வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label Kamala hasan. Show all posts
Showing posts with label Kamala hasan. Show all posts

Wednesday, September 20, 2017

கமலின் தனி கட்சி ?

ஒரு காலத்தில் கமல் அரசியலுக்கு வருவார். கமல் தனிக் கட்சி தொடங்குவார் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஏன் கமலுக்கு கூட இருந்திருக்காது. ஆனால், நடக்கும் நிகழ்வுகளில் பார்த்தால் கமல் அரசியலுக்கு வந்தால் அவர் தொடங்கும் கட்சியின் Agenda என்னவாக இருக்கும் என்பதில் இதை எழுதிகிறேன். 



முதல் Agenda. தேர்தலில் போட்டியிடும் கட்சியாக இருக்காது. அதாவது, அவர் தொடங்கும் கட்சி அரசியல் கட்சியாக இருக்காது. ஒரு இயக்கமாக இருக்கும். 

தேர்தல் அரசியலில் வராததற்கு எதற்காக கட்சி தொடங்க வேண்டும் ? என்ற கேள்வி வரலாம். 

இதே கேள்வியை பெரியாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் தந்த பதில், “தேர்தல் அரசியல் போட்டியிட்டால், நாம் யாரை எதிர்த்து பேசுகிறோமோ அவர்களோடு சமரசம் செய்துகொள்ள வேண்டியது இருக்கும். அதனால், தனது தி.க இயக்கம் தேர்தல் அரசியலில் போட்டியிடாது” என்றார். இன்று வரை, தி.கவினர் தேர்தலில் பிரச்சாரம் செய்தாலும் எந்த தேர்தலிலும் நேரடியாக போட்டியிட்டதில்லை. 

கமல் தனது பல பேட்டிகளில் இதை தான் குறிப்பிட்டுவருகிறார். “தமிழகத்தில் ஆளும் வர்க்கத்தை கேள்விக் கேட்கும் சக்தி வாய்ந்த இயக்கம் இல்லை. தமிழகத்தில் பெரியார் போன்ற தலைவர் இல்லை”. 

* 

இரண்டாவது Agenda. மக்களை ஆளும் அதிகாரம் தேவையில்லை. மக்களோடு மக்களாக அதிகாரவர்க்கத்தில் இருப்பவர்களை கேள்வி கேட்கும் அதிகாரம் தேவை. 

கமல் அரசியல் அதிகாரத்தை விரும்புபவராக தன்னை காட்டியதில்லை. மற்ற நடிகர்களை போல் தனது படத்தில் ஏழை பங்காளனாகவோ, நல்லவனாகவோ, உத்தப்புத்திரனாகவோ காட்டிக்கொண்டதில்லை. தனது சொந்த வாழ்க்கையை கூட திறந்தப் புத்தகமாகவே வாழ்ந்திருக்கிறார். கட்சி தொடங்கி முதல்வர் ஆசையெல்லாம் கமலுக்கு இருக்காது என்று நம்புகிறேன். 

கமல் தொடங்கும் இயக்கம் ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்தால் அதை கேள்வி கேட்கும் முதல் குரலாக இருக்கும் என்று கூறலாம். இன்று பலர் தங்கள் அரசியல் அதிகார அதிருப்தியை சமூக வலைதளங்கள் எதோ ஒரு வகையில் பதிவு செய்துவருகிறார்கள். அதை ஒருங்கிணைக்கும் சக்தி ஒன்று தேவைப்படுகிறது. அதை கமல் மேற்கொள்ளலாம். 

* 

மூன்றாவது Agenda. எப்போதும் கமல் சொல்வது தான். ஒரு இந்திய குடிமகனாக சரியாக வரி கட்ட வேண்டும். தேர்தலுக்கு ஓட்டுப் போட வேண்டும். 

கமல் தொடங்கவிருக்கும் இயக்கம் இதை முன்மொழியும். அதற்கானப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும். 

கமல் தேர்தல் அரசியல் தவிர்த்து அதிகாரத்தில் இருப்பவர்களை கேள்வி கேட்கும் இயக்கமாக இருந்தால் பலர் அவருக்கு ஆதரவாக வருவார்கள். அவரும் தேர்தல் அரசியலில் குதிக்கும் கட்சியாக இருந்தால் பத்தோடு பதினொன்றாக தான் அவர் இருப்பார். 

