வெள்ளையர் காலத்தில் மேடை நாடக கலைஞர்கள் பற்றிய கதை. ‘அங்காடி தெரு’ போல் மிக அற்புதமான கதைக் களன்.
நாடகக் கலைஞர்கள் சந்தித்த சவால், நாடகக் கலைஞர்களுக்கு கொடுக்கும் பயிற்சி, அவர்களின் நடிப்பு திறன், பயாஸ்கோப் (சினிமா) வரவால் அவர்களுக்கு ஏற்ப்பட்ட பாதிப்பு, பாலியல் தொல்லை என்று பல விஷயங்களில் எதை சொல்லப் போகிறார் என்று யோசித்துக் கொண்டு படம் பார்த்தால் மிகுந்த ஏமாற்றம் தான். வழக்கமான முக்கோண காதல் கதையும், இரண்டு பேர்களுக்குள் இருக்கும் ஈகோ பிரச்சனை தான் கதை. இந்த கதைக்கு எதற்கு அந்த காலத்து நாடக் குழு பின்னனியில் படம் எடுத்தார் என்று தான் புரியவில்லை.
படத்தின் தயாரிப்பாளர் சித்தார்த் என்பதால் இவ்வளவு பலமான பாத்திரத்தை அவர் ஏற்று நடித்திருக்க வேண்டாம். தன்னுடைய அதிகப்பட்ச நடிப்பை அவர் வெளிப்படுத்திருக்கலாம். அந்த பாத்திரம் அதை விட அதிகமாக நடிக்க வேண்டும். சித்தார்த் நடிப்பில் இன்னும் பல மைல் தூரம் போக வேண்டியது இருக்கிறது என்பதை அவருக்கு யாராவது புரிய வைத்தால் நல்லது.
பிரித்விராஜ் நன்றாக நடித்திருந்தாலும், பல இடங்களில் மலையாள வாடை அடிப்பது அவரால் தவிர்க்க முடியவில்லை.
வேதிகா பாத்திரம் கே.பி.சுந்தரம்மாள் பாதிப்பில் உருவானது என்று இணையத்தில் படிக்க செய்தி கிடைக்கிறது. கே.பி.சுந்தரம்மாள் கிட்டப்பாவுக்கு இரண்டாவது மனைவி, கிட்டப்பா அதிகம் மது அருந்துபவர் போன்ற தகவல் தவிர வேறு எந்த பாதிப்பும் இந்த படத்தில் தெரியவில்லை.
அந்த காலத்தில் ஒரு பெண் ஷீரிப்பார்டை வேஷம் அணிவது என்பது மிகப் பெரிய விஷயம். அப்படி ஷீரிப்பார்ட்டை அணிந்து நடிக்கும் பெண்களை பல ஜமிந்தார்கள் தவறாக பார்த்தார்கள். தங்கள் இச்சைக்கு இணங்க வைக்க நாடகம் நடத்துபவர்களுக்கு தொல்லை கொடுத்தார்கள். (ஷீரிப்பார்ட்டை வேடம் அணியும் ஆண்களுக்கும் இந்த பிரச்சனை உண்டு). [ உபயம் – எம்.ஆர்.ராதாவின் சிறை சிந்தனைகள் நூல்]
இதனாலையே பெண்ணை நடிக்க வைக்க பல நாடகக் குழு பெண்ணை சேர்த்துக் கொள்வதில் தயக்கம் காட்டினர். இதை எல்லாம் எதிர்த்து தான் ஒரு பெண் மேடையில் நடிக்க வேண்டியது இருக்கும். சர்வ சாதாரணமாக ஒரு பெண் ஷீரிப்பாட்டை ஏற்று நடிப்பதை காட்டியிருக்கிறார். புராண நாடகங்களின் வீழ்ச்சி சுதேசி நாடகம் மட்டுமல்ல, அன்றைய சினிமா ஆரம்பக் காலத்தில் புராண நாடகங்கள் பயஸ்கோப் படங்களாக சென்றுக் கொண்டு இருந்தது. அதனால், சமூகக் கதைகள் நாடகத்தை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டினர்.
மேடை நாடக பின்னனி கதை என்று இருக்கும் போது, அந்த காலத்தின் மேடைக் கலைஞர்களை பயன்படுத்தியிருக்கலாம். அல்லது ஆலோசனையாவது கேட்டு இருக்கலாம். வி.எஸ்.ராகவன், ஔவை நடராஜன், டி.கே. சண்முகத்தின் வாரிசான கலைவாணன், சகஸ்ரநாமமின் மகன் என்று அந்தக் கால மேடை நாடக கலைஞர்கள் பலர் இருக்கிறார்கள்.
நாசர் தவிர்த்து படத்தில் திறமையான நடிகர்களை வசந்த பாலன் சேர்க்காமல் விட்டுவிட்டார் என்று தான் தோன்றுகிறது. பிரகாஷ் ராஜ், ஜெய்பிரகாஷ் போன்ற நடிகர்களை இந்த கதைக்கு அருமையாக பயன்படுத்தியிருக்கலாம்.
எல்லாவற்றிருக்கும் மேலாக ஏ.ஆர்.ரகுமானின் மேற்கித்திய இசை. பாடல்கள் தனியாக கேட்கும் போது நன்றாக தான் இருக்கிறது. ஆனால், Period படம் என்கிற போது அந்த காலத்து தியாகராஜ பாகவதர் பாடல் பாணியில் இசை அமைத்திருக்க வேண்டும். அப்படி ஒரு பாடல்கள் கூட இல்லை. [‘இருவர்’ படத்திலேயே ஏ.ஆருக்கு பிரியர்ட் படம் வராது என்பது புரிந்திரிந்துவிட்டது. அந்த படத்தின் பாடலை வைரமுத்து ஒரளவுக்கு காப்பாற்றினார். இந்த படத்தை அப்படி காப்பாற்ற யாருமில்லை. ]
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் இயக்குனர்களின் வசந்த பாலன் பெயர் கண்டிப்பாக இருக்கும். அதற்காக அவர் மேற்கொண்ட இந்த முயற்சியை பாராட்டலாம். நல்ல கதை களனை தேர்வு செய்ததற்காக வாழ்த்தலாம். ஆனால், பழக்கப்பட்ட கதையை தேர்வு செய்ததில் சறுக்கலை சந்திக்கிறார். அதை விட மிகப் பெரிய சறுக்கல் ஏ.ஆர்.ரகுமான், சித்தார்த்தை தேர்வு செய்தது.
No comments:
Post a Comment