அது ஒரு சிற்றிதழில் ஆண்டு விழா நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் தான் முதல் முதலாக 'நாகரத்னா பதிப்பக' சார்பில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சி அமைப்பாளரின் அனுமதிப் பெற்று தான் புத்தகக் கண்காட்சி நடந்தது. வாசகனாக இருந்த எனக்கு புத்தக விற்பனையாளனாக முதல் அனுபவமும் அது தான். நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் வேளையில் மேடையில் பேசுபவர் மொக்கை போட பாதிக்கு மேற்ப்பட்ட கூட்ட புத்தகத்தை மொய்க்க தொடங்கிவிட்டனர்.
நிகழ்ச்சியில் பார்வையாளராக கலந்து கொண்ட பலர் பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள். அவர்கள் புத்தகத்தைத் தேடி வந்ததில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. உபயோகம் இல்லாமல் சுய தம்பட்ட பேச்சை கேட்பதற்கு பதிலாக புத்தகத்தை பார்வையிட வந்தார்கள். நிகழ்ச்சி அமைப்பாளர் அரங்கத்தில் கூட்டம் குறைவதை பார்த்து வெளியே வந்தார். பார்வையாளராக வந்தவர்கள் புத்தகத்தை பார்த்ததும், அங்கேயே என்னை கத்த தொடங்கிவிட்டார்.
" வர கூட்ட எல்லாம் ஸ்டாலுக்கு வந்திருச்சுனா... ஹால்ல யாரு இருக்குறது. இதுக்கு தான் யாருக்கு ஸ்டால் போட அனுமதி தரதில்ல...." என்று கத்தினார்.
பல வருடங்களாக நிகழ்ச்சி நடத்துபவர் புத்தகத்தால் கூட்டம் குறைவதை நினைத்து அஞ்சியிருக்கிறார். இந்த வருடம் அவர் ஆண்டு விழா நிகழ்ச்சியில் புத்தக பார்வைக்கு அனுமதி தரவில்லை. ஒரு நிகழ்ச்சியின் கூட்டத்தை புத்தகம் குறைக்க முடியும் என்றால் நிகழ்ச்சிக்கு கூட்டத்தை புத்தகத்தால் சேர்க்கவும் முடியும் என்பதை உணர வேண்டும்.
ஒவ்வொரு அமைப்பினரும் தங்கள் உறுப்பினர் புத்தகங்கள் தங்கள் சங்க நிகழ்ச்சியில் பார்வைக்கு வைக்கலாம். நிகழ்ச்சி கலந்துக் கொள்ளும் எண்ணம் இல்லை என்றாலும், தன் புத்தகத்தை பார்வைக்கு வைப்பதற்காக கண்டிப்பாக கலந்து கொள்வார்.
ஏதாவது நிகழ்ச்சி நடக்கும் போது கண்டிப்பாக நூல் விமர்சன நிகழ்ச்சி நடத்த வேண்டும். நூலுக்கும், எழுத்தாளருக்கும் விளம்பரம் கிடைக்கும். கவியரங்கம், கவிதை வாசிப்பு போன்ற நிகழ்வுகளில் ஆர்வம் காட்டும் அமைப்புகள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை.
இன்று எத்தனையோ இலக்கிய அமைப்புகள், சங்கங்கள் பல எழுத்தாளரையும், பேச்சாளரையும் உருவாக்கியிருக்கிறது. ஆனால், எந்த அமைப்பும் அவர்களை வாசகனிடத்திலோ, பார்வையாளனிடத்திலோ சரியாக கொண்டு சென்றதில்லை. ஐம்பது புத்தகம் மேல் எழுதியிருக்கும் எழுத்தாளர்க் கூட திவிரமாக புத்தகம் வாசிக்கும் வாசகனுக்கு தெரியவதில்லை. காரணம், ஐம்பது புத்தகங்களும் நூலக ஆணையை நம்பி போட்டிருப்பது. நூலக ஆணை கிடைத்தப்பின் நூலகத்தில் புத்தகம் உறங்கி கிடப்பது. இன்று பல எழுத்தாளர்களின் புத்தகத்தின் நிலைமை இது தான். எழுத்தாளரின் வீட்டில் தூங்கும். இல்லை என்றால் நூலகத்தில் தூங்கும். நூறு வாசகர்களை அந்த புத்தகம் பார்த்திருக்குமா என்பது சந்தேகம் தான்.
இன்று பலர் வரிசையில் நின்று வங்கியில் பணம் எடுப்பதில்லை. போன் போட்டாலே வீட்டுக்கு மளிகை பொருட்கள் வருகிறது. ஒரு தொலைக்காட்சி பார்ப்பது போய் ஒரு நாளைக்கு நூறு சேனல் பார்க்கிறோம். இப்படி எல்லா விஷயங்களும் நவீனமாகிவிட்ட பிறகு வாசகன் புத்தகத்தை தேடி நூலகத்திற்கோ அல்லது புத்தக கடைக்கோ சென்று வாங்க வேண்டும் என்ற பழைய பாதையில் இருந்தால் புத்தகம் விற்கவில்லை என்ற பழைய புராண கதையை தான் பாட வேண்டியது இருக்கும்.
உண்மையான எழுத்து என்பது உறங்கி கொண்டு இருக்கும் மனிதனின் மனசாட்சியை தட்டி எழுப்புவது. பலரின் புத்தகங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டு இருக்கும் போது எப்படி அவர்கள் எழுத்து மனசாட்சியை எழுப்ப போகிறது. இதில் இருந்து நாம் மாறுப்பட வேண்டும். வாசகனை தேடி புத்தகம் வர தொடங்க வேண்டும்.
இன்று நன்றாக எழுத தெரிந்தவன் மட்டும் நல்ல எழுத்தாளன் இல்லை. அதை விற்பனை செய்ய தெரிந்தவன் தான் நல்ல எழுத்தாளராக தெரிகிறான். அதற்கு நல்ல உதாரணம் சாரு நிவேதிதா. புத்தகக் கண்காட்சிக்கு தவறாமல் அஜாராகிவிடுவார். தன் பதிவில் தான் எழுதிய புத்தகத்தைப் பற்றி ஒரு வரியாவது சேர்த்துக் கொள்வார். தான் எழுதிய புத்தகத்தைப் பற்றி எழுத்தாளானே பேச கூச்சப்பட்டால் அடுத்தவர் எப்படி பேசுவார்கள் ?
எங்கள் பதிப்பக புத்தகங்களை விற்பனை செய்யும் நோக்கத்தில் தான் முதலில் ஸ்டால் போட தொடங்கினோம். ஆனால், எத்தனையோ நல்ல புத்தகங்கள் விற்க தெரியாதவர்களை பார்க்கும் போது அவர்கள் புத்தகமும் வாங்கி விற்க We can Books என்ற புத்தக விநியோகத்தை தொடங்கினோம். இது வரை எங்கள் பதிப்பக நூல்களுக்கு நூலக ஆணை கிடைக்கவில்லை. சொல்லும் படி பெரிய ஆர்டர் கிடைத்ததில்லை. எங்களின் பெரிய மார்க்கெட்டிங் பலமே நிகழ்ச்சிகளில் ஸ்டால் போடுவது தான்.
இந்த ஒரு வருடத்தில் என் பதிப்பக புத்தகங்களை விற்றதை விட மற்றவர்களின் புத்தகத்தை விற்றது தான் அதிகம். ஆனால், புத்தகம் விற்ற பணத்தை நூலின் ஆசிரியரிடம் கொடுக்கும் போது அவர்களின் எழுத்து விற்பனையாவதில் சந்தோஷாப்படுகிறார்கள்.
இந்த கட்டுரை முடிவில் நான் சொல்ல விரும்புவது உங்கள் இலக்கிய அமைப்பு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, மாதந்திர நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி 'புத்தக பார்வை' என்று ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து புத்தகங்களை விற்பனைக்கு வையுங்கள். நூல் வெளியீட்டு விழாவுக்கு பிறகும் உங்கள் புத்தகம் ஒவ்வொரு நிகழ்ச்சியில் விற்பனையாக உதவியாக இருக்கும்.
இதை எடுத்து நடத்த உங்கள் அமைப்பில் ஒருவரை தேர்வு செய்து அவரிடம் பொறுப்பை ஒப்படையுங்கள். புத்தக பார்வை நடத்த விருப்பம் உண்டு, ஆனால் ஆட்கள் இல்லை என்று நினைப்பவர்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள். நான் வருகிறேன். ( சுய விளம்பரம்)
2 comments:
இப்ப மாறிவரும் நிலை இருக்கு குகன். புத்தகங்கள் விற்பனை ஆகும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது
இன்று நன்றாக எழுத தெரிந்தவன் மட்டும் நல்ல எழுத்தாளன் இல்லை. அதை விற்பனை செய்ய தெரிந்தவன் தான் நல்ல எழுத்தாளராக தெரிகிறான். அதற்கு நல்ல உதாரணம் சாரு நிவேதிதா. புத்தகக் கண்காட்சிக்கு தவறாமல் அஜாராகிவிடுவார். //
unmaiyaana vaarththaikal.. vaalththukkal
Post a Comment