அதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்திற்கான விதையாக அமைந்துவிடும். இது போராட்டக்காரர்களுக்கு தெரியும். அதிகார வர்க்கத்திற்கும் தெரியும். அதனால், பெரும்பாலான போராட்டத்தை ஒடுக்கும் போது போராட்டக்காரர்களோடு, பொது மக்களையும் சேர்த்து தாக்குவது அதிகார வர்க்கத்தின் வழக்கம். அப்போது தான் பொது மக்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக வர மாட்டான் என்பது அதிகார வர்க்கம் நினைப்பது தான் காரணம்.
இந்த ஒடுக்குமுறையை தாண்டிப் போராடிய போராட்டங்கள் பல நூற்றாண்டு காலமானாலும் தனித்து நிற்கும். அப்படி, தென் கொரிய நாட்டில் தன்னெழுச்சி கண்ட க்வான்ஜு மக்கள் இராணுவ வீரர்களுக்கு எதிராகப் போராடி வீர மரணம் அடைந்த உண்மை சம்பவத்தை உணர்வு பூர்வமாக காட்டியப்படம் தான் ”May 18”.
க்வான்ஜுவில் கல்லூரியில் படிக்கும் தனது சகோதரனோடு அமைதியான வாழ்க்கை வாழ்பவன் மின் – வூ. சகோதரனின் தோழியான நர்ஸ் மீது ஒரு தலைக்காதல். அவளை கவர்வதற்காக அவள் மருத்துவப் பயணம் செல்லும் இடத்திற்கு செல்கிறான். தனது காதலை சொல்ல முடியாமல் தவிக்கிறான். ஒரு கட்டத்தில் அவளுக்கும் மின் – வூவுக்கு பிடிக்க இருவரும் திரைப்படத்திற்கு செல்கிறார்கள். படம் பார்க்கும் போது அவளிடம் தனது காதலை சொல்லலாம் என்று மின் – வூ நினைக்க, அரசியல் மாற்றங்கள் அவனது வாழ்க்கையை திசைமாற்றுகிறது. அவனது வாழ்க்கையை மட்டுமல்ல க்வான்ஜு மக்களின் வாழ்க்கையையே புரட்டிப்போடுகிறது. ஒரு சிலரது வாழ்க்கையை முடித்துவிடுகிறது.
அப்படி என்ன க்வான்ஜு நகரத்தின் நடந்தது ? அதற்கு, தென் கொரிய அரசியல் பின்னனியை தெரிந்துகொள்ள வேண்டும்.
அக்டோபர் 29, 1979 அன்று அரசியல் விருந்தில் கலந்துக்கொண்ட தென் கொரிய அதிபர் பார்க் ச்ஹூங் கொரிய உளவுத்துறை அமைப்பால் கொல்லப்படுகிறார். அவரை கொலை செய்த கிம் ஜெ-க்யூவும் கைது செய்யப்படவில்லை. பல குழப்பத்திற்கு பிறகு ச்யோய் க்யூ என்பவர் தற்காலிக அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால், புதிய அதிபரின் ஆணையில்லாமல் கொரிய உளவுத்துறையில் இருக்கும் முக்கியமான நான்கு உளவு அதிகாரிகள் இராணுவத்தினர் கைது செய்கிறார்கள். அதற்கு பின் இருந்தவர் ச்ஹுன்-டூ-வான் என்ற இராணுவ தளபதி.
கொரிய உளவுத்துறை தனித்து இயங்கவும் தடை விதிக்கப்படுகிறது, அதை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார் ச்ஹுன்-டூ-வான். தென் கொரியாவின் குழப்பமான சூழ்நிலையை பயன்படுத்திய வட கொரியா மக்களை அரசுக்கு எதிராக தூண்டிவிடப்பார்க்கிறது என்ற வதந்திப்பரவியது. அதை தடுப்பதற்கு முன் ஏற்பாடாக பல பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர ச்ஹுன்-டூ-வான் நினைத்தார். போராட்டக்காரர்கள் என்று சந்தேகப்படுபவர்கள் இராணுவம் கைது செய்வதும் மட்டுமல்ல, மரணத் தண்டனை கொடுக்கவும் ஆணையிட்டார்.
மே 17 அதிகாரத்தை கைப்பற்றிய ச்ஹுன்-டூ-வான், மே 18 இராணுவத்தை க்வான்ஜு நகரத்திற்கு அனுப்புகிறார். இராணுவத்தினர் பொது மக்கள் மீது அராஜகமாக தாக்குதல் நடத்த பல அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். இராணுவத்தினர் கற்களும், பாட்டிலும் வீசி தங்கள் எதிர்ப்பை காட்டிவந்தனர். ஆரம்பத்தில் சில நூறு பேராக இருந்தப் போராட்டம், மே 20 அன்று 10,000 கொண்ட போராட்டமாக மாறுகிறது.
அடுத்த நாள் ( மே 21), போராட்டத்தை ஒடுக்குவதற்காக தூப்பாக்கி சுடு நடத்தப்படுகிறது. இராணுவத்தின் எதிர்பாராத தாக்குதலால் மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றி கொள்ள சிதறி ஓடுகிறார்கள். அன்று மாலை போராட்டம் நடந்த சாலை வெரிச்சோடி காணப்படுகிறது. ஆனால், க்வான்ஜு மக்கள் இராணுவத்திற்கு பயப்படவில்லை. காவலர் ஆயுதக்கிடங்கை கைப்பற்றி இராணுவத்தின் மீது பதில் தாக்குதல் நடத்துகிறார்கள்.
தற்காலிகமாக பின்வாங்கிய தென் கொரிய இராணுவம் அடுத்த நாள் எதிரி நாட்டு இராணுவத்தை தாக்குவது போல் சொந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. பெரும் இராணுவப்படையினர் நகரத்திற்குள் வருகிறது என்று தெரிந்தும், சில பேர் கைப்பற்றிய இராணுவ கட்டிடத்தின் இருந்து இராணுவத்திடம் போராடி இறந்தார்கள்.
க்வான்ஜுவில் மே 18 அன்று தொடங்கிய எழுச்சியை இராணுவத்தினர் மே 27 அன்று முழுமையாக ஒடுக்கினர். இதில் ஈடுப்பட்ட இராணுவ வீரர்களுக்கு பல பதக்கங்கள் கொடுத்து ச்ஹுன்-டூ-வான் அரசு அழகுப் பார்த்தது. இராணுவ சர்வதிகாரம் நீண்ட நாள் நிலைப்பதில்லை என்பது வரலாறு.
1988ல் அதிபர் பதவியை இழந்த ச்ஹுன்-டூ-வான் மீது பல ஊழல் புகாரும், வழக்கங்களும் சந்தித்தார். அதுமட்டுமில்லாமல் க்வான்ஜு படுகொலை காரணமாக இருந்ததற்காக அவருக்கு மரண தண்டனையும் வழக்கப்பட்டது. ஆனால், அப்போதைய அதிபர் அவரது மரணத் தண்டனையை ரத்து செய்தார்.
இராணுவத்திற்கு எதிராக போராடிய க்வான்ஜு மக்களுக்கு ஒரு நினைவு சின்னமாக க்வான்ஜு நகரில் எழுப்பப்பட்டது. க்வான்ஜு படுகொலை ஈடுப்பட்ட இராணுவ வீரர்களுக்கு கொடுத்த பதக்கங்களை தென் கொரிய அரசு திரும்பப் பெற்றது.
இராணுவ அதிகாரத்தை துணிந்து எதிர்த்து போராடிய க்வான்ஜு மக்களின் போராட்டம் தென் கொரிய வரலாற்றில் மறக்க முடியாத சகாப்தமாக இருக்கிறது.
No comments:
Post a Comment