வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, June 30, 2017

அண்ணன் எஸ்.வி.சேகருக்கு திறந்த மடல் !!

மதிப்புக்குரிய அண்ணன் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு, 

சிறு வயதில் உங்கள் நகைச்சுவையால் ஈர்க்கப்பட்ட ரசிகனின் மடல். தங்களின் அரசியல் பார்வை என் பார்வைக்கும் ஒத்துப்போகாத காலத்தில் கூட தங்களின் நாடகத்தை வாணி மஹால், ராணி சீதை ஹாலில் காசுக் கொடுத்துப்பார்த்திருக்கிறேன். ஆனால், சமிபக்காலமாக தங்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சி சார்பாக பேசுவதாக நினைத்து தங்களின் சாதியை தூக்கிப்பிடித்து கட்சிக்கு துரோகம் செய்வதாக எனக்குப்படுகிறது. அதனால் திறந்த மடலை உங்களுக்கு எழுதுகிறேன்.



 * 

1. 

’ஒரு முறை உங்கள் பேஸ்புக் பக்கத்தில் பிராமண இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தால் அங்கையே இருந்துவிடுங்கள். இந்தியா வராதீர்கள். பிராமணர்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது’ என்று சொன்னீர்கள். இதே கருத்தை அமீர்கான் வேறு மாதிரியாக முன் வைத்தப்போது ஊடகம் அவரை வறுத்தெடுத்தது. ஆனால், தாங்கள் சார்ந்த பா.ஜ.க கட்சிக்கு எதிரான கருத்து என்று கூட பார்க்காமல் கூறியிருக்குறீர்கள். இதை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. 

 2. 

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக பல பிரச்சனைகள், பாலியல் தொல்லைகள் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், தாங்கள் சுவாதி பிராமணப் பெண் என்ற ஒரே காரணத்திற்காக அந்த கொலை வழக்கை குறித்து பேசினீர்கள். 

3. 

தற்போதைய பிரச்சனை எடுத்துக்கொள்வோம். வெ.மதிமாறன் டி.வி விவாதத்தில் மத்திய அரசை கண்டித்து பல கருத்துகளை கூறியிருக்கிறார். மோடி எதிர்த்து விமர்சித்திருக்கிறார். அதற்காக பொங்காமல் “திரு.நாராயணனை பார்ப்பனன்” என்று கூறியதற்கு பொங்கியிருக்கிறீர்கள். அதற்கான கண்டன வீடியோவும் வெளியீட்டு இருக்கிறீர்கள். தாங்கள் சார்ந்த கட்சியை விட உங்களுக்கு சாதி முக்கியமாக இருப்பதை வெளிப்படையாக காட்டுகிறது. பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் வெறுப்பை விதைத்திருப்பதை உங்களால் மறுக்கமுடியாது. 

*
 4. 


 // இப்பொழுதும் என் வீட்டில் சமையல் வேலை செய்பவர், வீட்டு வேலை செய்பவர்கள், குழந்தைகளை பார்த்துக்கொள்பவர்கள் எவருமே என் ஜாதியினர் அல்லர்// என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

எதனால் என் நெருங்கிய நண்பர்கள், நலம் விரும்பிகள் என் ஜாதியினர் இல்லை என்று உங்களால் சொல்ல முடியவில்லை. நீங்கள் நடத்தும் நாடகத்திற்கு ஸ்பான்ஸர் வேறு சாதியிடம் இருந்து வந்திருக்கிறது. அதை குறிப்பிட்டு இருக்கலாமே ? உங்கள் வீட்டு வேலை செய்பவர்கள் பற்றி ஏன் குறிப்பிட வேண்டும் ? உங்கள் ஆதிக்க சாதி சிந்தனை தான் இதைக் காட்டுகிறது என்பதை நீங்கள் உணரவில்லையா ? 


5. // சுன்னத் பற்றிய கேள்வியை தென் வட மாவட்டங்களில் நீங்கள் நேரில் போய் கேட்க துணிச்சல் உள்ளதா நண்பரே ? “ // என்று கேட்டிருப்பதை பார்த்தேன். 

