வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label திரைவிமர்சனம். Show all posts
Showing posts with label திரைவிமர்சனம். Show all posts

Sunday, October 9, 2016

தேவி ( 2016 ) - திரை விமர்சனம்

விஜய் சேதுபதி, சிவ கார்த்திகேயன் படங்களுக்கு மத்தியில் Comeback நாயகன் பிரபு தேவா களம் இறங்கியிருக்கிறார்.

படத்தில் பேய் இருக்கிறது. ஆனால், பயமுறுத்தவோ, பழிவாங்கவோ, கொலை செய்யவோ இல்லை. கதாப்பாத்திரங்களோடு கதாப்பாத்திரமாக வருகிறது. அதுவும் உருவம் இல்லாமல் வருகிறது.



எப்படி பேய் பிடித்தது, பேய் பிடிக்கும் முன் பயமுறுத்தும் formalities காட்சிகள் எல்லாம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் வழக்கமான பேய்-காமெடி படமில்லை. காமெடிப் படம்.

பேய் பிடித்திருக்கிறது என்று நமக்கு உணர்த்திவிட்டு நேராக கதைக்கு சென்றிருக்கிறார்கள்.

பிரபு தேவாவுக்கு நல்ல Comeback படம். இளம் நாயகர் கொஞ்ச ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

தமன்னா ஹிந்திப்படத்திற்கான கவர்ச்சியை காட்டியிருக்கிறார். ( படம் ஹிந்தியிலும் வெளியாகுவதால் இருக்கலாம்.)

100 % காமெடிப் படம். குடும்பத்தோடு பார்க்கலாம்.

Thursday, March 10, 2016

அபிநேத்திரி (2015) - கன்னடப்படம்

யுவகிருஷ்ணா எழுதிய ‘நடிகைகளின் கதை’ நூலின் மூலம் இப்படி ஒரு படம் வந்திருப்பதை அறிந்து கொண்டேன். அதுவும், ’தண்டுபாலயா’ படத்தில் பயமுருத்திய பூஜா காந்தி (அர்ஜுன் நடித்த ‘திருவண்ணாமலை’ படத்தின் நாயகி) நடித்தப்படம் என்பதால் டவுன்லோட் செய்து பார்த்தேன். 

கதை என்று பார்த்தால் மற்றுமொரு நடிகையைப் பற்றிய கதை என்று சொல்லலாம். ஆனால், வணிகத்தில் பின் தங்கிய கன்னடப்படத்தின் சகாப்தமாக இருந்த நடிகை கல்பனா பற்றியப்படம் என்பதால் இந்தப்படம் அதிக முக்கியத்துவம் பெருகிறது. தமிழில் மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, சோப்பு சீப்பு கண்ணாடி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.


நாடக நடிகையான நந்தா நடித்த முதல் படமே படுத்தோல்வி. ராசியில்லாத நடிகை என்பதால் எல்லாப் பட நிறுவனங்களும் அவளுக்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கிறது. அறிமுக இயக்குனரால் மீண்டும் கன்னட சினிமாவில் நுழைந்து நம்பர் ஒன் இடத்தை பிடிக்கிறார். 

காலத்தின் ஓட்டத்தால் வாய்ப்புகள் குறைய தொடங்குகிறது. நடித்த படங்களும் தோல்வியை தழுவுகிறது. ஒரு கட்டத்தில் கையில் படமில்லை. கடன் தொல்லை. அதனால், மீண்டும் நாடகத்தில் நடிப்பதை தொடர்கிறார். 

சக நாடக நடிகர், கம்பெனி முதலாளியான சாய் ரவியை காதலிக்கிறார். ஏற்கனவே அவருக்கு திருமணமாகி, திருமண வயதில் ஒரு பெண் இருப்பதை நந்தா கவலைப்படவில்லை. கருத்துவேறுபாட்டால் அவரையும் விட்டு பிரிந்து தனிமையில் வாடுகிறாள். தற்கொலையும் செய்துக் கொள்கிறாள். 

60களில் கன்னடப் பெண்கள் நவீன உடை அலங்காரத்தில் நடிகை கல்பனாவை தான் காப்பி அடிப்பார்களாம். அவளுடைய உடை அலங்காரத்தில் மற்ற நடிகைகளால் ஈடுக்கூட கொடுக்க முடியாத அளவுக்கு புகழ் உச்சியில் இருந்திருக்கிறார். அப்படிப்பட்டவர், பட வாய்ப்பு குறைந்தவுடன் அதாளப்பாலத்தில் விழுந்திருக்கிறார் என்றால் சினிமா என்ற மாய உலகம் எப்படிப்பட்டது என்பதை யூகிக்கிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

அன்றைய தேதியில் கன்னட திரையுலகம் எப்படிப்பட்டது என்பதை ஒரு சில காட்சிகளில் தெரிந்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஏ.வி.எம் ஸ்டூடியோவில் இரவு நேர வாடகை குறைவாக இருக்கும் என்பதால் கன்னடப்படங்கள் படப்பிடிப்பு இரவு நேரங்களில் நடக்குமாம். 

பூஜா காந்தி வழக்கம் போல திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆரம்பக் காட்சியில் மட்டும் தன்னை இளமையாக காட்டிக் கொள்ளும் போடும் மேக்-கப், ஆடை தான் பார்க்க சகிக்கவில்லை. ஆனால், போக போக ‘நந்தாவாகவே மாறியிருக்கிறார். 

கல்பனா என்ற சகாப்தத்திற்கு தனது நடிப்பால் உண்மையான காணிக்கை செலுத்திய பூஜா காந்திக்கு வாழ்த்துகள் !!

Saturday, February 13, 2016

லாக்கப் ( விசாரணை) - விமர்சனம்

விசாரணை படம் எற்ப்படுத்திய பாதிப்பில் இருந்து மீள்வற்குள் லாக்கப் நூலை படித்துவிட வேண்டும் என்று ஒரே மூச்சில் படித்தேன். 

இருபது அத்தியாயத்தில் முதல், கடைசி அத்தியாயம் தவிர மற்ற எல்லா அத்தியாயத்தில் காவலர்களில் அடக்குமுறை தான் தெரிகிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் எப்படி அடிவாங்கப் போகிறார்கள் என்ற பதட்டம் ஏற்படுகிறது. 



ஒரு கட்டத்தில் படிக்கும் நமக்கே குமார், ரவி, நெல்சன், மொஹதீன் நால்வர் அடிவாங்குவதை படிக்க சலிப்பு எற்பட்டுவிடுகிறது. ஆனால், சிறை கம்பிகளுக்கு நடுவே எப்படி சலிக்காமல் அடிவாங்கி, தாங்கள் செய்யாத தவறை ஒத்துக் கொள்ளாமல் மன உறுதியுடன் இருந்தார்கள் என்பதை நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது. 

இறுதியில் நீதிபதி, “எதற்காக சிரமப்படுகிறீர்கள் ? குற்றத்தை ஒத்துக் கொண்டிருந்தால் தண்டனைக் காலமே முடிந்திருக்கும்” என்கிறார். தீர்ப்பு எழுதும் நீதிபதிக் கூட இந்த சிஸ்டமில் இருந்து மீள முடியாதவராக இருக்கிறார் என்ற நிதர்சன உண்மையாக இருக்கிறது. 

பலர் Auto – fiction என்ற பெயரில் தமிழில் என்ன என்னவோ எழுதிகிறார்கள். அதைப் பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால், தமிழில் வந்த சிறந்த Auto – fiction நூலில் ’லாக்கப்’ முக்கிய நூலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

விசாரணை படத்தை பற்றி எப்படி எழுத வேண்டும் என்று தெரியவில்லை. தமிழ் சினிமாவில் ஒரு நாவலை இந்த அளவுக்கு கௌரவப்படுத்திய படம் வந்ததில்லை என்று சொல்லலாம். வெற்றிமாறன் லாக்கப் நாவலை வைத்து முதல் பாதியை தான் எடுத்திருக்கிறார். இரண்டாவது பாதியை இயக்குனருக்கான கற்பனை திறனில் திரைக்கதை அமைத்திருக்கிறார். 



அவர் நினைத்திருந்தால் “Inspired” என்ற வார்த்தை பயன்படுத்தி எழுத்தாளரை அப்படியே விட்டுவிட்டுருக்கலாம். ஆனால், தனக்கான பாராட்டு கிடைத்த இடத்தில் எழுத்தாளருக்கும் சேர்த்து அங்கிகாரத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதற்காகவே வெற்றி மாறனை பாராட்டியாக வேண்டும். 

காவலர்களை ஹீரோக்களாக காட்டி வந்த தமிழ் சினிமாவில் முதல் முறையாக அவர்களின் நிஜ முகத்தை காட்டியிருக்கிறது இந்தப் படம். 

லாக்கப் - அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். 
விசாரணை – அவசியம் பார்க்க வேண்டிய படம். 

Calendar Girls - திரை விமர்சனம்

சா.கந்தசாமியின் “தொலைந்து போனவர்கள்” போன்ற கதை தான். 

ஐந்து அழகிகளை மாடலாகக் கொண்டு பணக்கார நிறுவனம் ஒன்று தங்கள் வருடாந்திர கவர்ச்சி கேலண்டரை தயாரிக்கிறது. இதற்கு முந்தைய கேலண்டரில் நடித்தவர்கள் திரைப்படத்துறையில் பெயரிய நடிகையாக வந்திருப்பதால், அந்த ஐந்து அழகிகளும் கேலண்டர் வெளியானதும் தங்கள் வாழ்க்கையே மாறிவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால், ஒவ்வொருத்தரின் வாழ்க்கை ஒவ்வொரு விதமாக செல்கிறது. 

 ஐந்து பெண்களில் யார் தங்கள் லட்சியத்தை அடைந்தார்கள் ? அவர்களின் வாழ்க்கை எப்படி திசை மாறிப் போனது என்பது தான் கதை. 



ஐந்து பேருக்கான அறிமுகக் காட்சியில் ஒன்றாக மாடலிங் செய்கிறார்கள். பிறகு, ஐந்து கதைகளாக பிரிகிறது. ஒரு பெண்ணின் திருமணத்தில் ஐந்து பேரும் சந்திக்கிறார்கள். இறுதியில், ஒருவர் மரணத்தில் மற்ற நால்வர் தங்கள் மீது இருக்கும் வெளிச்சம் மங்கியிருப்பதை உணர்கிறார்கள். 

படம் முடியும் போது, அடுத்த ஐந்து பெண்கள் தங்கள் வாழ்க்கையை தொலைக்கும் கேலண்டர் மாட்டும் போது நாம் ரசிக்கும் அழகிகள் ஒவ்வொரு கட்டத்தில் மாறிக் கொண்டே இருப்பதை நிதர்சன உண்மையோடு படத்தை முடிக்கிறார்கள். 

ஆரம்பக் காட்சியில், ஐந்து பெண்கள் தங்களை தாங்களே ஒழிவு மறைவு இல்லாமல் அறிமுகம் செய்யும் காட்சியில், ஒருத்தி “ I am virgin" என்று சொல்லும் போது, அந்த பெண் செய்யக் கூடாத தவறை செய்ததைப் போல் மற்ற நால்வர் வாய்விட்டு சிரிக்கிறார்கள். ஆனால், அடுத்த அடுத்த காட்சிகள் இதேப் போல் ஸ்வாரஸ்யமாக இருக்கும் என்று பார்த்தால் ஒன்றுமில்லை. 

ஐந்து அழகிகளும் எந்த அளவுக்கு கவர்ச்சியாக காட்ட முடியுமோ அந்த அளவுக்கு கவர்ச்சியாக காட்டியிருக்கிறார்கள். (பல பிகினி காட்சிகள் உண்டு). எதோ ஐந்து குறும்படங்களை தொகுக்கப்பட்ட படமாக தான் பார்க்க தோன்றுகிறது. 

பேஜ் 3, பேஷன் போன்ற படங்களை போல் “Calendar Girls” இருக்கும் என்று எதிர்பார்த்து பார்த்தப்படம். மாடலிங் மறுபக்கத்தை காட்டப் போகிறார்களோ, அதை தயாரிக்கும் நிறுவனத்தை நிஜ முகத்தை காட்டப்போகிறார்களோ என்று பார்த்தால் அதுவும் இல்லை. 

இந்தப் படத்தை பார்க்க பரிசீலனை செய்த நண்பனை தேடுகிறேன். இத்தன பெரு இருக்கும் போது என்ன மட்டும் இந்த படத்த எதுக்குடா பார்க்க சொன்ன ? ‪

Friday, February 12, 2016

Talvar - திரை விமர்சனம்

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இவ்வளவு கமர்ஷியலான திரில்லர் படத்தை சமிபத்தில் யாரும் கொடுத்ததில்லை. 

ஆருஷி கொலை வழக்கு தான் படத்தின் கதை. 

அந்த வழக்கில் ஊடகங்கள் கூறிய செய்தி, காவல் துறையினர் கொட்டை விட்ட சாட்சியங்கள், சி.பி.ஐ விசாரணை என்று அனைத்து விஷயங்களையும் குறிப்பிட்டு திரில்லான படத்தை கொடுத்திருக்கிறார்கள். 

ஆரம்பக் காட்சியில் கட்டிலில் மகள் கழுத்தருத்து கொல்லப்பட்டதை பார்த்து அம்மா கத்துகிறாள். வேலைக்காரி அதிர்ச்சியடைந்து போலீஸ்யை அழைக்கிறாள். போலீஸ் வீட்டு வேலைக்காரன் மீது சந்தேகப்படுகிறது. ஆனால், அவனுடைய பிணம் மொட்டை மாடியில் கிடப்பதை பார்க்கிறார்கள்.

மானத்திற்காக தங்கள் சொந்த மகளை கொன்றதாக பெற்றோரை காவலர்கள் கைது செய்கிறார்கள். அதற்கான சில ஆதாரங்களை சேகரிக்கிறார்கள். ஆனால், விடையளிக்கப்படாத பல கேள்விகள் அந்த இரட்டை கொலையில் இருக்கிறது என்பதை ஊடகங்கள் கூறிக் கொண்டு இருக்கிறது. 



இந்த இரட்டை கொலையைப் பற்றி விசாரிக்க இர்பான் கான் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படுகிறது. எல்லாம் முடிச்சுகள் அவிழ்ந்து கொலையாளிகள் கண்டுப்பிடிக்கப்பட்டார்கள் என்று நினைக்கும் போது, தலைமை அதிகாரி மாற்றத்தால் இர்பான் கான் விசாரணையில் சந்தேகம் வருகிறது. 

புதிய அதிகாரிகளோடு இன்னொரு முறை விசாரணை நடத்தப்படுகிறது. இர்பான் கான் கொடுத்த விசாரணை கமிஷன் ரிப்போட்டுக்கு நேர் எதிராக அந்த ரிப்போட் இருக்கிறது. கடைசி இருபது நிமிடம் இரண்டு குழுவும் விவாதித்து ’யார் குற்றவாளி’ என்று தீர்மானிக்கிறார்கள். அதையே கமிஷன் முடிவாக கோர்ட்டில் கொடுக்கப்படுகிறது. 

உண்மை சம்பவத்திற்கு நேர்த்தியான திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். திரைக்கதைக்கான பாடப்புத்தகம் உருவாகுவதாக இருந்தால், அதில் தல்வார் இடம் பெற வேண்டிய படம். 

விசாரணை – காவல்துறையின் அராஜக முகத்தை காட்டுகிறது என்றால், தல்வார் – காவல்துறையின் அஜாக்கிரதையை காட்டுகிறது. 

 அவசியம் பார்க்க வேண்டியப் படம் !!

Tuesday, November 3, 2015

குற்றம் கடிதல் - திரை விமர்சனம்

எத்தனையோ நல்ல படங்கள் வந்ததும் தெரியாமல் தோல்வியடைந்து பெட்டிக்கு போன பிறகு ’தேசிய விருது’ என்று அறிவிப்பு வரும். படத்தின் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். சென்ற வருடம் வரை ‘தேசிய விருது’என்பது தோல்வியடைந்த படங்களுக்கு ஊக்க மருந்தாகவும், ஆறுதலாகவும் இருந்து வந்தது. ஆனால், இந்த வருடம் தான் ‘தேசிய விருது’ ஊக்க மருந்தாக இருந்ததோடு இல்லாமல் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது. 

’காக்கமுட்டை’ படத்தை அடுத்து தேசிய விருதால் அதிக எதிர்ப்பார்ப்போடு வெளியாகி பலரது பாராட்டைப் பெற்றப்படம் ’குற்றம் கடிதல்’. 



இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு செக்ஸ் கல்விமுறையின் அவசியத்தை பிரச்சார நெடியில்லாமல் சொல்லும் படம். ஒவ்வொரு ஆசிரியருக்கும் மாணவர்களை தங்கள் பிள்ளைகளாக நினைக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. 

ஆறாம் வகுப்பு மாணவன் செழியன் சக மாணவியை பிறந்த நாள் வாழ்த்து சொல்வதாக நினைத்து முத்தம் கொடுக்கிறான். அந்த மாணவனை ஆசிரியர் மெர்லின் கேள்விக் கேட்க, அதற்கு ‘உங்கள் பிறந்தநாளுக்கும் முத்தம் கொடுப்பேன்’ என்று சொல்ல, ஆசிரியர் மெர்லின் கோபத்தில் அடிக்கிறார். அதிர்ச்சியில் மயங்கி விழும் மாணவன் செழியன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறான். 

ஒரு பக்கம் குற்றவுணர்ச்சியில் இருக்கும் ஆசிரியர் மெர்லினை காப்பாற்ற அவளது கணவன் மணி வெளியூருக்கு அழைத்துச் செல்கிறான். இன்னொரு பக்கம் அடித்த ஆசிரியர் தண்டிக்க வேண்டும் என்று செழியனின் மாமா மெர்லினை தேடுகிறார். இதற்கிடையில் செழியனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று பள்ளி முதல்வர் போராடுகிறார். மகனுக்கு இப்படியானதில் அதிர்ச்சியில் உறைந்து போய் செழியனின் அம்மா இருக்கிறார். 

அவரவர் தங்கள் பிரச்சனை குறித்து கவலைப்பட்டுக் கொண்டு இருக்க, ஊடகங்கள் இந்த பிரச்சனையை வைத்து விவாத நிகழ்ச்சி, கருத்துக் கேட்பது, என்று ஒளிப்பரப்புகிறார்கள். தங்கள் டி.ஆர்.பி ரேட்டிங்யை ஏற்றிக் கொள்கிறார்கள். 

மருந்துக்கூட தெரிந்த நடிகரோ, நடிகையோ இந்த படத்தில் இல்லை. பிரபலங்கள் நடிக்காதப்படம். அதுவே இந்த படத்தின் பலமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு நடிகர்களும் அந்த கதாப்பாத்திரமாகவே நமக்கு தெரிகிறார்கள். ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் தன்மை நமக்கு மிக எளியக்காட்சிகளில் இயக்குனர் பிரம்மா உணர்த்தியிருக்கிறார். 

’காக்கமுட்டை’ அடுத்து தமிழ் சினிமா ‘உலக சினிமா’ நோக்கி செல்கிறது என்பதை ’குற்றம் கடிதல்’ நிருப்பித்திருக்கிறது.

Tuesday, September 1, 2015

தனி ஒருவன் - திரை விமர்சனம்

நண்பர்களை விட எதிரி தான் நமது உண்மையான ஆற்றலை வெளியே கொண்டு வருகிறான். சின்ன சின்ன க்ரைம் வேலை செய்பவர்களை அழிப்பதை விட அவர்களை எல்லாம் ஆட்டி வைக்கும் ஒரு பெரிய எதிரியை நாயகன் ஜெயம் ரவி தேடுகிறான். அப்படி மூன்று பேரை தேர்வு செய்து, அதில் ஒருவனை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் போது அந்த மூன்று பேர்களையும் ஆட்டி வைக்கும் கெட்டவனாக அறிமுகமாகிறார் அரவிந்த்சாமி.  
தனி ஒருவனான ‘ஜெயம்’ ரவி, தனி ஒருவனான சமூகத்தை ஆட்டி வைக்கும் அரவிந்த் சாமிக்கும் நடக்கும் ஆடு-புலி ஆட்டம் தான் படத்தின் கதை.



கதைப்படி அரவிந்த் சாமி தான் நாயகன். வழக்கமான நாயகனுக்கான அறிமுகம், அதிரடி, காதல் என்று பொருத்தி ‘ஜெயம்’ ரவியை நாயகனாக ஏற்க வேண்டியதாக இருக்கிறது. அரவிந்த் சாமி தன்னுடைய திட்டங்களை எப்படி அறிந்துக் கொள்கிறார், எப்படி முறியடிக்கிறார் என்று குழப்பத்தில் இருக்கும் போது நன்றாகவே நடித்திருக்கிறார். மற்றபடி வழக்கமான நாயகனுரிய பழைய வேலை தான்.

நயந்தாரா ‘ஜெயம்’ ரவியை உத்வேகப்படுத்தும் விதமாக பேசும் வசனத்தை தவிர பெரிய வேலையில்லை. அவருக்கு ஒரு பாடல் சேர்க்க வேண்டியதாக இருக்கிறது. 

இந்த வருடம் கதாநாயகர்கள் எல்லாம் வில்லனாக மாறும் வருடம் என்று நினைக்கிறேன். கார்த்திக், அருண் விஜய், ராணாவை தொடர்ந்து வில்லனாக அவதாரம் எடுத்திருக்கும் நாயகன் அரவிந்த்சாமி. சைகோ தனமாக, கொடூரமான, முட்டாள் தனமான வில்லன்களை பார்த்து பழக்கப்பட்ட நமக்கு அழகான வில்லனாக வந்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அமைதியான வில்லனை திரையில் பார்க்கிறோம். ’ஜெயம்’ ரவியை வைத்து தன்னை அழிக்க நினைப்பவர்களை எல்லாம் அழிக்கும் புத்திசாலி தனம் தொடங்கி இறுதிக் காட்சி வரை அமைதியான நடிப்பை ரசிக்க முடிகிறது.

இன்று நம் செய்திதாளில் படிக்கும் குற்றங்களுக்கு சொல்லப்படும் காரணங்களை உண்மை என்று நம்புகிறோம். உண்மையில் குற்றத்திற்கான பின்புலத்தை மறைக்கப்படுவதற்காகவே குற்றங்கள் நடத்துகிறார்கள். சமூக ஆர்வலரை கொலைச் செய்யும் போது செயின் திருட்டு, அறிவியல் பெண்ணை கொலைச் செய்யும் போது கற்பழிப்பு, போலீஸ்க்காரனை கொலைச் செய்யும் போது போதை மருந்து மயக்கம்…. என்று பல விஷயங்களை பார்க்க முடிகிறது. குற்றத்திற்கான காரணத்தை மாற்றிவிட்டால், குற்றவாளி தப்பிவிடுவான் என்பதை இன்றைய ஊடகம் நமக்கு சொல்கிறது.

முதல் முறையாக இயக்குனர் ‘ஜெயம்’ ராஜா, ரீ-மேக் செய்யாமல் சொந்தக்கதை, திரைக்கதை எடுத்து இயக்கியிருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை திரைக்கதை விறுவிறுப்பு குறையாமல் இருப்பதால் வெற்றியும் பெற்றிருக்கிறார். (American Gangster, இன்னும் சில ஆங்கிலப் படத்தின் இன்ஸ்பயர் என்று சொல்லலாம்.) 

முதல் முறையாக ’ஜெயம்’ ரவி - ’ஜெயம்’ ராஜா கூட்டணியில் உருவான படம் தெலுங்கில் ரீ-மேக் செய்ய வாழ்த்துவோம்.

Thursday, July 16, 2015

பாகுபலி - திரை விமர்சனம்

பிரமிக்க வைக்கும் பிரமாண்டம். எஸ்.எஸ்.ராஜமௌலி இந்தியளவில் தன்னை முக்கியமான இயக்குனராக மாறியிருக்கிறார். ஒரு படத்தை இரண்டு பாகமாக வெளியீட்டு லாபம் சம்பாதிக்கும் உத்தியில் வெற்றிப் பெற்றுயிருக்கிறார். ( ரத்த சரித்திரம் 1, 2ல் ராம்கோபால் வர்மா சறுக்கிய இடம்). 

அடிமைப் பெண் + மஹாபாரதம் சேர்ந்த கலவை தான் கதை. சொதப்பல் திரைக்கதையான ‘மித்’ படத்தை அபாரமான ’ மஹதீரா’ வாக எடுத்தவருக்கு, அடிமைப் பெண் படத்தை ‘பாகுபலியாக’ எடுப்பதில் பெரிய விஷயமில்லை. 

இரண்டாம் பாகம் வரும் வரை இது முழுமையான திரைக்கதை இல்லை என்பதால் அதைப்பற்றி இங்கு பேச விரும்பவில்லை. 

படம் நன்றாக இருக்கிறது என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், எனக்கு தெலுங்கு படத்தை தமிழில் பார்த்த உணர்வு தான் ஏற்பட்டது. அதற்கு ஏற்றாற்போல் காட்சிகள். தூதுவன் ஒருவனை தேடும் இடத்தில் பாட்டு, பல இடங்கள் வசனங்கள் உதடு ஒட்டாமல் இருப்பது, கதாநாயகனை போர் வீரனாக காட்டுவதை விட சூப்பர் ஹீரோவாக காட்டும் முயற்சி... எல்லாம் ஐ.எஸ்.ஐ முத்திரை குத்தப்பட்ட தெலுங்கு படம் தான். இந்த படத்தை தெலுங்கில் பார்த்திருந்தால் அதிக பாதிப்பு இருந்திருக்கும். கண்டிப்பாக பாகுபலி-2 தெலுங்கில் தான் பார்க்க வேண்டும்.

‘நான் ஈ’யில் சந்தானத்துக்கு இரண்டு காட்சிகள் வைத்து, ’தமிழ் படம்’ என்று நம்ப வைத்த்திருப்பார். அந்தளவுக்கு அடிப்படை வித்தியாசத்தை கூட இதில் கொடுக்கவில்லை. சத்யராஜ் இருப்பதால் தேவையில்லை என்று நினைத்திருக்கலாம். ஆனால், அவர் இரு மொழி நடிகனாகி நீண்ட நாட்களாகிறது. 

’மஹதீரா’வில் ராம் சரண் சண்டையின் போது இருக்கும் வீரம் பிரபாஸிடம் இல்லை என்றோ தோன்றுகிறது. ராம்சரண் ‘மஹதீரா’வில் நூறு பேரை வீழ்த்தும் போது ஏற்படுத்திய பிரமிப்பு பிரபாஸ் ஆயிரம் பேர் வீழ்த்தும் போது வரவில்லை. உடல்மொழியிலும், பேச்சிலும் இரண்டு பாத்திரத்திற்கும் பிரபாஸ் வித்தியாசமில்லை. 

மிர்ச்சி, ரேபுல், பில்லா போன்ற படங்களில் நடித்தது போலவே சாதாரனமாகவே நடித்துவிட்டார். 2.5 வருடம் தனது கால்ஷிட் கொடுத்து, உடலை மெருக்கேற்றியளவிற்கு ராஜாக் காலத்துக்கு கதைக்கு பிரபாஸ் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. 



பாகுபலிக்கு சரியான தேர்வு ராம்சரண் தான். ஒரு வேளை தமிழ், தெலுங்கு (இரு மொழி) படமாக முன்பே திட்டமிட்டிருந்தால் ‘நாகர்ஜூனா’ அல்லது ’சூர்யா’ சரியான தேர்வு. இவர்களில் 2.5 வருட கால்ஷிட் கிடைப்பது சிரமம் என்பது வேறு விஷயம். தெலுங்கில் எடுத்து முடித்த பிறகு இரு மொழிப்படம் என்று வணிகத்திற்காக விளம்பரம் செய்திருக்கிறார்கள் என்று புரிகிறது. 

போர்க்களத்தில் இருக்கும் வில்லனின் நடிப்பும் அப்படி தான். ’மஹதீரா’வில் ஸ்ரீஹரி ராம்சரண்னை கொல்ல நூறு பேரை அனுப்புவார். ஒரு கட்டத்தில் ராம்சரண் வெற்றிப் பெற வேண்டும் என்று நினைப்பார். தனது படை வீரர்கள் இறப்பதை விட ராம்சரணின் வீரத்தை ரசிப்பார். கண்ணிலும், குரலிலும் மனுஷன் பின்னியிருப்பார். இதில் முகத்தில் சாயம் பூசப்பட்ட எதிரி (சாய்குமார் என்ற நினைக்கிறேன்). ஒரே மாதிரியான முகபாவனை. தனது படை எதிரி படைகளை தும்சம் செய்யும் போது சரி, இரண்டு இளவரசர்கள் தன்னை தாக்க வரும் போது சரி ஒரே மாதிரியான முகப்பாவனை. கோபம், ஆவேசம், அச்சம் காட்ட வேண்டிய எதிரி பாத்திரத்தை முகத்தில் சாயம் பூசி நடிக்க வேண்டாம் என்று முடிவு கட்டிவிட்டார் என்று நினைக்கிறேன். 

டெக்கினிக்கலான விஷயத்தில் அதிகமாக கவனத்தை செலுத்தியதால் இப்படி ஏற்பட்டதா என்று தெரியவில்லை. சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் நடிப்பு பற்றி தனி பதிவாக சொல்ல வேண்டும். இந்த படத்தை முழுமையாக நடித்தவர்கள் இவர்கள் இரண்டு பேர் மட்டும் தான். 

அனுஷ்கா இரண்டாம் பாகத்தில் மிரட்டுவார் என்று நம்புகிறேன். ஆனால், அதற்கு முன் ’ருத்ரமாதேவி’ வந்துவிட்டால், ரசிகர் அனுஷ்காவை அந்த படத்தோடு தான் ஒப்பிடுவார்கள். ராஜமௌலிக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். 

எதிர்காலத்தில் பொன்னியின் செல்வன் (நாவல்), பானிபட் யுத்தம், வீர சிவாஜி போன்ற கதைகளை திரைப்படமாக எடுக்கும் நம்பிக்கையை ‘பாகுபலி’ கொடுத்திருக்கிறது. பல சரித்திரக்கதைகளுக்கு திரைக்கதை அமைக்கப்படலாம். அதற்கான வணிகமும் இருக்கிறது என்பதை ராஜமௌலி சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதற்காகவே அவரை வாழ்த்த வேண்டும்.

Tuesday, May 5, 2015

காஞ்சனா 2 (திரை விமர்சனம்)

தனது பழைய கதையை ராகவா லாரன்ஸ் அப்படியே ரீ-மேக் செய்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக மூன்றாவது பாகம் வருவதால் இந்த படத்தை வாழ்த்தியாக வேண்டும். அந்த விஷயத்தில் இந்த படம் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய பதிவு என்று சொல்லலாம்.


முனி - 2 விட தனது நடிப்புக்கு அவரே தினிப்போட்டுக் கொண்டார் என்று சொல்லலாம். முனி -2வில் ஒன்றுக்கு மூன்று ஆவி என்றால், முனி-3யில் மூன்றுக்கு ஆறு ஆவி இருக்கிறது. ப்ளாஷ்பேக்கில் லாரன்ஸ் இரண்டாவது வேடத்தில் நடிப்பதற்கு பதிலாக ஆர்யா, விஷால் போன்றவர்களை நடிக்க வைத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் முனி-2வில் சரத்குமார் கெஸ்ட் ரோல் ஏற்பத்திய தாக்கம், இந்த படத்தில் இருந்திருக்கும்.

நித்யா மேனன் நன்றாக ஸ்கோர் செய்ய வேண்டிய பாத்திரம். விட்டுவிட்டார் என்று தோன்றுகிறது. அவரை விட பெய் வேடத்தில் டாப்ஸிக்கு நன்றாக பொருந்தியிருக்கிறது.

முனி - 2 அளவுக்கு இல்லை என்றாலும், முனி - 1 விட நன்றாக இருக்கிறது.

இரண்டு நாட்களில் 10 கோடி வசூலாகியிருக்கிறது. அதை விட பெரிய விஷயம், ஒரு சில திரையரங்குகளில் ’உத்தம வில்லன்’ படத்திற்காக காஞ்சனா 2 படத்தை எடுக்கவில்லை. புது படத்தை வாங்கி வெளியிடுவதற்கு பதிலாக, காஞ்சனா 2 இருக்கட்டும் என்று நினைத்திருப்பது தான்.

ராகவா லாரன்ஸ், முனி - 4வது sequence படமாக எடுங்கள். ஒரு கதையை திரும்ப திரும்ப பார்க்க போர் அடிக்கிறது.

Thursday, April 23, 2015

ஓ.. காதல் கண்மணி - விமர்சனம்

விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு காதலை காதலிக்க வைத்தப்படம். 

முதல் முறையாக சாருவின் விமர்சனத்தோடு நான் ஒத்துப்போகிறேன் என்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. ”படத்தில் வரும் ஒவ்வொரு வசனத்தையும் நான் எழுதியது போல் உணர்கிறேன். ஒவ்வொரு சம்பவமும் என் வாழ்வில் நடந்திருக்கிறது.” என்று சாரு கூறியிருக்கிறார். 

நான் அதற்கு ஒரு படி மேல் சொல்ல வேண்டுமென்றால் “எப்படியெல்லாம் காதலிக்க வேண்டும் என்று நினைத்தேனோ... அப்படியெல்லாம் ஆதி பாத்திரத்தின் மூலம் காதலிக்க வைத்து காட்டியிருக்கிறார்”. இந்திய சினிமாவில் காதலையும், காமத்தையும் தனித்தனி பிரித்துக் காட்டி பழக்கப்படுத்திவிட்டனர். பார்வையாளனையும் அதை ஏற்க வைத்து இளைய சமூதாயத்திற்கு பெரிய சாபமாக மாற்றிவிட்டனர். மணிரத்னம் இந்த மரபை “ஓ.காதல் கண்மணி’ யில் உடைத்திருக்கிறார். காமத்திற்கு பிறகு வருவது தான் உண்மையான காதல். அதை இந்தப்படத்தில் பார்க்க முடிகிறது.



Living Together - ஒன்றாக வாழலாம். அனைத்தும் பகிர்ந்துக் கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் பிரிந்து போகலாம். உறவில் எந்த உத்திரவாதம் கிடையாது. ஆறு மாதமாக ஒன்றாக வாழ்ந்து, காமத்தை ரசித்தப் பிறகு பிரியும் தருவாயில் காதல் வெளிப்படுகிறது. (இதே கதையமைப்பில் பத்து படமாவது வெளிவரும்) 

இரண்டாம் பாதி பலர் குப்பை என்று கூறினார்கள். நான் ஆதியாக படத்தில் பயணித்ததால் தாராவின் கண்ணீரை துடைக்கவும், தலைமுடிக்குள் விரலால் வருடவும், Dependent Husband விசாவில் அவளோடு செல்லவே விரும்பினேன். நித்யாமேனன் ரசிகனாக மாறிவிட்டேன். காஞ்சனா – 2 இந்த நினைப்பு மாறலாம். ( அடுத்த இரண்டு வருடங்களுக்கு விஜய், அஜித், சூர்யா, படங்களில் நடிக்க ஒரு நாயகி கிடைத்துவிட்டார்.) 

திருமணத்திற்கு முன் வரும் காதலில் நினைத்த மாத்திரத்தில், நினைத்த இடத்தில் வெளிப்படுத்த தோன்றும். அந்த ஒரு நிமிடம் தவறவிட்டால் மீண்டும் அந்த நிமிடம் கிடைக்குமா என்ற பயன் ஒட்டியிருக்கும். அப்படி நினைத்த போழுது காதலை காட்டிவிடுவதால் பல காதல்கள் வெற்றிக்கரமாக திருமணத்தில் முடிகிறது. ஆனால், திருமணத்திற்கு பிறகு வரும் காதல் அப்படி இருப்பதில்லை. காதலில் திட்டமிட்டு வெளிப்படுத்தப்படுகிறது. இடம், பொருள், ஏவல், வவ்வால் எல்லாம் பார்க்க வேண்டிய நிர்பந்ததிற்கு தள்ளப்படுகிறோம். காதலிக்க நமக்காக ஒரு இடம் இருக்கிறது. அங்கு காதலித்துக் கொள்ளலாம். முத்தமிட்டுக் கொள்ளலாம் என்று வந்த காதல் உணர்வை தள்ளி வைக்க வைக்கிறார்கள். காதலிக்கும் போது பார்க்காத நாகரிகம், திருமணத்திற்கு பின் ஒட்டிக் கொள்கிறது. இதனால், பல காதல் திருமணம் விவாகரத்தில் முடிகிறது. 

Living Together வரும் பிரச்சனை, சமூகப் பார்வை என்று டாக்குமெண்ட்ரி மாதிரி எடுக்காமல், காதலை மட்டுமே காட்டியிருப்பது சிறப்பு. 

இந்த படத்திற்கு 100 மதிப்பெண் கொடுக்க வேண்டும் என்றால் மணி ரத்னம் - 90, வைரமுத்து - 10, ஏ.ஆர்.ரகுமான் - 0 என்று கொடுப்பேன். அலைப்பாயுதே, ரோஜா, திருடா திருடி அளவில் பாதிக் கூட ஏ.ஆர் கொடுக்கவில்லை என்று தான் தோன்றுகிறது. ஒன்று, இரண்டு பாடல் கேட்கும் படி இருக்கிறது. அதற்கு ஏ.ஆர்.ரகுமான் தேவையில்லை. ஹாரிஸ் ஜெயராஜ், பரத்வாஜ் போதும். ஏ.ஆர்.ரகுமான் என்றால் படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட்டாக இருக்க வேண்டும்.

மணிரத்னம் + ஏ.ஆர்.ரகுமான் + வைரமுத்து கூட்டனியில் வந்த பாடல்களில் பாதிப்பு இதில் இல்லை என்பது தான் வருத்தம். பின்னனி இசை மட்டும் நன்றாக இருக்கிறது. ”கடல்” படத்திற்கு கொடுத்தது போல் இல்லை என்பது தான் பெரிய ஆருதல். 

59 வயதில் இவ்வளவு இளமையோடு ஒருவனால் யோசிக்க முடியாம என்பது வியப்பாக இருக்கிறது. வசனம், காட்சி, பாத்திரம் அனைத்திலும் இளமை தெரிகிறது. வாழ்த்துக்கள் மணிரத்னம் சார் !! 

தமிழில் சிறந்த காதல் படங்களில் (இதயம், காதல் கோட்டை, அலைபாயுதே, விண்ணைத்தாண்டி வருவாயா… ) வரிசையில் ”ஓ..காதல் கண்மணி” கண்டிப்பாக இருக்கும். 

குறிப்பு: இன்னும் நீளமாக வர வேண்டிய விமர்சனக் கட்டுரை. எழுதும் போது சுஹாசினி முகம் வந்து தொலைவதால், இதுவே அதிகம் என்று தோன்றுகிறது.

Thursday, March 5, 2015

ராமராஜனாகும் சிவகார்த்திகேயன் !!

காட்சிப்பிழை இதழா ? நிழல் இதழா ? என்று சரியாக நினைவில் இல்லை. ‘மான் கராத்தே’ வெற்றியின் போது, சிவ கார்த்திகேயன் ஒரே மாதிரியான படங்களை நடிப்பதால் மற்றொரு ராமராஜனாக மாறிவிடுவார் என்று குறிப்பிட்டிருந்தனர். அதனால் என்னவோ தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக முன்னிருத்திக் கொள்ளும் முயற்சியில் “காக்கி சட்டை” படத்தில் நடித்திருக்கிறார்.

படத்தில் பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. வழக்கமான வில்லன் சதிதிட்டத்தை முறியறிக்கும் பழைய மசாலா கதை தான். (ஆக்ஷன் கதை என்றால் தமிழ் சினிமாவில் இது தவிர வேறு இல்லை)



பலரை கலாய்த்து பழகிய சிவ கார்த்திகேயனுக்கு, தான் என்ன செய்தால் மக்கள் கலாய்ப்பார்கள் என்பது நன்றாக தெரிந்திருக்கிறது. அறிமுகக் காட்சியிலும், இறுதிக் காட்சியிலும் காக்கி சட்டை போட்டுக் கொள்கிறார். மற்றப்படி படம் முழுக்க சாதாரண உடை தான். பன்ச் டைலாக் பேசும் போது ரஜினி, அஜித்தை துணைக்கு அழைத்துக் கொள்கிறார். சண்டைக் காட்சியில் கூட இருட்டிலும், மழை நடுவில் சண்டை போடுகிறார். (சண்டைப் போடுவது சிவகார்த்திகேயன் தானா என்பது சந்தேகமாக இருக்கிறது)

மற்றப்படி தனது காமெடியை நம்பித்தான் மீண்டும் களம் இறங்கி இருக்கிறார்.
தன் மீது இருக்கும் இமேஜ்யை மாற்ற நினைப்பது மிகப் பெரிய காரியம். தனது முந்தைய பாணியை முழுவதும் கைவிட்டு நடித்தால் தான் அது சாத்தியமாகும். சிவ கார்த்திகேயன் ”காக்கி சட்டை” படத்தில் செய்யவில்லை என்று தோன்றுகிறது.

தெலுங்கு நடிகர் சுனில் நூறு படங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகனாக நடித்தவர். இரண்டு படங்களில் நகைச்சுவை நாயகனாவும் நடித்திருக்கிறார். தான் நாயகனாக நடிக்கும் மூன்றாவது படத்தில் இறுதி காட்சியில் வில்லனை அடிக்க வேண்டும் என்பதற்காக சிக்ஸ்-பேக் வைத்துக் கொண்டார். அந்த படத்தில் நகைச்சுவை பகுதியை அலிக்கான் சுமந்து நடிக்க வைத்தார். தனது வழக்கமான நடிப்பில் மாறுப்பட்டு நடித்தார்.

சிவகார்த்திகேயன் தனது இமேஜ்யை மாற்ற விரும்பினால், அப்படி வித்தியாசமான முயற்சி செய்து பார்க்க வேண்டும். இல்லை என்றால் சிவகார்த்திகேயன் இன்னொரு ராமராஜன் தான்.

Friday, December 26, 2014

பிசாசு - விமர்சனம்

தமிழ் சினிமாவில் பேய்களை வைத்து பயமுறுத்தவும், சமிபக்காலமாக சிரிக்க வைக்கவும் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். மிஷ்கின் பேய்யை உணர்வு புர்வமாக காட்டியிருக்கிறார். 



பேய் முகத்தை முழுமையாக காட்டிவிடும் போல் இருக்கிறது. ஆனால், நாயகன் நாகா தன் முகத்தை தலைமூடியால் மறைத்து கொண்டு வருகிறார். தன் கண்முன் உயிருக்காக போராடும் பெண்ணை காப்பாற்ற முடியாமல் போகும் போது ஏற்படும் குற்றவுணர்வை பாதி முகத்தில் தெரிகிறது. 

ராதா ரவி சில காட்சிகளே வந்தாலும் ’நடிகவேள்’ வாரிசு என்பதை காட்டியிருக்கிறார். அவர் மகளை நினைத்து அழும் காட்சி கண் களங்காமல் இருக்க முடியாது. ஒரு தந்தையின் சோகத்தை கண் முன் கொண்டு வந்து காட்டியிருக்கிறார். 

முன்பின் தெரியாத சிறுவனுக்கு உதவுவது (நந்தலாலா), முன்பின் தெரியாதவன் உயிருக்காக போராடும் போது காப்பாற்றுவது (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்)... இந்த படத்தில் முன்பின் தெரியாத ஒரு பெண்ணின் மரணத்திற்காக வருந்துவது என்று இன்னும் மனிதத் தன்மை மண்ணில் இருப்பதை, மிஷ்கின் தனது படங்களில் காட்டிவருவது பாராட்டுக்குறியது. 

படத்தில் பேய் வரும் காட்சிகள் குறைவாக இருக்கலாம். மற்ற படங்களை போல் பயமுறுத்தாமல் இருக்கலாம். ஆனால், சமிபத்திய தமிழ் படங்களில் ‘பிசாசு’ முக்கியமானது என்பதை மறுக்க முடியாது. 

Dont miss to watch.

Monday, December 22, 2014

லிங்கா - சிறு விமர்சனம்

எல்லோரும் ரஜினிக்கு வயதாகிவிட்டதாக கூறுகிறார்கள். எனக்கு என்னவோ கே.எஸ்.ரவிகுமாருக்கும், ஏ.ஆர்.ரகுமானுக்கும் தான் வயதாகிவிட்டது என்று நினைக்கிறேன்.



கே.எஸ்.ரவிகுமார் தனது திரை வாழ்க்கையில் இவ்வளவு சோர்வான திரைக்கதை அமைத்திருக்கமாட்டார். ஏ.ஆர்.ரகுமானும் இவ்வளவு மோசமான இசையை எந்த படத்திலும் கொடுத்ததில்லை. ஒரு பாடல் கூட மனதில் பதியவில்லை. 

ரஜினியின் மோசமாக தோல்வியடைந்த கொடிப் பறக்குது, பாபா படத்தில் கூட நகைச்சுவை காட்சி ஒரளவுக்கு நன்றாக இருக்கும். இந்த படத்தில் அது கூட இல்லை. சந்தானம் ரஜினியை பார்த்து “நண்பேன்டா” கூட சொல்லக் முடியவில்லை. அவரை கலாய்க்கவும் யோசிக்கிறார். 

Better Luck next time for Rajini fans !!!

Monday, December 1, 2014

காவியத் தலைவன் (திரை விமர்சனம்)

வெள்ளையர் காலத்தில் மேடை நாடக கலைஞர்கள் பற்றிய கதை. ‘அங்காடி தெரு’ போல் மிக அற்புதமான கதைக் களன். 

நாடகக் கலைஞர்கள் சந்தித்த சவால், நாடகக் கலைஞர்களுக்கு கொடுக்கும் பயிற்சி, அவர்களின் நடிப்பு திறன், பயாஸ்கோப் (சினிமா) வரவால் அவர்களுக்கு ஏற்ப்பட்ட பாதிப்பு, பாலியல் தொல்லை என்று பல விஷயங்களில் எதை சொல்லப் போகிறார் என்று யோசித்துக் கொண்டு படம் பார்த்தால் மிகுந்த ஏமாற்றம் தான். வழக்கமான முக்கோண காதல் கதையும், இரண்டு பேர்களுக்குள் இருக்கும் ஈகோ பிரச்சனை தான் கதை. இந்த கதைக்கு எதற்கு அந்த காலத்து நாடக் குழு பின்னனியில் படம் எடுத்தார் என்று தான் புரியவில்லை. 

படத்தின் தயாரிப்பாளர் சித்தார்த் என்பதால் இவ்வளவு பலமான பாத்திரத்தை அவர் ஏற்று நடித்திருக்க வேண்டாம். தன்னுடைய அதிகப்பட்ச நடிப்பை அவர் வெளிப்படுத்திருக்கலாம். அந்த பாத்திரம் அதை விட அதிகமாக நடிக்க வேண்டும். சித்தார்த் நடிப்பில் இன்னும் பல மைல் தூரம் போக வேண்டியது இருக்கிறது என்பதை அவருக்கு யாராவது புரிய வைத்தால் நல்லது.

பிரித்விராஜ் நன்றாக நடித்திருந்தாலும், பல இடங்களில் மலையாள வாடை அடிப்பது அவரால் தவிர்க்க முடியவில்லை. 



வேதிகா பாத்திரம் கே.பி.சுந்தரம்மாள் பாதிப்பில் உருவானது என்று இணையத்தில் படிக்க செய்தி கிடைக்கிறது. கே.பி.சுந்தரம்மாள் கிட்டப்பாவுக்கு இரண்டாவது மனைவி, கிட்டப்பா அதிகம் மது அருந்துபவர் போன்ற தகவல் தவிர வேறு எந்த பாதிப்பும் இந்த படத்தில் தெரியவில்லை. 

அந்த காலத்தில் ஒரு பெண் ஷீரிப்பார்டை வேஷம் அணிவது என்பது மிகப் பெரிய விஷயம். அப்படி ஷீரிப்பார்ட்டை அணிந்து நடிக்கும் பெண்களை பல ஜமிந்தார்கள் தவறாக பார்த்தார்கள். தங்கள் இச்சைக்கு இணங்க வைக்க நாடகம் நடத்துபவர்களுக்கு தொல்லை கொடுத்தார்கள். (ஷீரிப்பார்ட்டை வேடம் அணியும் ஆண்களுக்கும் இந்த பிரச்சனை உண்டு). [ உபயம் – எம்.ஆர்.ராதாவின் சிறை சிந்தனைகள் நூல்] 

இதனாலையே பெண்ணை நடிக்க வைக்க பல நாடகக் குழு பெண்ணை சேர்த்துக் கொள்வதில் தயக்கம் காட்டினர். இதை எல்லாம் எதிர்த்து தான் ஒரு பெண் மேடையில் நடிக்க வேண்டியது இருக்கும். சர்வ சாதாரணமாக ஒரு பெண் ஷீரிப்பாட்டை ஏற்று நடிப்பதை காட்டியிருக்கிறார். புராண நாடகங்களின் வீழ்ச்சி சுதேசி நாடகம் மட்டுமல்ல, அன்றைய சினிமா ஆரம்பக் காலத்தில் புராண நாடகங்கள் பயஸ்கோப் படங்களாக சென்றுக் கொண்டு இருந்தது. அதனால், சமூகக் கதைகள் நாடகத்தை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டினர். 

மேடை நாடக பின்னனி கதை என்று இருக்கும் போது, அந்த காலத்தின் மேடைக் கலைஞர்களை பயன்படுத்தியிருக்கலாம். அல்லது ஆலோசனையாவது கேட்டு இருக்கலாம். வி.எஸ்.ராகவன், ஔவை நடராஜன், டி.கே. சண்முகத்தின் வாரிசான கலைவாணன், சகஸ்ரநாமமின் மகன் என்று அந்தக் கால மேடை நாடக கலைஞர்கள் பலர் இருக்கிறார்கள்.

நாசர் தவிர்த்து படத்தில் திறமையான நடிகர்களை வசந்த பாலன் சேர்க்காமல் விட்டுவிட்டார் என்று தான் தோன்றுகிறது. பிரகாஷ் ராஜ், ஜெய்பிரகாஷ் போன்ற நடிகர்களை இந்த கதைக்கு அருமையாக பயன்படுத்தியிருக்கலாம். 

எல்லாவற்றிருக்கும் மேலாக ஏ.ஆர்.ரகுமானின் மேற்கித்திய இசை. பாடல்கள் தனியாக கேட்கும் போது நன்றாக தான் இருக்கிறது. ஆனால், Period படம் என்கிற போது அந்த காலத்து தியாகராஜ பாகவதர் பாடல் பாணியில் இசை அமைத்திருக்க வேண்டும். அப்படி ஒரு பாடல்கள் கூட இல்லை. [‘இருவர்’ படத்திலேயே ஏ.ஆருக்கு பிரியர்ட் படம் வராது என்பது புரிந்திரிந்துவிட்டது. அந்த படத்தின் பாடலை வைரமுத்து ஒரளவுக்கு காப்பாற்றினார். இந்த படத்தை அப்படி காப்பாற்ற யாருமில்லை. ]

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் இயக்குனர்களின் வசந்த பாலன் பெயர் கண்டிப்பாக இருக்கும். அதற்காக அவர் மேற்கொண்ட இந்த முயற்சியை பாராட்டலாம். நல்ல கதை களனை தேர்வு செய்ததற்காக வாழ்த்தலாம். ஆனால், பழக்கப்பட்ட கதையை தேர்வு செய்ததில் சறுக்கலை சந்திக்கிறார். அதை விட மிகப் பெரிய சறுக்கல் ஏ.ஆர்.ரகுமான், சித்தார்த்தை தேர்வு செய்தது.

Tuesday, October 14, 2014

மெட்ராஸ் ( Madras )

நானும் வடசென்னை பகுதியை சேர்ந்தவன் என்பதால் இந்த படத்தை பற்றி சொல்லியாக வேண்டும். தினமும் இந்த பாதை வழியாக கடந்து செல்கிறேன்.

பெண்களின் சண்டை, எருமை மாடுகள் ரோட்டில் கடந்து செல்வது, குப்பை நாற்றம், மைதானத்தில் கிரிக்கெட் என்று பல வருடங்களாக பார்த்து பழக்கப்பட்ட விஷயம். திரைப்படமாக பார்க்கும் போது அதைப் பாதிக்கூட எடுக்கவில்லை என்று தான் எனக்கு தோன்றுகிறது. (எந்த படத்திலும் எந்த விஷயமும் முழுமையாக காட்ட முடியாது என்பது வேறு விஷயம்) ஆனால், இதுவரை இந்த பாதிக்கூட யாரும் எடுக்காமல் இருக்கும் போது இயக்குனர் ரஞ்சித் அதை செய்திருக்கிறார் என்பதை பாராட்டியாக வேண்டும்.

அரசியல் லாபத்திற்காக பழகியவனை கொலை செய்யும் புளித்துப்போன பழைய கதை தான். என் உயிர் தோழன் தொடங்கி சுப்பிரமணியப்புரம் வரை பார்த்தது தான். புதிய கதைக்களனும், அதற்கு துணை நிற்கும் துணை பாத்திரங்கள் படத்திற்கு வலு சேர்க்கிறது.



கார்த்தி தனது பாத்திரத்திற்கு பாதி தான் செய்திருக்கிறார். சகுனி, அலேக்ஸ் பாண்டியன் பாதிப்பில் இருந்து அவர் இன்னும் மீண்டு வரவில்லை என்று தான் தெரிகிறது. (கடைசி வரைக்கும் கார்த்தி என்ன வேலை செய்கிறார் என்று சொல்லவே இல்லை)

நாயகனிடம் இவ்வளவு பேசும் நாயகி, மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் அமைதியான பெண்ணாக காட்டிருப்பது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. நாயகி உண்மையிலேயே அடக்கமானவரா அல்லது அராத்தா என்பதில் குழப்பம். படத்திற்கு நாயகி தேவையில்லை என்பதால் இவரின் குழப்பமான பாத்திரப்படைப்பு பெரிதாக பாதிக்கவில்லை. ( பிற்ப்படுத்தப்பட்டவர்களின் வாழ்வியல் எடுக்கும் போது கூட வட இந்தியப் பெண் தான் வேண்டுமா என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.)

நாயகன், நாயகி தவிர்த்து மற்ற பாத்திரங்கள் படு இயல்பு. குறிப்பாக அன்பு - மேரி காதல், ஜானி பேசிக் கொண்டே இருப்பது, கார்த்தியின் அம்மா பெண் பார்ப்பது, ரௌடிகள், கவுன்சிலர் என்று காஸ்ட்டிங் படு கச்சிதம். உண்மையில் படத்தின் பலமே இந்த துணை பாத்திரங்கள் தான்.

காதல் காட்சிகள், நாயகன், நாயகி காஸ்ட்டிங் தவிர்த்து பார்த்தால் RGVயின் படம் பார்த்தது போன்ற உணர்வு ஏற்ப்பட்டிருக்கும்.

இயக்குனர் நாயகன், தயாரிப்பாளருக்கு வளைந்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்பது புரிக்கிறது.

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனர் தனது இரண்டாவது, மூன்றாவது படத்தை தான் முழு சுதந்திரத்தோடு இயக்க முடியும் என்ற விதியை யாரால் மாற்ற முடியும். தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக ரஞ்சித் வருவார் என்பதை தான் ‘மெட்ராஸ்’ படம் காட்டுகிறது.

அதே சமயம் அனைவரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு படம் இல்லை.

Wednesday, June 11, 2014

மஞ்சப்பை - திரைவிமர்சனம்

கிராமத்தில் வாழ்ந்தவருக்கு நகர வாழ்க்கை எவ்வளவு அந்நியமாக இருக்கிறது என்பதை இந்த படம் காட்டுகிறது. ஒரு சில காட்சிகள் நாடகத்தனமாக இருந்தாலும், மனிதனுக்கு மனிதன் சராசரி புரிதலில் கூட எத்தனை இடைவேளை இருப்பதை உணர முடிகிறது.


ராஜ்கிரண் முகத்தில் கோபம், பாசம் தவிர பெரிய ரியாக்ஷன் எதிர்பார்க்க முடியாது என்று இருந்தவர்களுக்கு, அப்பாவித்தனமாக முகபாவனை பார்த்து அதிர்ந்து போயிருப்பார்கள்.

அவருக்கு நகைச்சுவைக்கான நடிப்பு வரவில்லை என்றாலும், தனது செய்கையால் பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறார். பாசத்துடன் விமலுக்கு செய்யும் ஒவ்வொரு விஷயமும், அவருக்கு பாதகமாக முடிய கோபப்படாமல் விமல் அமைதியாக இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து விமல் கோபப்படும் போது ராஜ்கிரண் வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது.

படத்தை ராஜ்கிரண் மட்டுமே தூக்கி நிறுத்துகிறார். மிகவும் அப்பாவியான கிராமத்து தாத்தாவாக நன்றாக பொருந்தியிருக்கிறார். விமல், லட்சுமி மேனன் இருவரும் துணை பாத்திரங்கள் தான். பெரிதாக வேலையில்லை.

மரணத்தில் படம் முடித்துவிடுவார்களோ என்று நினைக்கும் போது, வேறு மாதிரியான சோக முடிவை வைத்திருக்கிறார்கள்.

இரண்டாம் பாதி வழக்கம் போல் சினிமாத்தனமாக தெரிந்தாலும், ராஜ்கிரணின் முதல் பாதி சேட்டைக்காக ஒரு முறை பார்க்கலாம்

Thursday, June 5, 2014

தந்தை காதலுக்காக போராடும் மகன்

உலத்தின் எத்தனையோ காதல் கதைகளை கேள்விப்பட்டிருப்போம். படித்திருப்போம். பார்த்திருப்போம். ஆனால், நம் கண் முன்னே வாழ்ந்த மிக பெரிய காதலர்கள் பெற்றோர்கள் என்பது நமது பொருளாதார வாழ்க்கையில் உணர சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. மகன் முன்னான் பெற்றோர்களும் காதலர்களாக இருப்பதுமில்லை.

Road Home (Chinese) படத்துக்கு பிறகு மகன் பார்வையில் பெற்றோர்களின் காதலை உணர்ந்தும் கதைக்களன்.



படத்தின் கதை என்வென்றால் நாக சைத்தன்யா, சமந்தாவின் மகன் நாகர்ஜூனா. நாகர்ஜூனா, ஷ்ரேயாவின் மகன் நாகேஸ்வர ராவ். அதாவது, தனது நிஜ அப்பாவுக்கு அப்பாவாக நடித்திருக்கிறார்கள். தங்களது நிஜ மகனை படத்தில் 'அப்பா' என்று தந்தை அழைக்கிறார்கள். தங்களது நிஜப் பெயர்களை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஷ்ரேயா முதியவரான நாகேஷ்வர ராவ்விடம் தாய் உள்ளமோடு நடந்துக் கொள்கிறார். சமந்தாவும் நாகர்ஜூனாவோடு அம்மா பாசத்தோடு தோழியாக இருக்கிறார்.

கேட்பதற்கு குழப்பமான கதையென்றாலும், ரசிப்பதற்கு படத்தில் நிறைய இருக்கிறது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு நாகேஸ்வர ராவ் நடித்தப் படம். சில கலைஞர்களுக்கு உள்ளூர என்ன தோன்றும் என்று சொல்ல முடியவதில்லை. இது தான் தனது கடைசி படம் என்பதால் என்னவோ தனது பேரன் நாக சைத்தன்யாவோடும், மகன் நாகர்ஜூனாவோடும் நடித்திருக்கிறார். அதிகமாக நடிக்க வாய்ப்பில்லாத பாத்திரமாக இருந்தாலும், ரசிகர்கள் அவரை கடைசியாக திரையில் பார்த்த சந்தோஷத்தை கொடுத்திருக்கிறார்.

நாக சைத்தன்யாவுக்கு போட்டி மகேஷ் பாபு, ராம் சரண் போன்றவர்கள் இல்லை. அவர் அப்பா நாகர்ஜூனா தான். மனுஷன் இன்னும் இளமையாக தெரிகிறார்.

படத்தில் நகைச்சுவை காட்சி என்று சொல்வதென்றால், தாத்தா பேரனுக்கு நடக்கும் உரையாடல் மட்டும் தான்.

தமிழில் ‘அலை’ என்ற மொக்கைப் படத்தை இயக்கிய விக்கரம் குமார் தான் இந்த படத்தின் இயக்குனர். தமிழில் மொக்கைப் படத்தை எடுத்தவர்கள் தெலுங்கில் மட்டும் எப்படி நல்ல படம் எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. 

அக்கினேனி குடும்பம் போல் தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், முத்துராமன் போன்றவர்களின் குடும்பம் மூன்று தலைமுறையாக இருக்கிறார்கள். ஆனால், மூத்த தலைமுறை இல்லாதது இந்த படத்தை தமிழில் பார்க்க முடியாதது.

வேண்டுமென்றால் சிவக்குமார், சூர்யா, கார்த்தி வைத்து இந்த படத்தை எடுத்தால் ஒரளவுக்கு ரசிக்கும் படியாக இருக்கும்.

Monday, May 19, 2014

Netaji Subhas Chandra Bose : The forgotten hero

சமிபத்தில் ' Netaji Subhas Chandra Bose: The Forgetten Hero' என்ற ஹிந்தி படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படம். போஸாக சச்சின் கெடேகர் (தமிழில் தெய்வ திருமகள், மாற்றான் படத்தில் நடித்தவர்.) 200% நேதாஜியாக பொருந்தியிருக்கிறார்.

வரலாற்று படம் என்பதால் வழக்கம் போல் வணிக ரீதியாக தோல்வி படம் தான். ஆனால், இந்த படத்தில் நிறைய வரலாற்று கேள்விகள் எழுப்ப வேண்டியதாக இருக்கிறது.

போஸ் ஆரம்பக்காலத்தில் படம் தொடங்கவில்லை. நேதாஜி இளமை பருவம் அவரின் சுதந்திர போராட்டத்தின் வேட்கையை காட்டவில்லை. குறைந்தபட்சம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பணியாற்றியதையாவது சொல்லியிருக்கலாம். இரண்டும் இல்லாமல், காந்தியுடன் விவாதம் நடத்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி வந்ததில் இருந்து படம் தொடங்குகிறது. அதாவது 1940ல் இருந்து ஆகஸ்ட், 1945ல் விமானம் ஏறியது வரை படம் செல்கிறது.



நேதாஜியின் வாழ்க்கையை இளமைப் பருவத்தில் காட்டியிருந்தால் காந்தி காங்கிரஸ் தனது சொந்த ஸ்தாபனமாக நடத்தியதை வெளியே தெரிந்திருக்கும். இன்னும் எத்தனைக் காலம் காந்தியின் உண்மை முகத்தை திரையில் காட்டாமல் இருக்க போகிறோமோ தெரியவில்லை.

1934ல் வெனினாவில் சந்தித்த எமிலியை தனது உதவியாளராக சேர்த்துக் கொள்கிறார். பிறகு 1937ல் அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், படத்தில் நேதாஜி ஜெர்மனியில் அடைக்களமாக இருக்கும் போது (1941 பிறகு) திருமணம் செய்து கொண்டது போல் காட்டுகிறார்கள்.

ஒரு வருடம் ஜெர்மனியில் தங்கிய பிறகு நேதாஜி ஹிட்லரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

தனது முதல் சந்திப்பிலே அவரது புத்தகத்தில் ’மெயின் கேம்ப்’ (எனது போராட்டம்) புத்தகத்தில் இந்தியர்களை பற்றி குறிப்பட்டது தவறு என்கிறார். "எனது போராட்டம்" ஹிட்லர் சிறையில் இருக்கும் போது எழுதியது. கிட்ட தட்ட 15 வருடங்களுக்கு முன் இருக்கும். ஹிட்லரே எழுதியதை மறந்திருப்பார். இந்திய சுதந்திரத்திற்காக இராணுவ உதவி பெற வந்த இடத்தில் நேதாஜி ஹிட்லரின் புத்தகத்தைப் பற்றி பேசியிருப்பாரா ?

ரஷ்யா மீது படை எடுத்தது தவறு என்று ஹிட்லர் முன் தைரியமாக நேதாஜி கூறுவது போல் காட்டுகிறார்கள். நேதாஜி கூறியதும் ஹிட்லர் பொறுமையாக பதிலளிக்கிறார். நேதாஜி துணிச்சல் மிக்கவர் தான். தனது நாட்டுக்காக உதவி வாங்க வந்த இடத்தில் தனது சொந்த கருத்தை ஹிட்லர் முன்பே கூறியிருப்பாரா ? என்ற சந்தேகம் எழுகிறது. தனது ஆலோசகர்கள் கூறியே ஏற்காத ஹிட்லர், நேதாஜி சொல்லியா கேட்டுவிடவா போகிறார். இதை நேதாஜி அறியாதவரா என்ன ? ஹிட்லர் பொறுமையாக பதில் அளிக்கக் கூடியவரா ?

ஹிட்லரிடம் இருந்து எந்த உதவி கிடைக்காததால், கடைசியாக ஜப்பானுக்கு செல்ல உதவி கேட்கிறார். விமானத்தில் செல்ல விரும்புவதாக போஸ் சொல்ல, ஹிட்லர் நெடுந்தூரம் விமானப் பயணம் மிகவும் ஆபத்தானத், தனது யூ போட்டில் (நீர்முழுகி கப்பல்) செல்ல சொல்கிறார். முதல் சந்திப்பிலேயே நேதாஜி மீது ஹிட்லருக்கு அப்படி என்ன அக்கரை என்று சொல்லும் அளவிற்கு தோன்றுகிறது.

படத்தின் புணைவுக்காக இப்பட்டிப்பட்ட காட்சிகள் சேர்க்கப்பட்டதா அல்லது உண்மையிலேயே நேதாஜி ஹிட்லரிடம் இப்படி தான் பேசினாரா என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

நேதாஜியின் சர்ச்சைக்குரிய மரணத்தை அதிகம் தொடாமல் விட்டுவிட்டார் என்று தோன்றுகிறது.

இறுதியில் வெள்ளையர்கள் பேசும் போது, "இந்தியாவை நாம் இன்னும் அடிமையாக வைத்திருந்தால், இந்திய இராணுவம் நமக்கு உதவி செய்யுமா என்பது சந்தேகம். அந்த அளவுக்கு ஐ.என்.ஏ இந்திய இராணுவத்தில் பெரிய பாதிப்பு ஏற்படுத்தியிருகிறது" என்கிறார்.

இராணுவ உதவி கிடைக்காத நாட்டை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்வது என்பதால் கூட வெள்ளையர்கள் நம்மை விட்டு சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

பல அரசியல் காரணமாக நேதாஜியின் வாழ்க்கையை முழுமையாக அலசவில்லை என்பதை ஏற்கலாம். சுதந்திரத்திற்காக போராடிய ஒருவரை மறந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பதற்காக பாராட்டலாம். வரலாற்று பிழை இருப்பதை தான் இந்த படத்தில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

Friday, May 9, 2014

பள்ளி மாணவர்களின் ஆயுதப் புரட்சி : Chittagong, Khelein Hum Jee Jaan Se


இரண்டு படங்களும் ஒரே உண்மை சம்பவத்தை தான் சொல்கிறது. இரண்டுமே வியாபார ரீதியாக தோல்வி அடைந்த படங்கள். ஆனால், திரைக்கதை, கதை சொன்ன நேர்த்தியும், வித்தியாசத்தையும் ரசிக்க வைக்கிறது.

வெள்ளையர்களின் காலனி காலத்தில் அடிமையாய் இருந்த சிட்டங்காங் (இப்போது பங்களாதேஷ்யில் இருக்கிறது) நடந்த ஆயுத எழுச்சி தான் படத்தின் கதை. சுதந்திரப் போராட்டத்தில் இவர்களின் போராட்டம் மிக முக்கியமானது. காரணம், இதில் வெள்ளையர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய 56 பதின்ம வயது சிறுவர்கள். அவர்களை வழி நடத்தியவர் ’மாஸ்டர்டா’ என்று அழைக்கப்படும் சூர்யா சென்.

சரியான திட்டமிடலும், சரியான நேரத்தில் நடத்திய தாக்குதலிலும் சிட்டங்காங் நகரத்தை ஒரு நாள் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார்கள். இந்திய தேசிய கோடியை ஏற்றுகிறார்கள். வெள்ளையர்களின் இராணுவம் வருவதை அறிந்து தப்பிச் செல்லும் போது வெள்ளையர்களால் ஒவ்வொரு சிறுவர்களாக சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஒரு சில சிறுவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அதில் ஜூக்கு என்ற சிறுவன் மிக முக்கியமானவன்.

மாணவர்களை போராட்டத்திற்கு வழி நடத்திய ஆசிரியர் சூர்யா சென்னும் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்படுகிறார். Khelein Hum Jee Jaan Se படத்தின் கதை இத்தோடு முடிகிறது.

Chittagong படத்தில் ஜூக்கு சிறையில் இருந்து வாலிபனாக வெளியே வந்து வெள்ளையர்களுக்கு எதிராக தனது கிராமத்தை போராட வைக்கிறான். தனது முதுமைக் காலத்தில் இளமைப் போராட்ட நினைவுகளை கூறுவது போல் படம் முடிகிறது.



Khelein Hum Jee Jaan Se  படத்தில் சூர்யா சென் முதன்மை பாத்திரமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அபிஷேக் பச்சன், தீபிகா படுகோன் போன்ற பெரிய நட்சத்திர பலத்தோடு களம் இறங்கியப் படம். வணிக ரீதியாக திரில், செண்டிமெண்ட், ஒரு காட்சிக்கு காதல் என்று பொருத்தி திரைக்கதை அமைத்திருப்பார்கள்.

Chittagong படத்தில் சூர்யா சென்னிடம் பயிற்சி பெற்ற 56 மாணவர்களின் ஒருவனான ஜூக்குவை முதன்மை பாத்திரமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 14 வயது சிறுவன் வெள்ளையர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி, அவர்களின் செய்யும் கொடுமையை அனுபவித்து சிறையில் இருந்து வருகிறான். அவனின் அனுபவம் ஒரு கிராமத்தின் போராட்டத்தை தலைமை தாங்க வைக்கிறது. எந்த நட்சத்திர பலம் இல்லாதப்படம். ஒரே நேர்கோட்டில் மிக மெதுவாக செல்லும் கதை. 2012ல் சிறந்த இயக்குனர் உட்பட மூன்று தேசிய விருதுகள் பெற்று இருக்கிறது.

பெரும்பாலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதால் இரண்டு திரைக்கதையையும் இது மோசம், இது சிறந்தது என்று சொல்ல விரும்பவில்லை. இரண்டு இயக்குனர்களும் தங்களுக்கு எது தேவை என்று முன்பே தீர்மானித்து தான் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். தங்கள் தேவைக்கு சரியாக தான் படம் இயக்கியிருக்கிறார்கள்.

இரண்டு படங்களிலும் தோல்வி என்றாலும் இதில் கற்க வேண்டிய விஷயங்கள் இருக்கிறது. ஒரு உண்மை சம்பவத்தை எப்படி சொல்லலாம் என்பதற்கு இரண்டு விதமான திரைக்கதை சொல்லும் படங்கள். திரைக்கதை படிப்பினைக்கான கண்டிப்பாக இந்த இரண்டு படங்களும் உதவும் என்று தோன்றுகிறது.

வாய்ப்புள்ள நண்பர்கள் அவசியம் பாருங்கள்.

Friday, July 13, 2012

பில்லா - 2 (திரை விமர்சனம்)

பொதுவாக தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம் என்பது அறிதான ஒன்று. அதிசய மனிதனின் பிறகு வந்த ‘நாளைய மனிதன்’, நான் அவன் இல்லையில் இரண்டாம் பாகத்தின் தோல்விக்கு பிறகு இரண்டாம் பாகம் முதல் படத்தின் வெற்றியின் பெயரை கெடுப்பதுப் போல் தான் இருந்து வந்தது. ஆனால், முனி - 2 (காஞ்சனா) இந்த சினிமா சென்டிமென்ட்டை உடைத்து, மற்றவர்களையும் இரண்டாம் பாகம் எடுக்க தூண்டியுள்ளது. இந்த சமயத்தில் பில்லா - 2 வந்துள்ளது. இதில் இவர்கள் வெற்றிப் பெற்றார்களா இல்லையா என்ற கேள்விக்கு ஒரளவுக்கு வெற்றிப் பெற்றுயிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.


"நாம வாழுறதுக்காக... யார வேண்டுமானாலும் கொல்லாலாம்" என்ற முதல் பாகத்தின் வசனத்தை மைய கருவாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

அகதியாக தமிழகத்துக்கு வரும் பில்லா, வைரக்கடத்தல், போதை கடத்தல் என்று... கடைசியில் ஆயுத கடத்தல் செய்கிறான். அவன் வளர வளர எதிரிகள் பெறுகிறார்கள். அதனால், படம் முழுக்க அஜீத் யாரையாவது சுட்டுக் கொண்டே இருக்கிறார். யாராவது இறந்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த இரண்டும் இல்லை என்றால்... டூ பீஸ் கவர்ச்சியில் பெண்கள் வருகிறார்கள். இறுதியில், பில்லா தன் எதிரிகளை எல்லாம் கொன்றாரா என்பது க்ளைமாக்ஸ்.

படம் முழுக்க அஜீத்தின் ஆதிக்கம். அஜீத்துக்கு பழகிய வில்லன் பாத்திரம் தான். இதில் அன்டர் பிளே செய்திருக்கிறார். (Coat, cooling glass விடுவதாக இல்லை). அகதி பாத்திரத்தில் அஜீத்துக்கு எடுப்பட வில்லை. முகத்தில் சோகமோ, வருத்தமோ பெரிதாக இல்லை. ஆனால், அதன் பின் வரும் காட்சிகளுக்கு சரியாக உணர்ந்து நடித்திருக்கிறார்.

படத்தின் நாயகி என்று யாருமில்லை. பாடலுக்குக் கூட ‘நாயகி’ என்று சொல்லப்படுபவர்கள் பயன்ப்படுத்தவில்லை. கவர்ச்சிக்கு என்று ஒரு பெரிய குப் பெண்களை இறக்கியிருக்கிறார்கள். எந்த பெண்ணின் முகத்தை பார்க்க தோன்றவில்லை. (முகத்த தவிர மத்தது காட்டுன என்ன பண்ணுறது !! )

முன்பாகம் (prequel) என்பதை தமிழ் சினிமாவில் பிளாஷ் பேக்காக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், பிளாஷ் பேக்காக சொல்ல வேண்டிய கதையை ஒரு படமாக எடுத்து இருக்கிறார்கள். (இரண்டாம் பாகம் என்றால் முதல் பாகத்தின் தொடர்ச்சியை எடுக்க வேண்டும் என்று இல்லை. அதன் முந்தைய பகுதியைக் கூட படமாக்கலாம் என்பதை இந்த படம் காட்டியுள்ளது.)



படத்தின் மிக பெரிய ப்ளஸ் என்று சொன்னால் வசனம் தான். ( வாழ்த்துக்கள் இரா.முருகன் சார். கமலின் "உன்னைப் போல் ஒருவன்" மறைக்கப்பட்ட உங்கள் பெயர் இதில் தெரியும் என்று நினைக்கிறேன்.)

 “போராளிக்கும் தீவிரவாதிக்கும் ஒரே வித்தியாசம்… ஜெய்க்கிறது. ஜெய்ச்சிட்டா போராளி....”

“இறங்கி வேல செய்றவனுக்கும், உக்காந்து வேல வாங்குறவனுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.” 

இளவரசு "நீ ரொம்ப பேராசப்பட்டுற" என்று சொல்லும் போது, " இது பேராச இல்ல... பசி" என்று சொல்லும் இடமாகட்டும்.

வில்லன், “I made two mistakes. One, i believed him. Another one, i didnt believe him (Ajith).” போன்ற வசனங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

அடுத்த ப்ளஸ். இரண்டாம் பகுதி. முதல் பாதியில் மெதுவாக நகரும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் வேகமாக செல்கிறது. முதல் பாதியில் அஜீத் கடத்தல்க்காரனாக மாறும் காட்சிகள் மெதுவாக தெரிந்தாலும் நன்றாக உள்ளது.

தீம் ம்யூசிக்கை தவிர பாடல்கள் பெரிதாக கவரவில்லை. ( உண்மையை சொல்ல வேண்டும் என்றால், ரசிகர்களின் சத்தத்தில் கேட்கவில்லை).

மருந்துக்குக் கூட காமெடி இல்லை. அதிக வன்முறை, அதிக கவர்ச்சியால் குடும்பத்துடன் என்று பார்க்க முடியாது. ( அதான் போஸ்டர்ல A certitifcate போட்டிருக்காங்களே !)

ப்ளஸ் 

1.அஜீத்தின் Transformation scenes. (அவசரத்துக்கு தமிழ் வார்த்தை கிடைக்கல.)
2. இரண்டாம் பகுதி வேகம்.
3.ரத்தின சுருக்கமான வசனங்கள்.
4. முதல் முன்பாகம் தமிழ்ப்படம் (First Tamil prequel movie).

மைனஸ்

1. அகதி பாத்திரத்தில் பொருந்தாத அஜீத்தின் அறிமுகம்.
2. வேற்று மொழி வசனங்கள். சில இடங்களில் சப் டைட்டில் கூட இல்லை.
3.அதிக வன்முறை, அதிக கவர்ச்சி.
4. பல கோடி மதிப்புள்ள ஆயுதங்களை இரண்டு பேர் கடத்துவது. உலகளவில் ஆயுத வியாபாரம் செய்பவன் கோட்டைக்குள், மூன்று பேர் நுழைந்து துப்பாக்கியால் சுடுவது போன்ற பழைய சினிமா சண்டைக் காட்சிகள்.

கொஞ்சம் மெனகெட்டு இருந்தால் நல்ல Gangster படம் கிடைத்திருக்கும்.

LinkWithin

Related Posts with Thumbnails