”பயங்கரவாதம் தவிர்த்த எஞ்சிய குற்றங்களுக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்யலாம்” என்ற சட்ட ஆணையம் பரிந்துரை செய்திருக்கும் நிலையில் பல விவாதங்களை கிளப்பியுள்ளது. இத்தருணத்தில் பலர் மரண தண்டனைக்கு ஆதரவாகும், எதிராகவும் குரல் எழுப்பி வருகிறார்கள். ஆனால், மரண தண்டனையை நிறைவேற்றுபவரின் குரல் ஒன்று இருக்கிறது. அதைப் பற்றி யாரும் யோசித்ததில்லை.
தூக்கிலிடுபவரின் குறிப்புகள் - 117 பேரின் மரண தண்டனையை நிறைவேற்றிய ஒருவனின் மனசாட்சி. 1940ல் தொடர்ந்து முப்பது ஆண்டு காலம் தூக்கிலிடுபவராக இருந்து 117 மனிதர்களை தூக்கிலிட்டிருக்கிறார். அவரின் பெயர் ஜனார்த்தனன். இவர் ஒரு தமிழர்.
இந்த புத்தகம் புனைவு என்று சொல்லிக் கொண்டாலும், ஒரு பேட்டியை போலவே தோன்றுகிறது. உணர்ச்சியில்லாமல் கொலைச் செய்ய வேண்டும் என்ற மனக் குமுறலை பல இடங்களைப் பார்க்க முடிகிறது.
”ஒருவனுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றிவிட்டு பிறந்த மகளைப் பார்க்க சொந்த ஊருக்கு செல்கிறார். தன் மகளை தொட யோசிக்கிறார். தன்னால் தூக்கிலிடப்பட்ட மறுபிறவியாக இருக்குமா என்று அஞ்சுகிறார்.”
”அப்பாவிடம் இருந்து இந்த வேலை எடுத்துக் கொண்டார். முதல் தூக்கு தண்டனை நிறைவேற்றிய பிறகு அப்பா ஒவ்வொரு தண்டனையை நிறைவேற்றிய அமைதியாக இருந்ததை புரிந்துக் கொள்கிறார்.”
பல நாடுகளில் மரணத் தண்டனையை நிறைவேற்றும் போது ஒருவனை மட்டும் சார்ந்து தண்டனையை நிறைவேற்றுவதில்லை. எப்படி ஆறு, ஏழுப் பேர் உதவிக் கொண்டே நிறைவேற்றப்படுகிறது. தூப்பாக்கி சுட்டுக் கொல்வதாக இருந்தாலும், கல்லால் அடித்துக் கொல்வதாக இருந்தாலும், தூக்கிலிடுவதாக இருந்தாலும் உதவியாளர்களை பலர் வைத்திருக்கிறார்கள். அதற்கு காரணம், ஒருவரின் மரணத்திற்காக பழியை பலர் பகிர்ந்துக் கொள்வதற்காக செய்கிறோம் என்று சொல்லும் இடம், பல உண்மைகளை விளங்குகிறது.
மூன்று, நான்கு நாட்கள் அலுவலக வேலை என்றால் உடல் சோர்வு வரும். ஆனால், தூக்கு தண்டனை நிறைவேற்றுபவர் மூன்று நாட்களில் மூன்று பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியிருக்கிறார். உடல் சோர்வை விட மனசோர்வு தான் அதிகமாக இருக்கும். அந்த மனநிலையை எந்த வார்த்தையில் சொல்லிப் புரியவைப்பது.
இந்த புத்தகத்தைப் பற்றி இன்னொரு தகவல் என்னவென்றால், ” புறம்போக்கு” படத்தில் விஜய்சேதுபதியின் பாத்திரம் இந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டது தான்.
”புறம்போக்கு” படத்தில் வரும் ஒரு சில வசனங்கள் இந்த புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, விஜய் சேதுபதி தூக்குப் போட யோசிக்கும் போது, ஒரு நீதிபதி கொடுக்கும் கொடுக்கும் விளக்கம் இந்த புத்தகத்தில் இருந்து தான் எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன். அச்சு அசல் அதே வாக்கியங்கள்.
மரண தண்டனை நிறைவேற்றியவன் மனதை சோர்வடைச் செய்யும், குற்றவுணர்வில் தள்ளும் என்ற உண்மையை இந்த புத்தகம் உணர்த்துகிறது.
மரண தண்டனை குறித்து ஆயிர விவாதங்கள் இருக்கிறது. ஒரு முறையாவது என்னுடன் இருந்து மரண தண்டனையை பாருங்கள், அப்போது புரியும் மரணம் கொடுக்கும் வலியை என்ற உண்மையை ஜனார்த்தனன் நமக்கு காட்டுகிறார்.
தூக்குதண்டனை நிறைவேற்றும் தமிழரின் வாழ்க்கை ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு, பின்பு தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது என்பது தான் கொஞ்சம் உருத்தலாக இருக்கிறது. எனினும், இப்படி ஒரு புத்தகத்தை மொழியாக்கம் செய்த முருகவேலுக்கும் வெளியிட்ட எதிர் வெளியீடு சா.அனுஷுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
1 comment:
உணர்வு ரீதியான அணுகு முறையுடன் நல்ல பகிர்வு .
Post a Comment