உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இவ்வளவு கமர்ஷியலான திரில்லர் படத்தை சமிபத்தில் யாரும் கொடுத்ததில்லை.
ஆருஷி கொலை வழக்கு தான் படத்தின் கதை.
அந்த வழக்கில் ஊடகங்கள் கூறிய செய்தி, காவல் துறையினர் கொட்டை விட்ட சாட்சியங்கள், சி.பி.ஐ விசாரணை என்று அனைத்து விஷயங்களையும் குறிப்பிட்டு திரில்லான படத்தை கொடுத்திருக்கிறார்கள்.
ஆரம்பக் காட்சியில் கட்டிலில் மகள் கழுத்தருத்து கொல்லப்பட்டதை பார்த்து அம்மா கத்துகிறாள். வேலைக்காரி அதிர்ச்சியடைந்து போலீஸ்யை அழைக்கிறாள். போலீஸ் வீட்டு வேலைக்காரன் மீது சந்தேகப்படுகிறது. ஆனால், அவனுடைய பிணம் மொட்டை மாடியில் கிடப்பதை பார்க்கிறார்கள்.
மானத்திற்காக தங்கள் சொந்த மகளை கொன்றதாக பெற்றோரை காவலர்கள் கைது செய்கிறார்கள். அதற்கான சில ஆதாரங்களை சேகரிக்கிறார்கள். ஆனால், விடையளிக்கப்படாத பல கேள்விகள் அந்த இரட்டை கொலையில் இருக்கிறது என்பதை ஊடகங்கள் கூறிக் கொண்டு இருக்கிறது.
இந்த இரட்டை கொலையைப் பற்றி விசாரிக்க இர்பான் கான் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படுகிறது. எல்லாம் முடிச்சுகள் அவிழ்ந்து கொலையாளிகள் கண்டுப்பிடிக்கப்பட்டார்கள் என்று நினைக்கும் போது, தலைமை அதிகாரி மாற்றத்தால் இர்பான் கான் விசாரணையில் சந்தேகம் வருகிறது.
புதிய அதிகாரிகளோடு இன்னொரு முறை விசாரணை நடத்தப்படுகிறது. இர்பான் கான் கொடுத்த விசாரணை கமிஷன் ரிப்போட்டுக்கு நேர் எதிராக அந்த ரிப்போட் இருக்கிறது. கடைசி இருபது நிமிடம் இரண்டு குழுவும் விவாதித்து ’யார் குற்றவாளி’ என்று தீர்மானிக்கிறார்கள். அதையே கமிஷன் முடிவாக கோர்ட்டில் கொடுக்கப்படுகிறது.
உண்மை சம்பவத்திற்கு நேர்த்தியான திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். திரைக்கதைக்கான பாடப்புத்தகம் உருவாகுவதாக இருந்தால், அதில் தல்வார் இடம் பெற வேண்டிய படம்.
விசாரணை – காவல்துறையின் அராஜக முகத்தை காட்டுகிறது என்றால், தல்வார் – காவல்துறையின் அஜாக்கிரதையை காட்டுகிறது.
அவசியம் பார்க்க வேண்டியப் படம் !!
No comments:
Post a Comment