அதே சமயம், ஈழத்தை வைத்து தமிழகத்தில் அரசியல் நடத்தும் எந்த ஒரு கட்சி (இந்த நூலின் ஆசிரியர் உட்பட) மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை.
போருக்கு பிறகு இலங்கைக்கு சென்ற ஆறு பேர் கொண்ட குழுவில் திருமாவை தவிர வேறு யார் தகவல் சொன்னாலும் நம்பும் படியாக இருக்காது. காரணம், மற்ற ஐவர் காங்கிரஸ், தி.மு.க கட்சியினர். தங்கள் ஆட்சிக்கு பாதிக்க அளவில் தான் தகவல் வெளியே விடுவார்கள். இந்த நூலில் கூட, திருமா தி.மு.க வுடன் தனது உறவு பாதிக்க கூடாது என்பதில் கவனமாக வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார்.

அதிகம் பேச வேண்டும் என்று நினைத்த இடத்தில் கூட்டம் முடிந்து விட்டதாக குழு தலைவர் டி.ஆர்.பாலு அறிவித்துள்ளார். திருமாவால் மாவட்ட ஆட்சியாளரை டி.ஆர்.பாலு கண்டித்துள்ளார். கலைஞரிடம் அதைப் பற்றி குறிப்பிடும் போது அவரை ‘டேரர்’ பாலு என்றே குறிப்பிட்டுள்ளார். கலைஞரும் நகைச்சுவை உணர்வுடனே எடுத்துக் கொண்டார்.
’போருக்கு பிறகு ஈழம்’ என்ற பதிவில் இந்த புத்தகம் இடம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை . இதில் தகவல் மறைக்க பட்டிருக்கலாம். ஆனால், மிகைப்படுத்தி சொல்லப்பட்ட தாக தெரியவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராம சம்பந்தன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரவூஸ் ஹக்கீம் தலைமையிலான இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்கள், ‘பிளாட்’ இயக்கத் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத் தலைவர் சிறீகரன் ஆகியோரையெல்லாம் 10-10-2009 அன்று மாலை ‘இந்தியா அவுஸ்’ என்ற தூதருக்கான இல்லத்தில் சந்தித்தோம். தனித்தனியே அந்த சந்திப்புகள் நடந்தன. தமிழினத்துக்கு இவ்வளவு பெரிய பாதிப்புகள் நேர்ந்துள்ள நிலையிலும், தமிழருக்கான இயக்கத் தலைவர்கள் நம்மை சந்திக்க ஒன்றாக வரவில்லையே என்று வருந்தினேன்.
என்ற திருமா மன வருத்தத்தோடு மூன்றாவது அத்தியாயம் தொடங்குகிறது. அவருக்கு மட்டுமல்ல, மிஞ்சிய உயிர்களை காப்பாற்ற நினைக்கும் அனைவருக்குமே இது வருத்தம் தரும். இவர்களது ஒற்றுமையின்மையில்லாமல் அகதி மீட்பு பணியில் கால தாமதம் ஏற்படலாம்.
பல இடங்களில் 2002, 2004ல் ஈழத்து வந்து சென்ற தன் பயண நினைவுகளை குறிப்பிடுகிறார். 2004 பயணத்திற்கும், 20009 பயணத்திற்கும் ஒரே வித்தியாசம், அன்று வரவேற்றது விடுதலை புலிகள், இன்று வரவேற்பவர் சிங்களவர்கள்.
சில முகாம்களை வீடியே பதிவு செய்வதை கண்டித்த போது அதை கவலைப்படாமல் படம் பிடித்தேன் என்கிறார். ஆனால், அதை ஊடகப்பார்வைக்கு கொடுக்கப்பட்டதா என்று இதுவரை தெரியவில்லை.
திருமா வீடியோ பதிவு செய்யும் போது, ஒரு பெரியவர் அவரிடம்,
”எங்களை வைத்து நீங்கள் அரசியல் பண்ணுகிறீர்கள். பிராந்திய நலனுக்காக எங்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்துகிறீர்கள். இந்தியாவும் உலக நாடுகளும் எங்களை ஏமாற்றிவிட்டன. நாங்கள் யாரும் புலிக்கொடி பிடித்தவர்கள் இல்லை. அப்பாவி சனங்கள் ! எங்களுக்குப் புலிச் சாயமில்லை. நான் சொல்லுவேன். திருமாவளவனுக்கு புலிச் சாயமுண்டு. புலிக்காக நீங்கள் இந்தியாவில் கொடி பிடிக்கிறவர், நாங்கள் அப்படியில்லை. ஆனாலும், எங்களை இப்படி முள்வேலிக்குள் ஏன் இந்த அரசாங்கம் அடைத்து வைத்துக் கொடுமை செய்கிறது. எங்களை எங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பச் சொல்லுங்கள்; அது போதும் !”.
” எங்களுக்கு நம்பிக்கையில்லை. காங்கிரசும் தி.மு.கவும் ஒன்று போலத்தான் தெரிகிறது”
”எங்கள் கை, காலை வைத்து நாங்கள் உழைத்துப் பிழைத்துக் கொள்வோம். எங்களை விட்டால் போதும். வேறொன்றுமே வேண்டாம். இப்படிக் கையேந்திப் பிழைக்க கேவலமாக இருக்கிறது !”
”பாம்புக் கடியால் பல பேர் இறந்திருக்கிறார்கள். ஏராளமான அளவில் பாம்புகள் உள்ளன. கொசுக்கடியும் தாங்க முடியவில்லை”
தன் உள்ள குமுறலைக் கொட்டியுள்ளார் அந்த பெரியவர். முகாமில் உள்ளவர்கள் தங்கள் முகாமில் வசதியின்மை பற்றி குறிப்பிட்டும் போது அங்குள்ள அதிகாரிகள் பெரிதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.
ராஜபக்ஷேவுடன் சந்திப்பின் போது, இராணுவத்தைப் பற்றி பஷிலிடம் கேளுங்கள் என்றார். பஷில் குழு கேட்ட கேள்விகளுக்கு மழுப்பலான பதில் தான் அளித்திருக்கிறார். இவர்களிடம் என்றைக்கும் தெளிவான பதில் வராது என்பது நாம் அறிந்த்து என்றாலும், அழித்தவனிடம் சென்று தமிழர் பாதுகாப்பை பற்றி பேச வேண்டிய கட்டாயத்தில் இருப்பது மிகவும் வருத்ததுக்குரியது.
இந்த நூலை முடிக்கும் போது, ‘அண்ணன் இருக்கிறார்’, ‘ ஈழம் மலரும்’ என்ற நம்பிக்கை வார்த்தைகளில் முடிக்கிறார். இப்போது தேவை நம்பிக்கை வார்த்தையல்ல... இருக்கும் உயிர்களை காப்பாற்றும் செயல் திட்டங்கள். முகாமில் இருப்பவர்களுக்கான விடுதலை. அவர்களுக்கான வாழ்வாதாரம்.
முகாமில் ஒரு பெரியவர் திருமாவிடம், “”எங்கள் கை, காலை வைத்து நாங்கள் உழைத்துப் பிழைத்துக் கொள்வோம். எங்களை விட்டால் போதும். வேறொன்றுமே வேண்டாம். இப்படிக் கையேந்திப் பிழைக்க கேவலமாக இருக்கிறது !” என்றார்.
இந்த நிலைமை மாறினால் போதும்.
பக் : 142, விலை. ரூ.65/-
விகடன் பிரசுரம்,
757, அண்ணா சாலை,
சென்னை - 600 002