வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, September 20, 2013

இயக்குனர் ராம் அவர்களுக்கு ஓர் கடிதம்

அன்புக்கினிய இயக்குனர் ராம் அவர்களுக்கு,

ஒரு படத்தின் வெற்றியை வருவாய் நிர்ணயம் செய்யும் சூழலில் காலத்தால் நினைவில் வைத்திருக்கக் கூடிய படைப்பை தந்துள்ளீர்கள். உங்களுக்கு என் ஆயிரம் பாராட்டுக்கள் !!

"தங்க மீன்கள்" படத்தை பார்த்ததும் என் வீட்டில் ஒரு செல்லம்மா இல்லையே என்ற வருத்தம் வந்தது. கல்யாணி மகள் மீது வைத்திருக்கும் பாசத்தை போல் நான் என் மகன் மீது வைத்திருக்கிறேனா என்ற சுய கேள்வி கேட்க வைத்தது. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனாராக உங்களுக்கு ஒரு இடம் இருக்கிறது என்பதில் சிறியதளவும் சந்தேகமில்லை.

உங்களின் முந்தைய படமான "கற்றது தமிழ்", தற்போதிய " தங்க மீன்கள் " படங்களில் நீங்கள் சொல்ல வந்த கருத்தில் ஒரு சிலவற்றை ஏற்றுக் கொண்டாலும், உங்கள் கருத்துக்கான திரைக்கதையா என்பதில் எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

கற்றது தமிழ் 

ஒரே வயதில் இருக்கும் இரண்டு இளைஞர்கள். ஒருவன் மாதம் லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகிறான். இன்னொருவன் மாதம் நாலாயிரம் சம்பாதிக்கிறான். ஒரு பக்கத்தில் மட்டும் வளர்ச்சியில் கவனம் செலுத்தி, இன்னொரு பக்கத்தை உதாசினப்படுத்தினால் அது வீக்கமாக இருக்குமே தவிர வளர்ச்சியாக இருக்காது என்ற கருத்தை சொல்ல வந்திருப்பது புரிந்தது.

ஆனால், படத்தில் உங்கள் கருத்துக்கான காட்சிகளை இரண்டு, மூன்று வைத்து விட்டு, பிரபாகரனின் கொலைகள், மன வேதனை, விரக்தியை தான் அதிகம் காட்டியிருக்கிறீர்கள். சமூகத்தால் ஒருவன் பாதிக்கப்படுவதை நீங்கள் காட்டும் போது, அந்த ஒருவன் மட்டும் அதிக முன் நிறுத்தப்படுகிறான். அந்த சமூகம் தெரியவில்லை. படம் முடிந்து பார்வையாளன் சமூகத்தை பற்றிய கேள்வியை சுமப்பதற்கு பதிலாக, பிரபாகரன் என்ற மனநிலை பாதிக்கப்பட்டவனின் கதையாக பலர் எடுத்துக் கொண்டார்கள்.

தங்க மீன்கள் 

தனியார் கல்வி குழந்தைகளை குழந்தைகளாக இருக்கவிடுவதில்லை. குழந்தைக்கு எது ஆர்வமோ அதில் அவர்களை ஊக்கப்படுத்துவதில்லை. மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாக மாற்றி வருகிறார்கள். மதிப்பெண்கள் வைத்து அவர்களின் அறிவுத் திறமையை அளவிடுகிறார்கள். நீங்கள் சொல்ல வந்த கருத்து புரிந்தது.

ஆனால், பார்வையாளன் தனியார் பள்ளியில் இருக்கும் கல்வி முறையையோ அல்லது பண சுரண்டலோ சுமந்து செல்லவில்லை. மகளுக்காக வேறு மாநிலம் சென்று வேலை பார்க்கும் கல்யாணி, தந்தைக்கு தொந்தரவு தரக்கூடாது என்று திருடும் செல்லம்மா இருவருக்கும் இருக்கும் பாசத்தை சுமந்து செல்கிறார்கள். அப்பாக்களை இழந்த மகள்களும், புகுந்த வீட்டுக்கு சென்ற மகளை நினைக்கும் அப்பாக்களும் கண்டிப்பாக கண்ணீர் சிந்தியிருப்பார்கள். பிரிந்த உறவை நினைத்து பார்த்திருப்பார்கள்.அதே சமயம் கல்வித்துறையை பற்றிய உங்கள் கருத்து மறந்துப் போய்யிருப்பார்கள்.

உங்கள் கருத்துக்கான காட்சி படத்தில் இருந்தும், கதாபாத்திரங்கள் கருத்தை மறைத்து விடுகிறது அல்லது மறக்க வைக்கிறது. கருத்துக்களுக்கான அதிக காட்சிகள் வைத்து பிரச்சாரம் செய்ய வேண்டாம். ஆனால், உங்கள் கருத்தை மறக்க வைக்கும் அளவிற்கு காட்சிகள் இருக்க வேண்டாம் என்பது ஒரு பார்வையாளனான எனது விருப்பம்.

கோனார் நோட்ஸ் வைத்து படம் பார்பதற்கு, படம் பாடமல்ல... அது ஒரு வித்தியாசமான அனுபவம். அனுபவித்திருக்கிறேன். மற்றவர்களும் அனுபவித்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல், எழுத்தாளராகவும் மின்ன வேண்டும் என்று விரும்புகிறேன்.

 வாழ்த்துக்களுடன் ஒரு சராசரி ரசிகன் ,
 குகன்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

கற்றது தமிழ் 50% கூட தங்க மீன்கள் இல்லை...

LinkWithin

Related Posts with Thumbnails