வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, February 19, 2013

மாற்றம் தந்த இந்திய சினிமா - 4 :: நாலு பெண்ணுகள்

 இந்திய சினிமாவில் தரமான படங்கள் என்று எடுத்துக் கொண்டால் வங்காள படங்களும், மலையாளப் படங்களும் அதிகம் இடம் பெறும். மற்ற மொழி படங்களை காட்டிலும் குறைவான படங்கள் இந்த இரண்டு மொழியில் வந்தாலும், இந்த இரண்டு மொழியின் படங்கள் இந்திய சினிமாவில் ஆற்றும் பங்கு மிக பெரியது.
 
“நாலு பெண்ணுகள்” நான்கு குறும்படங்களின் தொகுப்பு. ஒவ்வொரு படமும் 20 - 25 நிமிடம். மலையாள எழுத்தாளரான ‘தகழி’ சிவசங்கரன் பிள்ளை எழுதிய நான்கு சிறுகதைகளை மையமாக கொண்டு அடூர் கோபால கிருஷ்ணன் இயக்கியப் படம்.

இந்திய சினிமா இயக்குனர்களில் அடூர் கோபால கிருஷ்ணனுக்கு முக்கிய இடம் உண்டு. சிறந்த இயக்குனருக்காக ஐந்து முறை தேசிய விருது வாங்கியவர். தாதாசாயிப் பால்கே விருது பெற்றவர். கேரள அரசின் பல விருதுகள் வாங்கி குவித்தவர். திரைப்படங்களில் மட்டுமில்லாமல் குறும்படம், ஆவணப்படத்திலும் அதிக ஆர்வமுடையவர். கிருஷ்ணாட்டம், கலாமண்டலம் கோபி போன்ற ஆவணபடங்களுக்கும் விருது வாங்கி இருக்கிறார்.

நான்கு கதைகளும் 1940 - 1960 வரையிலான் நடக்கும் கதைகள்.

விபச்சாரி 

தெருவோர விபச்சாரியான குஞ்சிப்பெண்ணுவை (பத்மபிரியா) மணக்க விரும்புகிறான் பப்புக்குட்டி. முதலில் திருமணம் செய்துக் கொள்ள தயங்கும் குஞ்சிபெண்ணு, அவளின் தொழியின் வற்ப்புருத்தலால் பப்புக்குட்டியை ஏற்றுக் கொள்கிறாள். இருவரும் தங்க வீடு இல்லாமல், காலியான கடை திண்ணையில் உறங்குகிறார்கள். பகலில் கூலி வேலை செய்கிறார்கள்.

ஒரு நாள் காவலர்கள் அவர்களை விபச்சார வழக்கில் கைது செய்து நீதி மன்றத்திற்கு அழைத்து செல்கிறது. இருவரும் கணவன்-மனைவி என்று சொல்லியும், சட்டப்படி இவர்கள் திருமணம் செய்துக் கொண்ட சான்று இல்லாததால் விபச்சார வழக்கில் தண்டிக்கப்படுகிறார்கள்.

கன்னிப்பெண்

குமாரி (கீதுமோகன் தாஸ்) தன் பெற்றோருக்கு உதவியாக வீட்டு வேலையும், விவசாய வேலையும் செய்யும் பொறுப்புள்ள பெண். அவளுக்கு திருமண வந்தும் நல்ல வரன் கிடைக்காமல் அவளது தந்தை சிரமப்பட, ஒரு நண்பன் மூலம் 'நாராயணன்' என்ற மணமகன் கிடைத்து குமாரிக்கு திருமணம் செய்து வைக்கிறார். நாராயணன் குமாரியிடம் சிரித்து ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. அவனை தொட அனுமதிக்கவில்லை. அவளை மனைவியாக அவன் நடத்தவில்லை. கணவனின் நடத்தை புரியாமல் குமாரி தவிக்கிறாள்.

குமாரியும், நாராயணனும் விருந்துக்காக குமாரியின் வீட்டுக்கும், உறவினர் வீட்டுக்கும் செல்ல அங்கு தனது கணவனின் அகோர பசி உணவு சாப்பிடுவதை பார்த்து முகம் சுலிக்கிறாள். விருந்து முடிந்ததும், குமாரியை அங்கையே விட்டுவிட்டு நாராயணன் சென்றுவிடுகிறான். அவளை அழைத்து செல்ல அவனோ, அவன் வீட்டில் இருந்தோ யாரும் வரவில்லை. ஊரில் உள்ளவர்கள் குமாரியின் நடத்தையால், அவள் கணவன் அவளை ஒதுக்கி வைத்துவிட்டார்கள் என்று கேலிப் பேச, அவருக்கு வரன் கொண்டு வந்த நண்பரிடம் குமாரியிடம் சண்டைக்கு செல்கிறார். அது வரை அமைதியாக இருந்த குமாரி, தன் பொறுமை இழந்து “தனக்கு உண்மையான திருமணமே நடக்கவில்லை” என்கிறாள்.

இல்லத்தரசி

தன் கணவனுடன் சந்தோஷமாக வாழும் சின்னம்மா (மஞ்சு பிள்ளை), குழந்தை இல்லை என்பது தான் மிக பெரிய குறை. அவளது கணவன் பக்கத்து கிராமத்தில் வேலை செய்வதால், பெரும்பால நேரங்களில் வீட்டில் தனிமையில் வாழ்கிறாள். ஒரு நாள், அவளை பார்க்க அவளுடன் பள்ளியில் படித்த நரபிள்ளை என்பவன் வருகிறான். சிறு வயதில் பிழைப்புக்காக தமிழ் நாட்டு சென்று, அங்கையே குடும்பத்துடன் வாழ்பவன். பிறந்த ஊருக்கு திரும்பும் நரன், சின்னம்மாவுடன் தனது பாலியக்கால நிகழ்வுகளை பகிர்ந்துக் கொள்கிறான். ஒரு கட்டத்தில், அவளிடம் உன் கணவனுக்கு தான் குறையிருக்கும், தன்னுடன் ஒரு நாள் வாழ்ந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறான். குழந்தை ஆசையில் சின்னம்மாவின் மனம் தடுமாறினாலும், நர பிள்ளையின் ஆசையை நிராகரிக்கிறாள்.

