வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, May 11, 2018

‘தல’ முதல் படத்தில் ஒரு தந்தையின் சோகம்

‘தல’ முதல் படத்தில் ஒரு தந்தையின் சோகம் அஜித் முதல் தமிழ் படம் ‘அமராவதி’ என்றாலும் அவர் அறிமுகமானது தெலுங்கு படமான “பிரேம புஸ்தகம்” தான். அந்தப் படத்தை இயக்கியவர் தெலுங்கு குணச்சித்திர நடிகர் கொல்லபுடி மாருதி ராவ். அவர் பல தெலுங்கு படங்களில் குணச் சித்திர நடிகராக நடித்திருக்கிறார். ‘ஹேராம்’, ‘தோனி’ போன்ற தமிழ் படங்களிலும் தோன்றியிருக்கிறார். பல நாடகங்கள், நாவல் எழுதியிருக்கிறார். 

ஒரு எழுத்தாளர், குணச் சித்திர நடிகர் படம் இயக்குவதில் பெரிய விஷயமில்லை. ஆனால், அவர் எதற்காக இயக்குனர் அவதாரம் எடுத்தார் என்பது தான் சோகக் கதை. 



’பிரேம புஸ்தகம்’ பூஜை போடும் போது இயக்குனராக அறிவிக்கப்பட்டவர் கொல்லபுடி மாருதி ராவ்வின் மகன் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ். நாயகன் அஜித், நாயகி கஞ்சன் வைத்து பத்து நாட்கள் ஷூட்டிங் சிறப்பாக நடந்தது. ஆரம்ப இயக்குனர் புது முகங்களை கொண்டு விரைவாக செயல்பட்டார். அவரின் போராதக் காலம் படப்பிடிப்பு தளத்தில் தண்ணீர் காட்சிக்காக திட்டமிடும் போது கால் தவறி கீழே விழுந்து இறந்தார். ‘பிரேம புஸ்தகம்’ அப்படியே நின்றுப் போனது. 

மகன் திரைத்துறையில் இயக்குனராக ஜோலிக்கப் போகிறான் என்ற கனவில் இருந்த தந்தை கொல்லபுடி மாருதி ராவ் மகனின் மரணம் தாங்கிகொள்ள முடியாத துயரத்தை தந்தது. புத்திரன் இழந்த சோகத்திலும் அவனது கனவு சிதைந்துவிடக்கூடாது என்று நினைத்தார். தானே அந்தப் படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார். 

இதற்கு முன் பல நாடகங்களில் இயக்கியிருக்கிறார். படங்களில் நடித்திருக்கிறார். படத்தை இயக்கப்போவது முதல் முறை. அப்பொது இவருக்கு வயது 54. திரைத்துறையில் இயக்குனராக வேண்டும் என்ற விருப்பம் கூட கிடையாது. ஆனால், ’பிரேம புஸ்தகம்’ எடுத்து முடிக்க வேண்டும் என்ற வேறி மட்டும் அந்த தந்தைக்கு இருந்தது. காரணம், மகனின் கனவு அழிந்துவிடக் கூடாது என்பது தான். 

’பிரேம புஸ்தகம்’ படத்தை இயக்கி வெளியிட்டார். படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், ஒரளவுக்கு மக்களை சென்றடைந்தது. அந்த வருடம், சிறந்த திரைக்கதைக்காக நந்தினி விருது (1994) கொல்லபுடி மாருதி ராவ்வுக்கு கிடைத்தது. 

’பிரேம புஸ்தகம்’ படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த கொல்லபுடி மாருதி ராவ் மீண்டும் எந்தப் படத்தையும் இயக்கவில்லை. இயக்கவும் விரும்பவில்லை. 

மகனின் கனவுக்காக தொடங்கிய வேலை. அதுமட்டுமில்லாமல், முதல் படத்தில் இருக்கும் சோக மனநிலையோடு ஒவ்வொரு படத்தை இயக்க வேண்டியது இருக்கும் என்று இயக்குனர் வாய்ப்பை தவிர்த்தார். 

தனது மகனின் நினைவாக ’கொல்லபுடி ஸ்ரீனிவாஸ்’ விருது என்ற பெயரில் ஒவ்வொரு வருடம் சிறந்த அறிமுக இயக்குனர்களுக்கு விருது வழங்கிவருகிறார். 

சமிபத்தில் அஜித் குறித்து அவரிடம் கேள்வி கேட்டப்போது, “ அஜித் அப்போது பெரிய ஸ்டாராக வருவார் என்று நான் நினைத்துபார்க்கவில்லை. பிரேம புஸ்தகம் படத்தை நினைக்கும் போது பல ஸ்டார்களை உருவாக்க நினைத்த மகனின் மரணம் தான் நினைவுக்கு வருகிறது” என்றார்.

தந்தையின் கனவை மகன் நிறைவேற்றுவது கடமை. முதுமை வயதில் மகனின் கனவை தந்தை நிறைவேற்றுவதை என்ன வார்த்தை சொல்வதென்று தெரியவில்லை.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails