வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, November 20, 2008

வித்யாகிட்ட சொல்லிடாதீங்க...

வித்யாவுக்கு இன்று கடைசி நாள். எனக்கும் இன்று தான் கடைசி நாள். தினமும் அவளை பார்க்கிறேன். ஆனால், ஒரு நாள் கூட அவளிடம் நான் பேசியதில்லை. ஒரே குழுவில் தான் வேலை செய்கிறோம். இருந்தும் முகம் பார்த்து பேச எங்களுக்கு தோன்றவில்லை. ஒரு முறை ஆபிஸ் பார்ட்டியில் எல்லோரும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டு இருக்க, அவள் மட்டும் யாருடன் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

இது வரை அவளிடம் பேசாத நான், இப்போது பேசினால் நன்றாக இருக்குமா ? ஒரு முறை எனக்குள்ளே கேள்வி கேட்டுப்பார்த்தேன். இதில என்ன தப்பு இருக்கு ? எந்த கம்பேனி போறாங்கனு தெரிஞ்சா நமக்கும் யூஸ்சா இருக்கும். இப்படி கேள்வி கேட்பதும், அதற்கு அவனே பதில் சொல்வதும் ரகுக்கு புதிதில்லை. மெல்ல மெல்ல தயங்கி அவளிடம் பேசினான்.

"எந்த கம்பேனி போறீங்க...?" என்றான் ரகு. வித்யா விடுப்பு தாளை நிரப்பிக் கொண்டு இருந்ததில் ரகு சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

"வித்யா... உங்க கிட்ட தான்..."

"ம்.. சொல்லுங்க... ரகு..."

"போற கம்பேனி ரொம்ப ஸீக்ரெட்டா..."

" அப்படியெல்லாம் இல்ல பார்ம் பார்த்துக்கிட்டிருந்தேன். என்ன கேட்டிங்க..."

அவள் சற்று மனக் குழப்பத்தில் இருக்கிறாள் என்று புரிந்து கொண்டேன். அதைத் தெரிந்து கொண்டது போல் காட்டிக் கொள்ளவில்லை.

"எந்த கம்பேனி போறீங்கனு கேட்டேன்..."

"எனக்கு வேலை செய்ய பிடிக்கல.. இனிமே வீட்டுல தான் இருக்க போறேன்.."

எனக்கு அவள் பேசியது முட்டாள் தனமாக தோன்றியது. வித்யா விவாகரத்தானவள். ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த சூழ்நிலையில் வேலையை விட்டு அவள் என்ன செய்வாள் என்று தெரியவில்லை. பரம்பரைச் சொத்து ஏதும் இருக்கக் கூட வாய்ப்பில்லை. தினமும் அவள் பஸ்சில் தான் ஆபிஸ்க்கு வருகிறாள். இப்படிப்பட்ட நிலைமையில் அவளுக்கு வேலை நிச்சயமாக மிக முக்கியமான ஒன்று.

" தப்பா நினைக்காதீங்க... வேற ஏதாவது விதத்துல உங்க குடும்பத்துக்கு பண வரவு இருக்கா...!"

"அப்படி எதுவும் இல்ல. இந்த கம்பேனிய விட்டு போனா போதும்னு இருக்கு..."

அவளுடைய பதில் எனக்கு மேலும் வியப்பை தந்தது. எங்கள் குழுவில் வேலை சுமைகள் அவ்வளவு பெரிதாக கூட இல்லை.

" உங்களுக்கு இந்த கம்பேனி பிடிக்கலையா? வேல ரொம்ப ஜாஸ்தி கொடுக்குறாங்களா.." என்றேன்.

" வேலை புடிக்கல ரிசைன் பண்ணுறேன்... உனக்கு என்ன வந்தது. சும்மா கேள்வி கேட்டு தொந்தரவு பண்ணுற.." - இப்படி வித்யாவிடம் இருந்து பதில் வருமோ என்று பயந்தேன். நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. பல நாள் பழகிய நண்பனிடம் தன் சோகத்தைக் கூறுவது போல் கூறினாள்.

"என் ஹஸ்பன்ட் இந்த ஆபிஸ்ல தான் இருக்காரு..." என்றாள்.

எனக்கு தூக்கி வாரிப்போட்டது. ஒரு வேளை ஆபிஸின் பெரிய தலைகளில் ஒருவராக இருப்பாரோ என்ற சந்தேகம்.

" யார் அவரு...?"

" இப்ப... பாம்பேல இருந்து ட்ரான்ஸ்பர் வாங்கி வந்திருக்காறே... பிராஜக்ட் மேனேஜர் ராஜூ.. அவரு தான்.."

அவருக்கும் எங்கள் வேலை விஷயத்தில் எந்த சம்மந்தமும் இல்லை. அப்படி இருக்கும் போது வித்யா இந்த நிறுவனத்தில் தைரியமாக வேலை செய்யலாம். ஆனால், அவள் மனம் பட்ட பாடை என்னிடம் கொட்டித் தீர்த்தாள்.

