விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு காதலை காதலிக்க வைத்தப்படம்.
முதல் முறையாக சாருவின் விமர்சனத்தோடு நான் ஒத்துப்போகிறேன் என்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. ”படத்தில் வரும் ஒவ்வொரு வசனத்தையும் நான் எழுதியது போல் உணர்கிறேன். ஒவ்வொரு சம்பவமும் என் வாழ்வில் நடந்திருக்கிறது.” என்று சாரு கூறியிருக்கிறார்.
நான் அதற்கு ஒரு படி மேல் சொல்ல வேண்டுமென்றால் “எப்படியெல்லாம் காதலிக்க வேண்டும் என்று நினைத்தேனோ... அப்படியெல்லாம் ஆதி பாத்திரத்தின் மூலம் காதலிக்க வைத்து காட்டியிருக்கிறார்”.
இந்திய சினிமாவில் காதலையும், காமத்தையும் தனித்தனி பிரித்துக் காட்டி பழக்கப்படுத்திவிட்டனர். பார்வையாளனையும் அதை ஏற்க வைத்து இளைய சமூதாயத்திற்கு பெரிய சாபமாக மாற்றிவிட்டனர். மணிரத்னம் இந்த மரபை “ஓ.காதல் கண்மணி’ யில் உடைத்திருக்கிறார். காமத்திற்கு பிறகு வருவது தான் உண்மையான காதல். அதை இந்தப்படத்தில் பார்க்க முடிகிறது.
Living Together - ஒன்றாக வாழலாம். அனைத்தும் பகிர்ந்துக் கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் பிரிந்து போகலாம். உறவில் எந்த உத்திரவாதம் கிடையாது. ஆறு மாதமாக ஒன்றாக வாழ்ந்து, காமத்தை ரசித்தப் பிறகு பிரியும் தருவாயில் காதல் வெளிப்படுகிறது. (இதே கதையமைப்பில் பத்து படமாவது வெளிவரும்)
இரண்டாம் பாதி பலர் குப்பை என்று கூறினார்கள். நான் ஆதியாக படத்தில் பயணித்ததால் தாராவின் கண்ணீரை துடைக்கவும், தலைமுடிக்குள் விரலால் வருடவும், Dependent Husband விசாவில் அவளோடு செல்லவே விரும்பினேன். நித்யாமேனன் ரசிகனாக மாறிவிட்டேன். காஞ்சனா – 2 இந்த நினைப்பு மாறலாம். ( அடுத்த இரண்டு வருடங்களுக்கு விஜய், அஜித், சூர்யா, படங்களில் நடிக்க ஒரு நாயகி கிடைத்துவிட்டார்.)
திருமணத்திற்கு முன் வரும் காதலில் நினைத்த மாத்திரத்தில், நினைத்த இடத்தில் வெளிப்படுத்த தோன்றும். அந்த ஒரு நிமிடம் தவறவிட்டால் மீண்டும் அந்த நிமிடம் கிடைக்குமா என்ற பயன் ஒட்டியிருக்கும். அப்படி நினைத்த போழுது காதலை காட்டிவிடுவதால் பல காதல்கள் வெற்றிக்கரமாக திருமணத்தில் முடிகிறது. ஆனால், திருமணத்திற்கு பிறகு வரும் காதல் அப்படி இருப்பதில்லை. காதலில் திட்டமிட்டு வெளிப்படுத்தப்படுகிறது. இடம், பொருள், ஏவல், வவ்வால் எல்லாம் பார்க்க வேண்டிய நிர்பந்ததிற்கு தள்ளப்படுகிறோம். காதலிக்க நமக்காக ஒரு இடம் இருக்கிறது. அங்கு காதலித்துக் கொள்ளலாம். முத்தமிட்டுக் கொள்ளலாம் என்று வந்த காதல் உணர்வை தள்ளி வைக்க வைக்கிறார்கள். காதலிக்கும் போது பார்க்காத நாகரிகம், திருமணத்திற்கு பின் ஒட்டிக் கொள்கிறது. இதனால், பல காதல் திருமணம் விவாகரத்தில் முடிகிறது.
Living Together வரும் பிரச்சனை, சமூகப் பார்வை என்று டாக்குமெண்ட்ரி மாதிரி எடுக்காமல், காதலை மட்டுமே காட்டியிருப்பது சிறப்பு.
இந்த படத்திற்கு 100 மதிப்பெண் கொடுக்க வேண்டும் என்றால் மணி ரத்னம் - 90, வைரமுத்து - 10, ஏ.ஆர்.ரகுமான் - 0 என்று கொடுப்பேன். அலைப்பாயுதே, ரோஜா, திருடா திருடி அளவில் பாதிக் கூட ஏ.ஆர் கொடுக்கவில்லை என்று தான் தோன்றுகிறது. ஒன்று, இரண்டு பாடல் கேட்கும் படி இருக்கிறது. அதற்கு ஏ.ஆர்.ரகுமான் தேவையில்லை. ஹாரிஸ் ஜெயராஜ், பரத்வாஜ் போதும். ஏ.ஆர்.ரகுமான் என்றால் படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட்டாக இருக்க வேண்டும்.
மணிரத்னம் + ஏ.ஆர்.ரகுமான் + வைரமுத்து கூட்டனியில் வந்த பாடல்களில் பாதிப்பு இதில் இல்லை என்பது தான் வருத்தம். பின்னனி இசை மட்டும் நன்றாக இருக்கிறது. ”கடல்” படத்திற்கு கொடுத்தது போல் இல்லை என்பது தான் பெரிய ஆருதல்.
59 வயதில் இவ்வளவு இளமையோடு ஒருவனால் யோசிக்க முடியாம என்பது வியப்பாக இருக்கிறது. வசனம், காட்சி, பாத்திரம் அனைத்திலும் இளமை தெரிகிறது. வாழ்த்துக்கள் மணிரத்னம் சார் !!
தமிழில் சிறந்த காதல் படங்களில் (இதயம், காதல் கோட்டை, அலைபாயுதே, விண்ணைத்தாண்டி வருவாயா… ) வரிசையில் ”ஓ..காதல் கண்மணி” கண்டிப்பாக இருக்கும்.
குறிப்பு: இன்னும் நீளமாக வர வேண்டிய விமர்சனக் கட்டுரை. எழுதும் போது சுஹாசினி முகம் வந்து தொலைவதால், இதுவே அதிகம் என்று தோன்றுகிறது.
No comments:
Post a Comment