வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label உலக சினிமா. Show all posts
Showing posts with label உலக சினிமா. Show all posts

Monday, May 25, 2020

Extreme Job (Korean – 2019)

திரில்லர் வகையான கோரியன் படம் பார்த்து போர் அடித்து கண்ணில்பட்டப் படம் Extreme Job. ஜாலியான அக்ஷேன் காமெடிப்படம்.



போதை தடுப்பு பிரிவில் எதற்கும் உதவாத ஐந்து பேர் கொண்ட குழு. அந்த போலீஸ் குழுவை கலைத்துவிடலாம் என்று மேல் அதிகாரி நினைக்கிறார். சக அதிகாரியின் உதவியோடு பெரிய போதைப்பொருள் கடத்தல் தலைவனை பிடிக்க கடைசி வாய்ப்பாக வழங்கப்படுகிறது. அந்த தலைவனை பிடிக்க Undercover Operationல் ஒரு ஹோட்டல் தொடங்குகிறார்கள். அந்த ஹோட்டல் பெரிய ஹிட்டாக வாடிக்கையாளர் வந்து குவிகிறார்கள். வாடிக்கையாளர் அதிகமாக வரும் ஹோட்டலில் இருந்துகொண்டு, அவர்கள் எப்படி போதைப்பொருள் கடத்தல் தலைவனை பிடிக்கிறார்கள் என்பது மீதிக் கதை.

மே 2019 வரை, தென் கோரியா சினிமா வரலாற்றில் மக்கள் அதிகமாகப் பார்க்கப்பட்ட இரண்டாவது படம் இதுதான். 5.8 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படம் 120 மில்லியன் டாலர் வசூலிக்கப்பட்டது.

இந்தப்படம் தமிழில் கண்டிப்பாக வரும். ஆனால், உரிமம் வாங்கியா? வழக்கம்போல் Inspirationஆக வருமா? என்பது மட்டும்தெரியவில்லை.

Tuesday, April 21, 2020

Helpless (2012 - Korean film)

வணக்கம் தலைவா” (2005) என்ற படம். சத்யராஜ், அப்பாஸ், விவேக் நடித்தது. ஆரம்பக் காட்சியில் அப்பாஸ் காதலிக்கும் பெண்ணை சத்யராஜ் கடத்துவார். பின்பு, அப்பாஸ் தனது காதலியை தேடி அலைவார். சத்யராஜ் விதவிதமான கெட்டப்பில் அப்பாஸ்யை ஏமாற்றி கொண்டே இருப்பார். அப்பாஸூக்கு உதவி செய்ய போலீஸ் அதிகாரியாக விவேக் வருகிறார். ஒரு கட்டத்தில் அப்பாஸ் தனது காதலியை கண்டுபிடித்து போலீஸூடன் வர, அப்பாஸின் காதலி தன்னை சத்யராஜின் மனைவி என்று அறிமுகப்படுத்தி கொள்வாள். அதுதான் Interval Block.

மீதி படத்தை Youbtubeல் பார்க்கலாம். நல்ல கதைக்கு மிக மொக்கையாக திரைக்கதை அமைத்து சொதப்பியிருப்பார்கள்.



Helpless படத்திற்கு வருவோம். படம் முழுக்க ”வணக்கம் தலைவா” படத்தில் முதல் பாதி கதைதான். ஆரம்பக்காட்சியில், தனது வருங்கால மனைவியை அப்பாவுக்கு அறிமுகப்படுத்த தனது சொந்த ஊருக்கு காரில் அழைத்து செல்கிறான். ஒரு உணவு விடுதியில், நாயகிக்கு போன் வருகிறது. ஹீரோ திரும்பி வரும்போது காரில் தனது காதலி இல்லை. அவளை பல இடங்களில் தேடுகிறான். அவனுக்கு உதவியாக ஒரு போலீஸ் வருகிறார். அவளை தேடும்போது தனது காதலியைப் பற்றி தெரியாத பல தகவல்கள் அவனுக்கு தெரிய வருகிறது.

மிக ஸ்வராஸ்யமான திரைக்கதை. அவசியம் பார்க்க வேண்டியப்படம்.

2005ல் தமிழில் வந்த மொக்கப்படத்திற்கு எப்படி கொரியன்காரன் அற்புதமாக திரைக்கதை அமைத்தார்கள் என்று யோசிக்க வேண்டாம். இந்தக் கதை “All She Was Worth” (1996) என்ற நாவலை மையமாக கொண்டப்படம். நம்ப ஆட்கள் மசாலா தடவி கதையை கெடுத்திருப்பார்கள். அவ்வளவுதான்.

Wednesday, March 4, 2020

Seven Years of Night (2018) - Korean Movie

தென் கொரிய எழுத்தாளரான Jung Yoo-jung எழுதிய Seven Years of Night என்ற நாவலை அடிப்படையாக கொண்டு அதே தலைப்பில் வெளியானப் படம்.

ஒரு ஊரையே விழும் ஏரியில் காட்சி தொடங்குகிறது. அந்த ஏரியில் குதிப்பவர்கள் அந்த ஏரி உயிரை வாங்கிவிடும் என்று பேசிக்கொள்கிறார்கள். அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் ஒரு இளைஞன் ஏரியில் குதிக்கிறான். Seven Years of Night என்ற டைட்டில் கார்ட் வருகிறது.

பிரிந்து சென்ற தனது மனைவி மீது இருக்கும் கோபத்தை தனது மகளை மீது தினமும் அடித்து துன்புருத்துகிறான் மருத்துவர். தனது தந்தையை போல் இல்லாமல் தனது மகனுக்கு நல்ல அப்பாவாக நடந்துகொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து நடந்துகொள்கிறான் இன்ஜினியர்.



ஒரு நாள் இரவு சாலையில் இருவரும் ஒருவரை ஒருவர் கார் மூந்துவதில் அறிமுகம் தொடங்குகிறது. அந்த இரவின் நீட்சியில் ஒரு விபத்து நடக்க, மருத்துவரின் மகள் மீது இன்ஜினியர் கார் மோத அவள் இறக்கிறாள். பல நாள் தனது மகளை கொடுமைப்படுத்திய மருத்துவர் தனது மகளை கொன்றுருப்பார் என்று போலீஸ் சந்தேகப்படுகிறார்கள். அதனால், தனது மகளை கொன்றவனை தானே கண்டுபிடிப்பதாக மருத்துவர் முடிவெடுக்கிறார்.

ஒரு சிறுமியை கொன்ற குற்றவுணர்வில் இன்ஜினியர் தனது வழக்கத்துக்கு மாறான இயல்பில் நடந்துகொள்கிறான். இவர்கள் இருவருக்குள் நடக்கும் போராட்டத்தில் ஒரு கிராமமே அழிகிறது.

த்ரில்லர் வகைப் படமாக இருக்கும் என்று ஆரம்பத்தில் பார்வையாளனை கட்டிப்போடுகிறது. எதோ அமானுஷ்யம் ஒழிந்துகொண்டிருப்பது உணர்வைம் ஏற்படுத்துகிறது. ஆனால், அப்படியில்லாமல் இருவருக்குள் நடக்கும் பாசப் போராட்டமும், அதனால் விளையும் பழிவாங்கும் நடவடிக்கைதான் திரைக்கதையாக அமைகிறது. ஆரம்பக்காட்சியில் மனித உயிர்களை குடிக்கும் ஏரி சொன்னதற்கு இறுதி காட்சிக்கு முன் நடக்கும் சம்பவங்கள் விளக்குகிறது.

தனது மகளின் மரணத்திற்கு ஏழு வருடங்களாக காத்திருந்து பழிவாங்கும் போது நியாயம், தர்மம் எதுவும் உதவுவதில்லை. படித்த மருத்துவப் படிப்பு கூட உதவவில்லை என்பது மருத்துவர் பாத்திரம் காட்டுகிறது. மகளின் மரணத்திற்கு பழிவாங்கும் நினைக்கும் தந்தை ஒரு நாள் கூட மகளிடம் பாசமாக நடந்துகொள்ளவில்லை. தனது மனைவி மீது இருந்த கோபத்தைதான் காட்டுகிறான். அப்படிப்பட்டவன் ஏழு வருடங்களாக காத்திருந்து பழிவாங்கும் நடவடிக்கை கொஞ்சம் முரணாக தெரியலாம். இறுதுகாட்சியில், தன்னை வெறுக்கும் மனைவியை எவ்வளவு காதலிப்பதாக கூறும்போது அவன் மனதுக்குள் இருக்கும் அன்பு எப்படி பழிவாங்கும் உணர்வாக மாறியிருப்பது புரிகிறது.

ஏரியை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்க நினைக்கும் இயக்குனர்கள் கண்டிப்பாக இந்தப்படங்களை பார்க்க வேண்டும்.

Wednesday, June 20, 2018

Tanna ( 2015 )

Tanna ( 2015 - Language : Nauvhal)

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பழங்குடியினர் மக்கள் பின்னனி கொண்டப் படம். 

படம் முழுக்க ஆண்களும், பெண்களும் அரையாடையில் வருவதால், உங்களால் ரசிக்க முடியாமல் போகலாம். முழுப் படமும் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். ஒவ்வொருவரின் முகமும் உங்களுக்கு அருவருப்பாக தோன்றலாம். ஆனால், இறுதிக்காட்சியில் நமது நெற்றிப்பொட்டில் அறைந்தது போல் இருக்கும். 

அப்படியென்ன பெரியக் கதை... 

பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பேர் காதலிக்கிறார்கள். எதிரி குழுவோடு சமரசரசப் பேச்சுவார்த்தையில் நாயகன் காதலிக்கும் பெண்ணை எதிரி குழுவில் ஒருவனுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதிக்கிறார்கள். காதலர்கள் இருவரும் காட்டைவிட்டு ஓடிப்போகிறார்கள். நீண்ட நாள் அவர்களால் காட்டை விட்டு இருக்க முடியவில்லை. தங்கள் உறவுகளை பார்க்க மீண்டும் காட்டுக்குள் வருகிறார்கள். எதிர் குழுவினர்கள் தங்களை விடமாட்டார்கள் என்பதை உணர்ந்த காதலர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். 



இது என்ன பெரிய விஷயம். பல தமிழ் படங்களில் வந்த கதைத்தானே என்று நினைக்கலாம். 

இறுதி காட்சியில், பழங்குடியில் தலைவர் “இனி நமது குழுவில் உயிர் பிரியாமல் இருக்க காதல் திருமணத்தை அங்கிகரிக்கப்படும்” என்கிறார். 

மீண்டும், இது ஒரு பெரிய விஷயமா என்று கேட்பீர்கள்.

1978 ஆண்டில் அந்த குழுவில் காதல் திருமணத்திற்கு அங்கிகாரம் அளிக்கப்பட்டதாக எழுத்துகள் போகும். 

எந்த நாகரிகம் இல்லாமல், தொழிற்நுட்ப வளர்ச்சிப் பற்றி தெரியாதவர்கள், ஆடை என்றால் என்னவென்று தெரியாதவர்கள்… இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லக் கூடிய பழங்குடியினர்கள் மக்களில் இருவர் காதலுக்காக தற்கொலை செய்துகொள்ளும் போது தங்கள் குழுவில் மாற்றம் கொண்டு வருகிறார்கள். 

யோவ் இதிலென்ன பெரிய விஷயம் ? 

நீங்கள் கௌரவ கொலை செய்வதில் எந்த மாற்றம் இல்லையே !! அவ்வளவு தான் விஷயம். 

படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் என்னுள் உருவான கேள்வி தான் இந்தப் படம் ஏற்படுத்திய பாதிப்பு. மற்றப்படி படத்தை குறித்து பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. நீங்கள் இந்தப்படத்தை தவிர்க்கலாம்.

Thursday, September 28, 2017

Blind ( Korean Thriller - 2011)

பிரபுதேவா, கார்த்திக் நடித்த “உள்ளம் கொள்ளை போகுதே” படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு காவல் அதிகாரி கண் பறிப்போன விவேக்கிடம், “மின்னல்ல அடிப்பட்டவன் உயிருக்கு போராடிட்டு இருக்கான். அவன் செத்தா நீ தான் Eye witness” என்பார். அதற்கு விவேக், “Eye இல்லடா. என்ன எப்படிடா Eye witness சொல்லுறீங்க?” என்பார். 

அந்த நகைச்சுவைக் காட்சி தான் இந்தப் படத்தின் த்ரிலாரான ஒன் – லைன். பார்வையற்ற பெண் ஒரு சம்பவத்திற்கு சாட்சியாக இருக்கிறாள். அதனால், அவளை தொடர்ந்து கொலை செய்யும் முயற்சிகள் நடக்கிறது என்பது தான் கதை. 



நகரத்தில் மர்மமான முறையில் பெண்கள் கடத்தப்படுகிறார்கள். கடத்தப்பட்ட பெண்கள் என்னவானார்கள் என்று தெரியவில்லை. அவர்களின் சடலம் கூட கிடைக்கவில்லை. பெண்களை கடத்தும் மர்மமான நபரைக் குறித்து எந்த தடயமும் கிடையாது. இந்த நிலைமையில் பார்வையற்ற நாயகியை அவன் கடத்த முயற்சிக்க, அதில் இருந்து அவள் தப்பிக்கிறாள். அவளுக்கு பதிலாக வேறு ஒரு பெண் கடத்திவிட்டு அங்கிருந்து தப்பிக்கிறான் மர்ம மனிதன். அந்த கடத்தலுக்கு சாட்சியாக அந்தப் பெண் இருக்கிறாள். 

கடத்தியவன் ஒரு சைகோ கொலைகாரன். கடத்திய பெண்களை வன்புணர்ச்சி செய்து கொலை செய்பவன். பார்வையற்றப் பெண் தனக்கு எதிரான சாட்சியாக இருப்பதால் அவளை கொலை செய்ய முயற்சிக்கிறான். அவளைப் பற்றி எல்லா விபரமும் அவனுக்கு தெரிந்திருக்கிறது. அவளை தொடர்ந்து கண்காணிக்கிறான். 

காவலர்களுக்கும் நடந்த சம்பவத்திற்கு இவள் மட்டுமே சாட்சியாக இருப்பதால், அவள் கூறும் தகவலை வைத்து ’சைகோ’ கொலைக்காரனை கண்டுப்பிடிக்க முயற்சிக்கிறார்கள். 

பார்வையற்ற அந்தப் பெண்ணின் உதவியோடு காவலர்கள் சைகோ கொலைக்காரனை எப்படி பிடிக்கிறார்கள் ? சைகோவிடம் தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்கிறாள் ? என்பது தான் விறுவிறுப்பான திரைக்கதை. 

ஆரம்பக் காட்சியிலையே தனது தம்பியையும், பார்வையையும் இழக்கும் நாயகியைக் காட்டிவிடுகிறார்கள். அவளின் வேலைக்கொண்டே அவளின் தனித்தன்மை எதுவென்று நமக்கு புரிகிறது. 

கொலைக்காரன் நாயகியை கடத்தும் முயற்சியில் இருந்து படம் வேகமாக நகர்கிறது. தம்பி செண்டிமெண்ட் காட்சிகளும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. 

பார்வையற்றப் பெண் எப்படி நடந்துகொள்வார் என்பதை Kim Ha-neul தனது நடிப்பால் ஒவ்வொரு காட்சியும் புரிய வைக்கிறார். பார்வையற்றவர்கள் எந்த மாதிரியான சாதனங்கள் பயன்படுத்துவார்கள், சில கருவிகள் அவர்களுக்கு எப்படி உதவியாக இருக்கும், அதிர்வுகளை வைத்து எப்படி உணர்வார்கள் என்பதை நம்பும் படியான காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. 

அதேப் போல், டெலிவரி பாய், காவல் அதிகாரியின் நடிப்பு கனக்கச்சிதம். காவல் அதிகாரி நாயகியிடம் அசடு வளிவதும், பேசும் போது வியப்பதும் அவனுள் இருக்கும் மெல்லிய காதல் தெரிகிறது. 

இரயில் நிலையத்தின் நடைப்பாதையில் ஒரு நேர்கொட்டில் மட்டும் சதுரங்க கல் வைத்து வெள்ளைநிறத்தில் பையிண்ட் அடித்திருப்பார்கள். எதோ அழகுக்கான செய்திருப்பார்கள் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால், பார்வையற்ற மாற்றுதிறனாளிக்கானது என்பதில் அவள் சைகோ கொலைக்காரனிடம் தப்பிக்கும் காட்சியில் உங்களுக்கு புரியும். 

பார்வையற்றவர்களுக்காக இரயில் நிலையத்தில் ஒரு பாதை இருக்கிறதா? நாங்கள் கவனித்ததில்லையே ? என்ற நீங்கள் வியக்கலாம். நாயகி தப்பிக்கும் பரப்பரப்பான காட்சியை பார்த்தப் பிறகு செண்டரல் ரயில் நிலையம் தவிர ஒரு சில இரயில் நிலையத்தில் தேடிப் பார்த்தேன் கண்ணில் இல்லை. பெரு நகர பஸ் நிலையிலோ ரயில் நிலையத்தில் பார்வையற்றவர்களுக்கான பாதை என்று நாம் இதுவரை யோசித்திருக்கிறோமா என்பதை இந்தக் காட்சி நம்மை கேள்வி கேட்க வைக்கிறது. 

ஒரு கமர்ஷியல் த்ரில்லர் படத்தில் பார்வையற்றப் பெண் உலகத்தை இந்தப் படம் அழகாக காட்டியிருக்கிறது. இதுவரை தனக்கான உலகமாக இருந்தது, பார்வை பரிப்போனதும் தன்னை அந்நியமாகப் பார்க்கும் வலியை நாயகியின் பாத்திரம் உணர்த்துகிறது. தம்பி செண்டிமெண்ட்டோடு சொல்லியிப்பதால் நம்மை படத்தை ஒன்ற செய்கிறது. 

அவசியம் பார்க்க வேண்டிய த்ரில்லர் செண்டிமெண்ட் படம்.

Wednesday, September 13, 2017

Slow Video ( 2014 - Korean )

உலகமே வேகமாக சென்று கொண்டிருக்கும் போது நீங்கள் மட்டும் மெதுவாக செயல்பட்டால் உங்களை என்ன சொல்வார்கள் ? சோம்பேறி என்று சொல்லும். முன்னேற்றத்தில் அக்கரை இல்லாதவன் என்று விமர்சனம் செய்யும். இப்படி இருக்கும் போது ஒருவரின் பார்வை மெதுவாக இருந்தால் என்னவென்று சொல்வீர்கள்.

 என்னது… பார்வை மெதுவாக இருக்குமா ? புரியவில்லையா ? நீங்கள் ஒரு வீடியோவை Slow ( ¼) play செய்து பார்த்தால் எப்படி இருக்கும் ? ஒரு நொடிக்கு செல்ல வேண்டிய காட்சி நான்கு நோடிக்கு மெதுவாக செல்லும். வேகமாக செல்லும் 100 கிலோமீட்டர் வாகனம் 25 கி.மீ வேகத்தில் செல்வது போல் இருக்கும். இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால் கிரிக்கெட் மேட்ச்சை Action Replay வேகத்தில் அவர்களின் பார்வை இருக்கும். 

இது சூப்பர் பவராச்சே !!! கிரிக்கெட் வீரனாக இருந்தால் எல்லா பந்துகளையும் சிக்ஸர் அடித்து தள்ளலாம். விரைவாக செல்லுவதை எதையும் நினைவில் வைத்துகொள்ளலாம். இப்படிப்பட்ட பார்வை கொண்டவன் தான் Slow Video படத்தின் நாயகன். ஆனால், அவனை சூப்பர் பவர் கொண்டவனாக படத்தில் காட்டவில்லை என்பது தான் திரைக்கதை.



பார்க்கும் காட்சிகள் அனைத்தும் ‘Slow’ வாக தெரிவதால் பள்ளியில் ஜங்-பூவை ‘Slow Video’ என்று கேலி செய்கிறார்கள். அதனாலே அவனுக்கு பள்ளியில் நண்பர்கள் இல்லை. போங்-சூமி என்னும் சிறுமி மட்டும் அவனிடம் நல்ல தோழியாக பழகுகிறாள். அவளிடம் பழகும் போது அவன் பார்வைக்கு மெதுவாக நகர்வதால், அந்த மகிழ்ச்சியான பொழுதை அவனால் நினைவில் வைத்து வரைய முடிகிறது. அதை அவளுக்கு பரிசாக கொடுக்கிறான். நாளாக நாளாக போங்-சூமிக்கு அவனை பிடிக்காமல் போக அவளும் அவனை விட்டு பிரிகிறாள். 

இப்போது, ஜங்-பூ முப்பது வயது இளைஞனாக CCTV கண்ட்ரோல் செண்டரில் வேலை செய்கிறான். நகரத்தில் குற்றம் செய்து தப்பிக்கும் குற்றவாளிகளை CCTVவில் பார்த்து காவலர்களுக்கு தகவல் கொடுக்கும் வேலை. ஜங்-பூ பார்வைக்கு மெதுவாக காட்சி தெரிவதால் குற்றவாளிகள் எவ்வளவு வேகமாக வண்டியில் சென்றால் கூட அவன் பார்வைக்கு சீக்கிவிடுவார்கள். அவன் பார்வைக்கோளாறு அவனின் வேலைக்கு உதவியாக இருக்கிறது. 

ஒரு நாள் தனது பள்ளி தோழியான போங்-சூமியை CCTV காமிராவில் பார்க்கிறான். CCTVல் அவளை கண்காணிக்கிறான். பிறகு அவளை பின் தொடர்கிறான். அதன் பின் என்ன நடந்தது என்பது திரையில் பார்க்கவும்.

ஆரம்பக்காட்சியில் ஒரு பெண் ஸ்கர்ட் மேல பறக்க, அந்த பெண் ஸ்கர்ட்டை கால் வரை மூட சிறுவனான நாயகன் பார்வைக்கு அந்த காட்சி மெதுவாக தெரியும். சூப்பர் பவர் கொண்ட நாயகன் படம் , நகைச்சுவை படம் என்று எதிர்பார்த்தால், நமது எதிர்ப்பார்பை உடைக்கிறது. 

நாயகனுக்கு இருப்பது சூப்பர் பவர் அல்ல , பார்வைக் கோளாறு என்று அவர்கள் காட்டும் அடுத்த அடுத்த காட்சி நமக்கு உணர்த்துகிறது. அதனால், நாயகன் தனக்குள் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துகொள்கிறான். மற்றவர்களிடம் உரையாடுவதை தவிர்க்கிறான். CCTVல் பார்த்த பாத்திரங்களோடு பழக்குகிறான், விளையாடுகிறான், பேசுகிறான். அவனுக்கென்று ஒரு தனி உலகம் உருவாக்கி கொள்ளும் தனிமை விரும்பியாக மாறுவதை நாம் பார்க்கும் போது அவன் மீது இரக்கம் பிறக்கிறது. 

ஆரம்பக்காட்சியில் நாயகிக்கு தெரியாமல் அவளை பின்தொடருவது போல், இறுதுக்காட்சியில் நாயகனுக்கு தெரியாமல் நாயகி பின் தொடரும் காட்சிகள் அழகான காதல் காட்சியாக இருக்கிறது. 

திரைக்கதை எந்த விஷயத்தை தூக்கிப்பிடித்து காட்டுகிறதோ அந்த விஷயம் தான் பார்வையாளன் மனதில் பதியும். பார்வை பிரச்சனையை சூப்பர் பவராக காட்டமால், ஒரு மாற்று திறனாளிக்கு இருக்கும் தாழ்வுமான்மையை காட்டும் போது அந்த சூப்பர் பவரில் இருக்கும் வலி புரிகிறது. இதுப்போன்ற வலிகளை Spiderman, Superman படங்களின் நாயகர்களை பார்த்திருப்போம். ஆனால், அடுத்த அடுத்த Action காட்சிகள் நாயகனின் வலியை நமக்கு புரியாமல் இருக்கும். 

மற்றவர்கள் போல் இயல்பாக இல்லாமல் இருப்பது வரம் அல்ல… சாபம் என்பதை தான் நாயகன் பாத்திரம் காட்டுகிறது. அதை விட மிக முக்கியமான விஷயம், இந்த உலகத்தில் நாம் என்வாக இருந்தாலும் நம்மை உண்மையாக நேசிப்பவர்கள் நம்மை நேசித்துகொண்டு தான் இருப்பார்கள் என்பதை இந்தப்படம் உணர்த்துகிறது. 

ஒரு நல்ல Feel good love story படம். அவசியம் பார்க்கவும்.

Thursday, August 24, 2017

ஒரு கதை இரண்டு திரைக்கதை !!

A Hard Day ( 2014) - Directed by Kim Seong-hun
The Chronicles of Evil ( 2015) - Directed by Beak Woon-hak 

Produced by Jang Won-seok

Language : Korean

 Kim Seong-hun என்ற இயக்குனர் தயாரிப்பாளர் Jang Won-seokயை சந்திக்கிறார். “ஒரு காவல் அதிகாரி சந்தர்ப்பவசத்தால் ஒருவனை கொன்றுவிடுகிறான். தன்னை காப்பாற்றிக் கொள்ள இறந்தவனின் உடலை மறைக்கிறான். அடுத்த நாள், அவனை கண்டுப்பிடிக்கும் பொறுப்பு அந்த காவல் அதிகாரியிடம் வருகிறது.” என்று தனது கதையின் ஒன் லைன்னை சொல்கிறார். 

கதைப் பிடித்துப் போக ”A Hard Day” படத்தை தயாரிக்க Jang Won-seok ஒத்துக்கொள்கிறார். படம் வெளியாகி சக்கைப் போடு போடுகிறது. ஹாலிவுட் படங்களுக்கு நிகரான வசூலை கொடுக்கிறது. 

அடுத்த வருடம், இயக்குனர் Beak Woon-hak தயாரிப்பாளர் Jang Won-seok யிடம் தனது கதையை சொல்கிறார். “ஒரு காவல் அதிகாரி சந்தர்ப்பவசத்தால் ஒருவனை கொலை செய்கிறான். தன்னை காப்பாற்றிக் கொள்ள இறந்தவனின் உடலில் இருக்கும் தடயத்தை அழித்து அந்த இடத்தை விட்டு நகர்கிறான். அடுத்த நாள், இறந்தவனின் உடல் மக்கள் பொது வந்து செல்லும் இடத்தில் தொங்கவிட்டிருப்பதை பார்க்கிறார்கள். அந்த கொலையை கண்டுப்பிடிக்கும் பொறுப்பு அந்த காவல் அதிகாரியிடம் வருகிறது.” என்று தனது கதையை சொல்கிறார். 

நியாயமாக கதையை கேட்ட Jang Won-seokக்கு கோபம் வர வேண்டும். “நான் தயாரித்த படத்தின் கதையை மறுப்படியும் என் கிட்டையே சொல்றீயா ?” என்று அடித்து விரட்டியிருக்க வேண்டும். தனது Kim Seong-hun சொல்லி காப்புரிமை வழக்கு போட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி அவர் செய்யவில்லை. The Chronicles of Evil (2015) படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுக்கிறார். இந்தப்படமும் வசூலை அள்ளி குவித்தது. 



ஒரே கதையோடு வந்த இரண்டு இயக்குனருக்கும் வாய்ப்பு கொடுத்து, இரண்டையும் வெற்றிப்படமாக மாற்றினார் தயாரிப்பாளர் Jang Won-seok. இரண்டு படத்தின் ஒன் – லைன் ஒரே மாதிரியாக இருந்தாலும், அதன் திரைக்கதை கையாண்ட விதமும் வேறு விதமாக இருந்தது. 

இரண்டும் த்ரில்லர் படம் தான். நாயகனை மிரட்டும் வில்லன் பாத்திரமும் ஒரே மாதிரியான பொருப்பில் தான் இருக்கிறார்கள். பார்வையாளனுக்கு இரண்டும் ஒன்று போல் இல்லாத திரைக்கதை தான் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. 


A Hard Day கதை இது தான். 

நாயகன் நேர்மையற்ற காவல் அதிகாரி. தன் அம்மாவின் மரண செய்தி அறிந்து காரை வேகமாக ஓட்டிவருகின்றான். அந்தச் சமயத்தில் அவனது அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியதற்காக விசாரணை நடக்கிறது. அவனது மனைவி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறாள். தனது வாழ்க்கையில் இன்று தான் ’கெட்ட நாள்’ என்று நினைத்து வேகமாக வண்டி ஓட்டும் போது ஒருவன் மீது இடித்துவிட, அவன் இறக்கிறான். 

ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனை. இப்போது, விபத்தில் ஒருவன் இறந்திருக்கிறான். மேலும் பிரச்சனையை தவிர்க்கவும், தன்னை காப்பாற்றிக் கொள்ளவும் இறந்த உடலை மறைக்கிறான். அம்மாவுக்கு இறுதி மரியாதை எல்லாம் செலுத்தி, மீண்டும் வேலைக்கு செல்கிறான். அப்போது, அவனது மேலாளர் ஒரு புகைப்படம் கொடுத்து “இவன் ஒரு சமூக விரோதி. அவனை நாம் கண்டுப்பிடிக்க வேண்டும்.” என்கிறார். அந்தப் புகைப்படத்தில் இருப்பது தனது காரில் அடிப்பட்டு இறந்தவன். 

அப்போது, அவனுக்கு அலைப்பேசி அழைப்பு வருகிறது. ”இறந்தவனை நீ தான் ஒழித்து வைத்திருக்கிறாய் என்று எனக்கு தெரியும். அவனை என் முன்னால் நிறுத்தினால். நீ பிழைத்தாய்” என்று மிரட்டுகிறது. அங்கிருந்து படம் வேகமாக பயணிக்கிறது. 

இறந்த உடலை எப்படி மறைத்தான் ? தன்னை மிரட்டுவது யார் ? இருட்டில் நடந்த விபத்து எப்படி காவலர்கள் கண்டிப்பிடிக்கிறார்கள் ? என்பது தான் திரைக்கதை. * 

The Chronicles of Evil கதை. 

காவல்துறையில் பெரிய பதவி அடையப் போகும் நாயகன். அதற்கான சிபாரிசு பட்டியலில் முதல் பெயராக அவன் பெயர் இருக்கிறது. அதுவரை பிரச்சனையிலும் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று மேலாளர் அறிவுரை கூறியிருக்கிறார். 

தன் வெற்றியை தனது டீம்மோடு பார்ட்டியை கொண்டாடிவிட்டு வீடு திரும்ப ஒரு டாக்ஸியில் ஏறுகிறான். அப்போது, அந்த டாக்ஸி டிரைவர் ஊருக்கு வெளியில் அவனை கொலை செய்ய முயற்சிக்க, தற்காப்புக்கு டாக்ஸி டிரைவரை கொன்றுவிடுகிறான். இதை வெளியே சொன்னால் தனது பதவி உயர்வுக்கு தடையாக இருக்குமோ என்று நினைக்கிறான். தடயத்தை அழித்துவிட்டு தனது வீட்டுக்கு வருகிறான். 

அடுத்த நாள், இறந்தவனின் உடல் பொது இடத்தில் க்ரேனில் தொங்கியிருப்பதை மக்கள் பார்த்து அலறுகிறார்கள். காவல்துறையினருக்கு பெருத்த அவமானமாக இருக்கிறது. காரணம், உடல் தொங்கிகொண்டிருப்பது தலைமை காவலர் அலுவலகத்தில் அருகில். கொலையை கண்டிப்பிடிக்க நாயகனிடமே ஒப்படைக்கப்படுகிறது. 

ஊர் வெளியில் இருந்த உடல் எப்படி பொது இடத்தில் தொங்கவிட்டனர் ? தன் பதவி உயர்வை காப்பாற்றிக் கொள்ள தனது குழு துப்பறிவதை எப்படி தடுக்கிறான்? அதற்கான சாட்சியை எப்படி அழிக்கறான் ? என்பது தான் திரைக்கதை. 

இரண்டும் கதை ஒன்றாக இருந்தாலும், A Hard Day படத்தில் நாயகன் அச்சத்தில் நடுங்குகிறான். The Chronicles of Evil படத்தில் நாயகன் குற்றவுணர்வில் தவிக்கிறான். 

இரண்டு படத்திலும் த்ரில்லருக்கு எந்த விதமாக குறையும் வைக்கவில்லை. இரண்டும் சீட் நுணியில் அமர வைக்கும். திரைக்கதையின் வேகம் உங்களை பார்க்க வைக்கும். பாராட்ட வைக்கும். நீங்கள் இயக்குனராக இருந்தால் தமிழிலுக்கு ஏற்றவாரு திரைக்கதை எழுதி இயக்க வைக்கும். 

Must Watch Movie !!!!!!!!

Friday, August 11, 2017

House of the Disappeared ( 2013 - Thriller / Korean )

Direction : Lim Dae-woong 
Language : Korean 
Year : 2013 

வாழ்க்கை முடிந்தப்பிறகும், தள்ளாத வயதிலும் நாம் பாசம் வைத்த மனிதர்களை மறப்பதில்லை. அவர்கள் மீது வைக்கப்பட்டிருக்கும் அன்பும் குறைவதில்லை. அப்படி நாம் அன்பு செலுத்திய ஒருவர் என்னவானார் தெரியாமல் இருக்கும் போது அவர்களின் நலன் குறித்தும், இருப்பை குறித்தும் தெரிந்துக் கொள்ள வேண்டும் அக்கரை இருக்கும். அதுவே, ஒரு தாய் மகன் மீது இருக்கும் அன்பென்றால் மற்றவர்களை விட பத்து மடங்கு அக்கரையும், பரிதவிப்பும் இருக்கும். அப்படி தன் கண்முன்னால் மறைந்த மகனை ஆபத்து நிறைந்த அமானுஷ்ய வீட்டில் ஒரு தாயின் தேடல் தான் படத்தின் கதை.

ஆரம்பக் காட்சியில் மயக்கநிலையில் இருந்து ஒரு பெண் விழிக்கிறாள். சிதரப்பட்ட கண்ணாடி துண்டை எடுத்துக்கொண்டு வீட்டின் கீழ் பகுதிக்கு அவள் செல்ல, அங்கு தன் கணவன் கொலையானதை பார்க்கிறாள். அஞ்சியப்படி அவளது மகன் கதவருகே நிற்க, கொஞ்ச நேரத்தில் ஒரு உருவம் அவளது மகனை இழுத்துச் சென்று கதவை மூடிக்கொள்கிறது. தன் மகனை காப்பாற்ற அவள் கதவை திறக்கும் போது அங்கு பாறை மட்டுமே இருக்கிறது. 



கணவனை கொலை செய்த காரணத்திற்காக அவள் கைது செய்யப்படுகிறாள். 25 வருடங்கள் கழித்து கூன் விழுந்த கிழவியாக மீண்டும் அதே வீட்டுக்கு வருகிறாள். அமானுஷ்யம் நிறைந்த அந்த வீட்டில் தனது மகன் இன்னும் உயிருடன் இருக்கிறான் என்று நம்புகிறாள். அப்போது அவளிடம் பேட்டிக்காண்பதற்காக ஒரு பாதரியார் வர, அவரிடம் நடந்ததை கூறுகிறாள். இரவு நேரத்தில் அந்த வீட்டில் இருக்கும் அமானுஷ்ய சக்திகள் அவளை வெளியே போகச் சொல்லியும் வெளியேறாமல் தனது மகனை தேடுகிறாள். 

அந்த வீட்டில் இருக்கும் அமானுஷ்ய விஷயங்களுக்கு காரணத்தை பாதரியார் கண்டுப்பிடிக்க, கடந்தகாலப் பாத்திரங்கள் நிகழ்காலப் பாத்திரங்கள் ஒன்று சேர்ந்து நம்மை குழப்பாமல் தெளிவான செண்டிமென்ட் காட்சியோடு படம் முடிகிறது. 

ஒரு வட்டத்தில் எது தொடக்கம், எது முடிவு என்று சொல்ல முடியாதோ அதுப்போலவே திரைக்கதை அமைந்திருக்கிறது. எந்த இடத்தில் எந்த பாத்திரங்கள் கொண்டு படம் தொடங்கியதோ அதே இடத்தில் படம் முடிகிறது. இது தான் படத்தின் தொடக்கக் காட்சி என்று காட்டப்பட்டாலும், கதையின் தொடக்கம் இது தான் என்று உங்களால் சொல்ல முடியாது. அப்படி அழகிய வட்டமான திரைக்கதை. 

பாதிப்படத்திற்கு மேல் வயதான பெண்மணி அந்த வீட்டில் தனது மகனை தேடுவதாக இருக்கிறது. எண்பது சதவீதம் ஒரே வீட்டை சுற்றி தான் படம் நகர்கிறது. பார்வையாளனுக்கு கொஞ்சம் கூட சலிப்பு தட்டவில்லை. ஒவ்வொரு காட்சியின் போது நமக்கு திகிலூட்டும் வகையிலாக அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. இப்படி திகிலூட்டும் காட்சிகளோடு ஒரு செண்டிமெண்ட் கலந்தப்படத்தை பார்த்ததில்லை. 

இந்தப்படத்தை குறித்து இன்னும் எழுதினால் படத்தின் ஸ்வரஸ்யம் குறைந்துவிடும். கண்டிப்பாக பார்க்க வேண்டியப் படம்.

Wednesday, August 9, 2017

Soredake (That's It) ( 2015 - Japanese movie )

2015 சிங்கப்பூர் திரைப்பட விழாவுக்கு தேர்வானப் படம் என்ற ஒற்றைக் காரணத்திற்காக இந்தப் படம் பார்த்தேன். மோசமான படம் என்று சொல்ல முடியாது. படம் முழுக்க கதாநாயகன் ஓடிக்கொண்டிருக்கிறார். கெமிரா நாயகனை விட வேகமாக ஓடுகிறது. 

நிஜ வாழ்க்கை / கனவு வாழ்க்கை என்று அவ்வப்போது காட்சிகள் மாறுகிறது. மரணத்திற்கு பிறகும் கனவு வாழ்கிறது போன்ற குழப்பமான பல விஷயங்கள் வந்து போகிறது. இறுதிக்காட்சி ஆக்ஷன் காட்சியும் வீடியோ கேம் பார்ப்பது போன்ற உணர்வே ஏற்படுத்துகிறது. எவ்வளவு தான் Sub-title உதவி இருந்தாலும் படத்தோடு ஒட்டமுடியாமல் இருந்தது. மொத்தத்தில் டெக்னிக்கலாக இந்தப்படம் பார்க்கும் போது கடுப்படிக்கக் கூடியப்படமாக தான் எனக்கு இருந்தது. 

அப்படியிருந்தும், இந்தப் படத்தை பற்றி குறிப்பிட முக்கியக் காரணம் இருக்கிறது. அதன் கதை. நமக்கு அந்நியமான தோன்றும் இந்தப்படத்தின் கதை, அக்டோபர் 1 பிறகு நமக்கு நெருக்கமான கதையாக மாறப்போகிறது. 



Underground Gangல் கொத்தடிமையாக நடத்தப்படுகிறான் நாயகன். அங்கிருந்து தப்பிக்க முடிந்தாலும் அவன் அதற்கான முயற்சி செய்யவில்லை. காரணம், தன் பிறப்பு சம்மந்தமான அனைத்து சான்றிதழும் அந்த கூட்டத்தின் தலைவனிடம் இருக்கிறது. அந்த சான்றிதழ் இல்லாமல் வெளியே போனால் அவனால் சராசரி வாழ்க்கை கூட வாழ முடியாது. தனது சான்றிதழை தேடும் முயற்சியில் அந்த கூட்டத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் தகவல் அடங்கிய ஹார்ட் டிஸ்க் கிடைக்கிறது. அப்போது, அந்த கூட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் நட்பும் கிடைக்கிறது. அவர்களுக்குள் காதலும் மலர்கிறது. 

இருவரும் அந்தக் கூட்டத்தினர் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தில் அவர்களுக்கு தெரியாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள். தன்னுடைய சான்றிதழ் மட்டும் கிடைத்துவிட்டால், தனக்கு கிடைத்த ஹார்ட் டிஸ்க் உதவியோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வேன் என்று தனது காதலியிடம் கூறுகிறான். ஆனால், இந்த சமயத்தில் இருவரும் கூட்டத்தின் தலைவனிடம் மாட்டிக் கொள்ள, அவர்களுக்கு ஏற்ப்படும் நிலையை torrent மூலம் காணுங்கள். 

இது என்ன பெரிய கதை என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால், அடுத்த வருடம் இந்தப்படத்தை பார்ப்பவர்கள் தமிழில் எடுப்பார் என்று சொல்லலாம். நாயகி இந்த இடத்தை விட்டு செல்லலாம் என்று சொல்லும் போது, “நம்முடைய பிறப்பு சான்றிதழ் இல்லாமல் வெளியே சென்றால் உயிர் இருந்தும் பிணம் போன்றவர்கள்” என்பான். அவளுடைய காதலை விட, தன்னுடைய உயிரை விட, தன் அடையாளமான சான்றிதழ் அவனுக்கு முக்கியமாக இருந்தது. தன்னுடைய அடையாளத்தை பெறாமல் ஆபத்தான இடத்தை விட்டு செல்லக் கூடாது என்பதில் நாயகன் உறுதியாக இருப்பான். 

படம் பார்க்கும் போது அபத்தமாக தெரிந்ததால் எனக்கு இந்தப்படம் ஈர்க்கவில்லை. ஆனால், மரண சான்றிதழ் பெறுவதற்கு ’ஆதார் எண்’ கட்டாயமாக்க பட்டதில் இதுப் போன்ற வாழ்க்கையை நாளை நாம் வாழப்போகிறோம் என்று எண்ணம் வந்ததில், இந்தப்படம் மிக முக்கியத்துவம் பெற்றது. 

வலிமைப்படைத்தவனிடம் சாமான்யனின் ஆதார்-கார்ட் மாட்டிக்கொண்டால், அந்த சாமான்யனால் இயல்பான வாழ்க்கை வாழ முடியாமல் போகும். வேலைக்கு செல்ல முடியாது. வங்கி கணக்கு தொடங்க முடியாது. இறந்தாலும் மயாணத்தில் அனுமதி கிடையாது. அப்படிப்பட்ட ஆதார் கார்ட்டை எதிரியிடம் கொடுத்துவிட்டு எங்கு சென்று நிம்மதியாக வாழ முடியும் ? 

ஒரு பிணத்தை அடக்கம் செய்யும் போது தவறுதலாகவோ / வேண்டுமென்றே உங்கள் ஆதார்-எண் கொடுத்து அடக்கம் செய்யப்பட்டால், நீங்கள் உயிருடன் இருந்தும் இறந்ததற்கு சமம். நீங்கள் உயிருடன் இருக்குறீர்கள் என்பதை எதை கொண்டு நிருபனம் செய்வீர்கள் ? 

ஆதார் கார்ட் மூலம் நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்று எதிர்ப்பு தெரிவிப்பது ஒரு புறம் இருக்கட்டும். நமது ஆதார் எண்ணை கலவாடி தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் நடக்கவிருப்பதை எப்படி தடுக்கப்போகிறார்கள்? ஒருவனின் ஆதார் எண்ணை தெரிந்து கொண்டு அவனுக்கு எதிரான பல சிக்கலில் மாட்டிவிடும் சம்பவங்கள் நடக்கலாம். உங்களுக்கு எதிரான குற்றத்தில் ஜோடனை செய்து மாட்டிவிடலாம். 

முன்பு ரேஷன் கார்ட்டை அடமானம் வைத்து பணம் பெறுவது போல், எதிர்காலத்தில் ஆதார் எண்ணை அடமானம் வைத்து பணம் பெறும் சம்பவம் நடக்கும். இதை எப்படி தடுப்பார்கள் ? 

இதற்கான சட்டங்களும், நடவடிக்கைகளும் நடக்கும் வரை ’That’s it’ படத்தில் வரும் நாயகன் போல் தனது அடையாளத்தை பரிகொடுத்து அதற்காக போராடும் கதை இந்தியாவில் நடக்கவிருப்பதை தடுக்க முடியாது. 

Tuesday, July 11, 2017

A Violent Prosecuter ( 2016) (Crime movie – Korean )

தமிழில் நல்லப்படங்கள் வரும் போது அந்த கருத்தை உடைப்பதற்காகவே ”இது கொரியன் படத்தின் காப்பி” என்று விமர்சனம் வரும். கொரியன் படத்தை எப்படி தமிழில் காப்பி அடித்தார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே அந்தப்படத்தை பார்ப்பார்கள். இப்படி, உலகத்தை தன் பக்கம் பார்க்க வைக்கும் கொரிய சினிமா மட்டும் சொந்தமாக சிந்திக்கிறார்களா என்றால் இல்லை என்று சொல்லலாம். அதற்கு சிறந்த உதாரணம் ”A Violent Prosecuter”. ஏறக்குறைய ஆங்கிலத்தில் வெளியான ’The Shawshank Redemption’ பாதிப்பில் எடுக்கப்பட்ட படம். 



ஆரம்பக் காட்சியில் பறவைகள் சரணாயமான இடத்தை அழித்து கார்ப்ரேட் கட்டிடம் கட்டும் நிறுவனத்திற்கு எதிராக போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்புகிறார்கள். அவர்களை தடுத்து காவலர்கள் கார்ப்ரேட் நிறுவனத்திற்கு பாதுகாப்பு கொடுக்கிறது. அப்போது ஒரு சிலர் போராட்டக்காரர்கள் உடையில் உள்ளே நுழைந்து காவலர்கள் மீது தாக்குதல் நடத்த, பதிலுக்கு காவலர்களும் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கலைக்கிறது. 

மறு நாள் எல்லா ஊடகங்களும் காவலர்களை தாக்கியப் போராட்டக்காரர்களை குறித்து செய்தி ஒளிப்பரப்பாகிறது. போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசு தரப்பில் வழக்கு நடத்த ப்யூன் ஜே-வூக் நியமிக்கப்படுகிறான். அவன் இயல்பிலே கோபமாக நடந்து கொள்பவன். க்ளைட் என்று பார்க்காமல் கோபத்தை காட்ட தயங்காதவன். 

வழக்குக்காக கைது செய்யப்பட்ட போராட்டக்காரன் ஒருவனை விசாரிக்க தனது பாதுகாப்பில் வைத்திருக்கிறான். தனது வழக்கமான பாணியில் அவனை விசாரிக்கிறான். எந்த உண்மையும் சொல்லாத போராட்டக்காரன் அடுத்த நாள் இறக்கிறான். அவனது மரணத்திற்கு ப்யூன் தான் காரணம் என்று கைது செய்யப்பட்டு பதினைந்து வருட சிறை தண்டனை கிடைக்கிறது. 

சிறையில் அடைக்கப்படும் ப்யூன் ஜே-வூக் தனது சட்ட ஆலோசனையின் மூலம் சில அதிகாரிகளுக்கு உதவ, அவனுக்கு சிறையில் பல சலுகைகளும், நண்பர்களும் கிடைக்கிறார்கள். ஐந்து வருடம் கழித்து அந்த சிறையில் சி-வோன் என்பவன் அடைக்கப்படுகிறான். பறவைகளை குறித்து அவன் பேசும் வார்த்தைகள், தனது பாதுகாப்பில் இருந்து இறந்தவனின் வார்த்தைகளும் ஒன்றாய் இருக்க பியூன் சி-வோனின் உதவியை நாடுகிறான். 

போராட்டக் கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க கார்ப்ரேட் நிறுவனம் பயிற்சி கொடுத்ததை, அதற்காக தங்களை தயார்ப்படுத்தியதையும் சி-வோன் கூறுகிறான். இதற்கு பின்னால் கார்ப்ரேட் மூளை மட்டுமல்ல, அவனது சீனியர் வக்கீல் சூழ்ச்சியும் இருக்கிறது என்பதை ப்யூன் தெரிந்து கொள்கிறான். 

ப்யூன் சிறையில் இருந்த ஐந்து வருடக்காலத்தில் குழப்பத்தை விளைவித்த கார்ப்ரேட் நிறுவனம் நகரத்தின் முக்கியமான நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. அவனது சீனியர் வக்கீல் விருப்ப ஓய்வு பெற்று அரசியல் களத்தில் குதித்து தேர்தலை சந்திக்கும் முக்கிய வேட்பாளராக இருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிறையில் இருந்தப்படி சி-வோன் உதவியோடு ப்யூன் தனது வக்கில் மூளையைக் கொண்டு எப்படி வெளியே வருகிறான் என்பது தான் மீதி கதை. 

ஆரம்பச் சிறைக்காட்சிகளும், சிறை வார்டனிடம் நல்லப் பெயர் எடுக்கும் காட்சியை பார்க்கும் போது ஆங்கிலப்படமான் ’ The Shawshank Redemption’ உங்கள் நினைவுக்கு வரலாம். அதேப் போல் தன் மீது இருக்கும் கொலைப்பழியை நீக்குவதற்கு சிறையில் இருப்பவனின் உதவியை நாடுவதையும் நினைவுக்கு வரும். 

The Shawshank Redemption பாதிப்பு பல இடங்களில் தெரிந்தாலும் 2016ல் தென் கொரியாவில் வெளியான பட வசூலில் A Violent Prosecuter இரண்டாவது இடத்தில் இருக்கிறது. சிறந்த கமர்ஷியல் படமாக இந்தப்படம் விளங்குகிறது. 

இனிமே கொரியன் காரன் காப்பி அடிக்கமாட்டான் என்று யாராவது சொல்லுவீங்களா ?

Thursday, July 6, 2017

Sairat (2016 – Marathi )

ஏறக்குறைய பேஸ்புக்கில் இருக்கும் அனைத்து சினிமா பிரியர்களுமே இந்தப்படத்தை குறித்து எழுதிவிட்டார்கள். ( என்னுடைய பதிவு எத்தனையாவது பதிவு என்று தெரியவில்லை. ) 

படத்தின் பாதிப்பிலிருந்து மீள வேண்டும் என்றால் இதைக் குறித்து பகிர்ந்துகொண்டால் மட்டுமே மீள முடியும். அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்தப்படம். 

முதல் பாதி முழுக்க சாதாரண கல்லூரி காதல் படம் போல் நகர்கிறது. அவர்களின் காதல் பெற்றோர்களுக்கு தெரிய வர, வழக்கமான காதலர்கள் ஊரைவிட்டு ஓடிப்போகிறார்கள். ஆந்திராவில் ரோட்டுக்கடை அம்மாவிடம் அடைக்களமாகிறார்கள். அதன்பின் அவர்கள் வாழும் வாழ்க்கையும், இறுதி முடிவும் அனைவரையும் இந்தப்படம் பேச வைத்திருக்கிறது. 



ஜாலியான கமர்ஷியல் படமாக தொடங்கி, கொஞ்சம் எதார்த்தப்படமாக நகர்ந்து, முகத்தில் அறையும் அரசியல் படத்தின் முடிவாக முடிகிறது. எல்லாத்தரப்பினருக்கு திருப்தி தரும்படியான ஒரு காதல் காவியமாக திரைக்கதை அமைத்திருப்பதால் இந்தப்படம் வெற்றிப்பெற்றிருக்கிறது என்று சொல்ல வேண்டும். 

ஒட்டுமொத்தப்படத்தை தூக்கி நிறுத்துவது படத்தின் நாயகி தான். பொதுவாக, காதல் கதையென்றால் ஆண் பாத்திரம் முன்னிருத்தப்படும். காதலி அழும்போது ஆறுதல் சொல்லும் வீர ஆண்மகனைத் தான் சினிமா காட்டியிருக்கிறது. ’சைரட்’ படத்தில் காதலனைக் காப்பாற்றும் வீரமகளாக காட்டியிருக்கிறார்கள். 

முதல் பாதியில் தனது காதலை நாயகனுக்கு தெரியப்படுத்துவதும், அண்ணனின் புல்லட் ஓட்டுவதும், காதலனை தாக்கும் அடியாட்களிடம் இருந்து காப்பாற்றுவதும், காவல் நிலையத்தில் ‘நான் தான் அவனை கடத்தினேன்’ என்று கத்தும்போதும் காதலில் பெண்ணுக்கு இவ்வளவு துணிச்சல் இருக்குமா என்று வியக்கும் அளவிற்கு இருக்கிறது. கதைப்படி அதிகார வர்க்க சாதியில் பிறந்தப் பெண்ணாக காட்டப்படுவத்தால் தைரியமானப் பெண் என்று நினைத்தால், பிற்பாதியில் காதல் கணவனின் குணமாற்றத்தில் தடுமாறும் சராசரிப் பெண்ணாகவும் நடித்திருக்கிறார். நல்ல நிலைமைக்கு வரும் போது கணவனை தனக்கு பின் இருக்கையில் அமர வைத்து வண்டி ஓட்டும்போது குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வந்தப் பெண்ணாகவும் காட்டுகிறார். (இவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கக்கூடாது என்பது என்பது என் ஆவா !!) 


ஏதார்த்த இளைஞனாகவும், பிறகு சந்தேகப்படும் கணவனாகவும் நாயகன். தமிழ் சினிமாவின் நாயகிப் போல் காதலியின் காதல் பார்வையில் வேட்கப்பட்டு அதிகம் பேசாமல் இருக்கும் பாத்திரம். 

முதல் பாதி முழுக்க காதல், மோதல், செண்டிமெண்ட். இரண்டாம் பாதி முழுக்க வீட்டை விட்டு ஓடிவந்தால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று புத்தி சொல்கிறது. பல பிரச்சனையில் இருந்து மீண்டு சந்தோஷமாக வாழும் வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்படும் முடிவு… நமக்கு தெரிந்த அரசியலாக மாறுகிறது. 

கமர்ஷியல் படம் போல் தான் இருந்தாலும், சில காட்சியில் நடந்துக் கொண்டிருக்கும் அரசியல் முகத்தை கிழிக்கிறார் இயக்குனர். பூங்காவில் காதலர்களை தண்டிப்பதாக இருக்கும், இறுதிக்காட்சியும் ஒரு அரசியல் படத்திற்கான எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஓடி வந்த காதலர்கள் சமூகத்தில் என்ன பிரச்சனை சந்திப்பார்கள், அவர்களது குடும்பம் எப்படி பாதிக்கப்படும் என்பதையும் இந்தப் படம் காட்டுகிறது. 

சைரட் 100 கோடிக்கு மேல் வசூலான முதல் மராத்திப் படம். கன்னடத்திலும் ரீ-மேக்கில் இதில் நடித்த நாயகி தான் கன்னடத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார். ஹிந்தி ரீ-மேக் உரிமையை கரன் ஜோஹர் வாங்கியிருக்கிறார். 

உண்மையில் வேற்றுமொழிப் படத்தை பார்க்கிறோம் என்ற உணர்வே வராதப்படம். தமிழ் நாட்டில் நடக்கக்கூடிய ஒரு சம்பவமாக தான் இந்தப்படம் இருக்கிறது. தமிழ்நாட்டில் அரசியலையும் பேசுகிறது. இதேக் கதையில் பல தமிழ் படம் வேறு வேறுவிதமாக வந்திருந்தாலும், இந்தப் படம் ஏற்படுத்திய பாதிப்பு எதுவும் ஏற்படுத்தில்லை. 

அவசியம் பார்க்க வேண்டியப்படம்.

Thursday, April 13, 2017

May 18 ( 2007 - Korean film )

அதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்திற்கான விதையாக அமைந்துவிடும். இது போராட்டக்காரர்களுக்கு தெரியும். அதிகார வர்க்கத்திற்கும் தெரியும். அதனால், பெரும்பாலான போராட்டத்தை ஒடுக்கும் போது போராட்டக்காரர்களோடு, பொது மக்களையும் சேர்த்து தாக்குவது அதிகார வர்க்கத்தின் வழக்கம். அப்போது தான் பொது மக்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக வர மாட்டான் என்பது அதிகார வர்க்கம் நினைப்பது தான் காரணம்.

இந்த ஒடுக்குமுறையை தாண்டிப் போராடிய போராட்டங்கள் பல நூற்றாண்டு காலமானாலும் தனித்து நிற்கும். அப்படி, தென் கொரிய நாட்டில் தன்னெழுச்சி கண்ட க்வான்ஜு மக்கள் இராணுவ வீரர்களுக்கு எதிராகப் போராடி வீர மரணம் அடைந்த உண்மை சம்பவத்தை உணர்வு பூர்வமாக காட்டியப்படம் தான் ”May 18”. 



க்வான்ஜுவில் கல்லூரியில் படிக்கும் தனது சகோதரனோடு அமைதியான வாழ்க்கை வாழ்பவன் மின் – வூ. சகோதரனின் தோழியான நர்ஸ் மீது ஒரு தலைக்காதல். அவளை கவர்வதற்காக அவள் மருத்துவப் பயணம் செல்லும் இடத்திற்கு செல்கிறான். தனது காதலை சொல்ல முடியாமல் தவிக்கிறான். ஒரு கட்டத்தில் அவளுக்கும் மின் – வூவுக்கு பிடிக்க இருவரும் திரைப்படத்திற்கு செல்கிறார்கள். படம் பார்க்கும் போது அவளிடம் தனது காதலை சொல்லலாம் என்று மின் – வூ நினைக்க, அரசியல் மாற்றங்கள் அவனது வாழ்க்கையை திசைமாற்றுகிறது. அவனது வாழ்க்கையை மட்டுமல்ல க்வான்ஜு மக்களின் வாழ்க்கையையே புரட்டிப்போடுகிறது. ஒரு சிலரது வாழ்க்கையை முடித்துவிடுகிறது. 

அப்படி என்ன க்வான்ஜு நகரத்தின் நடந்தது ? அதற்கு, தென் கொரிய அரசியல் பின்னனியை தெரிந்துகொள்ள வேண்டும். 

அக்டோபர் 29, 1979 அன்று அரசியல் விருந்தில் கலந்துக்கொண்ட தென் கொரிய அதிபர் பார்க் ச்ஹூங் கொரிய உளவுத்துறை அமைப்பால் கொல்லப்படுகிறார். அவரை கொலை செய்த கிம் ஜெ-க்யூவும் கைது செய்யப்படவில்லை. பல குழப்பத்திற்கு பிறகு ச்யோய் க்யூ என்பவர் தற்காலிக அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால், புதிய அதிபரின் ஆணையில்லாமல் கொரிய உளவுத்துறையில் இருக்கும் முக்கியமான நான்கு உளவு அதிகாரிகள் இராணுவத்தினர் கைது செய்கிறார்கள். அதற்கு பின் இருந்தவர் ச்ஹுன்-டூ-வான் என்ற இராணுவ தளபதி. 

கொரிய உளவுத்துறை தனித்து இயங்கவும் தடை விதிக்கப்படுகிறது, அதை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார் ச்ஹுன்-டூ-வான். தென் கொரியாவின் குழப்பமான சூழ்நிலையை பயன்படுத்திய வட கொரியா மக்களை அரசுக்கு எதிராக தூண்டிவிடப்பார்க்கிறது என்ற வதந்திப்பரவியது. அதை தடுப்பதற்கு முன் ஏற்பாடாக பல பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர ச்ஹுன்-டூ-வான் நினைத்தார். போராட்டக்காரர்கள் என்று சந்தேகப்படுபவர்கள் இராணுவம் கைது செய்வதும் மட்டுமல்ல, மரணத் தண்டனை கொடுக்கவும் ஆணையிட்டார். 

மே 17 அதிகாரத்தை கைப்பற்றிய ச்ஹுன்-டூ-வான், மே 18 இராணுவத்தை க்வான்ஜு நகரத்திற்கு அனுப்புகிறார். இராணுவத்தினர் பொது மக்கள் மீது அராஜகமாக தாக்குதல் நடத்த பல அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். இராணுவத்தினர் கற்களும், பாட்டிலும் வீசி தங்கள் எதிர்ப்பை காட்டிவந்தனர். ஆரம்பத்தில் சில நூறு பேராக இருந்தப் போராட்டம், மே 20 அன்று 10,000 கொண்ட போராட்டமாக மாறுகிறது. 

அடுத்த நாள் ( மே 21), போராட்டத்தை ஒடுக்குவதற்காக தூப்பாக்கி சுடு நடத்தப்படுகிறது. இராணுவத்தின் எதிர்பாராத தாக்குதலால் மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றி கொள்ள சிதறி ஓடுகிறார்கள். அன்று மாலை போராட்டம் நடந்த சாலை வெரிச்சோடி காணப்படுகிறது. ஆனால், க்வான்ஜு மக்கள் இராணுவத்திற்கு பயப்படவில்லை. காவலர் ஆயுதக்கிடங்கை கைப்பற்றி இராணுவத்தின் மீது பதில் தாக்குதல் நடத்துகிறார்கள். 

தற்காலிகமாக பின்வாங்கிய தென் கொரிய இராணுவம் அடுத்த நாள் எதிரி நாட்டு இராணுவத்தை தாக்குவது போல் சொந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. பெரும் இராணுவப்படையினர் நகரத்திற்குள் வருகிறது என்று தெரிந்தும், சில பேர் கைப்பற்றிய இராணுவ கட்டிடத்தின் இருந்து இராணுவத்திடம் போராடி இறந்தார்கள். 

க்வான்ஜுவில் மே 18 அன்று தொடங்கிய எழுச்சியை இராணுவத்தினர் மே 27 அன்று முழுமையாக ஒடுக்கினர். இதில் ஈடுப்பட்ட இராணுவ வீரர்களுக்கு பல பதக்கங்கள் கொடுத்து ச்ஹுன்-டூ-வான் அரசு அழகுப் பார்த்தது. இராணுவ சர்வதிகாரம் நீண்ட நாள் நிலைப்பதில்லை என்பது வரலாறு. 

1988ல் அதிபர் பதவியை இழந்த ச்ஹுன்-டூ-வான் மீது பல ஊழல் புகாரும், வழக்கங்களும் சந்தித்தார். அதுமட்டுமில்லாமல் க்வான்ஜு படுகொலை காரணமாக இருந்ததற்காக அவருக்கு மரண தண்டனையும் வழக்கப்பட்டது. ஆனால், அப்போதைய அதிபர் அவரது மரணத் தண்டனையை ரத்து செய்தார். 

இராணுவத்திற்கு எதிராக போராடிய க்வான்ஜு மக்களுக்கு ஒரு நினைவு சின்னமாக க்வான்ஜு நகரில் எழுப்பப்பட்டது. க்வான்ஜு படுகொலை ஈடுப்பட்ட இராணுவ வீரர்களுக்கு கொடுத்த பதக்கங்களை தென் கொரிய அரசு திரும்பப் பெற்றது. 

இராணுவ அதிகாரத்தை துணிந்து எதிர்த்து போராடிய க்வான்ஜு மக்களின் போராட்டம் தென் கொரிய வரலாற்றில் மறக்க முடியாத சகாப்தமாக இருக்கிறது.

Tuesday, April 11, 2017

Edge of Seventeen ( 2016 - English Movie)

பதின்ம வயது என்பது ஆபத்தான வயது என்று பலர் சொல்வார்கள். காரணம், அந்த வயதில் தவறாக வழியில் செல்வார்கள், தவறாக பழக்கத்தை கற்றுக்கொள்வார்கள் என்பதற்காக மட்டுமல்ல, கற்றுகொள்ள வேண்டிய நல்ல விஷயங்களை தவறவிடக்கூடிய வயது என்பதாற்காகவும் தான். அந்த பதின்ம வயதில் உடல் ரிதியான மாற்றங்கள் மட்டுமல்ல, உளவியல் ரிதியான பல மாற்றங்களையும் சந்திக்க வேண்டியது இருக்கும். அதை எப்படி திறமையாக கையாண்டு, Balance ஆக வாழ்பவர்கள் வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு வர முடியும்.

அப்படி, பதின்ம வயதில் இருக்கும் ஒரு பெண் உளவியல் ரிதியான சந்திக்கும் சிக்கலை மையமாக கொண்ட கதை. 



நைடின், சிறுவயதில் இருந்தே யாருடனும் இனக்கமாக இருக்காதவள். சகோதரன், அம்மா கூட அந்நியமாக பார்ப்பவள். எந்த விஷயத்திலும் உற்சாகமோ, ஆர்வமோ இல்லாதவள். மற்றவர்களை போல் கலகலப்பாக இருக்க நினைத்தும் அவளால் அப்படி இருக்க முடியவில்லை. அவளுக்கு ஒரே ஆதரவு அப்பாவும், அவளது தோழி கிரிஸ்டா மட்டும் தான். 

அவளின் பதிமூன்று வயதில் அப்பாவும் இறந்துவிட, தோழி கிரிஸ்டா தவிர்த்து அவளுக்கு நெருக்கமாக யாருமில்லை. அவளின் பதின்ம வயது வந்தப் போது கூட அவளது அம்மாவும், சகோதரனும் அவளிடம் அக்கரையோடு நடந்துக்கொள்ளாமல் தங்கள் வாழ்க்கையில் சுயநலமாக வாழ்கிறார்கள். இதனாலையே நைடினுக்கு தனது சகோதரனை பிடிக்காமல் போகிறது. 

ஒரு கட்டத்தில் அவளது தோழி கிரிஸ்டாவும், சகோதரனும் காதலர்களாக மாற, கிரிஸ்டாவுடன் இருந்த நட்பையும் முறித்துக்கொள்கிறாள். தன் மீது யாரும் அன்பு செலுத்தவில்லை என்ற விரக்தியில் விபரீதமான முடிவு எடுக்கிறாள். அதில் இருந்து எப்படி மீண்டு வந்து, எப்படி மற்றவர்கள் போல் இயல்பானவளாக நடந்துக்கொள்கிறாள் என்பது தான் கதை. 

 பொதுவாக ஆங்கிலப்படத்தில் இதுப் போன்ற சப்ஜெட்டில் படம் வருகிறது என்றால் செக்ஸுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால், செக்ஸுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உளவியல் ரிதியாக தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் பதின்ம வயதுப் பெண் எப்படி அதில் இருந்து மீண்டு வருகிறாள் என்பது படமாக எடுத்திருப்பதை பாராட்டியாக வேண்டும். 

குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டு, இரட்டை மடங்காக வியாபாரமானப்படம். அமெரிக்காவில் விருதுகள், நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல், டோரண்டோ திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. 

 கொஞ்சம் பட்டைத்தீட்டி, டிங்கரிங் செய்து தமிழ் கலாச்சாரத்திற்கு மாற்றினால் தமிழ் படத்திற்கு நல்ல கதையாக அமையும்.

Tuesday, April 4, 2017

The Classified Files ( 2015 – Korean Crime Thriller)

பொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் ? குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக பணத்தை பெற்றோர்களிடம் பெற்று, குழந்தையை அவர்களிடம் ஒப்படைக்கிறோமோ தங்களுக்கு பாதுகாப்பு என்று கடத்தல்காரர்கள் நினைப்பார்கள். அதே சமயம் பணத்தை கொடுக்க முடியாத பெற்றோர்கள் போலீஸிடம் சென்று, பணம் கொடுக்கும் போது பிடித்தால் என்ன செய்வது என்ற அச்சம் அவர்களுக்குள் இருக்கும். 

இந்த அடிப்படை உண்மையை தெரிந்த கடத்தல்காரர்கள் வழக்கமான யுக்தியை மாற்றுகிறார்கள். குழந்தையை கடத்தி, பதினைந்து நாள் வரை குழந்தையின் பெற்றோரை தொடர்பு கொள்ளாமல் இருக்கிறார்கள். போலீஸ் குழந்தை இறந்திருக்கும் என்று தங்களின் அடுத்த வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெற்றோரிடம் மிரட்டி பணம் கேட்கலாம் என்று புதிய யுக்தியை கையாள்கிறார்கள். 

கோரியாவில் நடந்த உண்மை கடத்தல் சம்பவத்தை கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் ” The Classified Files”. 


கோரியாவில் இருக்கும் புசான் நகரத்தில் பள்ளி சிறுவ/சிறுமிகளை கடத்தும் நிஜ கடத்தல்காரர்களிடம் இருந்து 33 நாட்களுக்கு பிறகு ஒரு சிறுமியை மீட்ட உண்மை சம்பவத்தை கொண்டப் படம். 

பள்ளியில் இருந்து ஈன் – ஜூ என்ற சிறுமி கடத்தப்படுகிறாள். கடத்தப்பட்ட சிறுமியைக் குறித்து எந்த விதமான தகவல் இல்லை. போலீஸுக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. ஒரு வேளை சிறுமியை கொன்றிருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது. சிறுமியின் அம்மா தனது மகள் நிஜமாகவே இறந்துவிட்டாளா என்பதை தெரிந்துகொள்ள ஆரூடம் சொல்லும் கிம் ஜோங்-சனிடம் செல்கிறாள். அவளது மகள் உயிரோடு இருப்பதாக ஆரூடன் சொல்கிறான். கடத்தப்பட்ட வழக்கு ஜோங்-கில் என்ற காவலாளியிடம் வருகிறது. 

எந்த துப்பும் இல்லாத சமயத்தில் கடத்தியவர்கள் 15 நாள் கலித்து பெற்றோர்களை தொடர்பு கொண்டு பணம் கேட்கிறார்கள். பெற்றோர்களில் போன் கால்களை இடைமறைத்து கேட்கும் ஜோங்-கில், அவனுக்கு உதவியாக ஆரூடம் சொல்லும் கிம் ஜோங்-சன் இருக்கிறான். 

 சக காவலர்கள் அந்த சிறுமி இறந்திருப்பாள் என்று முடிவில் இருக்க, ஆரூடன் கிம் ஜோங்-சன் வார்த்தை மீது இருந்த நம்பிக்கையில் சிறுமியின் தேடலில் ஜோங்-கில் தீவிரமாக இயங்குகிறார். அவர்கள் இருவரும் சிறுமியை எப்படி மீட்டார்கள் என்பது தான் கதை. 

பகுத்தறிவுக்கு ஒப்பாத ஆரூடமும், காவலர்களுக்கு உதவும் பாத்திரமாக வருவது தான் ஏற்க முடியவில்லை. இத்தனைக்கும் உண்மை சம்பத்தை அடிப்படையாக கொண்டப் படம் என்று சொல்லும் போது ஆரூடம் க்ரைம் இன்வஸ்டிகேஷனுக்கு உதவுமா போன்ற கேள்வி தோன்றுகிறது. 

படம் முடியும் போது நிஜமான ஜோங்-கில் , கிம் ஜோங்-சன் படங்களை காட்டி இறுதி வரையில் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்ததாக காட்டப்படுகிறது. 

Must Watch Movie என்று சொல்ல மாட்டேன். ஆனால், காவலர்களுக்குள் இருக்கும் உள் அரசியல் விசாரணையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதில் இந்தப் படத்தில் தெரிந்து கொள்ளலாம். ஜோங்-கில் சிறுமி மீட்பதற்காக போராடும் போது சக காவலர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஆனால், வெற்றி கிடைக்கும் போது அவனது பெயரை பின்னுக்கு தள்ளி பதக்கங்களை வாங்கிகொள்கிறார்கள். 

எல்லா ஊரிலும், அலட்சியம், ஈகோ, அடுத்தவன் உழைப்பில் குளிர்காய்யும் காவலர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்தப் படத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Friday, March 31, 2017

Office ( 2015 – Korean Thriller movie )

ஒருவனுக்கு அலுவலகத்தில் வேலை கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் எல்லாம் கிடைத்த மாதிரி. அதில் வரும் வருமானத்தில் தனது குடும்ப சந்தோஷத்தை கவனித்து கொள்ள முடியும். தேவைகளை நிறைவேற்றி கொள்ள முடியும். கடைசிக் காலத்திற்கு திட்டமிட முடியும். ஆனால், அதே அலுவலக வேலை அவனுக்கு மன அழுத்தத்தையும் கொடுக்கும். குடும்ப சந்தோஷத்தையும் கெடுக்கும். இன்றைய காலக்கட்டத்தில் அலுவலக வேலை, குடும்ப வாழ்க்கையை சிதைத்து கொண்டிருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. இரண்டையும் சமமாக நடத்துபவனால் மட்டுமே வெற்றிக்கரமாக வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியும். 

அப்படி பலரது வாழ்க்கையை தீர்மானிக்கும் அலுவலகத்தை சுற்றி நடக்கும் கதை தான் “Office”. 

அலுவலகத்தில் வீட்டுக்கு வரும் கிம் தனது அம்மா, மனைவி, மகன் என்று மொத்த குடும்பத்தையும் சுத்தியலால் அடித்து கொலை செய்து தலைமறைவாகிறான். 

அடுத்த நாள் காவலர்கள் அவன் வேலை செய்த அலுவலகத்தில் அவனைப் பற்றி விசாரிக்கிறார்கள். யாரும் அவனைப் பற்றி தவறாக சொல்லவில்லை. எந்த விதமான கெட்டப் பழக்கமோ, கள்ளத் தொடர்போ இல்லை. அலுவலகத்தில் அடுத்த சீனியர் மேனேஜராக வரக்கூடிய லிஸ்டில் இருப்பவன். பணியின் அழுத்தம் காரணமாக இப்படி செய்திருக்கலாம் என்று ஆரம்பத்தில் போலீஸ் சந்தேகப்படுகிறது. 

