எத்தனையோ நல்ல படங்கள் வந்ததும் தெரியாமல் தோல்வியடைந்து பெட்டிக்கு போன பிறகு ’தேசிய விருது’ என்று அறிவிப்பு வரும். படத்தின் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். சென்ற வருடம் வரை ‘தேசிய விருது’என்பது தோல்வியடைந்த படங்களுக்கு ஊக்க மருந்தாகவும், ஆறுதலாகவும் இருந்து வந்தது. ஆனால், இந்த வருடம் தான் ‘தேசிய விருது’ ஊக்க மருந்தாக இருந்ததோடு இல்லாமல் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது.
’காக்கமுட்டை’ படத்தை அடுத்து தேசிய விருதால் அதிக எதிர்ப்பார்ப்போடு வெளியாகி பலரது பாராட்டைப் பெற்றப்படம் ’குற்றம் கடிதல்’.
இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு செக்ஸ் கல்விமுறையின் அவசியத்தை பிரச்சார நெடியில்லாமல் சொல்லும் படம். ஒவ்வொரு ஆசிரியருக்கும் மாணவர்களை தங்கள் பிள்ளைகளாக நினைக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
ஆறாம் வகுப்பு மாணவன் செழியன் சக மாணவியை பிறந்த நாள் வாழ்த்து சொல்வதாக நினைத்து முத்தம் கொடுக்கிறான். அந்த மாணவனை ஆசிரியர் மெர்லின் கேள்விக் கேட்க, அதற்கு ‘உங்கள் பிறந்தநாளுக்கும் முத்தம் கொடுப்பேன்’ என்று சொல்ல, ஆசிரியர் மெர்லின் கோபத்தில் அடிக்கிறார். அதிர்ச்சியில் மயங்கி விழும் மாணவன் செழியன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறான்.
ஒரு பக்கம் குற்றவுணர்ச்சியில் இருக்கும் ஆசிரியர் மெர்லினை காப்பாற்ற அவளது கணவன் மணி வெளியூருக்கு அழைத்துச் செல்கிறான். இன்னொரு பக்கம் அடித்த ஆசிரியர் தண்டிக்க வேண்டும் என்று செழியனின் மாமா மெர்லினை தேடுகிறார். இதற்கிடையில் செழியனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று பள்ளி முதல்வர் போராடுகிறார். மகனுக்கு இப்படியானதில் அதிர்ச்சியில் உறைந்து போய் செழியனின் அம்மா இருக்கிறார்.
அவரவர் தங்கள் பிரச்சனை குறித்து கவலைப்பட்டுக் கொண்டு இருக்க, ஊடகங்கள் இந்த பிரச்சனையை வைத்து விவாத நிகழ்ச்சி, கருத்துக் கேட்பது, என்று ஒளிப்பரப்புகிறார்கள். தங்கள் டி.ஆர்.பி ரேட்டிங்யை ஏற்றிக் கொள்கிறார்கள்.
மருந்துக்கூட தெரிந்த நடிகரோ, நடிகையோ இந்த படத்தில் இல்லை. பிரபலங்கள் நடிக்காதப்படம். அதுவே இந்த படத்தின் பலமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு நடிகர்களும் அந்த கதாப்பாத்திரமாகவே நமக்கு தெரிகிறார்கள். ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் தன்மை நமக்கு மிக எளியக்காட்சிகளில் இயக்குனர் பிரம்மா உணர்த்தியிருக்கிறார்.
’காக்கமுட்டை’ அடுத்து தமிழ் சினிமா ‘உலக சினிமா’ நோக்கி செல்கிறது என்பதை ’குற்றம் கடிதல்’ நிருப்பித்திருக்கிறது.
1 comment:
Very well written!!
Post a Comment