வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label தமிழ் சினிமா 100. Show all posts
Showing posts with label தமிழ் சினிமா 100. Show all posts

Thursday, May 14, 2015

சினிமா 1913 -2013 : 12. சினிமா ஸ்டூடியோ

தமிழ் சினிமாவின் ஆரம்பக் காலத்தில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பார்கள் எவ்வளவு பங்கு ஆற்றினார்களோ அதே அளவிற்கு சினிமா ஸ்டூடியோக்கள் மிக முக்கிய பங்காற்றியிருக்கிறது. மேடை நாடகளில் நாடகத்தின் பின் புறம் இடத்திற்கு தகுந்தாற் போல் ஓவியங்கள் இருக்கும். பார்வையாளனுக்கு கதாபாத்திரங்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்கிற உணர்வை எற்படுத்த மேடை பின்ப்புற ஓவியங்கள் உதவியாக அமையும். அதேப் போல் ஸ்டூடியோவில் ஒவ்வொரு இடத்திற்கு தகுந்தாற்போல் வடிவமைத்தார்கள். கிராமம், பூங்கா, நிறுவனம், மருத்துவமனை என்று எந்த பொது இடமாக இருந்தாலும் அதற்கான மாதிரி வடிவம் ஒவ்வொரு ஸ்டுடியோவில் இருந்தது அல்லது அதை உருவாக்கும் வசதிகள் இருந்தது. அறுபதுகளில் பொது இடங்களில் காட்சிப்படுத்தியதை விட ஸ்டுடியோவில் செட் போட்டு அமைக்கப்பட்ட காட்சிகளே அதிகம். 

பொது இடங்களில் காட்சி அமைக்க முன் அனுமதி, ரசிகர்கள் பிரச்சனை, போக்குவரத்து நெருக்கடி என்று எந்த பிரச்சனையில்லாமல் ஸ்டூடியோவில் குறைந்தக் காலத்தில் படத்தை எடுத்து முடிக்க முடிந்தது. தயாரிப்பாளரின் செலவு குறைவாக இருந்தது.

ஏ.வி.எம் ஸ்டூடியோ 




 உலகப் போர் காரணமாக சென்னையில் மின்சார வெட்டு அமலில் இருந்ததால், ஏவி.எம் அவர்கள் தனது சொந்த ஊரான காரைக்குடியில் ஸ்டூடியோ அமைத்தார். தேவக்கோட்டை ஜமீந்தார் சோமநாதன் செட்டியாருக்கு சொந்தமான (நாடகத்திற்கான இடம்) கொட்டகையில் ரூ.2000யும், காலியான இடத்திற்கு ரூ.1000 வாடகைக்கு ஸ்டூடியோ அமைத்தார். 

அங்கு முதன் முதலில் ‘நாம் இருவர்’ படமாக்கப்பட்டது. காரைக்குடியில் கீற்றுக் கொட்டகையில் படமாக்குகிறார் என்று ஆரம்பத்தில் கேலிப்பேசினார். ஆனால், புராணப்படங்களில் இருந்து சமூகப்படத்திற்கு அனைவரையும் ‘நாம் இருவர்’ படம் திரும்ப வைத்தது. 

ராம்ராஜ்யா, வேதாள உலகம் போன்ற படங்கள் அங்கு தான் படமாக்கப்பட்டது. ஆனால், சில ஆண்டுகளில் தேவக்கோட்டை ஜமீன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை வாடகையை ரூ.10,000யாக உயர்த்தினார். உலகப் போர் முடிந்து மின்சாரம் கிடைக்கும் சூழல் இருந்ததால் ஏவி.எம் அவர்கள் சென்னையில் ஸ்டூடியோ அமைக்க நினைத்தார். 

அப்போது, வட பழனியில் 10 ஏக்கர் நிலம் காலியாக இருந்தது. தொல் கிடங்கு வைத்திருக்கும் முஸ்லிமுக்கு சொந்தமாக அந்த இடம் இருந்தது. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை போது அந்த இடத்தை அப்படியே விட்டு விட்டு பாகிஸ்தானுக்கு அந்த முஸ்லீம் சென்றுவிட்டார். அகதி இடம் என்பதால் குறைந்த விலையில் ( ரூ. 37,500) அந்த இடத்தை வாங்கினார். 

 ”வாழ்க்கை” படம் புதிய இடத்தில் படமாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஓர் இரவு, பெண், அந்த நாள் போன்ற பல படங்கள் ஏவி.எம் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டது. ஒவ்வொரு படத்தின் வெற்றில் ஏவி.எம் ஸ்டூடியோவும், தயாரிப்பு நிறுவனமும் மிகப் பெரியளவில் வளர்ந்தது. 