** 

ஆக கமல் தொடங்கும் இயக்கம் (கட்சி அல்ல)….. ஆளும் கட்சி யாராக இருந்தாலும் (அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க இன்னும் பல) அவர்களை கேள்வி கேட்கும் மக்கள் குரலாக இருக்கும் இயக்கத்தை தான் தொடங்குவார் என்பது என் கணிப்பு. 

எல்லாவற்றிக்கும் மேலாக தேர்தல் அரசியலில் கோடிக்கணக்காக பணம் செலவு செய்ய வேண்டும். பொதுகூட்டம், பிரச்சாரம், போஸ்டர் என்று ஆயிரத்தெட்டு செலவுகள் இருக்கிறது. அதற்கு பல கோடிகள் தேவைப்படுகிறது.

கமல் அப்பழுக்கற்ற, 100% உண்மையான கலைஞன். கோடிக்கணக்கான பணம் கிடைத்தால் தேர்தலுக்கு செலவு செய்யமாட்டார். ’மருதநாயகம்’ படம் தான் எடுப்பார்.

Monday, July 6, 2015

பாபநாசம் - அசலை மிஞ்சும் நகல் !!

நீண்ட இடைவேளைக்கு பிறகு கமலிடம் ஒரு ஹிட் படம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், பலர் சொல்லும் அளவிற்கு கமலின் 'Comeback movie' என்று சொல்வதை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

கமல் என்ற நடிகர் எப்போது விழுந்தார் ? அவர் விழுந்தால் தானே மீண்டு எழுவதற்கு. கமல் வெற்றி, தோல்வி எல்லாம் கடந்த ஒரு கலைஞன். படத்தின் வணிக வெற்றி வைத்து கமலை எடைப்போடுவது நம்முடைய பேதமைத்தனத்தை காட்டுகிறது. 

நேற்று வந்த நடிகர், இயக்குனர்களால் ஒரு வெற்றிப்படத்தை கொடுக்கும் போது 50 வருடங்களாக சினிமாவுக்காக உழைத்தவருக்கு தெரியாதா வெற்றிப்படத்தை எப்படி கொடுக்க வேண்டும் என்பது ? அவர் நினைத்தால் ஒரு படத்தை ஹிட்டாக முடியும். தோல்வி அடையும் என்று தெரிந்து ஒரு படத்தை உருவாக்க முடியும். தமிழ் சினிமா அவரை வைத்து தான் பல சோதனை முயற்சிகள் செய்துகிறது. (சூப்பர் ஸ்டார்கள், தளபதிகள் எல்லாம் அரசியலில் வர சினிமாவில் சோதனை முயற்சி செய்பவர்கள்). 

இன்று சினிமாவில் பலர் கண்ட வெற்றிகள் அவர் காட்டிய பாதை என்பது நாம் மறக்க முடியவில்லை.



திரிஷ்யத்தை அப்படியே பாபநாசமாக எடுத்தாக சொல்கிறார்கள். திரைக்கதையில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார்கள். ஆனால், நாயகன் நடிப்பில் மாற்றம் இருக்கிறது, அதை யாரும் கவனிக்கவில்லை என்றே தெரிகிறது. 

மலையாளத்தில் மகள் பயத்தில் அழும் போது மோகன்லால் திடமாக நிற்பார். குடும்பத்திற்கு தைரியம் கொடுப்பார். இறுதிக் காட்சியில், இறந்த மகனின் பெற்றோரிடம் தனது குற்றத்தை ஒத்துக்கொள்ளும் போது எந்த வித குற்றவுணர்ச்சியும் முகத்தில் இருக்காது. அதற்கு ஏற்றவாறு இறந்தவனின் அம்மாவின் பார்வையில் கோபம் கலந்த இயலாமை தெரியும். 

ஆனால், தமிழில் அப்படியில்லை. 

மகள் பயத்தில் அழும் போது கமல் கண்ணில் நீர்ப்பட ஆறுதல் கூறுவார். மகள் அழும்போது ஒரு தந்தையால் திடமாக இருக்க முடியாது என்பதை கமல் உணர்ந்து சரி செய்திருப்பார். அதேப் போல், இறந்த மகன் பெற்றோரிடம் தனது குற்றத்தை ஒத்துக் கொள்ளும் போது குற்றவுணர்வில் கூனி குறுகி பேசுகிறார்.

நான்காவது படித்தவனை கொலையை மறைக்கும் புத்திசாலி தனத்தை சினிமா கொடுக்கும் என்ற லாஜிக்கை ஒரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஒரு நடுத்தர வர்க்கத்தில் வந்தவன் இறந்தவர்களின் பெற்றோரை சந்தித்து, கொலையை ஏற்றுக் கொள்ளும் போது எப்படி எந்த வித குற்றவுணர்வு இல்லாமல் நிற்க முடியும் ? இந்த இடத்தில் கமலின் நடிப்பு திறன் வெளிப்படுகிறது. 

மலையாளத்தில் மோகன்லாலின் உடல் மொழி பல கொலைகள் மறைத்த அனுபவசாலியை போன்ற தோன்றத்தை கொடுக்கும். ஆனால், தமிழில் மனைவியை கவலைப்பட வேண்டாம் என்று சொன்னாலும் கமல் முகத்தில் கவலை தெரியும். எப்படி மீண்டு வரப் போகிறோம் என்கிற பயம் இருக்கும். 

முதல் முறையாக அசலை மிஞ்சும் அளவிற்கு ஒரு நகல் படத்தை தமிழ் சினிமா எடுத்திருக்கிறது. ‪

Thursday, May 7, 2015

கமல் என்னும் மாபெரும் கலைஞன் !

சிவகுமார் எழுதிய ”இது ராஜப்பாட்டை அல்ல” நூலில், சிவாஜி கணேசன் நடிகர் முத்துராமன் மரணத்தை பற்றி இப்படி கூறிப்பிட்டிருப்பார். 

”ஒரு நடிகன் தான் நடித்துக் கொண்டு இருக்கும் போதே இறப்பது பெரும் பாக்கியம்” என்று சிவகுமாரிடம் கூறியிருப்பார். ஏறக்குறைய ‘மனோரஞ்சன்’ பாத்திரம் அப்படிதான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அறிவுக்கு தெரிகிறது கமல் ஏற்று நடித்தது ‘மனோரஞ்சன்’ பாத்திரம் என்று. ஆனால், மனதுக்கு ‘கமலுக்கு அப்படி ஏதாவது இருக்குமோ’ என்று அஞ்சுகிறது. 

எத்தனையோ படங்களில் (வாழ்வே மாயம், நாயகன், குருதிபுனல், குணா etc.) கமல் இறந்திருக்கிறார். அதில் எல்லாம் அவர் நடித்த பாத்திரங்கள். ஆனால், இதில் எனக்கு கமல் ‘கமலாக’ தான் தெரிகிறார். 



தன் வாழ்வில் உச்சத்தை தொடுவதற்காக எத்தனை உறவுகளை கடந்திருப்பார். அத்தனை உறவுகளை தேடி கடைசி நிமிடத்தில் மன்னிப்பு கேட்ட முடியாது என்பதற்காக இப்படி ஒரு படத்தை எடுத்தாரோ என்று தோன்றுகிறது. 

ரஞ்சன் பாத்திரத்தை பார்த்த ரசிகர்கள் அழுதுக் கொண்டு செல்லக் கூடாது என்பதற்காக, ‘உத்தமன்’ பாத்திரித்தில் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். தனக்கு கிடைத்த குறைவான நேரத்தில் ரசிகர்களை எப்படியாவது சிரித்து திருப்திபடுத்திவிட வேண்டும் என்று நினைத்ததால் என்னவோ, உத்தமன் பாத்திரத்தில் செயற்கை தனம் இருக்கலாம். ஆனால், மரணத்தை நெருங்கும் ஒருவன் மற்றவர்களை சிரிக்க வைக்க நினைக்கும் உழைப்பை பார்க்கத் தோன்றுகிறது. 

பல வருடங்களாக கமலின் நடிப்பை, அறிவு ஜீவி தனத்தை பார்த்து வருகிறோம். தலைகனம், திமீர் பேச்சு, அரசியல் கருத்து என்று தனது படத்தில் எதையாவது பதிவு செய்வார். ஒரு கலைஞனுக்கு உரிய பிடிவாதம் அவரிடத்தில் இருக்கும். ஆனால், அப்படி எதுவும் இந்த படத்தில் இல்லை.

இப்படி ஒரு படம் செய்ய வேண்டும் என்று கமலுக்கு அவசியம் இல்லை. சிவாஜி, நாகேஷ், பாலு மகேந்திரா போன்றவர்களின் மரணம் கமலை இப்படி யோசிக்க வைத்ததா ? கே.பி மரணத்துக்கு கூட இதற்கு தான் வரவில்லையா ? தன்னை சுற்றியிருப்பவர்களின் மரணத்தால் வந்த பிரதிபலிப்பா ?

