ஒரு கிராமத்தில் இரண்டு ரயில் தண்டவாளம் இருக்கிறது. முதல் தண்டவாளம் பழுதடைந்து, இயங்கப்படாமல் இருக்கிறது. மற்றொன்று சீராக இயங்கிக் கொண்டு இருக்கிறது. தினமும் ரயில் இரண்டாவது தண்டவாளத்தில் தான் வந்து செல்லும்.
கூட்டமாக நான்கு குழந்தைகள் ரயில் வே தண்டவாளத்தில் விளையாட வருகிறார்கள். ஒரு குழந்தை பழுதடைந்த தண்டவாளத்தில் விளையாடலாம் என்று சொல்ல, மற்ற மூன்று குழந்தைகள் மறுத்ததோடு இல்லாமல் இயங்கிக் கொண்டு இருக்கும் தண்டவாளத்தில் விளையாட செல்கிறார்கள். முதல் குழந்தை மட்டும் இயங்கும் தண்டவாளத்தில் விளையாட பயந்து, பழுதடைந்த தண்டவாளத்தில் விளையாடுகிறது.
குழந்தைகள் அழகாக சிரித்து விளையாடிக் கொண்டு இருக்கும் போது ரயில் ஒன்று வேகமாக வருகிறது. விளையாடிக் கொண்டு இருக்கும் மூன்று சிறுவர்களும் ரயில் வருவதை கவனிக்கவில்லை. அடுத்த தண்டவாளத்தில் தனியாக இருக்கும் சிறுவனும் ரயில் வருவதை பார்க்கவில்லை. ரயில் வேகமாக மூன்று சிறுவர்களை நோக்கி வந்துக் கொண்டு இருக்கிறது.
அந்த சமயத்தில் நீங்கள் அங்கு வருகிறீர்கள். வேகமாக வரும் ரயிலை பக்கத்து தண்டவாளத்தில் மாற்ற வாய்ப்புள்ளது. ஆனால், அப்படி செய்தால் தனியாக இருக்கும் சிறுவன் இறந்து விடுவான். எதுவும் செய்யவில்லை என்றால் மூன்று சிறுவர்கள் இறந்துவிடுவார்கள். இப்போது, மூன்று சிறுவர்களை காப்பாற்ற நினைப்பீர்களா ? ரயில் போகட்டும் என்று சும்மா இருப்பீர்களா ?
என்ன முடிவு நீங்கள் எடுப்பீர்கள் ??
மூன்று சிறுவர்கள் உயிரை கணக்கில் எடுத்துக் கொண்டால் ஒரு சிறுவன் உயிர் பெரியதில்லை. ஒரு சிறுவன் உயிர் போனாலும் மூன்று சிறுவர்களை காப்பாற்றுவேன் என்று பலர் பதில் அளிப்பார்கள். நானும் அப்படிதான் பதிலளித்தேன். ஆனால், அது தவறான முடிவு.
அஜாக்கிரதையாக ரயில் இயங்கும் தண்டவாளத்தில் விளையாடும் சிறுவர்களுக்காக பாதுகாப்பாக விளையாடும் சிறுவனை எப்படி நாம் பலிக் கொடுக்க முடியும் ? ஆபத்தான தண்டவாளத்தில் விளையாடியது அந்த மூன்று சிறுவர்களின் தவறு. அதற்கான தண்டனை மரணம் என்றால் அதை அவர்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும். இரண்டாவது தண்டவாளம் பழுதடைந்து இயங்கப்படாமல் இருக்கிறது. மூன்று சிறுவர்களை காப்பாற்றும் முயற்சியில் ரயில் பாதையை மாற்றினால், ரயிலில் வரும் நூறு பேர் உயிர்களுக்கும் யார் உத்தரவாதம் கொடுப்பார்கள்.
மூன்று முட்டாள் சிறுவர்களுக்காக ஒரு சிறுவனை பலிக் கொடுப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. ரயில் இயங்கும் தண்டவாளத்தில் விளையாடும் சிறுவர்கள் ரயில் எந்த நேரமும் வரலாம் என்பதை அறிந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் பொறுப்பு.
இந்த நிகழ்ச்சியில் மட்டுமல்ல... ஒரு அலுவகத்திலும், அரசியலிலும், நாட்டிலும் பெரும்பான்மையில் லாபத்திற்காக சிறுபான்மை நசுக்கப்படுகிறார்கள் இல்லையென்றால் தண்டிக்கப்படுகிறார்கள். எந்த பக்கம் நியாயம் இருக்கிறது என்று அலசப்படுவதில்லை.
**
மின்னஞ்சல் அனுப்பிய நண்பர் தங்கரங்கனுக்கு நன்றி :)
1 comment:
நியாத்தராசைஅருமையா அலசி இருக்கீங்க. :)
Post a Comment