ஏவி.எம் தயாரித்த ”ஹம்பஞ்சி ஏக் டால்கே” (ஹிந்தி) படத்திற்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. 

ஏவி.மெய்ப்பச் செட்டியார் மறைவுக்கு பின்னர் அவரது மகன் எம்.பாலசுப்பிரமணியன் நிறுவனத்தை எடுத்து நடத்தினார். அவரை தொடர்ந்து எம்.சரவணன், எம்.எஸ்.குகன், என்று நான்கு தலைமுறைகள் நிர்வாகம் செய்யப்பட்ட நிறுவனமாக ஏவி.எம் ஸ்டூடியோ திகழ்கிறது. 

ஜெமினி ஸ்டூடியோ 


”மோஷன் பிக்சர்ஸ் புரொடியூசர்ஸ் கம்பைன்ஸ்” பங்குதாரர்களிடையே கருத்து வேறுபாடு. அதில் முக்கிய பங்குதாரராக இயக்குனர் கே.சுப்பிரமணியம் இருந்தார். அவரிகளின் உரிமையான ஸ்டூடியோ கோர்ட் உத்தரவுப் பெயரில் ஏலத்திற்கு விடப்பட்டது. அதை, ரூ.86,423க்கு டெண்டர் மூலம் எஸ்.எஸ்.வாசன் வாங்கினார். ஸ்டூடியோவுக்கு “ஜெமினி” என்ற பெயர் சூட்டப்பட்டது. 

 எஸ்.எஸ்.வாசன் ஆரம்பத்தில் வாடகைக்கு விட நினைத்தார். ஆனால், அவர்களின் தயாரிப்பான “மதன காமராஜன்” படம் அங்கு படமாக்கப்பட்டது. 1941ல் வெளியான இப்படம் மிகப் பெரிய வெற்றிப்பெற்றது. 

 அதைத் தொடர்ந்து பாலநாகம்மா, நந்தனார், மங்கம்மா சபதம் போன்ற பல வெற்றிப்படங்கள் ஜெமினி ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது. அந்த காலத்தில் 2 லட்சத்தில் ”சந்திரலேகா” படத்தின் இறுதியில் வரும் நடனக் காட்சி ஜெமினி ஸ்டூடியோவில் படமாக்கினர். ( சந்திரலேகா படத்தில் நடிப்பதற்கான தனியாக ஒரு சர்க்கஸ் கம்பெனியுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னாளில், அந்த கம்பெனியை “ஜெமினி சர்க்கஸ்” என்று பெயர் மாற்றப்பட்டது.) 

 எஸ்.எஸ்.வாசன் மறைவுக்கு பிறகு அவரது மகன் பாலசுப்பிரமணியன் ஸ்டூடியோவை கவனித்துக் கொண்டார். 

கால மாற்றம். செட் போட்டு படம் எடுக்கும் முறை மாறத் தொடங்கியதால் பல ஸ்டூடியோக்களுக்கு வேலையில்லாமல் அப்படியே இருந்தது. அதனால், 1975 ஜெமினி ஸ்டூடியோ மூடப்பட்டது. அந்த இடத்தில் “பார்சன் காம்ப்ளக்ஸ்” என்ற பெயரில் பல மாடி கட்டிடங்கள் கட்டப்பட்டது. 

இன்றும், அண்ணா சாலையில் இருக்கும் “அண்ணா மேம்பாலைத்தை” பலர் “ஜெமினி ப்ளைஓவர்” என்று சொல்லுவதற்கு காரணம் அதன் அருகில் இருந்த ஜெமினி ஸ்டூடியோ தான். 

மாடர்ன் தியேட்டர்ஸ் 

தமிழ் சினிமாவில் கார்ப்ரேட் கலாச்சாரம் தெரியாத காலத்தில் கார்ப்ரேட் பாணியில் படங்களை தயாரித்தவர் டி.ஆர்.சுந்தரம் அவர்கள். அவர் சேலத்தில் தொடங்கிய பரபலமான ஸ்டூடியோ தான் “மாடர்ன் தியேட்டர்ஸ்”. 

சேலம் – ஏற்காடு மலையடிவாரத்தில் 10 ஏக்கர் நிலத்தில் ஸ்டூடியோ அமைக்கப்பட்டது. ஸ்டூடியோவுக்குள் நுழைந்தால் படம் எடுக்கும் அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும் என்று எல்லா வசதிகளும் ஸ்டூடியோவுக்குள் அமைத்தார். முதல் படமாக “சதி அகல்யா” தயாரிக்கப்பட்டது. 