பல நூற்றாண்டுகளாக கல்வி கற்று அறிவாளி என்று காட்டிக் கொள்ளும் பிராமணர்கள் புத்தியில் இருந்து ‘சாதி’யை நீக்குவதில் தி.கவினர் தோல்வியடைந்திருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக வேல் கம்பு, வீரம் என்று இருப்பந்தவர்கள் தற்போது தான் கல்வியில் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். தோல்வியுற்ற தி.கவினர் எப்படி தென் மாவட்டத்தினரிடம் ”சாதி இல்லை” என்று சொல்லி அவர்களால் புரிய வைக்க முடியும். 

கல்விச்சாலையில் பட்டம் பெற்ற நீங்களே “சாதி தாய், தந்தை போன்றது” என்று குறிப்பிடும் போது, கல்வி அறிவற்றவர்களிடம் “சாதி தவறு” என்று யாரால் புரிய வைக்க முடியும். 


6. 
// என் நண்பர் திரு.ஸ்டாலின் அவர்களது தொடர் உழைப்பால் வரும் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று முதல்வராகும் வாய்ப்பு இருக்கிறது. // 

திராவிடக்கட்சியை ஒழிப்போம் என்று சபதம் செய்த பா.ஜ.க கட்சியில் இருக்குறீர்களை என்பதை நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன். இதுவரை அ.தி.மு.க., காங்கிரஸ்., பா.ஜ.க என்று மூன்று கட்சியிலும் இருந்துவிட்டீர்கள். அடுத்து தி.மு.கவுக்கு தாவும் சந்தர்ப்பத்தை பார்த்துக்கொண்டிருப்பதாக தற்போதைய பா.ஜ.க உறுப்பினர்கள் நினைப்பார்கள். 

 “இதுக்கு தான் இந்த பார்ப்பனர்கள் நம்ம கட்சியில சேர்க்கக்கூடாது” என்று அவர்களுக்குள் பேசிக்கொள்வார்கள். இவர்கள் திராவிடக் கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை. பா.ஜ.கவினர். 

அதை நீங்கள் எப்படி எதிர்க்கொள்ளப் போகிறீர்கள் என்பது கவலையாக இருக்கிறது. 

7. 

தி.க., தி.மு.கவினரை விட மூன்று வேளை கோயிலுக்கு சென்று கடவுளை வழிப்படும் மற்ற சாதியினரிடம் ‘பிராமண வெறுப்பு’ அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு பெரியார் என்ன சொன்னார் என்பது தெரியாது. பகுத்தறிவு குறித்து புரிதல் கிடையாது. ஆனால், பிராமணர்கள் என்றால் இப்படி தான் நடந்துக்கொள்வார்கள் என்று எண்ணம் உடையவர்கள். எதனால் அவர்கள் மனதில் இப்படி எண்ணம் உருவானது என்றாவது சிந்தித்ததுண்டா ? 


8. 
// அடுத்த வாரம் நடக்க இருக்கும் உங்கள் இல்ல திருமணத்தில் சாதிப் பெயருடன் அழைப்பிதழ் அச்சடித்திருப்பதை ஏற்கனவே சொன்னேன் அல்லவா...// 

 ஒரு சம்பவம் சொல்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கு, நடிகர் தனுஷ் திருமணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். திரு. ரஜினியும், தனுஷ் தந்தை கஸ்தூரிராஜாவும் பிராமணர்கள் அல்ல. ஆனால், திருமணம் பிராமண முறைப்படி நடந்தது. எதற்காக பிராமண முறைப்படி நடத்தப்பட்டது என்று நான் கேட்கப் போவதில்லை. அந்த திருமணத்திற்கு கடவுள் நம்பிக்கை இருப்பவர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பப்பட்டதா ? பகுத்தறிவாளிகளும், கடவுள் மறுப்பாளர்கள் கலந்து கொள்ளவில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா ? 

அதேப் போல், கடவுள் மறுப்பாளர் கலைஞர் இல்ல நிகழ்ச்சிக்கு கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் கலந்துகொள்வதில்லையா ? நம்மை சார்ந்துள்ளவர்கள், உறவினர்கள் நமது கொள்கைக்கு எதிரானவர்களாக இருந்தாலும் அவர்களின் அன்புக்கு அடிப்பணிவது மனித இயல்வு. அன்பை விட கொள்கை முக்கியமில்லை. அந்த அடிப்படையில் சுப.வீ வாணியச் செட்டியார் அறக்கட்டளையில் உறுப்பினராகியிருக்கலாம். பெற்றோர்கள் மீது கொண்ட அன்பால் அவர்கள் காட்டியப் பெண்ணை திருமணம் செய்திருக்கலாம். உரிமையோடு அவருடைய பெயரை உறவினர்கள் பத்திரிக்கையில் அச்சடித்திருக்கலாம். 

பிரச்சனை சாதி அமைப்பில் உறுப்பினராக இருப்பதில் இல்லை. தன்னுடைய சாதியை தூக்கிப்பிடித்து பேசுவது தான் பிரச்சனை. சுப.வீயின் திறந்த மடலில் அவரது சாதியை தூக்கிப்பிடித்து எழுதியதுப் போல் இல்லை. உங்களின் திறந்த மடலை பார்த்தப் பிறகு தான் அவர் எந்த சாதியை சேர்ந்தவர் என்பது பலருக்கு தெரிய வந்திருக்கும். 

 *

 9. 

// உங்களால் மட்டுமல்ல... யாராலும் சாதியையும் மதத்தையும் ஒழிக்க முடியாது. இதுதான் யதார்த்தம்// 

இந்த உண்மையை நான் ஏற்றுக்கொள்கிறேன். பிறப்பு, திருமணம், இறப்பு இந்த மூன்றுக்கும் சாதி அடையாளம் இல்லாமல் நடப்பதில்லை என்பதை நான் அறிவேன். ஆனால், பேச்சு, உடை, நட்பு என்று எல்லா விஷயத்திலும் பிராமணர்களை போல் யாரும் சாதியை தூக்கி சுமந்து செல்வதில்லை. அதனால் தான் நீங்கள் மற்றவர்களை விட வேறுப்பட்டு தனித்து நிற்குறீர்கள். 

பேசத் தொடங்கியதும் “இவர் பிராமணர்” என்று எளிமையாக கண்டுப்பிடிக்கும் அளவிற்கு உங்களை போல் யாரும் சாதி அடையாளத்தை காட்டுவதில்லை. 

மதத்தையும் ஒழிக்க முடியாது என்று குறிப்பிடும் நீங்கள் ஏன் கிறிஸ்துவம், முஸ்லீம் எதிராக கருத்துக் கூறும் கட்சியில் இருக்கிறீர்கள் ? 

 ** 

10. 

ஒன்று புரிந்துக்கொள்ளுங்கள். பிராமண வெறுப்பு என்பது தி.கவோ, தி.மு.கவோ விதைத்தது அல்ல. பிராமணர்கள் தங்கள் அன்றாட நடவடிக்கையால் விதைத்தது. அதை தி.மு.க அருவடை செய்து அரசியல் லாபம் பார்த்திருக்கிறது. இது மறுக்கமுடியாத உண்மை. இன்னும் எத்தனைக்காலம் இந்த உண்மை புரியாமல் தி.கவினரையோ, தி.மு.கவினரையோ குறைக்கூறி உங்கள் தவறை தொடர்ந்துக்கொண்டு இருப்பீர்கள் என்று நீங்கள் வணங்கும் கடவுளுக்கு கூட தெரியாது. 

நீங்கள் நல்ல நடிகன். ஆனால் திரையில் நடிப்பது போல் நிஜத்தில் உங்கள் அடையாளத்தை மறைத்து உங்களால் நடிக்க முடியவில்லை. உங்கள் திருந்தச் சொல்வதற்காக இந்த மடல் எழுதவில்லை. 

சோவையும், கலைஞரையும் பார்த்து பழகிய நீங்கள் என்ன பேசுகிறோம் என்பதை புரிந்துகொள்ளாமல் பேசுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அந்த வருத்தத்தை ஒரு ரசிகனாக எழுதியிருக்கிறேன். 

நன்றி.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails