பிரபுதேவா, கார்த்திக் நடித்த “உள்ளம் கொள்ளை போகுதே” படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு காவல் அதிகாரி கண் பறிப்போன விவேக்கிடம், “மின்னல்ல அடிப்பட்டவன் உயிருக்கு போராடிட்டு இருக்கான். அவன் செத்தா நீ தான் Eye witness” என்பார். அதற்கு விவேக், “Eye இல்லடா. என்ன எப்படிடா Eye witness சொல்லுறீங்க?” என்பார்.
அந்த நகைச்சுவைக் காட்சி தான் இந்தப் படத்தின் த்ரிலாரான ஒன் – லைன். பார்வையற்ற பெண் ஒரு சம்பவத்திற்கு சாட்சியாக இருக்கிறாள். அதனால், அவளை தொடர்ந்து கொலை செய்யும் முயற்சிகள் நடக்கிறது என்பது தான் கதை.
நகரத்தில் மர்மமான முறையில் பெண்கள் கடத்தப்படுகிறார்கள். கடத்தப்பட்ட பெண்கள் என்னவானார்கள் என்று தெரியவில்லை. அவர்களின் சடலம் கூட கிடைக்கவில்லை. பெண்களை கடத்தும் மர்மமான நபரைக் குறித்து எந்த தடயமும் கிடையாது. இந்த நிலைமையில் பார்வையற்ற நாயகியை அவன் கடத்த முயற்சிக்க, அதில் இருந்து அவள் தப்பிக்கிறாள். அவளுக்கு பதிலாக வேறு ஒரு பெண் கடத்திவிட்டு அங்கிருந்து தப்பிக்கிறான் மர்ம மனிதன். அந்த கடத்தலுக்கு சாட்சியாக அந்தப் பெண் இருக்கிறாள்.
கடத்தியவன் ஒரு சைகோ கொலைகாரன். கடத்திய பெண்களை வன்புணர்ச்சி செய்து கொலை செய்பவன். பார்வையற்றப் பெண் தனக்கு எதிரான சாட்சியாக இருப்பதால் அவளை கொலை செய்ய முயற்சிக்கிறான். அவளைப் பற்றி எல்லா விபரமும் அவனுக்கு தெரிந்திருக்கிறது. அவளை தொடர்ந்து கண்காணிக்கிறான்.
காவலர்களுக்கும் நடந்த சம்பவத்திற்கு இவள் மட்டுமே சாட்சியாக இருப்பதால், அவள் கூறும் தகவலை வைத்து ’சைகோ’ கொலைக்காரனை கண்டுப்பிடிக்க முயற்சிக்கிறார்கள்.
பார்வையற்ற அந்தப் பெண்ணின் உதவியோடு காவலர்கள் சைகோ கொலைக்காரனை எப்படி பிடிக்கிறார்கள் ? சைகோவிடம் தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்கிறாள் ? என்பது தான் விறுவிறுப்பான திரைக்கதை.
ஆரம்பக் காட்சியிலையே தனது தம்பியையும், பார்வையையும் இழக்கும் நாயகியைக் காட்டிவிடுகிறார்கள். அவளின் வேலைக்கொண்டே அவளின் தனித்தன்மை எதுவென்று நமக்கு புரிகிறது.
கொலைக்காரன் நாயகியை கடத்தும் முயற்சியில் இருந்து படம் வேகமாக நகர்கிறது. தம்பி செண்டிமெண்ட் காட்சிகளும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.
பார்வையற்றப் பெண் எப்படி நடந்துகொள்வார் என்பதை Kim Ha-neul தனது நடிப்பால் ஒவ்வொரு காட்சியும் புரிய வைக்கிறார். பார்வையற்றவர்கள் எந்த மாதிரியான சாதனங்கள் பயன்படுத்துவார்கள், சில கருவிகள் அவர்களுக்கு எப்படி உதவியாக இருக்கும், அதிர்வுகளை வைத்து எப்படி உணர்வார்கள் என்பதை நம்பும் படியான காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.
அதேப் போல், டெலிவரி பாய், காவல் அதிகாரியின் நடிப்பு கனக்கச்சிதம். காவல் அதிகாரி நாயகியிடம் அசடு வளிவதும், பேசும் போது வியப்பதும் அவனுள் இருக்கும் மெல்லிய காதல் தெரிகிறது.
இரயில் நிலையத்தின் நடைப்பாதையில் ஒரு நேர்கொட்டில் மட்டும் சதுரங்க கல் வைத்து வெள்ளைநிறத்தில் பையிண்ட் அடித்திருப்பார்கள். எதோ அழகுக்கான செய்திருப்பார்கள் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால், பார்வையற்ற மாற்றுதிறனாளிக்கானது என்பதில் அவள் சைகோ கொலைக்காரனிடம் தப்பிக்கும் காட்சியில் உங்களுக்கு புரியும்.
பார்வையற்றவர்களுக்காக இரயில் நிலையத்தில் ஒரு பாதை இருக்கிறதா? நாங்கள் கவனித்ததில்லையே ? என்ற நீங்கள் வியக்கலாம். நாயகி தப்பிக்கும் பரப்பரப்பான காட்சியை பார்த்தப் பிறகு செண்டரல் ரயில் நிலையம் தவிர ஒரு சில இரயில் நிலையத்தில் தேடிப் பார்த்தேன் கண்ணில் இல்லை. பெரு நகர பஸ் நிலையிலோ ரயில் நிலையத்தில் பார்வையற்றவர்களுக்கான பாதை என்று நாம் இதுவரை யோசித்திருக்கிறோமா என்பதை இந்தக் காட்சி நம்மை கேள்வி கேட்க வைக்கிறது.
ஒரு கமர்ஷியல் த்ரில்லர் படத்தில் பார்வையற்றப் பெண் உலகத்தை இந்தப் படம் அழகாக காட்டியிருக்கிறது. இதுவரை தனக்கான உலகமாக இருந்தது, பார்வை பரிப்போனதும் தன்னை அந்நியமாகப் பார்க்கும் வலியை நாயகியின் பாத்திரம் உணர்த்துகிறது. தம்பி செண்டிமெண்ட்டோடு சொல்லியிப்பதால் நம்மை படத்தை ஒன்ற செய்கிறது.
அவசியம் பார்க்க வேண்டிய த்ரில்லர் செண்டிமெண்ட் படம்.
No comments:
Post a Comment