தமிழ் சினிமாவின் ஆரம்பக் காலத்தில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பார்கள் எவ்வளவு பங்கு ஆற்றினார்களோ அதே அளவிற்கு சினிமா ஸ்டூடியோக்கள் மிக முக்கிய பங்காற்றியிருக்கிறது. மேடை நாடகளில் நாடகத்தின் பின் புறம் இடத்திற்கு தகுந்தாற் போல் ஓவியங்கள் இருக்கும். பார்வையாளனுக்கு கதாபாத்திரங்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்கிற உணர்வை எற்படுத்த மேடை பின்ப்புற ஓவியங்கள் உதவியாக அமையும். அதேப் போல் ஸ்டூடியோவில் ஒவ்வொரு இடத்திற்கு தகுந்தாற்போல் வடிவமைத்தார்கள். கிராமம், பூங்கா, நிறுவனம், மருத்துவமனை என்று எந்த பொது இடமாக இருந்தாலும் அதற்கான மாதிரி வடிவம் ஒவ்வொரு ஸ்டுடியோவில் இருந்தது அல்லது அதை உருவாக்கும் வசதிகள் இருந்தது. அறுபதுகளில் பொது இடங்களில் காட்சிப்படுத்தியதை விட ஸ்டுடியோவில் செட் போட்டு அமைக்கப்பட்ட காட்சிகளே அதிகம்.
பொது இடங்களில் காட்சி அமைக்க முன் அனுமதி, ரசிகர்கள் பிரச்சனை, போக்குவரத்து நெருக்கடி என்று எந்த பிரச்சனையில்லாமல் ஸ்டூடியோவில் குறைந்தக் காலத்தில் படத்தை எடுத்து முடிக்க முடிந்தது. தயாரிப்பாளரின் செலவு குறைவாக இருந்தது.
ஏ.வி.எம் ஸ்டூடியோ
உலகப் போர் காரணமாக சென்னையில் மின்சார வெட்டு அமலில் இருந்ததால், ஏவி.எம் அவர்கள் தனது சொந்த ஊரான காரைக்குடியில் ஸ்டூடியோ அமைத்தார். தேவக்கோட்டை ஜமீந்தார் சோமநாதன் செட்டியாருக்கு சொந்தமான (நாடகத்திற்கான இடம்) கொட்டகையில் ரூ.2000யும், காலியான இடத்திற்கு ரூ.1000 வாடகைக்கு ஸ்டூடியோ அமைத்தார்.
அங்கு முதன் முதலில் ‘நாம் இருவர்’ படமாக்கப்பட்டது. காரைக்குடியில் கீற்றுக் கொட்டகையில் படமாக்குகிறார் என்று ஆரம்பத்தில் கேலிப்பேசினார். ஆனால், புராணப்படங்களில் இருந்து சமூகப்படத்திற்கு அனைவரையும் ‘நாம் இருவர்’ படம் திரும்ப வைத்தது.
ராம்ராஜ்யா, வேதாள உலகம் போன்ற படங்கள் அங்கு தான் படமாக்கப்பட்டது. ஆனால், சில ஆண்டுகளில் தேவக்கோட்டை ஜமீன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை வாடகையை ரூ.10,000யாக உயர்த்தினார். உலகப் போர் முடிந்து மின்சாரம் கிடைக்கும் சூழல் இருந்ததால் ஏவி.எம் அவர்கள் சென்னையில் ஸ்டூடியோ அமைக்க நினைத்தார்.
அப்போது, வட பழனியில் 10 ஏக்கர் நிலம் காலியாக இருந்தது. தொல் கிடங்கு வைத்திருக்கும் முஸ்லிமுக்கு சொந்தமாக அந்த இடம் இருந்தது. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை போது அந்த இடத்தை அப்படியே விட்டு விட்டு பாகிஸ்தானுக்கு அந்த முஸ்லீம் சென்றுவிட்டார். அகதி இடம் என்பதால் குறைந்த விலையில் ( ரூ. 37,500) அந்த இடத்தை வாங்கினார்.
”வாழ்க்கை” படம் புதிய இடத்தில் படமாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஓர் இரவு, பெண், அந்த நாள் போன்ற பல படங்கள் ஏவி.எம் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டது. ஒவ்வொரு படத்தின் வெற்றில் ஏவி.எம் ஸ்டூடியோவும், தயாரிப்பு நிறுவனமும் மிகப் பெரியளவில் வளர்ந்தது.
ஏவி.எம் தயாரித்த ”ஹம்பஞ்சி ஏக் டால்கே” (ஹிந்தி) படத்திற்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.
ஏவி.மெய்ப்பச் செட்டியார் மறைவுக்கு பின்னர் அவரது மகன் எம்.பாலசுப்பிரமணியன் நிறுவனத்தை எடுத்து நடத்தினார். அவரை தொடர்ந்து எம்.சரவணன், எம்.எஸ்.குகன், என்று நான்கு தலைமுறைகள் நிர்வாகம் செய்யப்பட்ட நிறுவனமாக ஏவி.எம் ஸ்டூடியோ திகழ்கிறது.
ஜெமினி ஸ்டூடியோ
”மோஷன் பிக்சர்ஸ் புரொடியூசர்ஸ் கம்பைன்ஸ்” பங்குதாரர்களிடையே கருத்து வேறுபாடு. அதில் முக்கிய பங்குதாரராக இயக்குனர் கே.சுப்பிரமணியம் இருந்தார். அவரிகளின் உரிமையான ஸ்டூடியோ கோர்ட் உத்தரவுப் பெயரில் ஏலத்திற்கு விடப்பட்டது. அதை, ரூ.86,423க்கு டெண்டர் மூலம் எஸ்.எஸ்.வாசன் வாங்கினார். ஸ்டூடியோவுக்கு “ஜெமினி” என்ற பெயர் சூட்டப்பட்டது.
எஸ்.எஸ்.வாசன் ஆரம்பத்தில் வாடகைக்கு விட நினைத்தார். ஆனால், அவர்களின் தயாரிப்பான “மதன காமராஜன்” படம் அங்கு படமாக்கப்பட்டது. 1941ல் வெளியான இப்படம் மிகப் பெரிய வெற்றிப்பெற்றது.
அதைத் தொடர்ந்து பாலநாகம்மா, நந்தனார், மங்கம்மா சபதம் போன்ற பல வெற்றிப்படங்கள் ஜெமினி ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது. அந்த காலத்தில் 2 லட்சத்தில் ”சந்திரலேகா” படத்தின் இறுதியில் வரும் நடனக் காட்சி ஜெமினி ஸ்டூடியோவில் படமாக்கினர். ( சந்திரலேகா படத்தில் நடிப்பதற்கான தனியாக ஒரு சர்க்கஸ் கம்பெனியுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னாளில், அந்த கம்பெனியை “ஜெமினி சர்க்கஸ்” என்று பெயர் மாற்றப்பட்டது.)
எஸ்.எஸ்.வாசன் மறைவுக்கு பிறகு அவரது மகன் பாலசுப்பிரமணியன் ஸ்டூடியோவை கவனித்துக் கொண்டார்.
கால மாற்றம். செட் போட்டு படம் எடுக்கும் முறை மாறத் தொடங்கியதால் பல ஸ்டூடியோக்களுக்கு வேலையில்லாமல் அப்படியே இருந்தது. அதனால், 1975 ஜெமினி ஸ்டூடியோ மூடப்பட்டது. அந்த இடத்தில் “பார்சன் காம்ப்ளக்ஸ்” என்ற பெயரில் பல மாடி கட்டிடங்கள் கட்டப்பட்டது.
இன்றும், அண்ணா சாலையில் இருக்கும் “அண்ணா மேம்பாலைத்தை” பலர் “ஜெமினி ப்ளைஓவர்” என்று சொல்லுவதற்கு காரணம் அதன் அருகில் இருந்த ஜெமினி ஸ்டூடியோ தான்.
மாடர்ன் தியேட்டர்ஸ்
தமிழ் சினிமாவில் கார்ப்ரேட் கலாச்சாரம் தெரியாத காலத்தில் கார்ப்ரேட் பாணியில் படங்களை தயாரித்தவர் டி.ஆர்.சுந்தரம் அவர்கள். அவர் சேலத்தில் தொடங்கிய பரபலமான ஸ்டூடியோ தான் “மாடர்ன் தியேட்டர்ஸ்”.
சேலம் – ஏற்காடு மலையடிவாரத்தில் 10 ஏக்கர் நிலத்தில் ஸ்டூடியோ அமைக்கப்பட்டது. ஸ்டூடியோவுக்குள் நுழைந்தால் படம் எடுக்கும் அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும் என்று எல்லா வசதிகளும் ஸ்டூடியோவுக்குள் அமைத்தார். முதல் படமாக “சதி அகல்யா” தயாரிக்கப்பட்டது.
”சதி அகல்யா” படத்தை தொடர்ந்து பத்மஜோதி, புரந்தரதாஸ் (கன்னடப்படம்) போன்ற படங்கள் இங்கு தயாரிக்கப்பட்டது. மலையாளத்தின் முதல் பேசும் படமான ‘பாலன்’ படம் இங்கு தான் எடுக்கப்பட்டது. 100வது தமிழ் படமான “நாம தேவர்” படமும் இங்கு எடுக்கப்பட்ட பெருமை உண்டு.
நடிகைகள் உள்ள பகுதிக்கு நடிகர்கள் போகக் கூடாது போன்ற கடுமையான கட்டுப்பாட்டை டி.ஆர். சுந்தரம் தனது ஸ்டூடியோவில் போட்டிருந்தார். குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடித்து முடித்துக் கொடுக்க வேண்டும் என்று டி.ஆர்.சுந்தரம் நினைப்பார். ஒரு முறை பி.யு.சின்னப்பா வராததால் தானே கதாநாயகனாக “சுலோசனா” படத்தில் நடித்தார்.
தொடர்ந்து பல படங்கள் தோல்வி அடைந்ததால் “மார்டன் தியேட்டர்ஸ்” மூடப்பட்டது. தற்போது அந்த ஸ்டுடியோ இருந்த இடத்தில் ‘சுந்தர் அப்பார்ட்மெண்ட்” என்கிற அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கிறது.
நெப்டியூன் ஸ்டூடியோ என்கிற சத்யா ஸ்டூடியோ
வேலைக்காரி, மனோகரா போன்ற பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் ஜூபிடர் சோமு அவர்கள். கோவையில் செண்ட்ரல் ஸ்டூடியோவை ஆரம்பித்தார். பிறகு, தனது ஸ்டூடியோவை சென்னைக்கு மாற்ற விரும்பிய சோமு அவர்கள், செண்ட்ரல் ஸ்டூடியோவை குத்தகைக்கு விட்டுவிட்டு நெப்டியூன் ஸ்டூடியோவை எடுத்து நடத்தினார்.
கற்புக்கரசி,எல்லோரும் இந்நாட்டு மன்னர், அரசிளங்குமரி போன்ற பல இங்கு எடுக்கப்பட்டது. எனினும் பெரியளவில் வெற்றிப் பெறவில்லை. உடல்நலக் குறைவால் ஜூபிடர் சோமு இறந்தார். நெப்டியூன் ஸ்டூடியோ ’சத்யா’ ஸ்டூடியோ என்கிற பெயரில் இயங்கி வருகிறது.
விஜயா ஸ்டூடியோ
ஏவி.எம் போலவே மிக பழமையானது விஜயா ஸ்டூடியோ . சவுக்கர், பக்த பிரகலாத தெலுங்கு படத்தில் தொடங்கிய விஜயா தயாரிப்பு இன்றைய “வீரம்” வரை வெற்றிக்கரமாக தொடர்கிறார்கள். தங்களுக்கு சொந்தமான ஸ்டூடியோ என்பதால் தமிழ் – தெலுங்கு என்று ஒரே சமயத்தில் இரண்டும் மொழிகளில் படம் எடுத்தார்கள்.
ஸ்டூடியோக்களில் வேலை குறைந்ததால் மருத்துவமனையாக மாற்றினர். இன்று வடபழனியில் பஸ் நிறுத்தம் அருகே விஜயா மருத்துவமனை ஒரு காலத்தில் விஜயா ஸ்டூடியோவாக திகழ்ந்தவை. சில சுவர்கள் அரண்மை அலங்காரத்தை நினைவுப் படுத்துவதாக இருக்கும்.
இன்று தயாரிப்பாளரின் படச் செலவு அதிகமாகி போனதற்கு ஸ்டூடியோக்கள் வணிக கட்டினமாகவும், பண்நாட்டு நிறுவனமாகவும் மாறிவிட்டதால் என்று கூட சொல்லலாம். அதே சமயம், ஹைதரபாத், நொய்டா, ப்ரயாக் போன்ற நகரங்களில் இருக்கும் ‘பிலிம் சிட்டி’ ஸ்டூடியோக்களில் நீட்சியாகவே திகழ்கிறது.
நன்றி : நம் உரத்தசிந்தனை இதழ் ( மே, 2015)