வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, July 7, 2015

பெரியார் ரசிகன் – வசீகரனின் எதிர்வினை

அன்புக்குரிய குகனுக்கு வணக்கம்,

தங்களது “பெரியார் ரசிகன்” என்ற 160 பக்க புதின நூலை படித்து மகிழ்ந்தேன். இது தங்களின் முதல் புதினம் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் எந்தவித சிந்தனைத் தடுமாற்றமும் இன்றி கதையை சொல்லிக் கொண்டு போகும் கலை தங்களுக்கு கைவந்து இருக்கிறது. எழுத்தாளன், கவிஞன் ஆவதற்கென்றே தமிழ்மொழி மீது ‘ஈர்ப்பு’ கொண்டு குறுகிய காலத்தில் கற்று தேறி உள்ளீர்கள் என்பதை எண்ணி வியந்து பாராட்டுகிறேன்.


கதை நூலுக்கு “பெரியார் ரசிகன்” என்ற பெயர் பொருத்தமில்லை என்பது என் கருத்து. பெரியாரை நேசிக்கும் ஒரு மனிதரின் எண்ண மன ஓட்டத்தை கதையாகப் பதிவு செய்து இருக்கின்றீர்கள். இதுவும் நல்ல உத்தி தான். அவனுடைய பள்ளிப் பருவத்தில் இருந்து தொடங்கி தந்தையை இழந்து மாமாவின் ஆதரவோடு வாழ்க்கைப் போராட்டத்தில் குதித்து நீந்திச் சென்று கொண்டிருக்கும் காட்சிகளில் ஆரம்ப அத்தியாயங்கள் கடந்து செல்கின்றன. ஒன்றாவது அத்தியாயத்துக்கு ‘முன்னதாக முன்னுரைப் போன்று சுழியம் அத்தியாயமாக ஒர் அத்தியாயத்தை இணைத்து இருப்பது புதுமையாகத்தான் இருக்கிறது. ஆனால், அந்த அத்தியாயம் தேவையற்றது. நீக்கி இருக்கலாம்.

முதல் அத்தியாயத்தில் தன் கதையை கூறும் துவங்கிச் செல்கிறது. 1950 குடியரசு தின தொடக்க நாளன்று நாயகன் பிறப்பதாக அமைத்து இருப்பது அதைத்தொடர்ந்து காலக்கட்டத்தை நிறுவும் வகையில், அண்ணாவின் வெற்றி, மரணம், இந்திரா காந்தியின் மறைவு, எம்.ஜி.ஆர் மறைவு என்று அழகாகச் சொல்லிக் கொண்டு போகிறீர்கள். போற்றுகிறேன். ‘இந்த உலகத்தில் இன்று நான் சிறைப்பட்டேன்’ என்று தன் பிறப்பைச் சுட்டிக்காட்டியிருப்பது பாராட்டத்தக்க வரி. 

ஒவ்வொரு அத்தியாயமும் தொடங்கி எதையோ சுவையாகச் சொல்லிக் கொண்டே போனாலும் கூட கதை எதை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது என்பதை நெடுநேரம் யூகிக்கவே முடியவில்லை என்பது புதினத்தின் குறையாகவே தெரிகிறது. ஒவ்வொரு அத்தியாத்தையும் போரடிக்காமல் கொண்டு சென்ற காரணத்தினால் வாசகன் சலிப்படைவதில் தப்பிக்கிறான். ஒரு புதினத்துக்கு குறைந்த பட்ட கால்பங்கு நகர்வுக்கு பின்பாவது அதன் மைய இழை கோடிட்டுக் காட்டப்பட்டால், அதன் விறுவிறுப்பு மேலோங்கி நிற்கும். அந்த உத்தியை தாங்கள் பின்பற்றாத காரணத்தினால் சற்று உப்பு உறைப்பு குறைகிறது என்பதை சொல்லித் தான் ஆக வேண்டியிருக்கிறது. 

