வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, September 3, 2014

சில முக்கிய புத்தகங்கள் !!

யார் தொடங்கினார் என்று தெரியவில்லை. பேஸ்புக்கில் அவரவர் பிடித்த பத்து நூல்கள் என்று பதிவிடுவதால் நானும் என் பங்கிற்கு பதிவிடுகிறேன். கண்டிப்பாக ஜான்பவான் நூல்கள் இருக்கக் கூடாது என்ற நோக்கத்துடன், நண்பர்களின் புத்தகத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று என் நினைவில் இருப்பதை குறிப்பிட்டுயிருக்கிறேன்.

 1. ஆட்டிசம் சில புரிதல்கள் - யெஸ். பாலபாரதி
எல்லா புத்தகங்களும் வாசிப்பதற்காக மட்டுமே எழுதப்பட்டதல்ல. எல்லா புத்தகங்களும் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு மட்டுமே தயாரிக்க பட்டதுமல்ல. அதையும் தாண்டி நம் சிந்தனையை தூண்டவும், மற்றவர் உணர்வுகளை புரிந்துக் கொள்ள உதவவும் புத்தகங்கள் வெளிவருகிறது. அந்த எண்ணத்தில் எழுதப்பட்டப் புத்தகம் தான் யெஸ்.பாலபாரதி எழுதிய "ஆட்டிசம் சில புரிதல்கள்".

மேலும் இந்த நூல் குறித்து நான் எழுதிய முந்தைய பதிவு.

2. வில்லாதி வில்லன் – பால ஜெயராம் 
நான் எழுதிய ‘உலகை உறையவைத்த இனப்படுகொலை’ நூலுக்கு இந்த நூல் தான் உத்வேகம். இரண்டு கட்டுரைகளுக்கு இந்த நூல் தான் உதவியது. மனிதர்களை கொன்று குவித்த வில்லாதி வில்லர்களின் மிருக வரலாறு நூல் என்று சொல்லலாம்.

3. கலைவாணி : ஒரு பாலியல் தொழிலாளியின் கதை
நளினி ஜமிலாவின் புத்தகத்திற்கு போட்டியாக கிழக்கு பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட்டுயிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நளினி ஜமிலா நூல் ஏற்படுத்திய தாக்கத்தை இந்த நூல் ஏற்ப்படுத்தவில்லை என்றாலும், அவரை விட இவர் பல துயர்களை அனுபவித்திருக்கிறார். தனது திருமணத்திற்காக அக்காவின் கணவன் சம்மதம் பெருவதில் தொடங்கி தன் குழந்தைகளை காப்பாற்றும் வரை இந்த தொழிலில் இருந்து ஒரு பெண்ணால் மீண்டு வர முடியாத துயரமாக இருக்கிறது. ”தேவுடியா” என்ற வார்த்தையை யார் கெட்ட வார்த்தை என்று கூறினார்கள் என்ற கேள்வி இந்த புத்தகம் முடிக்கும் போது தோன்றியது.

4. நான் வித்யா - Living Smile Vidya 
திருநங்கை எழுதிய முதல் புத்தகம். தட்ஸ்தமிழில் இந்த நூலைப்பற்றிய அறிவிப்பு வந்ததுமே புத்தகக் கண்காட்சியில் முதல் சென்று வாங்கிய புத்தகம். ஆண் உடலில் வாழும் பெண்ணுக்கு ஏற்ப்படும் அவமானங்கள், சலனங்கள், போராட்டங்கள் என்று இந்தப் புத்தகம் உணர்த்துகிறது. சு.சமுத்திரத்தின் “வாடா மல்லி”, ரேவதி அம்மாவின் “வெள்ளை மொழி” நூல்களை விட திருநங்கைப் பற்றிய இந்த நூல் தான் என்னை அதிகம் ஈர்த்தது.

5. பணம் - கே.ஆர்.பி. செந்தில் 
வேலைக்காக போலி பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுக்கு செல்லும் இளைஞர்களை பற்றியும், அவர்கள் அங்கு படும் துயரத்தை பற்றிய புத்தகம். கட்டுரை நூல் தான். ஆனால், நாவலா ? ஆட்டோ பிக்ஷனா ? என்று பல சந்தேகத்தை இந்த நூல் கிளப்புகிறது. பணத்தை தேடிச் செலும் மனிதர்களை பற்றிய கட்டுரையாக எழுதுவதற்கு பதிலாக நாவலாக எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இந்த நூலைப் பற்றி முன்பு எழுதிய பதிவு. 

6. பிணம் தின்னும் தேசம் – சு.சண்முகசுந்தரம் 
2012ல் நாட்களாக கவிதை நூல் வாசிக்காமல் இருந்த என்னை மீண்டும் கவிதை பக்கம் இழுத்து வந்து, அந்த நூலை பதிப்பிக்கும் அளவிற்கு மாற்றிய கவிதை நூல் இது. ஈழத்தை வைத்து எத்தனையோ கவிதை நூல்கள் வந்திருக்கிறது. அதில், கண்டிப்பாக இந்த நூல் முக்கியமானது என்று சொல்லலாம்.

7. சினிமா ரசனை - Amshan Kumar
 சினிமா பிரியர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம். ஒவ்வொரு க்ளாசிக் உலக சினிமாவை விமர்சிப்பதோடு இல்லாமல் சினிமாவை எப்படி ரசிக்க வேண்டும் என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது.

8. அழிக்கப்பிறந்தவன் - Yuva Krishna 
பர்மா பஜாரில் நடக்கும் திருட்டு விசிடியை வைத்து மையமாக எழுதிய நாவல். லாஜிக் இடையூறு கொஞ்சம் இருந்தாலும், விறு விறுப்பான எழுத்து நடைக்காக வாசிக்கலாம். இந்த நாவலை எழுத்தாளர் அனுமதியின்றி ஒரு பாடலாசிரியர் திரைப்படமாக்கி வருகிறார் என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது.

9. 6174 - Sudhakar Kasturi
ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை விறு விறுப்பு. கடைசியில் ஆங்கிலப் பட பாணியில் இரண்டாம் பாகத்திற்கு ஒரு நாட் வைத்து முடித்திருப்பது க்ளாஸ்.

இந்த புத்தகத்தைப் பற்றி முன்பு நான் எழுதிய பதிவு. 

10. ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள் 
ஹிட்லரின் மரண முகாமில் மாட்டி தவித்த பதினான்கு வயது சிறுமியின் இரண்டு வருட அனுபவ குறிப்புகள். பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல். யூத இனப்படுகொலையின் போது பல உயிர்களோடு உணர்வுகளும் சேர்ந்து புதைக்கப்பட்டிருக்கிறது. அதில் இந்த சிறுமியின் உணர்வுகளும் ஒன்று.


கலைவாணி : ஒரு பாலியல் தொழிலாளியின் கதை, நான் வித்யா, பணம் - out of print
சினிமா ரசனை, 6174 - out of stcok

மேல் குறிப்பிட்ட மற்ற புத்தகங்களை www.wecanshopping.com வாங்கலாம்.

1 comment:

Rathnavel Natarajan said...

Please add Feed Burner Widget. Kindly send your Blogs when released to my email id:
rathnavel.natarajan@gmail.com

Thank You & Best Wishes.

LinkWithin

Related Posts with Thumbnails