" தினமும் அவர நான் பார்க்கனும்னா... எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். அவர பார்க்கவே கூடாதுன்னு இருந்தேன். இப்ப மறுபடியும் அவர பார்க்க எனக்கு இஷ்டமில்ல. அதான் இந்த முடிவு..."

" மேடம்... நான் சொல்லுறேனு தப்பா நினைக்காதீங்க... இவ்வளவு வருஷமா பழகின ஒருத்தர உங்களால எதிர் கொள்ள முடியலைனா... எப்படி வாழ்நாள் முழுக்க பல பேர சந்திக்கப் போறீங்க.."

வித்யா ரகுவின் முகத்தை உற்று பார்த்தாள்.

"வாழ்க்கைன்னா ஆயிரம் இருக்கும். தனியா போராடனும் முடிவெடுத்திட்டு இப்படி கோழை மாதிரி ஒடிப்போகனும் நினைக்குறீங்களே ! நீங்க இப்படி இருந்தா நாளைக்கு உங்க பொண்ணும் இதே மாதிரி தானே வளர்வா..."

" அட்வைஸ் பண்ணுறது ரொம்ப ஈசியாயிருக்கும்.. அவுங்களுக்கு கஷ்டம் வந்தா தான் தெரியும்..."

" மேடம்... நான் இப்போ போற கம்பேனியில எனக்கு வேல கிடைச்ச காரணமே என் மனைவி தான்.... முன்னால் மனைவி..."

ரகு சொன்னதை கேட்டு வித்யா அதிர்ந்து நின்றாள்.

" என் மனைவிக்கும், அவ ஆபிஸ்ல வேல செய்றவனுக்கும் கொஞ்ச நாளா தொடர்பு இருந்தது. அதுக்கு அப்புறம் இரண்டு பேரும் சேர்ந்து வாழனும்னு அவ என் கிட்ட சொன்னா. முதல்ல கேட்கும் போது கஷ்டமா இருந்தது. எனக்குத் தெரியாம அவங்க தப்பு பண்ணுறதுக்கு தெரிஞ்சே செய்யட்டும்னு நான் விலகிட்டேன்..."

" விலகிட்டேன்னா..."

" நாங்க இரண்டு பேரும் டைவர்ஸ் பண்ணிக்கிட்டோம். அவங்க இரண்டு பேருக்கும் நான் கல்யாணம் பண்ணிவெச்சேன்."

என் கதையைக் கேட்டவுடன் வித்யாவின் கண்கள் நீர் தழும்பின. அவன் சோகத்தை சொல்லும் போது கூட மன தைரியம் இழக்காமல் பேசினான். அவன் பேச்சு வித்யாவுக்கு அதிர்ச்சியையும், வியப்பையும் அளித்தது.

" எப்படி... மறுபடியும் உஙளுக்கு துரோகம் பண்ணியவர்களிடம் பேச முடியுது..."

" மேடம் லைப்ல எல்லாமே ஈசியா எடுத்துக்கனும். முடியலையா ஈசியா எடுத்துக்க முயற்சி பண்ணனும். இல்ல வாழ்க்கையே சுமையா போய்டும். என் சி.விய அவள்தான் ரெஃப்பர் பண்ணி எனக்கு வேலை வாங்கி கொடுத்தா... தினமும் நாங்க இரண்டு பேரும் பார்க்க வேண்டியதா இருக்கும். முடிஞ்ச விஷயத்துக்காகக் கவலைப்படாம நடக்கப் போற விஷயத்தைப் பத்தி யோசிங்க..."

" உங்க கஷ்ட கேட்கும் போது என்னுடைய கஷ்டம் எவ்வளவோ பரவாயில்லைன்னு நினைக்கிறேன்."

" நம்மல விட கஷ்டப்படுறவங்க பல பேரு உலகத்துல இருக்காங்க... அத நினைச்சா போதும் நம்ம கஷ்டம் மறந்திடும் "

"த்தாங்க்ஸ் ரகு... என்னுடைய சி.வி. உங்களுக்கு ஃபார்வட் பண்ணுறேன். உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு சொல்லி ரெஃப்பர் பண்ணச் சொல்லுறீங்களா..."

" கண்டிப்பா! இந்தாங்க என் மெயில் ஐ.டி.." என்று என் மின்னஞ்சல் முகவரியை வித்யாவுக்கு கொடுத்தேன்.

வேலை செய்ய வேண்டாமென்று இருந்த வித்யாவின் எண்ணத்தைத் என் சோகக்கதையால் அவள் மனதை மாற்றிய என்னைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க...? கல்யாணத்தில ஏமாந்தவன்னுதானே...

கடைசியா ஒரு விஷயம் உங்க கிட்ட மட்டும் சொல்றேன்... நான் ஒரு கட்டப் பிரம்மச்சாரிங்க... இதை மட்டும் வித்யாகிட்ட சொல்லிடாதீங்க...


நன்றி : முத்துகமலம்.காம்
http://www.muthukamalam.com/muthukamalam_kathai21.htm

2 comments:

Unknown said...

ஹ்ம்ம் கதை நல்லா இருக்கு

குகன் said...

நன்றி கமல்

LinkWithin

Related Posts with Thumbnails