ஒரு சராசரி மனிதனின் சமாளிப்புகளுடான சம்பவங்களே இந்தக் கதையின் மையம் என்று தாங்கள் நேரில் விளக்கம் தந்து இருந்தீர்கள். அதை ஏற்கிறேன். எந்த ஒரு மனிதனும் திரைப்பட நாயகன் மாதிரி எல்லா விசயங்களிலும் அசகாய சுரனாக இருந்து விட முடியாது என்ற கண்ணோட்டத்தில் படிக்கிற போது ஒரு வாசகன் நிச்சயம் இந்தப் புதினத்தைப் போற்றி ஓரிடத்தில் தருவான். 

ஆங்காங்கே பகுத்தறிவுக் கேள்விகளை, கடவுள் மறுப்புச் சிந்தனைகள் பதிவு செய்து கொண்டு செல்கிறீர்கள். நாயகன் பெரியாரின் ரசிகனாக மாறுகிறான் என்பதை பதிவு செய்யப்படுவதற்குள்ளேயே பாதிக்கதை கடந்தோடிவிடுகிறது. துணிச்சலாக நிமிர்ந்து நின்று தாலிகட்டாமல் பகுத்தறிவு திருமணம் செய்து கொள்வதும், அதையே பின்பற்றி தன் மகனது திருமணத்தை நடத்தி வைப்பதுமாக சென்ற நாயகன், மகள் திருமணத்தில் ஒரு தந்தையாக மட்டும் நின்று தடுக்கிவிழுந்து விடுகிறார் என்பதையே உச்சக்காட்சியாக பதிவு செய்து இருக்கிறீர்கள். அதையே கதையில் போக்கில் அந்த உயர்குல சம்மந்தி சொல்கிற நிபந்தனைகளுக்கெல்லாம் சிறு திருத்தமும் கூட சொல்லாமல், எல்லாம் விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை ஏன் என்பது புரியவில்லை. தன் சொந்தக்கருத்தை பதிவு செய்யாமல் ஒரு பகுத்தறிவாளனால் விட்டுக் கொடுக்க முடியும் என்பதும் பகுத்தறிவுக் கேள்வி தான். 

மாண்டவர் மீண்டும் வந்து தனக்கே மகனாக மகளாக பிறப்பார் என்பது ஒரு பகுத்தறிவாளனின் நம்பிக்கையாக இருக்க முடியாது. ஆனால் இந்த ’பெரியார் ரசிகன்’ தானே அதை நம்பிக்கையுடன் கூறி ஏற்கிறார். அம்மாவே மகளாக வந்து பிறந்து இருப்பதாகச் கூறுகிறார். அது ஆன்மிக நம்பிக்கை என்பதே உண்மை. நிறைவு வரியில் கூட, “அப்பா எனக்கு மகனாகப் பிறப்பார்” என்று நாயகரின் மகள் கூறுவதாக நிறைவு பெறுவதும் பகுத்தறிவுக்குப் பொருந்துவது எப்படியோ தெரியவில்லை. ஆனால், தன் கொள்கைகளை தன் மகளுக்காக விட்டுக் கொடுத்து அடக்கி வைத்திருந்த ஆத்திரமே அவரது மரணமாக வெளிப்பட்டுள்ளது என்பது கதைக்கு சரியான நிறைவு தான். 

மாமா, தமிழாசிரியர், இஸ்லாமிய நண்பன், கிறிஸ்துவ நண்பன், பிராமண காதலி என்று பல்வேறு பாத்திரப் படைப்புகள் கதையை நகர்த்திச் செல்ல உதவி இருக்கின்றன. பல சூழல்களில் திறமையான வாதங்களால் கதையை அழகாக நகர்த்திச் செல்லும் உத்தி உங்களுக்கு கைவசம் வந்து இருக்கிறது. 

பெரியாரின் கொள்கைகளை பதிவு செய்து ஒரு புதினம் எழுதுவது என்பது ஒரு கடினமான செயல். அதை சுலபமாகவும், துணிச்சலாகவும் செய்து இருக்கின்றீர்கள். பாராட்டிப் போற்றுகிறேன். 

தங்களது அடுத்த புதினம் இதனினும் சுவை கூடி அமையும் என்பது திண்ணம். இந்நூல் பல பதிப்புகள் காண்ட்டும். 


நன்றி. 
வாழ வளர்க வெல்க, 

வசீகரன்
பொதிகை மின்னல், ஆசிரியர் 
30.6.2015
No comments:

LinkWithin

Related Posts with Thumbnails