
விமர்சனத்திற்கு முன்பு 361 டிகிரி என்றால் என்ன என்பதை சொல்லிவிடுகிறேன். 360 டிகிரி வட்டத்தை குறிக்கிறது. 360 டிகிரி கொண்ட வட்டத்தை மீறி 361வது டிகிரியாக சிந்திக்கப்பட்ட படைப்புகள் இருப்பதை உணர்த்துகிறது. தலைப்பே நவீன படைப்பாளிகளுக்கான தளம் என்பதை காட்டுகிறது.
முதலில் புத்தகத்திற்கான வடிவமைப்பையும், அதன் படங்களையும் பாராட்டியாக வேண்டும். நவீன படைப்புகளுக்கு பொருத்தமான படங்களை தேர்வு செய்திருக்கிறது ஆசிரியர் குழு. ஒவ்வொரு ஓவியங்களும் பல அர்த்தங்களை சொல்லுகிறது. சில பக்கங்களின் கவிதையை விட ஓவியமே அதிகமாக பிரமிக்க வைக்கிறது.
அடியேனுக்கு நவீன படைப்பும் ஏழு கடல் தூரம். எழுத நான் முயற்சிக்க வில்லை என்றாலும், படித்து புரிந்துக் கொள்ள முயற்சிப்பேன். புரியவில்லை என்றால் என் சிற்றறிவை நினைத்து நொந்துக் கொள்வேன்.
மற்ற படைப்புகள் போல் கவிதைகள் இல்லை. கவிதைகளை ஒன்றோடு ஒன்று சேர்ந்தால் இரண்டு என்று தெளிவாக சொல்லிவிட முடியாது. ஒருவருக்கு புரியும் கவிதை, இன்னொருவருக்கு புரியாது. ஒருவருக்கு பிடித்தது மற்றவருக்கு பிடிக்காது. ஒரு சிலருக்கு கவிதையாய் தெரியாதது, இன்னும் சிலருக்கு கவிதையாய் தெரியும். இப்படி பலருக்கு பல பார்வையை கொடுக்கக் கூடிய கவிதைகளை 361 டிகிரி முதல் இதழிலே கொடுத்துள்ளனர்.
”நீர்வழிப்புணை” தலைப்பில் சபரிநாதன் எழுதிய கவிதையில்..
நம் அளவிற்கு நம் கால்கள் நம்பத் தகுந்தவையல்ல
நம் அளவிற்கு நம் கண்களுக்கு நிதானமில்லை
நம்மைப் போல் செய்துமுடித்த பின் எதையும் யோசிப்பதில்லை நம் கைகள்
அஹமட் ஃபயாஸ் என்ற உருது கவிஞர் அவர் இறக்கும் முன்னர் எழுதிய கவிதை
மரணம் வந்துவிட்டது
கையில் ஒரு பட்டியலோடு
இன்றைய பட்டியலில்
யார் பெயர்கள் இருக்கின்றன் ?
எனக்கு தெரியவில்லை.”
வேற்றுகிரக வாசிகள்” என்ற கவிதையில் திருப்தியாக வாழும் மனிதர்களை சொல்லி இறுதியில் ” நான் அவர்களில் ஒருவனல்ல” என்று சொல்லும் போது சராசரி மனிதனின் மனதை காட்டுகிறது.
பட்டியலை பற்றி “தவறிவிட்டது” என்ற தலைப்பில் அ.முத்துலிங்கம் அவருக்கு உரிய நகைச்சுவை பாணியில் எழுதியிருக்கிறார். குறிப்பாக சங்ககாலத்தில் கபிலரின் பட்டியலையும், கண்ணகி பட்டியலிட்ட்தையும் மேற்கோள் காட்டியிருக்கும் இடம் மிகவும் அருமை.
”யதார்த்தத்தின் சலிப்பிலிருந்து புத்தொளியின் வெளிக்கு...!” என்ற தலைப்பில் இசை என்பவர் எஸ்.செந்தில்குமாரின் “முன் சென்ற காலத்தின் சுவை” நூல் விமர்சனம் செய்திருக்கிறார். நான் படித்த விமர்சன கட்டுரைகளில் கண்டிப்பாக இதுவும் ஒன்றாக இருக்கும். எழுத்தாளரின் கவிதையை விட கவிதைகளைப் பற்றி நல்ல அழமாக விமர்சனம் செய்திருக்கிறார்.
”பற்றற்றான்” தலைப்பில் செல்வ புவியரசன் சிறுகதை, பற்றற்ற மனிதனின் மனநிலை சொல்லும் போது இறுதியில் அவள் உடலில் பற்றோடு ஒட்டியிருக்கும் சிறுநீரை சொல்லு இடம் புன்முறுவல் செய்ய வைக்கிறது.
வெய்யில், இசை, நதியலை என்று பல எழுத்தாளர்கள் இந்த இதழ் மூலமே எனக்கு அறிமுகமாகிறார்கள். வரும் இதழில் பல புது எழுத்தாளர்களுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று நம்புகிறேன்.
சந்தா, விளம்பரம் இரண்டும் ஒரு சிற்றிதழ் வளர்ச்சிக்கு இரு கண்கள். இந்த இரண்டையும் தவிர்த்து முதல் இதழ் கொண்டு வந்துள்ளனர்.
சிற்றிதழை நஷ்டமில்லாமல் நடத்த முடியாது. சந்தா, விளம்பரம் வைத்துதான் ஓரளவு நஷ்டத்தை தவிர்க்க முடியும். வரும் இதழ்களில் ஆசிரியர் குழு இதை ஏற்றால் தொடர்ந்து நடத்துவதில் சிரமம் இருக்காது.
முதல் இதழையே அட்டகாசமாக கொண்டு வந்த நண்பர் நிலாவுக்கும், நரனுக்கும் என் வாழ்த்துக்கள்.
நூலை வாங்க...
நரன் - 88258 25042
நிலாரசிகன் - 97910 43314
No comments:
Post a Comment