வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, October 23, 2013

பிராட்லி மேனிங் - ஓர் அமெரிக்க வீரனின் கதை

நீங்கள் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தில் தலைமை அதிகாரி ஒருவர் கொலை செய்வதை நீங்கள் பார்த்து விடுகிறீர்கள். அதை வெளியிலும் சொல்லிவிடுகிறீர்கள். கொன்றவரை விட்டுவிட்டு சாட்சி சொன்ன உங்களுக்கு 136 ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுத்தால் எப்படி இருக்கும்? ஏதோ ஒரு பின்தங்கிய நாட்டில் அல்ல, உலகின் மிக முன்னேறிய பணக்கார நாடான அமெரிக்காவில்தான் இப்படியொரு தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. பலிகடா, இருபத்தைந்து வயது பிராட்லி மேனிங்.


தன்னைச் சுற்றி தவறுகள் நிகழும்போது நியாயமாக இரு விஷயங்களை ஒருவர் செய்யவேண்டும். ஒன்று, அந்த இடத்தில் இருந்து விலகிச் செல்லவேண்டும். அல்லது, தவறுகளை அம்பலப்படுத்தவேண்டும். பிராட்லி மேனிங் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார். அதனால்தான் அவருக்கு இத்தனை பிரச்னைகளும். கம்ப்யூட்டர் ஹாக்கிங்கில் வல்லவர் மேனிங். தன்னுடைய தந்தையைப் போல் தானும் கப்பல் படையில் பணியாற்றி நாட்டுக்குச் சேவை செய்யவேண்டும் என்னும் விருப்பத்தின் காரணமாகப் பணியில் இணைந்திருக்கிறார். ஆனால் அமெரிக்க ராணுவத்தின் செயல்பாடுகளைக் கண்டு இவருக்குப் பெருமித உணர்வு வரவில்லை. மாறாக, மாபெரும் அநியாயத்துக்கு நாமும் துணை போகிறோம் என்னும் குற்றவுணர்வே ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்க ராணுவச் செயல்பாடுகளின் இருண்ட பக்கத்தைத் தரிசிக்கும் வாய்ப்பு பிராட்லி மேனிங்குக்குக் கிடைத்தது. 2007ல் பாக்தாத்தில் விமானத் தாக்குதல் மூலம் பொது மக்களும் இரண்டு ஆப்கன் பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டது, 2009ல் கிரானி பகுதியில் விமானத் தாக்குதல்மூலம் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது போன்ற பல சம்பவங்கள் குறித்த ஆதாரங்கள் அவருக்குக் கிடைத்தன. மேலும், ஆப்கனிஸ் மற்றும் இராக் போர் ஆவணங்களும் சிக்கின. ‘அமெரிக்கா நடத்திய தாக்குதல் வீடியோ என்னை பதறச் செய்தது. சிறு குழந்தைகள் எறும்புகளை நசுக்கி விளையாடுவது போல் விமானத்தில் இருந்தபடியே பொது மக்கள்மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்’ என்று ஒருமுறை பேட்டியில் கூறினார் மேனிங். இந்த உண்மைகளை எப்படி உலகுக்குக் சொல்வது என்று தவித்த பிராட்லிக்கு விக்கிலீக்ஸின் தொடர்பும் கிடைத்தது.

2010ல் அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியாக இருந்தது தாலிபனோ, ஹமாஸோ இல்லை. விக்கிலீக்ஸ்தான். மேனிங்கிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆவணங்களை ஒவ்வொன்றாக அவர்கள் இணையத்திலும் பிற பத்திரிகைகளிலும் வெளியிடத் தொடங்கினார்கள். பல நாடுகளில் பணிபுரியும் அமெரிக்கத் தூதர்கள் அந்தந்த நாட்டின் அரசியல் சூழல் குறித்து என்னென்ன செய்திகளை தங்கள் அரசுக்கு அனுப்பினார்கள் என்பது விக்கிலீக்ஸ்மூலம் தெரியவந்தது. அமெரிக்கா குறிப்பிட்ட ஒரு நாட்டை எப்படிப் பார்க்கிறது என்பதையும் இந்த கேபிள்களில் இருந்து தெரிந்துகொள்ளமுடிந்தது.

பிராட்லி கசியவிட்ட ஒவ்வொரு ஆவணமும் அமெரிக்காவின் போர்க்குற்றத்தை நிரூபிக்கும் ஆதாரமாகத் திகழ்ந்தது. இந்த ஆதாரங்களால் அமெரிக்காவின் மதிப்பு உலகளவில் சற்றே சரிந்தது உண்மைதான் என்றாலும் அமெரிக்கா ஒரு போர்க்குற்றவாளி என்று யாரும் வாதிடவில்லை. ‘போர் குற்றம்’ என்ற வார்த்தை போரில் தோல்வி அடைந்தவர்கள் மீதே பாயும் என்பதுதான் வரலாற்று உண்மை. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி முதல் இன்று ஈழத்தில் தோல்வியுற்ற விடுதலைப் புலிகள் வரை இதற்கு உதாரணங்கள் காட்டமுடியும். அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்தப் பின்னணியில் அமெரிக்கா பிராட்லி மேனிங்கைக் கைது செய்து வழக்கு தொடர்ந்தது. மொத்தம் 22 வழக்குகள் அவர்மீது தொடுக்கப்பட்டன. அமெரிக்காவின் ராணுவ பாதுகாப்புத் தளத்தை அத்துமீறி பார்வையிட்டது, ரகசியமாக பதிவு செய்தது, ரகசியங்களை வெளியிட்டது என்று ஒரு பெரிய பட்டியல் தயார் செய்யப்பட்டது.

ஏழு லட்சம் கேபிள்களை பிராட்லி மேனிங் கசியவிட்டதாகச் சொல்லப்படுகிறது. 2010ல் இராக்கில் இன்டெலிஜன்ஸ் அனலிஸ்டாகப் பணியாற்றியபோது சில வீடியோ ஆதாரங்களையும் இவர் பிரதி எடுத்துக்கொண்டாராம். இவை விக்கிலீக்ஸில் பின்னர் வெளிவந்தது. மேற்படி குற்றங்களுக்காக அவருக்கு எதிராகப் பதிவான 22 வழக்குகளில் 18 குற்றங்களை பிராட்லியே ஒத்துக்கொண்டதால் நீதிபதிக்கும், அமெரிக்க அரசுக்கும் சுலபமாகி விட்டது. ஒவ்வொரு குற்றத்துக்குமான தண்டனைக்காலத்தைக் கூட்டியபோது 136 வருட சிறைவாசம் கிடைத்தது. அதையே தீர்ப்பாக வெளியிட்டார்கள். பின்னர் தண்டனைக்காலம் 90 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. எளிதில் வெளியில் வந்துவிடமுடியாதபடி அவர்மீது தேச விரோதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை நாம் இங்கே கவனிக்கவேண்டும்.

அமெரிக்காவின் உளவு நிறுவனமான என்.எஸ்.ஏ. தனது குடிமக்கள் உள்பட பல நாட்டு மக்களின் தகவல் பரிமாற்றங்களை வேவு பார்க்கிறது என்பதை ஆதாரபூர்வமாகக் கண்டறிந்து அம்பலப்படுத்திய எட்வர்ட்ஸ்நோடென் அமெரிக்காவில் இருந்து தப்பி ரஷ்யாவில் தஞ்சமைடைந்தார். ஆனால் மேனிங்குக்கு அப்படிப்பட்ட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. கைது செய்யப்பட்டுவிட்டதால் அடைக்கலம் தேடுவதற்கான முயற்சிகளிலும் அவரால் இறங்கமுடியவில்லை. ஸ்நோடென், அசாஞ்சே போன்றோருக்கு இருந்ததைப் போன்ற பொதுமக்கள் ஆதரவு மேனிங்குக்கு இல்லை என்பதையும் நாம் இங்கே ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

‘உண்மையை வெளியே கொண்டு வந்ததற்காக என் வாழ்நாள் முழுக்க சிறையில் இருக்கவேண்டிவந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் எனக்குக் கவலையில்லை’ என்று முன்னர் சொல்லியிருந்தார் மேனிங். அவர் சொன்னது இன்று பலித்துவிட்டது. குறுகலான ஓர் அறையில் நிர்வாணமாக நிறுத்திவைத்தது, உறக்கமில்லாமல் அலைக்கழித்தது என்று உடல்ரீதியிலும் மனரீதியிலும் ஏராளமான துன்பங்களை அனுபவத்திருக்கிறார் மேனிங். இனி எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் அவர் சிறையில்தான் கழிக்கவேண்டியிருக்கும். பொய்கள் ஆட்சி செய்யும் காலத்தில் உண்மையைச் சொல்வதைப் போன்ற ஒரு பெரும்தவறு இருந்துவிடமுடியாது.

(நன்றி : ஆழம், செப்டம்பர் இதழ்)

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

பிராட்லி மேனிங் அவர்களுக்கு இப்படி ஒரு சோதனையா...? கொடுமை... அவரை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது...

LinkWithin

Related Posts with Thumbnails