அதே அலுவலகத்தின் ஒப்பந்த ஊழியராக இருக்கும் மி-ரே தனது வேலை நிரந்தத்திற்காக கடுமையாக உழைப்பவள். விசாரணையின் போது தனது வேலையை காப்பாற்றிக் கொள்ள மி-ரே கிம்மைப் பற்றி எதுவும் சொல்லாமல் மறைக்கிறாள். 

சீனியர் மேனேஜர் சேலஸ் ரிப்போர்ட் தயாரிக்க வேண்டிய வேலையை கிம்மிடம் கொடுத்திருந்தார். இப்போது அவன் இல்லாததால் கிம்முக்கு அடுத்தப்படியாக இருப்பவனிடம் இந்த வேலையை கொடுக்கிறார். 

காவலர்கள் விசாரணையின் போது கொலை நடந்த அன்று அலுவலகத்தின் ரெக்கார்ட்டான சி.சி.டி.வி காமிரா புட்டேஜ்யை பார்க்கிறார்கள். அதில், தனது குடும்பத்தை கொலை செய்த கிம் மீண்டும் அலுவலகத்திற்கு வந்தது தெரிகிறது. ஆனால், மீண்டும் அலுவலகத்தை விட்டு செல்லவில்லை. அப்படியென்றால் அவன் அலுவலகத்திற்குள் எங்கையோ மறைந்திருக்கிறான். 



அந்த சமயத்தில் சேல்ஸ் ரிப்போர்ட் தயாரிக்க வேண்டியவன் கொல்லப்படுகிறான். மீட்டிங் நடக்கும் இடத்தில் அவனது பிணம் கிடக்கிறது. தொடர்ந்து சேல்ஸ் ரிப்போர்ட் தயாரிக்கச் சொன்னப் பெண்ணும் இறக்கிறாள். கிம் தான் கொலை செய்திருப்பான் என்று அலுவலகத்தில் இருப்பவர்கள் சந்தேகப்படுறார்கள். தொடர்ந்து கொலை செய்யும் கிம் மி-ரேவை பார்க்கும் போது அன்போடு பேசுகிறான். அவனை பார்க்கும் போது வரும் அதிர்ச்சியில் காவலர்களையோ, மற்றவர்களையோ தொடர்பு கொள்ள முடியவில்லை. 

கிம் எதற்காக இத்தனை கொலை செய்ய வேண்டும் ? நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட்டுக்கும், கொலைக்கும் என்ன சம்மந்தம் ? ஒப்பந்த ஊழியரான மி-ரேவிடம் மட்டும் எதற்காக பேசுகிறேன் ? என்பதை அறிந்துகொள்ள படத்தை டவுன்லோட் செய்து/ DVD வாங்கி பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 

வழக்கமான சைகோ த்ரில்லர் வகை கதை தான். ஆனால், திரையில் காட்டிய விதத்தை பாராட்டியாக வேண்டும். படத்தில் பெரிய முடிச்சுகள் கிடையாது. யார் கொலை செய்கிறார் என்பதை ஒரு கட்டத்தில் எளிதில் யுகித்துவிடலாம். ஆனால், படம் பார்க்கும் பார்வையாளர்கள் தங்களுக்குள்ளே ஆயிரம் முடிச்சு அவர்களாகவே போட்டுக்கொள்வார்கள். அதை எப்படி அவிழ்க்கப் போகிறார் என்ற ஸ்வாரஸ்யத்தையும் வளர்த்துகொள்வார்கள். ஆனால், அது முடிச்சு அல்ல, சாதாரண ஒரு Coincidence என்பதை போல படம் செல்லும். 

உதாரணத்திற்கு, காலை அலுவலகத்தில் எல்லோரும் 9 மணிக்குள் வந்துவிட வேண்டும். நடக்கும் கொலை இரவு 9 மணியாக இருக்கிறது. இதற்குள் எதாரவது தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. ஆனால் அப்படி எதுவும் இல்லை. அதேப் போல் மீட்டிங் ரூம்மில் அவ்வப்போது தண்ணீர் ஒழுகிறது. அந்த ஓட்டையில் இருந்து தான் ஒரு பிணம் விழுகிறது. அதன் வழியாக தான் கிம் அலுவலகத்திற்குள் வருகிறார் என்று நினைத்தால்… அதுவும் இல்லை. இப்படி நாமே யுகித்துகொண்டு ஸ்வாரஸ்த்தை வளர்த்துக்கொள்ளும் காட்சிகள் நிரம்ப இருக்கிறது. 

அலுவலத்திற்குள் த்ரில்லர் கதையை தேடிக் கொண்டிருக்கும் இயக்குனர், உதவி இயக்குனர் கண்டிப்பாக இந்தப் படத்தை பார்க்க வேண்டும். வேலையில் மன அழுத்தத்தை ஏற்று கொண்டால் அலுவலகத்தில் சென்று வீட்டுக்கு வரும் வரை மட்டுமல்ல… வீட்டுக்கு வந்த பிறகும் அந்த அழுத்தம் நம்மையும், நம்மை சார்ந்து இருப்பவர்களையும் பாதிக்கும். 

வேலை என்பது வருமானதிற்கு மட்டுமே….நமது வாழ்க்கையை ஆள்வதற்கில்லை. 

Office  படத்தின் ட்ரெய்லர்


Tuesday, March 28, 2017

Beast of No Nation ( 2015 - American war film)

சிறுவர் போராளியை பற்றிய கதை. கொள்கை, அரசியல், யுத்தம் என்று எதுவும் தெரியாத சிறுவர்கள் தவறான வழிக்காட்டுதலின் பெயரால் ஆயுதங்களை தேர்வு செய்யப்படும் போது அவர்கள் வாழ்க்கை பார்க்கக் கூடாத பல விஷயங்களை பார்க்கிறார்கள். அந்த வயதில் கிடைக்க வேண்டிய பல விஷயங்களை இழக்கிறார்கள். அப்படி சந்தர்ப்பத்தால் ஆயுதம் ஏந்திய சிறுவன் அகுவைப் பற்றிய படம் இது. 

பெயரிடப்படாத ஆப்பிரிக்க நாடு. உண்மையில் அந்தா நாட்டின் பெயர் தேவையில்லை. பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் நடக்கும் ஒரே அரசியல் தான். தீவிரவாதி குழுக்கள் அரசுக்கு எதிராக இயங்கவதும், பொது மக்களை மிரட்டி உடைமைகளை பிடுங்குவதும், பொதுமக்களின் நிலத்தை அபகரிப்பதும் என்று மக்களுக்கு கஷ்டத்தை கொடுப்பார்கள். இன்னொரு பக்கம், அரசாங்கத்தின் இராணுவம் தீவிரவாதிகளை பிடிக்க வேண்டும் என்பதற்காக பொது மக்கள் இருக்கும் பகுதியை ஆக்கிரமிப்பதும், தீவிரவாதிகளிடம் யுத்தம் நடந்தவனம் இருப்பார்கள். 
 
இப்படிப்பட்ட சூழ்நிலை நடுவில் ஒரு கிராமம் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அந்தப் பெயரிடப்படாத நாட்டின் கிராமத்தில் சிறுவர்களை போல் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. இராணுவ வீரர்களிடம் தங்களது குப்பை பொருளை விற்பனை செய்யும் அளவிற்கு சுட்டியானவர்கள். குறிப்பாக நாயகன் சிறுவன் ‘அகு’ மிகவும் துறுதுறுவாக விளையாடுபவன். தனது பேற்றோர்கள், பெரிய சகோதரன் என்று அவனது வாழ்க்கையில் மகிழ்ச்சி சூழ்ந்து கொண்டிருந்தது. 
 
எவ்வளவு நாட்கள் தான் எல்லையோர கிராமத்தை மகிழ்ச்சியாக விட்டு வைப்பார்கள். போராளிகளுக்கும், இராணுவத்திற்கும் நடக்கும் போராட்டத்தில் கிராம மக்களை பாதுகாப்பு நலன் கருதி கிராமத்தை விட்டுச் செல்லச் சொல்கிறார்கள். வேறு வழியில் இல்லாமல் பெண்களையும், குழந்தைகளையும் மட்டும் அனுப்பி வைத்து தங்களது கிராமத்தை ஆண்கள் காப்பாற்ற நினைக்கிறார்கள். ஆனால், கிராமத்தை ஆக்கிரமித்த இராணுவத்தினர் தங்கியிருந்த ஆண்களை யாரும் அந்த கிராமத்து மக்கள் என்று நம்பவில்லை. தீவிரவாதிகள் என்று சந்தேகித்து சரமாரியாக சுட்டு தள்ளுகிறார்கள். 
 
 
 
தந்தை, சகோதரன் இழந்த சிறுவன் அகு தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள காட்டுப் பக்கம் ஒதுங்குகிறான். அங்கிருக்கும் தீவிரவாதிகளிடம் தஞ்சமடைந்த அவன், அவர்கள் செல்லும் ஆயுதப் போராட்ட வழியில் பயணிக்க நிர்பந்திக்கப்படுகிறான். அவர்கள் ஆணைக்கு ஏற்ப கொலையும் செய்கிறான். 
 
ஒரு கொலை செய்துவிட்டோம் என்ற குற்றவுணர்வில் இருக்கும் போது பாலியல் தொல்லைக்கு ஆளாகிறான். அடுத்த நாள் ஒரு இடத்தை ஆக்கிரமிக்கும் போது அவன் முன் ஒரு தாய் கற்பழிக்கப்படுவதைப் பார்க்கிறான். அதை தடுக்க முடியாத அவன் அந்தப் பெண்ணை கொலை செய்கிறான். நாளுக்கு நாள் அவனுள் மிருகம் வளர்வதை அவன் உணர்கிறான். 
 
ஒரு போராட்டத்தின் போது தனது சக நண்பன் ஸ்டைக்காவையும் இழக்கிறான். போராட்டக் கூட்டத்தில் இருந்து தப்பிக்கவும் முடியாமல், தூப்பாக்கி ஏந்தியப்படி கமாண்டர் சொல்வதை செய்ய வேண்டிய சூழ்நிலை, அரசியல் மாற்றத்தால் அவனது கமாண்டருக்கு இருக்கும் ஆதரவு குறைகிறது. குழு தலைமை அவனது பதவியை பறித்து வேறு ஒருவனை கமாண்டராக நியமிக்கிறார். இதை விரும்பாத தீவிரவாதக் குழுவின் கமாண்டர் புதிதாக நியமனம் செய்தவனை சூழ்ச்சியால் கொன்று, தனது குழுவை தக்கவைத்துக்கொள்கிறான். 
 
நாட்கள் செல்ல செல்ல… தூப்பாக்கி தோட்டாக்கள் இல்லாமல், குறைந்த உணவோடு அரசியல் ஆதரவில்லாமல் அந்த தீவிரவாதக் குழுவால் இயங்க முடியவில்லை. கமாண்டரை எதிர்த்து குழு கலைந்து சென்று இராணுவத்திடம் சரணடைகிறார்கள். இராணுவத்தின் மறுவாழ்வு மையத்தில் அகு மீண்டும் பழைய சிறுவனாக அங்கிருக்கும் சிறுவர்களோடு விளையாடுகிறான். 
 
ஆப்பிரிக்க நாட்டின் தீவிரவாதி குழுக்களில் மட்டுமல்ல…. உலகம் முழுக்க இருக்கும் தீவிரவாத அமைப்பில் சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். ஹிட்லரின் இராணுவத்தில் கூட சிறுவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் பழிவாங்கும் உணர்ச்சியை அவர்களுடைய பாலியத்தை அழித்து தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் கூட்டம் இருந்துக் கொண்டு தான் இருக்கிறது.

சிறுவர்கள் ’ஆயுத போராட்ட வாழ்க்கை’யை அவ்வளவு எளிதில் ஏற்பதில்லை. குடும்பம், மகிழ்ச்சி, விளையாட்டு, கொண்டாட்டம், குதுகலம் என்று எல்லாம் ஒரே நாளில் தொலைந்தப் போது, எல்லா கதவுகளும் அடைத்தப்பிறகு இருக்கும் ஒரே கதவாக ‘ஆயுதப் போராட்டம்’ மட்டும் தான். கண்ணுக்கு தெரிந்த கதைவை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் சிறுவர்கள் தள்ளப்படும் போது தான் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள்.

விரும்பி தேர்வு செய்யாத ஒரு விஷயத்தை வாழும் போது அந்த சிறுவர்களுக்கு இருக்கும் மன அழுத்தம், உளவியல் சிந்தனை என்று படம் முழுக்க ‘அகு’ என்ற சிறுவன் மூலம் நம்மால் உணர முடியும்.

அமெரிக்காவில் புலம்பெயர்ந்த நைஜிர்யா நாட்டை சேர்ந்த Uzodinma Iweala என்பவர் எழுதிய ”Beasts of No Nation” நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். பல திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டு பெற்றுயிருக்கிறது.

ஒருவன் எவ்வளவு திசை மாறினாலும், மிருகமாக திரிந்தாலும்… நாம் அடிப்படையில் மனிதர்கள். அதை உணர்ந்த நிமிடமே நம்முடைய பாதையை மாற்றி அமைத்துக் கொண்டு பயணிக்க முடியும் என்பதை இந்தப்படம் காட்டுகிறது.

Monday, November 21, 2016

உலக சினிமா : Pelé: Birth of a Legend (2016)

ஒரு மகன் தந்தைக்கு கொடுக்கும் உண்மையான வலி என்ன ? 

தான் தோற்றுப்போன கனவை மகன் நினைவுப்படுத்துவது. 

அதேப் போல், மகன் தந்தைக்கு கொடுக்கும் மிகப் பெரிய சந்தோஷம் என்ன ?

 தந்தை தோற்றுப்போன கனவை மகன் வெற்றிப் பெற்றுக்காட்டுவது. 

*




Pelé: Birth of a Legend கடைசி இருபது நிமிடங்கள் Peleவின் தந்தை இடத்தில் பார்த்தால் என்னவோ, கண்ணில் நீர் தழும்பப் படத்தை பார்த்தேன். Pelé என்ற தனி மனிதனின் வாழ்க்கை வரலாறோ, ஒரு விளையாடு வீரனைப் பற்றிய கதையோ இல்லை. 

1950ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ‘Ginga’ என்ற ஸ்டைலில் தான் பிரேசில் தோற்றதாக பரவலாக நம்பப்பட்டது. 1958ல் இறுதிப் போட்டியின் ஸ்விடன் பயிற்சியாளர் பிரேசில் விளையாட்டு வீரர்களில் உடலில் இருக்கும் ஒவ்வொரு குறைப்பாடுகளை சொல்கிறார். பிரேசில் வீரர்கள் மனமுடைந்து போகிறார்கள். ஸ்விடன் நாட்டில் ஸ்விடனை வெற்றிக்கொள்வது என்பது இயலாத காரியம் என்று நினைக்கிறார்கள். 

17வயதான Pelé அவர்களை உத்வேகப்படுத்துகிறான். அவர்களுடைய இயல்பான விளையாட்டை நினைவுப்படுத்துகிறான். பிரேசிலின் பயிற்சியாளரும் ‘Ginga’ முறை தான் ஸ்விடனை வெற்றிக்கொள்ள உதவும் என்று நம்புகிறார். இறுதிப்போட்டில் பிரேசில் வரலாறுக்காணாத 5-2 என்று வெற்றிப் பெறுகிறது. 

அதுவரை யாரும் மதிக்காத Ginga’ ஸ்டைலை கால்பந்தின் மிக அழகான ஸ்டைல் என்று வர்ணிக்கப்படுகிறது. கால்பந்து விளையாட்டில் மிகப் முக்கியமான ஸ்டைலாகவும் கருதப்படுகிறது. 


படம் முடியும் Pelé என்கிற Edson Arantes do Nascimento வரின் சாதனையை காண்பிக்கப்படுகிறது. இதுவரை 1283 கோல் அடித்திருக்கிறார். மூன்று முறை பிரேசில் உலகக்கோப்பை வெற்றி பெற உதவியிருக்கிறார். இறுதியாக சொல்லப்படும் சாதனையானாலும் முறியடிக்க முடியாத சாதனை ஒன்று குறிப்பிடப்படுகிறது. அது ஒரே ஆட்டத்தில் ஐந்து கோல் அடித்த ஒரே சர்வதேச வீரர் Pelé மட்டும் தான். இந்தச் சாதனையை ஒரு க்ளப் கால்பந்து போட்டியில் ஒருவர் ஐந்து கோல் அடித்து சாதனை செய்திருக்கிறாரான். அவர் Pelé வின் தந்தை Dondinho !!! 

பிரேசில் நாடே Peléவின் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. மகனின் வெற்றியில் Dondinho பேசமுடியாமல் வாயடைத்து கண்ணீர்ப்பட நிற்கும் காட்சி ஒரு தந்தையின் வெற்றியை காட்டுகிறது. படம் தொடக்கத்தில் இவர் கால்பந்தின் சச்சின் டெண்டுல்கர் என்று நினைத்தேன். படம் முடியும் போது பிரேசில் கால்பந்து உலகத்தின் கடவுளாக தெரிந்தார். 


படத்தின் பின்னனி இசை நமது ஏ.ஆர்.ரகுமான். இசை தான் வாழ்க்கை என்று இருக்கும் ஏ.ஆர்.ரகுமானுக்கு Pelé பற்றியோ, கால்பந்து பற்றியோ எதுவும் தெரியாது. அவருக்கு தெரிந்தது பிரேசிலியன் இசை மட்டுமே !!! 

Pelé படத்திற்காக இசையமைக்க ஏ.ஆர்.ரகுமான் கேட்டப்போது Peléவை பற்றி கூகுள் அடித்து தேடியிருக்கிறார். Peléவின் சாதனைக்கு Ginga ஸ்டைல் மிக முக்கியக் காரணம் என்று அறிந்துக்கொண்டார்.

வெஸ்டன் கலந்த பிரேசிலியன் இசையை பின்னனி கொடுத்ததோடு இல்லாமல் “Ginga” என்ற promo song யை உருவாக்கினார். Pelé படத்தின் திரைக்கதையில் இந்தப்பாடல் இல்லை. “Ginga” முறையை பயன்படுத்தி தான் Pelé வெற்றிப்பெற்றிருக்கிறார். அதனால், இந்தப்பாடல் அவசியம் என்று ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து அதற்கான புரோமோ பாடலில் பாடியும், தோன்றியும் இருக்கிறார். 


** 

Pelé: Birth of a Legend ஒரு தனி மனிதனின் சாதனைப் படம் மட்டுமல்ல… ஒரு தந்தையின் கனவு வெற்றியைப் பற்றியப் படம். கால்பந்து என்ற விளையாட்டை பிரேசில் மக்கள் மனதில் விதைத்தவனின் படம். #worldmovie #உலக_சினிமா

Wednesday, October 26, 2016

உலக சினிமா : Beautiful (2008)

‘ஆழகான பெண்ணை நம்பாதே’ என்ற வாசத்தை ஆட்டோவில் எழுதப்பட்டிருப்பதை படித்திருப்போம். உண்மையிலேயே பெண்ணின் அழகு ஆண்களுக்கு ஆபத்தாக இருக்கிறதா ? இல்லை. பெண்ணின் அழகை தேடிப் போகும் ஆண்களுக்கு தான் ஆபத்தாக இருக்கிறது. உண்மையில் பெண்ணின் அழகு ஆண்களைவிட சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு தான் ஆபத்தாக இருக்கிறது.

ஆண்களுக்கு ஆபத்து என்று சொல்வது கூட அந்தப் பெண் தனக்கு வரும் ஆபத்தை அடுத்தவர் மீது திருப்பிவிடுவது மூலம் தன்னை அவள் தற்காத்துக் கொள்கிறாள். 

கிம்-கி-டுக் கதை எழுதியப்படம். அவரின் உதவியாளரும், புது இயக்குனருமான ஜுஹ்ன் ஜெய்-ஹங் இயக்கியிருக்கிறார். படத்தை கிம் கி டுக் இயக்கவில்லை என்ற குறை தவிர, அவரது படத்தில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இந்தப்படத்தில் இருக்கிறது. அதாவது அவரின் ’உடல் அரசியல்’.

ஒரு வேலை கிம்-கி-டுக் இயக்கி, ஜுஹ்ன் ஜெய்-ஹங் பெயரை இயக்குனராக போட்டுவிட்டாரோ என்று தோன்றும். கதையும், அதன் காட்சியமைப்பும் எல்லாம் கிம்-கி-டுக்கின் சாயல் அதிகமாக இருக்கும்.

ஒரு பெண்ணுக்கு அழகு எவ்வளவு பெரிய சாபம் என்பதை தனது கதையில் யூன்-யியாங் பாத்திரம் மூலம் காட்டுகிறார்.



ஆரம்பக்காட்சியில், யூன்-யியாங்யை பொறாமை கண்களால் அவளது தோழி பார்க்கிறாள். அவளை போல் தான் அழகில்லை என்பதை ஏக்க மூச்சு விடுகிறாள். யூன்-யியாங்யை வெறுப்பேற்ற தனது காதலனை அறிமுகம் செய்கிறாள். ஆனால், அவளுடைய காதலன் ஏற்கனவே யூன்-யியாங்கிடம் காதலை சொல்லி, அவள் ஏற்காமல் மறுத்திருக்கிறாள். 

அவள் எங்கு சென்றாலும் ஆண்களின் கண்ணில் ஒரு காமப்பார்வை பார்ப்பதை அவள் உணர்கிறாள். அதை கடந்து தனது இயல்பு பணிகளை யூன் செய்கிறாள். 

அவளது அப்பார்ட்மெண்ட் காவலாளி யூன் – சீயோல் அவளை ஒரு தலையாய் காதலிக்கிறான். அதேப் போல், யூன்-யியாங்யை இன்னொருவன் அவளுக்கே தெரியாமல் ஒருதலையாய் காதலிக்கிறான். யூன் தோழியின் காதலன் யூன்-யியாங்யிடம் தவறாக நடந்துக் கொள்ள, யூன் – சீயோல் அவனை அடிகிறான். இதனால், யூன்-யியாங்யின் தோழிக்கு அவள் மீது வெறுப்பு அதிகமாகிறது. அவர்களுக்குள் நட்பு முறிகிறது. 

மன வருத்தத்தில் தனது அப்பார்ட்மெண்ட்டுக்கு வரும் யூன், ஒரு தலையாய் காதலித்தவன் அவளுக்கு தொல்லை கொடுக்கிறான். அவனது காதலை அவள் மறுக்க, வெறிக் கொண்டு அவளை கற்பழிக்கிறான். காவலர்கள் அவனை கைது செய்கிறார்கள். 

அப்போது அவளை கற்பழித்தவன், “நான் தவறு செய்ததற்கு காரணமே உன்னுடைய அழகு தான் காரணம்.” என்கிறான். 

தான் கற்பழிக்கப்பட்ட அதிர்ச்சியில் மீள முடியாமல் சாலையில் நடக்கும் போது மயக்கம் போட்டு கீழே விழ, அவளை காப்பாற்ற ஆண்கள் ”நான், நீ” என்று போட்டிப் போடுகிறார்கள். ஆண்கள் தன்னை மொய்ப்பதற்கு காரணம் தன்னுடைய அழகு தான் என்று வெறுப்படைகிறாள். தன் அழகை எப்படியாவது சிதைத்துவிட வேண்டும் என்று முடிவெடுக்கிறாள். 

தனது உடல் ஏடையை ஏற்றுக்கொள்வதற்காக வெறித்தனமாக உண்கிறாள். ஏடைப்போடும் உணவு பொருள் வாங்க வழியில்லாத போது திருடி உண்கிறாள். ஆனால், அவள் திருடிய பொருளுக்கு யூன் – சீயோல் பணம் கொடுக்கிறான். திருடிய பொருளை கழிவறையில் வெறித்தனமாக சாப்பிடும் போது வயிற்று வலியில் மயங்கி விழுகிறாள். 

அப்போது, யூன் – சீயோல் வந்து அவளை பார்க்க, தன்னையறியாமல் அவளுக்கு முத்தம் கொடுக்கிறான். தன் தவறை உணர்ந்து, தன்னை தானே கண்ணத்தில் அடித்து அவளை மருத்துவமனையில் சேர்க்கிறான். 

அவளை பரிசோதித்த மருத்துவரும் அவளை பரிசோதிப்பது போல் மார்ப்பகங்களில் கை வைக்கிறான். யூன்-யியாங் சுதாரித்து கொண்டு மருத்துவரை தடுக்க, அவர் அதிகமாக சாப்பிட்டதால் வயிறு வலி வந்தது என்று சொல்லி சமாளிக்கிறான். 

வீட்டுக்கு வரும் யூன்-யியாங் தன்னை ஒல்லியாக்கி கொள்வதில் முடிவு எடுக்கிறாள். அதற்காக மாத்திரை சாப்பிடுகிறாள். உடற்பயிற்சி செய்கிறாள். உணவு குறைத்துக் கொள்கிறாள். அவள் தன்னை வருத்திக் கொண்டு செய்யும் காரியத்தால் தன்னை பலவீனமாக்கிக் கொள்கிறாள். உடற்பயிற்சியின் போது மயங்கிவிழுகிறாள். 

அவளை காப்பாற்றிய யூன் – சீயோல் அவளை போட்டோ எடுக்கிறான். பின்பு தனது அறையில் அவளது புகைப்படங்களை மாட்டி அழகுப் பார்க்கிறான். 

இன்னொரு பக்கம், தனது செய்கையால் யூன்-யியாங் தன்னை பலவீனமாக்கி வருவதை உணர்கிறாள். அவள் சாதாரனமாக உண்ணும் உணவுக்கூட அவளுக்கு செரிக்காமல் வாந்தி வருகிறது. கண்ணாடியில் தனது முகத்தை பார்க்கும் போது, எப்படி தன்னை தானே சிதைத்துக் கொள்ள முயற்சித்திருக்கிறேன் என்பதை புரிந்துக்கொள்கிறாள். 

தன் அழகு கொஞ்சம் கொஞ்சமாக சிதைவதை அவள் தடுக்க நினைக்கிறாள். அதிகமாக மேக்-கப், ஆண்களை கவரும்ப்படியான கவர்ச்சி உடையில் செல்கிறாள். ஒரு ஆண் அவளிடம் சிரித்து பேச, அவளும் அவனுக்கு இனங்கி உறவுக்காக கழிவறைக்கு செல்கிறாள். ஆனால், அங்கு சென்றதும் அவள் மனம் மாறுகிறது. அவனிடம் தப்பிக்க அவனை தாக்குகிறாள். அடிவாங்கியவன் யூன்-யியாங்யை தாக்க முயற்சிக்க, அப்போது யூன் – சீயோல் அங்கு வந்து அவளை காப்பாற்றுகிறான்.

யூன்-யியாங்னுக்கு தன்னை கற்பழித்தவன் பின் தொடர்வது போன்ற பிரம்மை ஏற்படுகிறது. சிறுசிறுக அவள் மன சிதைவு ஏற்படுவதை யூன் – சீயோல் புரிந்துக்கொள்கிறான். அதனால், அவளை நிழல் போல் தொடர்கிறான். மனசிதைவில் அவள் தாக்க நினைக்கும் ஆண்களையும் காக்கிறான். அவள் வீட்டுமுன் நாய் போல் கிடக்கிறான். 

யூன்-சீயோல் யூன்-யியாங் மீது காதல் இருந்தாலும், எல்லா ஆண்களை போல அவள் உடல் மீது ஆசை இருக்கிறது. யூன்-யியாங்க்கு யூன்-சீயோல் மீது பரிவு வருகிறது. ஆனால், அவளின் மனம் யாரையும் ஏற்பதாக இல்லை. சீயோல் அவளை காப்பாற்ற முடியாமல் செயலற்றவனாக இருக்கிறான். அதனால், தனது கை தூப்பாக்கியை அவளது கரத்தில் ஓட்டி வைக்கிறான். மயக்கத்தில் இருக்குன் யூன்-யியாங்னுடன் உடலுறவு கொள்கிறான். 

மயக்கத்தில் இருந்து விழிக்கும் யூன்-யியாங் புன்னகையுடன் அவனை ஏற்றுக்கொள்கிறாள். ஆனால், ஒரு கட்டத்தில் தன் கையில் இருக்கும் தூப்பாக்கியால் அவளை சுட்டுக்கொள்கிறாள். கொஞ்ச நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பும் யூன்-யியாங் இறந்த யூன் – சீயோல் உடலை பார்த்து அலருகிறான். 

கை தூப்பாக்கியோடு வெளியே வரும் யூன்–யியாங் கண்ணில் படும் ஒவ்வொரு ஆண்ணையும் சுட்டுக்கிறாள். அவள் கண்ணுக்கு ஒவ்வொரு ஆண்ணும் அவளை கற்பழித்தவன் போல் தெரிகிறது. யூன்–சீயோல்லை சுட்டதற்கு காரணம் இது தான் என்பது புரிகிறது. அப்போது, அங்கு வரும் காவலர்கள் அவளை சுட, அவள் இறக்கிறாள். 

பிரேதப் பரிசோதனையில் யூன்–யியாங்யின் உடல் நிர்வணமாய் கிடக்க, பரிசோதனை செய்யும் மருத்துவரும் அவளின் உடலை புணர, படம் முடிகிறது. 

அழகான பெண்ணின் உடலுக்கு அவள் இறந்தப்பின்னும் ஆண்களிடம் இருந்து விடுதலை கிடைப்பதில்லை என்பதை படம் நமக்கு காட்டுகிறது. பெண்ணுக்கு எதிராக நடக்கும் வன்முறை, அவளை எந்த அளவுக்கு பாதிக்கிறது, அதனால் தன்னை தானே வெறுக்க தொடங்குகிறாள் என்ற உண்மையை “Beautiful” படம் உணர்த்துகிறது. 

பெண்ணுக்கு இலைக்கப்படும் பாலியல் கொடுமை அவர்களின்  உடலை மட்டுமல்ல. மனதையும் சேர்த்து பாதிக்கிறது. ஆண்ணின் பாலியல் உணர்வுக்காக உயிரை, வாழ்க்கையை இழந்தப் பெண்கள் ஏராளம். அவர்களிடம் தங்களை காப்பாற்றிக் கொள்ள பெண்கள் அழகை ஆயுதமாக பயன்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

செடியில் இருக்கும் அழகிய ரோஜா பார்ப்பது அழகாக இருக்கும். அதை பரிப்பதில் இருந்து அது தனது மரணத்தை நோக்கி பயணிக்கிறது. ஏறக்குறைய பெண் உடல் மீது நடத்தப்படும் வன்முறையும் பூவை பரிப்பதற்கு சமம் தான். வன்கொடுமையில் இருந்து மீண்டு வந்த பெண் இயல்பாக வாழ்ந்தாலும், வாழும் ஒவ்வொரு நாளும் உடலாலும், மனதாலும் நரகத்தையும், மரணத்தின் வலியையும் அனுபவித்து வருகிறாள்.

Friday, May 13, 2016

உலக சினிமா : Coastal Guard

தேசப்பற்று என்பது தானாக விரும்பி வர வேண்டியது. உணர்வுப்பூர்வமாக உணர்ந்து புரிந்துக் கொள்ள வேண்டியவை. அதேப் போல், தேச சேவை தானாக விரும்பி செய்ய வேண்டிய ஒன்று. அதற்கான மனநிலையை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும், உடலை தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும். கற்பனைகளும், வார்த்தைகளும் தேசபக்தியை ஊட்டிவிட்டு பக்குவற்றவர்களை தேவைக்கு அதிகமான பயிற்சியெல்லாம் அளித்தால் அவர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்பதற்கு “Coastal Guard” மிக சிறந்த உதாரணம். 

தென் கொரியா, வட கொரியாவின் எல்லை கடலோர பகுதியாக Saemangeum.

அந்த கடலோரப்பகுதியில், மீன் பிடிப்பவனாக ச்யோல் கு இருக்கிறான். அவனுக்கு மீ யோங் என்ற தங்கை உண்டு. அவள் கில் என்பவனை காதலிக்கிறாள். எல்லைப் பகுதியில் இருக்கும் இராணுவ வீரர்களுக்கு எதிரான விமர்சனம் இருப்பது போல் அந்த பகுதியில் இருக்கும் இராணுவ வீரர்கள் மீது இருக்கிறது. அவர்களால் தங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்பது அந்தப் பகுதி பொது மக்களின் கருத்து. 

கடலோர எல்லை பாதுகாப்பு படை வீரர்களில் ஒருவனாக காங் ஹாங் இருக்கிறான். வட கொரியா உளவாளியை எப்படியாவது பிடிப்பது தான் அவனுடைய வாழ்நாள் லட்சியம். சக வீரர்கள் இந்த பகுதியில் எந்த உளவாளியும் ஊடுரூவதில்லை என்று சொல்லியும் அவன் ஏற்பதாக இல்லை.

யுத்த சாயத்துடன் யுத்திற்காக தன்னை தயார் நிலையில் வைத்துக் கொண்டு கடலோர பகுதியை காவல் காக்கிறான். 

ஒரு முறை, காங் ஹாங் தனது நண்பனோடு செல்லும் போது அவனுக்கும் ச்யோல் கு என்ற மீனவனுக்கும், வாக்குவாதம் முற்றுகிறது. அப்போது, ச்யோல் கு “எங்கள் வரி பணத்தை நீங்கள் வீணடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். இங்கு உளவாளிகளே கிடையாது. உங்களிடம் இருப்பது வெத்து தூப்பாக்கி” என்கிறான். 

கோபத்தில், காங் ஹாங் “நான் உங்களை சுட நீங்கள் உளவாளியாக இருக்க வேண்டிய அவசியமில்லை” என்கிறான். ஒரு கட்டத்தில், இருவரும் அடித்துக் கொள்ளும் வரை செல்கிறார்கள். பிறகு, அந்த பகுதியில் இருப்பவர்கள் அவர்களில் சண்டையை தடுக்கிறார்கள். 

காங் ஹாங் எப்படியாவது ஒரு உளவாளியை பிடித்துவிட வேண்டும் என்று எண்ணம் வலுப்பெறுகிறது. 



இதற்கிடையில், ச்யோல் கு கில்லிடம் குடிப் போதையில் இராணுவ எல்லைக்குள் சென்று வந்தால் தனது சகோதரி உனக்கு தான் என்று கூறுகிறான். போதையில் ச்யோல் உறங்கிய பிறகு, மீ யோங் கில்லை அழைத்துக் கொண்டு இராணுவ எல்லைக்குள் நுழைகிறாள். கில் செல்ல தயங்கியும், அவள் மீது கொண்ட காதலால் செல்கிறான். அங்கு இருவரும் கலவியில் ஈடுப்படுகிறார்கள். 

காங் ஹாங் வீரத்தை நிரூப்பிக்கும் வகையில் அந்த கடற்கரையில் மனித நடமாடும் சத்தம் கேட்கிறது. யாரோ எல்லைக்குள் புகுந்துவிட்டனர் என்று தனது தூப்பாக்கியை தயார்ப்படுத்துகிறான். தூரத்தில் தெரியும் உருவத்தை குறிப்பார்த்து சூடுகிறான். அப்போது, ஒரு பெண் கத்தும் குரல் கேட்கிறது. தூப்பாக்கி, பெண் குரல் என்று அந்த எல்லைப்பகுதியில் இருப்பவர்கள் அனைவரும் தூக்கத்தில் இருந்து விழிக்கிறார்கள். 

இறந்த சடலத்தில் அருகே மீ யோங் அழுது கொண்டிருப்பதை ஹாங் பார்க்கிறான். அவர்கள் கலவி ஈடுப்பட்டிருக்கும் போது ஏற்ப்பட்ட சத்தத்தை தவறாக புரிந்துக் கொண்டு கில்லை சுட்டிருக்கிறான். தான் செய்த தவறை நினைத்து வருந்துகிறான். குற்றவுணர்வில் தவிக்கிறான். 

அடுத்த நாள், இராணுவ முகாம்மில் விசாரணை நடக்கிறது. அந்த பகுதி மக்கள் ஹாங்யை அடிக்கின்றனர். ஒரு கட்டத்தில் இராணுவத்தினர் தூப்பாக்கி காட்டி அவர்களை தங்கள் முகாமை விட்டு வெளியே துறத்துகிறார்கள். தனது கடமையை செய்ததற்காக ஹாங்க்கு ஏழு நாள் விடுமுறை கொடுக்கப்படுகிறது. அந்த பகுதி மக்களால் ஏற்படுத்தப்பட்ட காயத்தால் வழியும் இரத்ததை பார்த்து கொண்டு செல்கிறான். 

குற்றவுணர்வில் அவனால் முன்பு போல் இயல்பாக இருக்க முடியவில்லை. ஊருக்கு செல்லும் வழியில் ஒரு குழந்தையின் தூப்பாக்கியை உடைக்கிறான். தன் நண்பர்கள் மீது கோபப்படுகிறான். காதலியிடம் அன்பாக பேச மறுக்கிறான். அதனால் காதலியை விட்டு பிரிக்கிறான். 

மன உலைச்சலில் ஹாங் விடுமுறை முடிகிறது. எல்லைப்பகுதிக்கு வேலைக்கு வரும் போது ச்யோல் குவால் தாக்கப்படுகிறான். மீ யோங் தனது மனநிலை இழந்து பைத்தியமாக இருப்பதை பார்த்து, மேலும் குற்றவுணர்வில் தவிக்கிறான். 

தன் மீது இருக்கும் கோபத்தை தனது சக இராணுவ வீரர்கள் மீது காட்டுகிறான். வெறித்தனமாக அடிக்கிறான். இரவு நேரத்தில் தூப்பாக்கியோடு போது மக்கள் இருக்கும் பகுதிக்கு செல்ல முயற்சிக்கும் போது, மற்ற இராணுவ வீரர்கள் அவனை தடுக்க, தனது தூப்பாக்கியை வானத்தை நோக்கி சுடுகிறான். 

முரட்டு தனமாக நடந்துக் கொள்ளும் ஹாங் இனி இராணுவ வேலைக்கு தகுதியற்றவன் என்று சான்றிதழ் வழங்கி அவனை வேலையை விட்டு அனுப்புகிறார்கள். புத்தி பேதலித்த மீ யோங் அடிக்கடி இராணுவ எல்லைக்குள் நுழைகிறாள். அவள் ஒவ்வொரு முறை இராணுவ முகாமுக்குள் நுழையும் போது, ஒரு இராணுவ வீரனால் கற்பழிக்கப்படுகிறாள். தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவள் விளையாட்டு தனமாக இருக்கிறாள். 

ஒரு கட்டத்தில், மீ யோங் கற்பமாகிறாள். இந்த உண்மையறிந்த அவளது ச்யோல் கு இராணுவ முகாமுக்கு கோபமாக செல்கிறான். அங்கிருக்கும் கேப்டன் உதவியோடு தன் தங்கையோடு தவறாக நடந்து கொண்டிருப்பவர்களுக்கு இராணுவ தண்டனை வாங்கி கொடுக்கிறான். ஆனால், அவர்களுக்கு கொடுக்கும் தண்டனையால் பிறக்க போகும் குழந்தைக்கு என்ன பயனுமில்லை என்பதை சொல்கிறான். அதற்கு தான் ஒரு வழி செய்கிறேன் என்று கேப்டன் உறுதியளிக்கிறான். 

அன்றிரவு, மீ யோங் இராணுவ மருத்துவ முகாமுக்கு இழுத்து வரப்பட்டு கருக்கழைப்பு செய்கிறார்கள். ஹாங் தடுக்க நினைத்தும் முடியவில்லை. செயலற்றவனாக இருப்பதை தன் மீது கோபப்படுகிறான். 

கருகழைக்கப்பட்ட மீ யோங் மேலும் வெறிப்பிடித்தவள் போல் செயல்படுகிறாள். ச்யோல் கு வளர்க்கும் மீன்களை உயிருடன் கடித்து உண்கிறாள். தன் தங்கையில் நிலைமைக்கு காரணமாக இராணுவ வீரர்களை கொல்ல வேண்டும் என்று ச்யோல் கு தாக்க முயற்சிக்க இராணுவ வீரர்கள் அவனை கடுமையாக தாக்குகிறார்கள். அன்றிரவு ஒவ்வொரு இராணுவ வீரனும் மர்மமான முறையில் கொல்லப்பட்டு வருகிறார்கள். 

எதிரிகள் ஊடுரூவல் இருக்கிறது. உளவாளி அல்லது எதிரிகள் கடல் எல்லைப்பகுதிக்குள் நுழைந்துவிட்டார்கள் என்று பாதுகாப்பு பலப்படுத்துகிறார்கள். பகலில் கடுமையான பயிற்சி மேற்கொள்கிறார்கள். ஆனால், அப்படியும் அன்று இரவு இன்னொரு இராணுவ வீரன் இறக்கிறான். அப்போது அவர்களை தாக்குவது ஹாங் என்று தெரிகிறது. 

காட்சி மாறுகிறது. மக்கள் நடமாட்டம் கொண்ட பகுதியில் இராணுவ உடையுடன் ராணுவ வீரர்கள் ஓய்வு நேரத்தில் பாடும் பாடலல் ஒன்றை காங் ஹாங் பாடிக்கொண்டிருக்கிறான். பாடலைப் பாடி முடித்துவிட்டு, இராணுவ பயிற்சி செய்கிறான். மக்கள் வேடிக்கை பார்ப்பதற்காக கூடுகிறார்கள். அப்போது, தனது துப்பாக்கியில் இருக்கும் கத்தியால் ஒருவனை தாக்கியவுடன், குடியிருந்த மக்கள் பிதியடைகிறார்கள். அவனைப் போலீஸ் தூப்பாக்கியோடு சுற்றி வளைக்கிறது. கேமரா, காங் ஹாங்கின் முகத்தை க்ளோஸப்பில் காட்ட, துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது. 

அடுத்து, ராணுவ வீரர்கள் அனைவரும் சந்தோஷமாக வாலிபால் விளையாடும் காட்சியின் பின்னணியில், இந்தப் பாடல் பாட, படம் முடிகிறது.

கிம் கி டுக்கின் மிக நேர்த்தியான படங்களில் இதுவும் ஒன்று. துண்டான இரண்டு நாடுகளில் எல்லை பகுதி. தங்கள் நாட்டை காப்பாற்ற தென் கொரியாவில் கட்டாய இராணுவம் கொண்டு வரப்படுகிறது. உளவாளி, எதிரி ஊடுரூவல் இல்லாத போதும் போருக்கான பயம் இராணுவத்திற்காக செலவு செய்ய வேண்டியதாக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பல இளைஞர்கள் தங்கள் வாழ்க்கை தொலைத்து கடுமையான பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. தங்கள் இயல்பு தன்மையில் இருந்து மாறவும் முடியாமல், மாற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளும் போது மன பிழவு ஏற்படுகிறது. 

அதேப் போல், எல்லைப் பகுதியில் வாழும் மக்கள் இராணுவ வீரர்கள் எப்போது தூப்பாக்கியோடு நடமாடி அச்சத்தை ஏற்படுத்துவதால் மக்களின் மனநிலை பாதிக்கப்படுகிறது. எந்த நேரத்தில் அவர்கள் என்ன செய்வார்களோ எண்ணம் பொது மக்கள் மனதில் இருந்துக் கொண்டே இருக்கும். ஜனநாயகப்படி முறையான கேள்வியோ, அதற்கான பதிலோ அவர்களிடம் கேட்டு பெற முடியாது என்ற அச்சம் அவர்களிடம் ஒட்டிக் கொண்டே இருக்கும். 

 இந்தப்படத்தில் கிம் கி டுக் நேரடியாக தனது நாட்டை விமர்சனம் செய்கிறார். தென் கோரியாவில் இந்த படம் அதிகம் கவனம் பெறவில்லை. ஆனால், உலக அளவில் பல திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படம்.  

LinkWithin

Related Posts with Thumbnails