“சுபாஷ் போஸ் மீது நான் கொண்டிருந்த உறவு, மிகச் சிறந்ததும் பரிசுத்தமானதுமாகும். அவரது தியாக சக்தியை வெகுநாட்களுக்கு முன்பே உணர்ந்திருக்கிறேன். ஆனால், லட்சியத்தில் பலம் திரட்டும் திறமையும், போர்முறையில் துணிந்து நிற்கும் வீரமும் அவருக்கு எல்லையென்றிருந்தனவென்பதை, இந்தியாவிலிருந்து அவர் வெளியேறிய பின்னர் தான் தெள்ளத் தெளியத் தெரிந்து கொண்டேன்”
– காந்திஜி ( 15.1.47)
**
ஆகஸ்ட் 28, 1945
மேயர் தேபேந்திரநாத் முகர்ஜி வருத்தம் கலந்த முகத்தில் கல்கத்தா முனிசபல் கூட்டத்தில் கலந்துக் கொண்டார். சில ஐரோப்பிய உறுப்பினர்களும் இருந்தனர்.
தேபேந்திராத் துக்கம் கலந்த குரலில், “சுபாஷ் சந்திர போஸ் நம் நாட்டுக்காக போராடியவர். அவருடைய மரணம் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது ஆத்மா சாந்தியடைய அவருக்காக மௌனமாக அஞ்சலி செலுத்துவோம்”
யாரும் மேயர் சொன்னதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. யாரை அவமானப்படுத்த நினைக்கிறார்கள் இறந்தவரையா ? தன்னையா ?
“ஒரு நிமிடம் போஸ் மரணத்திற்காக அஞ்சலி செலுத்துவோம்” என்று திரும்ப கூறினார்.
காதில் வாங்கிக் கொள்ளாதவாறு அனைவரும் இருந்தனர். யாரும் அசையவில்லை.
“என்ன ஆனது. நமக்காக போராடியவருக்கு மௌன அஞ்சலி ஏன் செலுத்த தயங்குகிறீர்கள் ?”
“போஸ் இறந்துவிட்டார் என்பதை நாங்கள் யாரும் நம்பவில்லை. அவர் உயிரோடு தான் இருக்கிறார்.”
”என் உத்தரவை மதிக்காதவர்கள் யாரும் இந்த கூட்டத்தில் இருக்க வேண்டாம்.”
அரங்கத்தில் மேயரை தவிர்த்து யாருமில்லை.
**
செப்டம்பர் 21, 1945
1942ல் காங்கிரஸ் ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக பல தலைவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அதனால், பல தலைவர்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்படாமல் இருந்தது.
அன்றைய தினத்தில் 1942ல் இருந்து 1945 வரை காலமான காங்கிரஸ் தலைவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் தீர்மானத்தை காங்கிரஸ் கமிட்டி நிறைவேற்றியது. இறந்த தலைவர்களின் பட்டியலில் ’நேதாஜி’ பெயர் இடம் பெறவில்லை.
அதற்கு காங்கிரஸ் தலைவரான அபுல் கலாம் ஆசாத், “சுபாஷ்யின் மரண செய்தி எத்தகைய சூழ்நிலையில் நமக்கு ஏட்டியது என்பது அனைவருக்கும் தெரியும். செய்தி வெளியிட்டவர்கள் மீது நமக்கு சந்தேகம் இருப்பதாலும், அவருடைய மரணம் உறுதி செய்ய முடியாத நிலையில் இரங்கல் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை” என்று விளக்கமளித்தார்.
இன்று வரை, இந்திய தேசிய காங்கிரஸ்யோ அல்லது வேறு அரசியல் கட்சியோ நேதாஜி மறைவிற்கு யாரும் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
**
ஜப்பான் ரென்கோலி என்ற ஆலயத்தில் போஸ் புகைப்படத்திற்கு புக்களால் அலங்கரித்து மரியாதை செலுத்தினர். ஜப்பானிய இராணுவத்தினர் முன்னிலையில் மொஜிசுகி என்பவர் அவரது இறுதி சடங்கை நடத்தினார் என்று கூறப்பட்டது.
இந்த செய்தி ஜப்பானில் பெரும் அதிருப்தி ஏற்படுத்தியது. பலர் கண்டித்தனர். இன்னும் போஸ் மரணச் செய்தி உறுதி செய்யப்படாத நிலையில் அவருக்கு இறுதி சடங்கு நடத்துவது யாரும் ஏற்ற்க் கொள்ள முடியாத ஒன்று.
இந்தியாவும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. போஸ் அஸ்தியா ? இறுதி சடங்கா ? யாரைக் கேட்டு இதையெல்லாம் செய்தீர்கள் என்று கண்டித்தது.
**
”செய்தி பொய்யாக இருக்கலாம்; போய் உயிரோடு தலைமறைவாக இருக்கலாம். எந்த தருணத்திலும் அவர் வெளிவருவார் நம்புகிறேன்” என்று ஆரம்பத்தில் கூறி வந்த காந்திஜி, பிறகு நேதாஜி மரணத்தை ஏற்றுக் கொண்டார்.
அதேப் போல் நேதாஜி மரணத்தைப் பற்றி நேரு, “ஆரம்பத்தில் சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருப்பார் என்று தோன்றியது. நானும் அதை தான் நம்பினேன். விமான விபத்தை நேரில் கண்ட சாட்சியை வைத்து பார்க்கும் போது அவர் விமான விபத்தில் இறந்துவிட்டதாக என்பதை நாம் நம்ப வேண்டியதாக தான் இருக்கிறது. அவர் உயிருடன் இருக்கிறார் என்று நம்பிக்கையில்லை” என்றார்.
நேதாஜி இறந்ததாக யார் சொன்னது ? யார் யார் சாட்சியம் அளித்தனர் ? எதை வைத்து நேதாஜியின் மரணத்தை அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்கள் ? எதனால். அளித்த சாட்சியங்கள் மீது அவநம்பிக்கை.... விவரங்கள் அடுத்த பதிவில் !!
1 comment:
நல்லாருக்கு. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். சில இடங்களில் எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. தமிழைக் கவனமாக கையாளவும்... !!
Post a Comment