வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, November 11, 2013

சிரியா - இன்னொரு இராக் வேண்டாம் !

எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா சிரியாமீது போர் தொடுக்கலாம் என்றிருந்த நிலையை மாற்றி பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் என்று இரு நாடுகளையும் மேஜைக்கு முன்னால் எதிரெதிரே அமர வைத்ததில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினின் பங்கு முக்கியமானது. சிரிய அரசு தன் வசமுள்ள ரசாயன ஆயுதங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அழித்துவிடவேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் இப்போது போர் மேகங்கள் கலைக்கப்பட்டுள்ளன.

சிரியா தனது சொந்த மக்கள்மீது ரசாயனத் (விஷவாயு) தாக்குதல் நடத்தி 1300ம் மேற்பட்டவர்களைக் கொன்றிருக்கிறது என்பதுதான் அமெரிக்காவின் குற்றச்சாட்டு. ‘ரசாயன ஆயுதம் கூடாது’ என்னும் சிவப்புக் கோட்டை சிரியா தாண்டிவிட்டதால் துருப்புகளை அனுப்பவேண்டிய தேவை எழுந்துள்ளது என்று தன் தரப்பை நியாயப்படுத்தியது அமெரிக்கா.


2011 தொடங்கி பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கு சிரியாவின் அதிபர் பஷர் அல் ஆசாத் காரணமாக இருந்துள்ளார் என்பதை நிச்சயம் மறுப்பதற்கில்லை. இனப்படுகொலையை நோக்கி சிரியா நகர்ந்து சென்றுகொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மை.

சிரியா என்பது ஆசாத் குடும்பத்தின் சொத்தாகவே திகழ்கிறது. 1971ல் சிரியாவின் அதிபராக ஆசாத்தின் தந்தை ஹஃபிஸ் அல் ஆசாத் பொறுப்பேற்றுக் கொண்டார். முப்பது வருடங்கள் பதவி அனுபவித்த கையோடு, தனது அதிபர் பதவியை மகன் பஷர் அல் ஆசாத்திடம் ஒப்படைத்துவிட்டார் அவர். இவர் கடந்த பதிமூன்று வருடங்களாக அதிபராக இருந்து வருகிறார். தேர்தல், ஜனநாயகம் ஏதுமின்றி சிரியா மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு வருடங்களாக, ஆசாத் பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை அடக்க ஆசாத் அரசு அடக்குமுறையைக் கையாண்டு வருகிறது. இதற்காகவே உலக நாடுகளில் இருந்து தனது போருக்கான ஆயுதங்களை சிரியா அரசு வாங்கியிருக்கிறது.

இங்கேதான் அமெரிக்க நுழைகிறது. பல வருடங்களுக்கு முன்பு இரான் மீது யுத்தம் நடத்த அமெரிக்க சொன்ன அதே காரணத்தைத் தற்போது சிரியாவுக்கும் சொல்லியிருக்கிறது அமெரிக்கா. ஆனால் இரானுக்கும் சிரியாவுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது. அமெரிக்காவின் தலையீட்டை சிரியா மக்களே ஆதரிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அமெரிக்கர்களுக்கு இந்தப் போரில் உடன்பாடு இல்லை என்பது தெரிகிறது. அமெரிக்க செனட் உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலும், அமெரிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அமெரிக்காவின் போர் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் ராணுவ நடவடிக்கைக்கான தீர்மானம் தோல்வியடைய, வேறு வழியின்றி பின்வாங்க வேண்டியதாகிவிட்டது.

உண்மையில் இந்தப் போரில் அமெரிக்காவுக்கு கூட விருப்பமில்லை. இருந்தாலும் தனது வல்லரசு மிதப்பை விட்டுக் கொடுக்காமல் சிரியாவை மிரட்டிப் பார்க்க விரும்பியிருக்கிறது. இரண்டு வருடங்களாக பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டபோது அமைதி காத்த அமெரிக்கா திடீரென்று இப்போது எதிர்ப்பதற்கும் மிரட்டுவதற்கும் காரணம் எண்ணெய் என்றும் சொல்லலாம். ஆனால், அதுதான் முக்கியக் காரணம் என்றால், உள்நாட்டு யுத்தம் தொடங்கியபோதே அமெரிக்கா தலையிட்டிருக்கும். இரண்டு வருடங்கள் அமைதியாக இருந்திருக்கிறார்கள். ஏன்?


ஆரம்பத்திலேயே அமெரிக்கா தலையிட்டிருந்தால், இஸ்லாமிய விரோத மனப்பான்மை, எண்ணெய் வளத்துக்கான ஆசை போன்றவை பகிரங்கமாகத் தெரிந்திருக்கும். எனவே நேரடியாக இறங்காமல் உள்ளூர் போராளிகளை ஆசிர்வதித்து அரசுக்கு எதிராகக் கலகம் செய்ய தூண்டிவிட்டது அமெரிக்கா. இப்போது, சிரியா அரசு தனது தாக்குதல் மூலம் சிரியப் போராளிகளை ஒரளவுக்கு அடக்கிவிட்டது. அதனால் விழித்துக்கொண்டது அமெரிக்கா. ஆசாத்தின் ஆட்சி மட்டுமல்ல அவர் குடும்பத்தின் ஆட்சியும் தொடரக்கூடாது என்று விரும்பிய அமெரிக்கா தலையிடுவதற்கு இதுவே தருணம் என்று முடிவு செய்தது.

சரி, அமெரிக்காவுக்கும் சிரியாவுக்கும் இடையிலான இந்த மோதலில் ரஷ்யா எப்படி வந்தது? ரஷ்யா, 2000 முதல் 2010 வரை சிரியாவுக்கு 1.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கியுள்ளது. தங்களது முக்கிய வாடிக்கையாளராக இருக்கும் சிரியாவைக் காக்கும் பொறுப்பு ரஷ்யாவுக்கு இருக்கிறது. போர் இல்லாவிட்டாலும் ஆயுதங்களுக்கான தேவை எப்போதும் இருக்கும் என்று ரஷ்யாவுக்குத் தெரியும். காரணம், மத்தியக் கிழக்குப் பகுதியில் ஓயாமல் பதற்ற நிலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அமெரிக்கா எது செய்தாலும் அதை எதிர்ப்பது சீனாவின் கொள்ளை என்பதால் இந்த முறையும் சிரியா மீதான அமெரிக்காவின் தலையீட்டை சீனா எதிர்த்துள்ளது. கண்டனமும் தெரிவித்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை சிரியாவில் என்ன நடந்தால் எனக்கென்ன என்று இனியும் இருந்துவிடமுடியாது. சிரியாவில் யுத்தம் மூண்டால் கச்சா எண்ணெய் அதிகரிக்கும். இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவடையும். அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும். பெட்ரோல் மானியச் சுமை அழுத்தும். மானியத்தைக் குறைக்க விலையை உயர்த்தினால் பணவீக்கம் ஏற்பட்டு அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும். மொத்தத்தில், இந்தியப் பொருளாதாரம் பாதிப்படையும். சிரியா யுத்த அபாயம் வெளிப்பட்ட அன்றே சென்செக்ஸ் பங்குச்சந்தை 700 புள்ளிகள் வரை சரிந்தது. ஒருவேளை யுத்தம் நடந்தால், மோசமான விளைவுகளை நாம் சந்திக்க வேண்டி வரும்.

அப்படி எதுவும் நேராது, சிரியா யுத்த அபாயம் நீங்கிவிட்டது என்கிறார்கள் சிலர். ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் எதிர்ப்பை மீறி அமெரிக்காவால் முன்னேறமுடியாது. ஐ.நாவின் ஒப்புதலும் கிடைக்காது. இங்கிலாந்து பின்வாங்கிவிட்டது. எப்படி மூளும் யுத்தம் என்கிறார்கள் இவர்கள்? இன்னொரு பிரிவினரோ தற்போது நிலவுவது தாற்காலிக அமைதியே என்று எச்சரிக்கிறார்கள். ரசாயன ஆயுத ஒப்பந்த விஷயத்தில் சிரியா ஒத்துழைப்பு தராது என்றும் அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் திருப்பித் தாக்கலாம் என்றும் இவர்கள் அஞ்சுகிறார்கள்.

இதற்கிடையில் பல லட்சக்கணக்கான சிரிய மக்கள் அகதிகளாக மாறியுள்ளனர். அவர்களைக் குடியமர்த்துவது சிரியாவுக்கு மட்டுமல்ல சுற்றியுள்ள நாடுகளுக்கும் மிகப் பெரிய சவாலாக இருக்கப்போகிறது. வேறு எதற்காக இல்லாவிட்டாலும் இந்த ஒரு காரணத்துக்காகவே உலக நாடுகள் தலையிட்டு போரைத் தவிர்க்கவேண்டும் என்னும் கோரிக்கை பலம் பெற்றுவருகிறது. இந்தக் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டால் இன்னொரு இராக் உருவாவதை யாராலும் தடுக்கமுடியாது.

(நன்றி : ஆழம், அக்டோபர் இதழ்)

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails