வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, February 6, 2014

பெரியார் ரசிகன் - கோவி லெனின் விமர்சனம்

காதல், குடும்பச்சூழல், வாழ்க்கைச் சுமைகள் உள்ளிட்ட வழக்கமான பிரச்சினைகளே என்றாலும் கதையை நகர்த்திச் செல்வதென்னவோ மனித மனிதுக்குள் நடக்கும் ஆத்திக-நாத்திக மோதல்தான். அதுதான், குகன் எழுதியுள்ள ‘பெரியார் ரசிகன்‘ புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. (உதயகண்ணன் வெளியீடு- பெரம்பூர்- சென்னை- 600 011- தொடர்புக்கு, 94446 40986 விலை ரூ.100)

சிறுவயதில் அப்பாவை இழந்து, நிர்கதியாய் தவிக்கும் நாயகனும் அவன் அம்மாவும் மாமாவின் உறுதுணையால் வாழ்க்கையை எதிர்கொள்வதும், அந்த நாயகன் சட்டக்கல்வி பயிலும்போது, காதல் வயப்படுவதும், தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு அந்தக் காதல் சரிவராது என அதனை உதறுவதும், பின்னர் தன் விருப்பத்திற்குரிய முறையில் திருமணம் செய்துகொண்டு, வாழ்க்கையைத் தொடர்வதும், அந்த வாழ்க்கை அவனது விருப்பம்போல அமைந்ததா என்பதும்தான் குகன் எழுதியுள்ள ‘பெரியார் ரசிகன்’ நாவல். 160 பக்கங்களில் கதையை நிறைவு செய்திருக்கிறார். அது முழுமையாக எல்லாவற்றையும் விளக்குகிறதா, முன்முயற்சியாக இருக்கிறதா என்பதை வாசகர்கள் தீர்மானிக்க வேண்டும்.

கதை வழியாக காலத்தைப் பதிவு செய்கிறார் குகன். வரலாற்றைத் தொட்டுச் செல்கிறார். அரசியல் நிகழ்வுகளையும் அது ஏற்படுத்தியுள்ள தாக்கங்களையும் குறிப்பிடுகிறார். சிற்றுண்டி கடை நடத்துவதன்றி வேறெந்த பொதுநோக்கும் இல்லாத மாமாவுக்குள் அறிஞர் அண்ணா ஏற்படுத்தும் தாக்கம், மாமா சொன்ன வேலைகளை செய்தபடி, அம்மாவின் நலன் காக்கும் நாயகனுக்குள் பெரியார் ஏற்படுத்தும் மாற்றம், உடன்படிக்கும் பிராமணப் பெண் மீதான காதல் அவனுக்குள் உருவாக்கும் விவாதம், திராவிட இயக்கம் சார்ந்த தனது கொள்கைகளுக்கும் நடைமுறை வாழ்வுக்குமான மோதல்கள்-முரண்பாடுகள் என குகன் பல புள்ளிகளைத் தொடுகிறார். எந்த இடத்திலும் கதையின் ஓட்டம் தடைப்பட்டுவிடக்கூடாது என்கிற கவனம் அவருக்கு இருப்பதைப் படிக்கும்போது உணரமுடிகிறது.

அண்ணா ஆட்சிக் காலத்தில் சுயமரியாதை திருமணச் சட்டம் கொண்டுவரப்பட்டது பற்றி இக்கதையில் மாமாவுக்கும் மருமகனான நாயகனுக்கும் உரையாடல் நடக்கிறது.

“தாலி இல்லாம கல்யாணம் நடந்தா புருஷனுக்கு ஏதாச்சும் ஒண்ணு ஆனாகூட இந்த சமுதாயத்துல எப்பவும் போல ஒரு பொண்ணால நடமாட முடியும். கல்யாணமாகி புருஷன் செத்து தாலி இல்லாம நடந்து போனா பொண்ணுங்கள இந்த சமுதாயம் எவ்வளவு கஷ்டப்படுத்தும்னு எனக்கு தெரியும். உங்க அம்மா எவ்வளவு அவமானப்பட்டான்னு அவளுக்குத்தான் தெரியும்” என்று உருக்கமான குரலில் (மாமா) பேசினார்.

