ஏறக்குறைய பேஸ்புக்கில் இருக்கும் அனைத்து சினிமா பிரியர்களுமே இந்தப்படத்தை குறித்து எழுதிவிட்டார்கள். ( என்னுடைய பதிவு எத்தனையாவது பதிவு என்று தெரியவில்லை. )
படத்தின் பாதிப்பிலிருந்து மீள வேண்டும் என்றால் இதைக் குறித்து பகிர்ந்துகொண்டால் மட்டுமே மீள முடியும். அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்தப்படம்.
முதல் பாதி முழுக்க சாதாரண கல்லூரி காதல் படம் போல் நகர்கிறது. அவர்களின் காதல் பெற்றோர்களுக்கு தெரிய வர, வழக்கமான காதலர்கள் ஊரைவிட்டு ஓடிப்போகிறார்கள். ஆந்திராவில் ரோட்டுக்கடை அம்மாவிடம் அடைக்களமாகிறார்கள். அதன்பின் அவர்கள் வாழும் வாழ்க்கையும், இறுதி முடிவும் அனைவரையும் இந்தப்படம் பேச வைத்திருக்கிறது.
ஜாலியான கமர்ஷியல் படமாக தொடங்கி, கொஞ்சம் எதார்த்தப்படமாக நகர்ந்து, முகத்தில் அறையும் அரசியல் படத்தின் முடிவாக முடிகிறது. எல்லாத்தரப்பினருக்கு திருப்தி தரும்படியான ஒரு காதல் காவியமாக திரைக்கதை அமைத்திருப்பதால் இந்தப்படம் வெற்றிப்பெற்றிருக்கிறது என்று சொல்ல வேண்டும்.
ஒட்டுமொத்தப்படத்தை தூக்கி நிறுத்துவது படத்தின் நாயகி தான். பொதுவாக, காதல் கதையென்றால் ஆண் பாத்திரம் முன்னிருத்தப்படும். காதலி அழும்போது ஆறுதல் சொல்லும் வீர ஆண்மகனைத் தான் சினிமா காட்டியிருக்கிறது. ’சைரட்’ படத்தில் காதலனைக் காப்பாற்றும் வீரமகளாக காட்டியிருக்கிறார்கள்.
முதல் பாதியில் தனது காதலை நாயகனுக்கு தெரியப்படுத்துவதும், அண்ணனின் புல்லட் ஓட்டுவதும், காதலனை தாக்கும் அடியாட்களிடம் இருந்து காப்பாற்றுவதும், காவல் நிலையத்தில் ‘நான் தான் அவனை கடத்தினேன்’ என்று கத்தும்போதும் காதலில் பெண்ணுக்கு இவ்வளவு துணிச்சல் இருக்குமா என்று வியக்கும் அளவிற்கு இருக்கிறது. கதைப்படி அதிகார வர்க்க சாதியில் பிறந்தப் பெண்ணாக காட்டப்படுவத்தால் தைரியமானப் பெண் என்று நினைத்தால், பிற்பாதியில் காதல் கணவனின் குணமாற்றத்தில் தடுமாறும் சராசரிப் பெண்ணாகவும் நடித்திருக்கிறார். நல்ல நிலைமைக்கு வரும் போது கணவனை தனக்கு பின் இருக்கையில் அமர வைத்து வண்டி ஓட்டும்போது குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வந்தப் பெண்ணாகவும் காட்டுகிறார். (இவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கக்கூடாது என்பது என்பது என் ஆவா !!)
ஏதார்த்த இளைஞனாகவும், பிறகு சந்தேகப்படும் கணவனாகவும் நாயகன். தமிழ் சினிமாவின் நாயகிப் போல் காதலியின் காதல் பார்வையில் வேட்கப்பட்டு அதிகம் பேசாமல் இருக்கும் பாத்திரம்.
முதல் பாதி முழுக்க காதல், மோதல், செண்டிமெண்ட். இரண்டாம் பாதி முழுக்க வீட்டை விட்டு ஓடிவந்தால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று புத்தி சொல்கிறது. பல பிரச்சனையில் இருந்து மீண்டு சந்தோஷமாக வாழும் வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்படும் முடிவு… நமக்கு தெரிந்த அரசியலாக மாறுகிறது.
கமர்ஷியல் படம் போல் தான் இருந்தாலும், சில காட்சியில் நடந்துக் கொண்டிருக்கும் அரசியல் முகத்தை கிழிக்கிறார் இயக்குனர். பூங்காவில் காதலர்களை தண்டிப்பதாக இருக்கும், இறுதிக்காட்சியும் ஒரு அரசியல் படத்திற்கான எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஓடி வந்த காதலர்கள் சமூகத்தில் என்ன பிரச்சனை சந்திப்பார்கள், அவர்களது குடும்பம் எப்படி பாதிக்கப்படும் என்பதையும் இந்தப் படம் காட்டுகிறது.
சைரட் 100 கோடிக்கு மேல் வசூலான முதல் மராத்திப் படம். கன்னடத்திலும் ரீ-மேக்கில் இதில் நடித்த நாயகி தான் கன்னடத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார். ஹிந்தி ரீ-மேக் உரிமையை கரன் ஜோஹர் வாங்கியிருக்கிறார்.
உண்மையில் வேற்றுமொழிப் படத்தை பார்க்கிறோம் என்ற உணர்வே வராதப்படம். தமிழ் நாட்டில் நடக்கக்கூடிய ஒரு சம்பவமாக தான் இந்தப்படம் இருக்கிறது. தமிழ்நாட்டில் அரசியலையும் பேசுகிறது. இதேக் கதையில் பல தமிழ் படம் வேறு வேறுவிதமாக வந்திருந்தாலும், இந்தப் படம் ஏற்படுத்திய பாதிப்பு எதுவும் ஏற்படுத்தில்லை.
அவசியம் பார்க்க வேண்டியப்படம்.
No comments:
Post a Comment