 உண்மையில், தனது மரணத்துக்காக ரசிகர்களை ஒத்திகை பார்க்க சொல்கிறாரரா ? ஒரு கலைஞன் தனது ரசிகர்களை தேற்றுவதற்கும், தனது மரணத்தை கூட கொண்டாட வேண்டும் என்பதாக படம் எடுத்திருக்கிறாரா?

இந்த படத்தில் கமல் சொல்ல வருவது புரிகிறது. ஆனால், மனம் ஏற்க மறுக்கிறது.

என் கமல் எனக்காக, என்னை போன்ற தன் ரசிகர்களான படம். அவருடன் பழகிய உறவுகளுக்கான படம். லிங்காவாசிகளுக்காகவோ, தல – தளபதி ரசிகர்ளுக்காகவோ, ஏன் மற்ற ரசிகர்களுக்காவோ இந்த படம் எடுக்கவில்லை.

”தலைவா ! நீ நூறு வருடம் வாழனும்” என்று உரக்கச் கத்த வேண்டும் போல் இருக்கிறது. 

’சாக வரம் போல் சோகம் உண்டோ’ தனது ரசிகர்களை தேற்றுவதற்காக எழுதினாரோ என்று தோன்றுகிறது. அதில் ஒவ்வொரு வரியும் தனது மரணத்தை குறித்து கமல் எழுதியது போல் இருக்கிறது. படத்தின் அறிமுகக் காட்சிக்கு பாடல் எழுதுபவர்களின் மத்தியில் தனது வாழ்வின் மரணத்தை குறித்து யாரால் எழுத முடியும். 

எந்த ரசிகனுக்கு கிடைப்பார் இப்படி ஒரு கலைஞன். தனது மரணத்தை ரசிகர்களோடு உரையாடும் கலைஞன் எனக்கு கிடைத்திருக்கிறார். இது நடிப்பு என்று கமலே வந்து சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். 

இதை படிக்கும் உங்களுக்கு ‘சினிமாவை சினிமாவாக பார்க்க தெரியாத முட்டாளாக தெரியலாம்’. அதை பற்றி எனக்கு கவலையில்லை. வாழ்க்கை எத்தனையோ தருணத்தில் நான் முட்டாளாக இருந்திருக்கிறேன். இந்த கட்டுரையில் அப்படி தெரிவதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் கமலுக்கான நான் அழுதுக் கொண்டு எழுதும் இந்த கட்டுரையில் முட்டாளாக இருந்துவிடுகிறேன்.

உண்மையில் படம் முடியும் போது கமலை கட்டிபிடித்து அழ வேண்டும் போல இருந்தது.

Wednesday, November 7, 2012

கமலஹாசன் வீடியோ !

ஒரு முறை ஏக்நாத் அவர்களிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது அவர் கூறியது.

 "1984 - 86 களில் வீடியோ திரையரங்கம் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தேன். பல படங்களை காப்புரிமை வாங்கி வீடியோவாக கொண்டு வந்து ,அதற்கான திரையரங்கை உருவாக்க நினைத்த போது பலர் என்னை எதிர்த்தார்கள். விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட கலைஞர்கள் என்று என்னை எதிர்காத ஆளில்லை.


 சிவாஜி தலைமையில் எனக்கு எதிராக புகார் கொடுக்க அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் சென்றார்கள். பத்திரிக்கையில் எனது பேட்டி வந்தால், எனக்கு எதிரான பேட்டி அடுத்த நாள் வரும். அந்த சமயத்தில், வீடியோ தொழில் வளர்ச்சியை யாரும் புரிந்து கொள்ளவில்லை. அப்போது எனக்கு ஆதரவாக இருந்தவர் ஒரே ஒருவர் கமல ஹாசன் தான். தொழிற்வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று எனக்கு ஆதரவாக பேசியவர் அவர் மட்டும் தான்.

இப்போது, ஹோம் தியேட்டர் என்று எல்லோர் வீட்டில் இருக்கிறது. வீடியோ வளர்ந்து... அதற்கு மாற்றாக சீ.டி, டி.வி.டி என்று வளர்ந்திருக்கிறது. இப்போது யார் இந்த வளர்ச்சியை தடுக்க முடியும்." என்றார்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பலர் எதிர்த்த போதும், அதை அதிகம் ஆதரித்தவர் கமல ஹாசன் என்பது குறிப்பிட தக்கது.


திரு.கமலஹாசன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!!

LinkWithin

Related Posts with Thumbnails