விதவையான அம்மா சில சமயம் நடக்கும்போது (எதிரில் யாரேனும் வந்தால்) தெருவிலிருந்து ஒதுங்கிக்கொள்வார். உணவகம் வைத்த காலத்தில் காலையில் அந்தப் பக்கமே போகமாட்டார். மதியம்தான் செல்வார். காலையில் ‘விதவை’ முகத்தில் விழிக்க பலர் யோசிப்பார்கள் என்பதற்காக அம்மா இப்படி செய்திருக்கிறார் என்பதை இப்போதுதான் என்னால் (மருமகன்) புரிந்துகொள்ள முடிந்தது.

“தாலி ஒண்ணு இல்லைன்னு வச்சிக்கோ, சமுதாயத்துக்கு முன்னாடி விதவ பொண்ணும், கல்யாணமான பொண்ணும் ஒரே மாதிரிதான் தெரிவாங்க. அவங்களுக்கு ஒரு மரியாதை கிடைக்கும். இதுதான் நா புரிஞ்சுக்கிட்டது” என்று அண்ணாவின் சுயமரியாதை சட்டத்தை (மாமா) விளக்கினார்.”

இப்படி கதைப்போக்கில் பல உரையாடல்கள் செல்கின்றன. தன் கொள்கைக்கும் குடும்ப வாழ்க்கைக்குமான மோதல்களின்போது நாயகனின் குரல் வலிந்து ஒலிக்கிறது. “கடவுளை வணங்குபவர்கள், கடவுள் தன்னை சோதிப்பதாகச் சொல்வார்கள். ஆனால், திராவிடக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களை சுற்றியிருப்பவர்கள் சோதனை செய்கிறார்கள். பெரியாரின் சுயமரியாதைக் கொள்கையை (நான்) ஏற்றுக்கொண்டதால் உறவினர்கள் எத்தனை பேர் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். எத்தனை பேர் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். மனைவி, பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்குத் தினமும் பதில் சொல்ல வேண்டியிருக்கும். இத்தனையும் கடந்துதான் ஒருவன் சுயமரியாதைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறான் என்பதை இந்த சமூகம் உணரும்போதுதான், சுயமரியாதைக்காரர்களை மதிப்பார்கள்” என்கிறது நாயகனின் குரல்.

சமூகத்தின் அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல் அந்த சமூகத்தின் நலனுக்காகவும் உயர்வுக்காகவும் தன்நிலையில் உறுதியாக இருந்து சிந்திப்பவனும் உழைப்பவனும்தான் உண்மையான சுயமரியாதைக்காரன். அதற்காகத்தான் இந்தக் கதையின் நாயகன் சந்திரசேகர் என்கிற ‘சந்திரு’வின் வாழ்க்கைப் போராட்டம் அமைந்திருக்கிறது. எந்தளவில் ஒரு சுயமரியாதைக்காரனால் வெற்றிபெறமுடிந்தது என்பதைக் கதை நிறைவு செய்கிறது.

புதிய முயற்சி, நல்ல முயற்சி என்கிற வகையில் இந்தப் படைப்பை வரவேற்கவேண்டும். எழுத்துப்பிழைகளைக் கவனிக்க வேண்டிய பக்கங்கள் நிறைய இருக்கின்றன. அடுத்த முயற்சிகளில் அவை களையப்படும் என்ற நம்பிக்கையுடன் இளம் எழுத்தாளர் குகன் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கிறது.

நன்றி : கோவி.லெனின்
http://www.kavvinmedia.com/BlogDetails.aspx?PostID=705

இணையத்தில் வாங்க....
www.wecanshopping.com/products/பெரியார்-ரசிகன்.html

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4-part2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

LinkWithin

Related Posts with Thumbnails