வயதான பெண் குரல் "அன்று மட்டும் அவன் ஆசைக்கு இணங்கியிருந்தால் நான் என் பிள்ளைகளோடு இருந்திருப்பேன். இப்போது, என் கணவனுக்கு உண்மையாக இருந்ததை விட வேறு எந்த பெருமையும் இல்லை" என்று சொல்லி படம் முடிகிறது.

முதுக்கன்னி

நடுத்தர வயது வந்தும் திருமணமாகாமல் அம்மா, சகோதரன், இரண்டு சகோதரியோடு வாழ்கிறாள் நந்திதா தாஸ். அவளை பார்க்க வரும் பையன், அவளது சகோதரியை திருமணம் செய்துக் கொள்வதாய் சொல்ல, தன் பாரத்தை குறைக்க நினைக்கும் அம்மாவும் தனது இரண்டாவது மகளுக்கு திருமணம் செய்து வைக்கிறாள். நாட்கள் செல்ல செல்ல... நந்திதாவின் சகோதரி குழந்தை பெற்றுக் கொண்டாலே தவிற நந்தித்தாவுக்கு வரன் அமையவில்லை. அவளது சகோதரன் ஆரம்பத்தில் அக்காவுக்கு திருமணம் செய்யாமல் தான் திருமணம் செய்துக் கொள்ள மாட்டேன் என்று இருந்தவன், அம்மாவுக்கு தெரியாமல் தனக்கு பெண் பார்க்கிறான். தரகன் பார்த்ததுப் போல் வரனை காட்டி அவனும் திருமணம் செய்துக் கொள்கிறாள். அதன் பிறகு, நந்திதாவின் இரண்டாவது சகோதரிக்கும் திருமணம் நடக்கிறது.

திருமணம் ஆகவில்லை என்ற குறை அவளின் அம்மாவின் மறைவுக்கு பிறகு அவளுக்கு மேலும் பெரிதாக தெரிகிறது. நந்திதா தனது பெரிய தங்கை வீட்டில் இருந்து, அவளது குழந்தைகளை கவனித்துக் கொள்கிறாள். குழந்தைகளும் அவள் மேல் அதிக பாசமாக இருக்கிறாள். ஒரு நாள் தங்கையின் கணவன் நந்திதவிடம் அவளை திருமணம் செய்யாமல் அவள் தங்கையை திருமணம் செய்து உனக்கு பெரிய தவறு செய்துவிட்டேன் என்று கூறி மன்னிப்பு கேட்கிறான். இதை கேட்ட அவளது சகோதரி தன் அக்கா மீது சந்தேகம் வந்து அவளை மறைமுகமாக வார்தையால் வதைக்கிறாள். தன் சகோதரன், சகோதரி வீட்டில் வாழ விருப்பமில்லாமல் தனிமையில் வாழ முடிவெடுக்கிறாள்.

இந்தப்படம் சத்யஜித் ரேயின் “தீன் கன்யா”, கே.பாலசந்தரின் "ஒரு வீடு இரு வாசல்" போன்ற படங்களை நமக்கு ஞாபகப்படுத்துவதை தவிற்க்க முடியவில்லை.

1940 - 1960யில் கதை நடப்பதாக சொல்லப்பட்டாலும், 'விபச்சாரி' என்ற கதையை தவிர மற்ற கதைக்களனின் பின்னனி வருடங்களை சரியாக சொல்லவில்லை.

நான்கு படங்களில் கன்னிபெண், முதுக்கன்னி மட்டுமே அதிகம் மனதில் நிற்கிறது. குறிப்பாக, ‘கன்னிப்பெண்’ கதையில் வரும் குமாரி கணவனின் ‘நாராயணன்’ பாத்திரம், எதனால் தன் மனைவியை நிராகரிக்கிறான் என்பதை தெளிவாக சொல்லப்படவில்லை. அவனின் அகோரப்பசியும், பேசாமல் மனைவியை வதைப்பதும் போன்ற குணாதியங்களை காட்டும் போது, 'குமாரி’யாக வரும் கீதா மோகன்தாஸ் அமைதியாக ஏன் இருக்கிறார் என்பதற்கு காரணம் புரியவில்லை.

நான்கு கதையில் வரும் பெண்களில் ‘நந்திதா தாஸ்’ பாத்திரம் தான் சரியாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தனக்கு திருமணமாகாத்தை நினைத்து வருந்துவதும், சகோதரி மீது பார்வையிலே பொறாமைப்படுவதும், வருடம் செல்ல செல்ல இடுப்பு பகுதியை அதிகமாக காட்டும்படி ஆடை அணிவதும் என்று ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள். மற்ற மூன்று படங்களில் முன்னனி நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் அதிகம் மனதில் நிற்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.

 “நாலு பெண்ணுகள்” – ‘தகழி’ சிவசங்கரன் பிள்ளை என்ற எழுத்தாளரை கௌரவிக்கும் விதமாக எடுக்கப்பட்ட படமாக இருக்கிறதே தவிர, ஒரு திரைப்படத்தை முழுமையாக பார்த்த திருப்தி பார்வையாளனுக்கு ஏற்படவில்லை.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails