யுவகிருஷ்ணா எழுதிய ‘நடிகைகளின் கதை’ நூலின் மூலம் இப்படி ஒரு படம் வந்திருப்பதை அறிந்து கொண்டேன். அதுவும், ’தண்டுபாலயா’ படத்தில் பயமுருத்திய பூஜா காந்தி (அர்ஜுன் நடித்த ‘திருவண்ணாமலை’ படத்தின் நாயகி) நடித்தப்படம் என்பதால் டவுன்லோட் செய்து பார்த்தேன்.
கதை என்று பார்த்தால் மற்றுமொரு நடிகையைப் பற்றிய கதை என்று சொல்லலாம். ஆனால், வணிகத்தில் பின் தங்கிய கன்னடப்படத்தின் சகாப்தமாக இருந்த நடிகை கல்பனா பற்றியப்படம் என்பதால் இந்தப்படம் அதிக முக்கியத்துவம் பெருகிறது. தமிழில் மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, சோப்பு சீப்பு கண்ணாடி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
நாடக நடிகையான நந்தா நடித்த முதல் படமே படுத்தோல்வி. ராசியில்லாத நடிகை என்பதால் எல்லாப் பட நிறுவனங்களும் அவளுக்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கிறது. அறிமுக இயக்குனரால் மீண்டும் கன்னட சினிமாவில் நுழைந்து நம்பர் ஒன் இடத்தை பிடிக்கிறார்.
காலத்தின் ஓட்டத்தால் வாய்ப்புகள் குறைய தொடங்குகிறது. நடித்த படங்களும் தோல்வியை தழுவுகிறது. ஒரு கட்டத்தில் கையில் படமில்லை. கடன் தொல்லை. அதனால், மீண்டும் நாடகத்தில் நடிப்பதை தொடர்கிறார்.
சக நாடக நடிகர், கம்பெனி முதலாளியான சாய் ரவியை காதலிக்கிறார். ஏற்கனவே அவருக்கு திருமணமாகி, திருமண வயதில் ஒரு பெண் இருப்பதை நந்தா கவலைப்படவில்லை. கருத்துவேறுபாட்டால் அவரையும் விட்டு பிரிந்து தனிமையில் வாடுகிறாள். தற்கொலையும் செய்துக் கொள்கிறாள்.
60களில் கன்னடப் பெண்கள் நவீன உடை அலங்காரத்தில் நடிகை கல்பனாவை தான் காப்பி அடிப்பார்களாம். அவளுடைய உடை அலங்காரத்தில் மற்ற நடிகைகளால் ஈடுக்கூட கொடுக்க முடியாத அளவுக்கு புகழ் உச்சியில் இருந்திருக்கிறார். அப்படிப்பட்டவர், பட வாய்ப்பு குறைந்தவுடன் அதாளப்பாலத்தில் விழுந்திருக்கிறார் என்றால் சினிமா என்ற மாய உலகம் எப்படிப்பட்டது என்பதை யூகிக்கிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
அன்றைய தேதியில் கன்னட திரையுலகம் எப்படிப்பட்டது என்பதை ஒரு சில காட்சிகளில் தெரிந்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஏ.வி.எம் ஸ்டூடியோவில் இரவு நேர வாடகை குறைவாக இருக்கும் என்பதால் கன்னடப்படங்கள் படப்பிடிப்பு இரவு நேரங்களில் நடக்குமாம்.
பூஜா காந்தி வழக்கம் போல திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆரம்பக் காட்சியில் மட்டும் தன்னை இளமையாக காட்டிக் கொள்ளும் போடும் மேக்-கப், ஆடை தான் பார்க்க சகிக்கவில்லை. ஆனால், போக போக ‘நந்தாவாகவே மாறியிருக்கிறார்.
கல்பனா என்ற சகாப்தத்திற்கு தனது நடிப்பால் உண்மையான காணிக்கை செலுத்திய பூஜா காந்திக்கு வாழ்த்துகள் !!
No comments:
Post a Comment