அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி குமாரசாமியை பலர் விமர்சித்து வருகிறார்கள். அதுவும் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்புக்கு நேர் எதிர் தீர்ப்பாக குமாரசாமியின் தீர்ப்பு இருப்பதால், எந்த நீதிபதி தவறு செய்திருக்கிறார் என்ற ரீதியில் விமர்சனம் வருதை பார்க்கிறேன்.
எப்படி ஒரு தீர்ப்புக்கு சம்மந்தமில்லாத நேர் திர் தீர்ப்பு வழங்க முடியும் என்று பலர் வாதம் செய்கிறார்கள்.
எனக்கு என்னவோ நீதிபதி குமாரசாமியின் பார்வையில் இருந்தும், நீதிபதி குன்ஹா அவர்களின் பார்வையில் இருந்தும் பார்த்தால் அவரவர் தீர்ப்பு சரியே என்றே படுகிறது.
உதாரணத்திற்கு,
ஒரு பையனுக்கு திருமணத்துக்காக பெண் பார்க்கப்படுகிறது. தனக்கு வரப் போகும் மனைவி ஒரு வீடு, 50 பவுன் நகையோடு வர வேண்டும் நினைத்து பெண் வீட்டாரிடம் கேட்டால்.. அது வரதட்சனை. சட்டப்படி தவறு. நீதிபதி குன்ஹா தீர்ப்பு இதன் அடிப்படையில் அமைந்தது.
அதே பையன் வரப் போகும் மனைவியிடம் சொந்தமான ஒரு வீடு, நகை, பணம் இருப்பதை உறுதி செய்துக் கொண்டு திருமணம் செய்துக் கொண்டால் தவறா ? தன் வசதிக்கு அல்லது விருப்பத்திற்கு ஏற்றப் பெண்ணை திருமணம் செய்துக் கொள்கிறான். அவ்வளவு தான். அது வரதட்சனையில்லை. அதனால் தவறில்லை. குமாரசாமி தீர்ப்பு இதன் அடிப்படையில் வந்திருக்கிறது.
இரண்டுமே சரி தான். பார்க்கும் பார்வைதான் மாறுபடுகிறது. புரிந்த மாதிரி இருக்கு, புரியாத மாதிரி இருக்கிறதா ?
எல்லோருக்கு புரிந்த கிரிக்கெட்டை உதாரணமாக காட்டுகிறேன்.
போலர் ‘LBW' அவுட் கேட்கிறார். அம்பையர் கொடுக்கவில்லை. 'Review System' மூலம் போலர் தீர்ப்பை பரிசீலனை செய்ய சொல்கிறார். மூன்றாவது அம்பையர் அவுட் கொடுகிறார். ஆனால், டி.வியில் பார்க்கும் நமது கண்ணுக்கு அவுட்டாக தெரியவில்லை. மூன்றாவது அம்பையர் தவறு என்று சொல்கிறோமா ? நமது பார்வைக்கு அவுட் இல்லாமல் தெரிந்திருக்கலாம். களத்தில் இருப்பவர்களுக்கு தான் உண்மையான பார்வையில் அவுட்டா ? அவுட்டில்லையா என்பது தெரியும்.
இதற்கு பெயர் தான் 'Illusion'.
எல்லாவற்றிக்கும் மேலாக, நமது எண்ணம் அடுத்த பேட்ஸ்மென்னை நோக்கி செல்லும். அவனின் ஆட்டத்தை பற்றி பேசுவோம். முந்தைய பேட்ஸ்மென் அவுட் குறித்து கவலைப்பட மாட்டோம். அதே அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அடுத்த வழக்குகளில் நமது கவனம் செல்ல வேண்டும்.
ஆகையால் குன்ஹாவின் தீர்ப்பும் சரி தான். குமாரசாமி தீர்ப்பு சரி தான். நாம் பார்க்கும் கண்ணோட்டமே தவறாக இருக்கிறது.
நம் மூக்குக்கு நேராக ஒரு விரல் நீட்டும் போது சில சமயம் ஒரு விரல் இரண்டு விரலாக தெரிவதில்லையா ? அது போல தான் இதுவும். வழக்கு ஒன்றாக இருந்தாலும், இரண்டு தீர்ப்பும் ஒன்று தான்.
குற்றவாளிகளே 100% சட்டத்தை நம்பும் போது பொதுமக்களாகிய நாம் சட்டத்தை நம்புவதில் தவறில்லையே !!
விசு போல் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…. தவறு நடந்திருக்கலாம். தவறு நடக்காமல் இருந்திருக்கலாம். தவறு நடந்ததாக கருதப்பட்டிருக்கலாம். அந்த தவறுக்காக தவறாக வழக்கு பதிவாகியிருக்கலாம். தவறான வழக்கு என்பதால் தவறாக தீர்ப்பு வழங்கியிருக்கலாம். அல்லது சரியான தீர்ப்பை தவறாக புரிந்திருக்கலாம். மீண்டும் தவறை சரி செய்ய மேல் முறையீடு செய்யப்பட்டிருக்கலாம். அல்லது சரியாக இருப்பதை தவறாக மாற்ற முயற்சித்திருக்கலாம். சரி, தவறு யாருக்குமே புரியாமல் இருந்திருக்கலாம். அதை தவறாக புரிந்து நாமே குழம்பிபோய்யிருக்கலாம்.
மொத்தத்தில் சரி, தவறு புரிந்துக் கொள்ள முடியாத நமது 'illusion' மனநிலை தான் காரணம்.
இன்னும் ஒரு உதாரணம் சொல்லுங்க... புரிஞ்சிக்குறோம் என்பவர்களுக்கு...
இவ்வளவு நேரம் கட்டுரை படிக்கும் நீங்கள், நான் ஏதாவது கருத்து சொல்லப் போகிறேன் என்று எதிர்பார்க்கும் உங்கள் மனமே 'illusion'.
ஆகவே, இரண்டு நீதிபதிகள் சரியான தீர்ப்புகள் வழங்கினார் என்று கூறி.... நமது ‘illusion'ல் இருந்து விடுப்பட வேண்டும் என்கிற என் வாததை நிறைவு செய்கிறேன்.
( பின்குறிப்பு : உங்கள் எண்ணவோட்டத்தை புரிந்து கொண்டு அண்ணன் கவுண்டமணி வாயிலாக கருத்தை பதிவு செய்கிறேன். )
1 comment:
மிகவும் அருமையான எளிமையான விளக்கங்கள்.
கொடுத்துள்ள உதாரணங்கள் எல்லாமே மறுக்கவே முடியாத வகையில், மனதார ஒத்துக்கொள்ளும்படியாக எழுதியுள்ளீர்கள்.
பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
Post a Comment