேல்ஸ் ரிப்போர்ட் தயாரிக்கச் சொன்னப் பெண்ணும் இறக்கிறாள். கிம் தான் கொலை செய்திருப்பான் என்று அலுவலகத்தில் இருப்பவர்கள் சந்தேகப்படுறார்கள். தொடர்ந்து கொலை செய்யும் கிம் மி-ரேவை பார்க்கும் போது அன்போடு பேசுகிறான். அவனை பார்க்கும் போது வரும் அதிர்ச்சியில் காவலர்களையோ, மற்றவர்களையோ தொடர்பு கொள்ள முடியவில்லை. 

கிம் எதற்காக இத்தனை கொலை செய்ய வேண்டும் ? நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட்டுக்கும், கொலைக்கும் என்ன சம்மந்தம் ? ஒப்பந்த ஊழியரான மி-ரேவிடம் மட்டும் எதற்காக பேசுகிறேன் ? என்பதை அறிந்துகொள்ள படத்தை டவுன்லோட் செய்து/ DVD வாங்கி பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 

வழக்கமான சைகோ த்ரில்லர் வகை கதை தான். ஆனால், திரையில் காட்டிய விதத்தை பாராட்டியாக வேண்டும். படத்தில் பெரிய முடிச்சுகள் கிடையாது. யார் கொலை செய்கிறார் என்பதை ஒரு கட்டத்தில் எளிதில் யுகித்துவிடலாம். ஆனால், படம் பார்க்கும் பார்வையாளர்கள் தங்களுக்குள்ளே ஆயிரம் முடிச்சு அவர்களாகவே போட்டுக்கொள்வார்கள். அதை எப்படி அவிழ்க்கப் போகிறார் என்ற ஸ்வாரஸ்யத்தையும் வளர்த்துகொள்வார்கள். ஆனால், அது முடிச்சு அல்ல, சாதாரண ஒரு Coincidence என்பதை போல படம் செல்லும். 

உதாரணத்திற்கு, காலை அலுவலகத்தில் எல்லோரும் 9 மணிக்குள் வந்துவிட வேண்டும். நடக்கும் கொலை இரவு 9 மணியாக இருக்கிறது. இதற்குள் எதாரவது தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. ஆனால் அப்படி எதுவும் இல்லை. அதேப் போல் மீட்டிங் ரூம்மில் அவ்வப்போது தண்ணீர் ஒழுகிறது. அந்த ஓட்டையில் இருந்து தான் ஒரு பிணம் விழுகிறது. அதன் வழியாக தான் கிம் அலுவலகத்திற்குள் வருகிறார் என்று நினைத்தால்… அதுவும் இல்லை. இப்படி நாமே யுகித்துகொண்டு ஸ்வாரஸ்த்தை வளர்த்துக்கொள்ளும் காட்சிகள் நிரம்ப இருக்கிறது. 

அலுவலத்திற்குள் த்ரில்லர் கதையை தேடிக் கொண்டிருக்கும் இயக்குனர், உதவி இயக்குனர் கண்டிப்பாக இந்தப் படத்தை பார்க்க வேண்டும். வேலையில் மன அழுத்தத்தை ஏற்று கொண்டால் அலுவலகத்தில் சென்று வீட்டுக்கு வரும் வரை மட்டுமல்ல… வீட்டுக்கு வந்த பிறகும் அந்த அழுத்தம் நம்மையும், நம்மை சார்ந்து இருப்பவர்களையும் பாதிக்கும். 

வேலை என்பது வருமானதிற்கு மட்டுமே….நமது வாழ்க்கையை ஆள்வதற்கில்லை. 

Office  படத்தின் ட்ரெய்லர்


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails