வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, March 28, 2017

Beast of No Nation ( 2015 - American war film)

சிறுவர் போராளியை பற்றிய கதை. கொள்கை, அரசியல், யுத்தம் என்று எதுவும் தெரியாத சிறுவர்கள் தவறான வழிக்காட்டுதலின் பெயரால் ஆயுதங்களை தேர்வு செய்யப்படும் போது அவர்கள் வாழ்க்கை பார்க்கக் கூடாத பல விஷயங்களை பார்க்கிறார்கள். அந்த வயதில் கிடைக்க வேண்டிய பல விஷயங்களை இழக்கிறார்கள். அப்படி சந்தர்ப்பத்தால் ஆயுதம் ஏந்திய சிறுவன் அகுவைப் பற்றிய படம் இது. 

பெயரிடப்படாத ஆப்பிரிக்க நாடு. உண்மையில் அந்தா நாட்டின் பெயர் தேவையில்லை. பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் நடக்கும் ஒரே அரசியல் தான். தீவிரவாதி குழுக்கள் அரசுக்கு எதிராக இயங்கவதும், பொது மக்களை மிரட்டி உடைமைகளை பிடுங்குவதும், பொதுமக்களின் நிலத்தை அபகரிப்பதும் என்று மக்களுக்கு கஷ்டத்தை கொடுப்பார்கள். இன்னொரு பக்கம், அரசாங்கத்தின் இராணுவம் தீவிரவாதிகளை பிடிக்க வேண்டும் என்பதற்காக பொது மக்கள் இருக்கும் பகுதியை ஆக்கிரமிப்பதும், தீவிரவாதிகளிடம் யுத்தம் நடந்தவனம் இருப்பார்கள். 
 
இப்படிப்பட்ட சூழ்நிலை நடுவில் ஒரு கிராமம் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அந்தப் பெயரிடப்படாத நாட்டின் கிராமத்தில் சிறுவர்களை போல் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. இராணுவ வீரர்களிடம் தங்களது குப்பை பொருளை விற்பனை செய்யும் அளவிற்கு சுட்டியானவர்கள். குறிப்பாக நாயகன் சிறுவன் ‘அகு’ மிகவும் துறுதுறுவாக விளையாடுபவன். தனது பேற்றோர்கள், பெரிய சகோதரன் என்று அவனது வாழ்க்கையில் மகிழ்ச்சி சூழ்ந்து கொண்டிருந்தது. 
 
எவ்வளவு நாட்கள் தான் எல்லையோர கிராமத்தை மகிழ்ச்சியாக விட்டு வைப்பார்கள். போராளிகளுக்கும், இராணுவத்திற்கும் நடக்கும் போராட்டத்தில் கிராம மக்களை பாதுகாப்பு நலன் கருதி கிராமத்தை விட்டுச் செல்லச் சொல்கிறார்கள். வேறு வழியில் இல்லாமல் பெண்களையும், குழந்தைகளையும் மட்டும் அனுப்பி வைத்து தங்களது கிராமத்தை ஆண்கள் காப்பாற்ற நினைக்கிறார்கள். ஆனால், கிராமத்தை ஆக்கிரமித்த இராணுவத்தினர் தங்கியிருந்த ஆண்களை யாரும் அந்த கிராமத்து மக்கள் என்று நம்பவில்லை. தீவிரவாதிகள் என்று சந்தேகித்து சரமாரியாக சுட்டு தள்ளுகிறார்கள். 
 
 
 
தந்தை, சகோதரன் இழந்த சிறுவன் அகு தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள காட்டுப் பக்கம் ஒதுங்குகிறான். அங்கிருக்கும் தீவிரவாதிகளிடம் தஞ்சமடைந்த அவன், அவர்கள் செல்லும் ஆயுதப் போராட்ட வழியில் பயணிக்க நிர்பந்திக்கப்படுகிறான். அவர்கள் ஆணைக்கு ஏற்ப கொலையும் செய்கிறான். 
 
ஒரு கொலை செய்துவிட்டோம் என்ற குற்றவுணர்வில் இருக்கும் போது பாலியல் தொல்லைக்கு ஆளாகிறான். அடுத்த நாள் ஒரு இடத்தை ஆக்கிரமிக்கும் போது அவன் முன் ஒரு தாய் கற்பழிக்கப்படுவதைப் பார்க்கிறான். அதை தடுக்க முடியாத அவன் அந்தப் பெண்ணை கொலை செய்கிறான். நாளுக்கு நாள் அவனுள் மிருகம் வளர்வதை அவன் உணர்கிறான். 
 
ஒரு போராட்டத்தின் போது தனது சக நண்பன் ஸ்டைக்காவையும் இழக்கிறான். போராட்டக் கூட்டத்தில் இருந்து தப்பிக்கவும் முடியாமல், தூப்பாக்கி ஏந்தியப்படி கமாண்டர் சொல்வதை செய்ய வேண்டிய சூழ்நிலை, அரசியல் மாற்றத்தால் அவனது கமாண்டருக்கு இருக்கும் ஆதரவு குறைகிறது. குழு தலைமை அவனது பதவியை பறித்து வேறு ஒருவனை கமாண்டராக நியமிக்கிறார். இதை விரும்பாத தீவிரவாதக் குழுவின் கமாண்டர் புதிதாக நியமனம் செய்தவனை சூழ்ச்சியால் கொன்று, தனது குழுவை தக்கவைத்துக்கொள்கிறான். 
 
நாட்கள் செல்ல செல்ல… தூப்பாக்கி தோட்டாக்கள் இல்லாமல், குறைந்த உணவோடு அரசியல் ஆதரவில்லாமல் அந்த தீவிரவாதக் குழுவால் இயங்க முடியவில்லை. கமாண்டரை எதிர்த்து குழு கலைந்து சென்று இராணுவத்திடம் சரணடைகிறார்கள். இராணுவத்தின் மறுவாழ்வு மையத்தில் அகு மீண்டும் பழைய சிறுவனாக அங்கிருக்கும் சிறுவர்களோடு விளையாடுகிறான். 
 
ஆப்பிரிக்க நாட்டின் தீவிரவாதி குழுக்களில் மட்டுமல்ல…. உலகம் முழுக்க இருக்கும் தீவிரவாத அமைப்பில் சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். ஹிட்லரின் இராணுவத்தில் கூட சிறுவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் பழிவாங்கும் உணர்ச்சியை அவர்களுடைய பாலியத்தை அழித்து தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் கூட்டம் இருந்துக் கொண்டு தான் இருக்கிறது.

சிறுவர்கள் ’ஆயுத போராட்ட வாழ்க்கை’யை அவ்வளவு எளிதில் ஏற்பதில்லை. குடும்பம், மகிழ்ச்சி, விளையாட்டு, கொண்டாட்டம், குதுகலம் என்று எல்லாம் ஒரே நாளில் தொலைந்தப் போது, எல்லா கதவுகளும் அடைத்தப்பிறகு இருக்கும் ஒரே கதவாக ‘ஆயுதப் போராட்டம்’ மட்டும் தான். கண்ணுக்கு தெரிந்த கதைவை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் சிறுவர்கள் தள்ளப்படும் போது தான் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள்.

விரும்பி தேர்வு செய்யாத ஒரு விஷயத்தை வாழும் போது அந்த சிறுவர்களுக்கு இருக்கும் மன அழுத்தம், உளவியல் சிந்தனை என்று படம் முழுக்க ‘அகு’ என்ற சிறுவன் மூலம் நம்மால் உணர முடியும்.

அமெரிக்காவில் புலம்பெயர்ந்த நைஜிர்யா நாட்டை சேர்ந்த Uzodinma Iweala என்பவர் எழுதிய ”Beasts of No Nation” நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். பல திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டு பெற்றுயிருக்கிறது.

ஒருவன் எவ்வளவு திசை மாறினாலும், மிருகமாக திரிந்தாலும்… நாம் அடிப்படையில் மனிதர்கள். அதை உணர்ந்த நிமிடமே நம்முடைய பாதையை மாற்றி அமைத்துக் கொண்டு பயணிக்க முடியும் என்பதை இந்தப்படம் காட்டுகிறது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails