நண்பர்களை விட எதிரி தான் நமது உண்மையான ஆற்றலை வெளியே கொண்டு வருகிறான். சின்ன சின்ன க்ரைம் வேலை செய்பவர்களை அழிப்பதை விட அவர்களை எல்லாம் ஆட்டி வைக்கும் ஒரு பெரிய எதிரியை நாயகன் ஜெயம் ரவி தேடுகிறான். அப்படி மூன்று பேரை தேர்வு செய்து, அதில் ஒருவனை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் போது அந்த மூன்று பேர்களையும் ஆட்டி வைக்கும் கெட்டவனாக அறிமுகமாகிறார் அரவிந்த்சாமி.
தனி ஒருவனான ‘ஜெயம்’ ரவி, தனி ஒருவனான சமூகத்தை ஆட்டி வைக்கும் அரவிந்த் சாமிக்கும் நடக்கும் ஆடு-புலி ஆட்டம் தான் படத்தின் கதை.
கதைப்படி அரவிந்த் சாமி தான் நாயகன். வழக்கமான நாயகனுக்கான அறிமுகம், அதிரடி, காதல் என்று பொருத்தி ‘ஜெயம்’ ரவியை நாயகனாக ஏற்க வேண்டியதாக இருக்கிறது. அரவிந்த் சாமி தன்னுடைய திட்டங்களை எப்படி அறிந்துக் கொள்கிறார், எப்படி முறியடிக்கிறார் என்று குழப்பத்தில் இருக்கும் போது நன்றாகவே நடித்திருக்கிறார். மற்றபடி வழக்கமான நாயகனுரிய பழைய வேலை தான்.
நயந்தாரா ‘ஜெயம்’ ரவியை உத்வேகப்படுத்தும் விதமாக பேசும் வசனத்தை தவிர பெரிய வேலையில்லை. அவருக்கு ஒரு பாடல் சேர்க்க வேண்டியதாக இருக்கிறது.
இந்த வருடம் கதாநாயகர்கள் எல்லாம் வில்லனாக மாறும் வருடம் என்று நினைக்கிறேன். கார்த்திக், அருண் விஜய், ராணாவை தொடர்ந்து வில்லனாக அவதாரம் எடுத்திருக்கும் நாயகன் அரவிந்த்சாமி. சைகோ தனமாக, கொடூரமான, முட்டாள் தனமான வில்லன்களை பார்த்து பழக்கப்பட்ட நமக்கு அழகான வில்லனாக வந்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அமைதியான வில்லனை திரையில் பார்க்கிறோம்.
’ஜெயம்’ ரவியை வைத்து தன்னை அழிக்க நினைப்பவர்களை எல்லாம் அழிக்கும் புத்திசாலி தனம் தொடங்கி இறுதிக் காட்சி வரை அமைதியான நடிப்பை ரசிக்க முடிகிறது.
இன்று நம் செய்திதாளில் படிக்கும் குற்றங்களுக்கு சொல்லப்படும் காரணங்களை உண்மை என்று நம்புகிறோம். உண்மையில் குற்றத்திற்கான பின்புலத்தை மறைக்கப்படுவதற்காகவே குற்றங்கள் நடத்துகிறார்கள். சமூக ஆர்வலரை கொலைச் செய்யும் போது செயின் திருட்டு, அறிவியல் பெண்ணை கொலைச் செய்யும் போது கற்பழிப்பு, போலீஸ்க்காரனை கொலைச் செய்யும் போது போதை மருந்து மயக்கம்…. என்று பல விஷயங்களை பார்க்க முடிகிறது. குற்றத்திற்கான காரணத்தை மாற்றிவிட்டால், குற்றவாளி தப்பிவிடுவான் என்பதை இன்றைய ஊடகம் நமக்கு சொல்கிறது.
முதல் முறையாக இயக்குனர் ‘ஜெயம்’ ராஜா, ரீ-மேக் செய்யாமல் சொந்தக்கதை, திரைக்கதை எடுத்து இயக்கியிருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை திரைக்கதை விறுவிறுப்பு குறையாமல் இருப்பதால் வெற்றியும் பெற்றிருக்கிறார். (American Gangster, இன்னும் சில ஆங்கிலப் படத்தின் இன்ஸ்பயர் என்று சொல்லலாம்.)
முதல் முறையாக ’ஜெயம்’ ரவி - ’ஜெயம்’ ராஜா கூட்டணியில் உருவான படம் தெலுங்கில் ரீ-மேக் செய்ய வாழ்த்துவோம்.
No comments:
Post a Comment