”சதி அகல்யா” படத்தை தொடர்ந்து பத்மஜோதி, புரந்தரதாஸ் (கன்னடப்படம்) போன்ற படங்கள் இங்கு தயாரிக்கப்பட்டது. மலையாளத்தின் முதல் பேசும் படமான ‘பாலன்’ படம் இங்கு தான் எடுக்கப்பட்டது. 100வது தமிழ் படமான “நாம தேவர்” படமும் இங்கு எடுக்கப்பட்ட பெருமை உண்டு. 

நடிகைகள் உள்ள பகுதிக்கு நடிகர்கள் போகக் கூடாது போன்ற கடுமையான கட்டுப்பாட்டை டி.ஆர். சுந்தரம் தனது ஸ்டூடியோவில் போட்டிருந்தார். குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடித்து முடித்துக் கொடுக்க வேண்டும் என்று டி.ஆர்.சுந்தரம் நினைப்பார். ஒரு முறை பி.யு.சின்னப்பா வராததால் தானே கதாநாயகனாக “சுலோசனா” படத்தில் நடித்தார். 

தொடர்ந்து பல படங்கள் தோல்வி அடைந்ததால் “மார்டன் தியேட்டர்ஸ்” மூடப்பட்டது. தற்போது அந்த ஸ்டுடியோ இருந்த இடத்தில் ‘சுந்தர் அப்பார்ட்மெண்ட்” என்கிற அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கிறது.

நெப்டியூன் ஸ்டூடியோ என்கிற சத்யா ஸ்டூடியோ 

வேலைக்காரி, மனோகரா போன்ற பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் ஜூபிடர் சோமு அவர்கள். கோவையில் செண்ட்ரல் ஸ்டூடியோவை ஆரம்பித்தார். பிறகு, தனது ஸ்டூடியோவை சென்னைக்கு மாற்ற விரும்பிய சோமு அவர்கள், செண்ட்ரல் ஸ்டூடியோவை குத்தகைக்கு விட்டுவிட்டு நெப்டியூன் ஸ்டூடியோவை எடுத்து நடத்தினார். 

கற்புக்கரசி,எல்லோரும் இந்நாட்டு மன்னர், அரசிளங்குமரி போன்ற பல இங்கு எடுக்கப்பட்டது. எனினும் பெரியளவில் வெற்றிப் பெறவில்லை. உடல்நலக் குறைவால் ஜூபிடர் சோமு இறந்தார். நெப்டியூன் ஸ்டூடியோ ’சத்யா’ ஸ்டூடியோ என்கிற பெயரில் இயங்கி வருகிறது. 

விஜயா ஸ்டூடியோ 


ஏவி.எம் போலவே மிக பழமையானது விஜயா  ஸ்டூடியோ . சவுக்கர், பக்த பிரகலாத தெலுங்கு படத்தில் தொடங்கிய விஜயா தயாரிப்பு இன்றைய “வீரம்” வரை வெற்றிக்கரமாக தொடர்கிறார்கள். தங்களுக்கு சொந்தமான ஸ்டூடியோ என்பதால் தமிழ் – தெலுங்கு என்று ஒரே சமயத்தில் இரண்டும் மொழிகளில் படம் எடுத்தார்கள். 

ஸ்டூடியோக்களில் வேலை குறைந்ததால் மருத்துவமனையாக மாற்றினர். இன்று வடபழனியில் பஸ் நிறுத்தம் அருகே விஜயா மருத்துவமனை ஒரு காலத்தில் விஜயா ஸ்டூடியோவாக திகழ்ந்தவை. சில சுவர்கள் அரண்மை அலங்காரத்தை நினைவுப் படுத்துவதாக இருக்கும். 

இன்று தயாரிப்பாளரின் படச் செலவு அதிகமாகி போனதற்கு ஸ்டூடியோக்கள் வணிக கட்டினமாகவும், பண்நாட்டு நிறுவனமாகவும் மாறிவிட்டதால் என்று கூட சொல்லலாம். அதே சமயம், ஹைதரபாத், நொய்டா, ப்ரயாக் போன்ற நகரங்களில் இருக்கும் ‘பிலிம் சிட்டி’ ஸ்டூடியோக்களில் நீட்சியாகவே திகழ்கிறது.

நன்றி : நம் உரத்தசிந்தனை இதழ் ( மே, 2015)

Monday, February 23, 2015

சினிமா 1913 -2013 : 11. மாற்றம் தந்த மூவேந்தர்கள்

கடந்த பத்து மாத தொடரில் 1930-50களில் சினிமா இயங்கி, அறிமுகமான கலைஞர்களை பார்த்து வந்தோம். மறக்கமுடியாத சிலரை தெரிந்துக் கொண்டோம். இனி, அடுத்த காலக்கட்டமான 1950-70களில் தமிழ் சினிமாவில் பங்களித்து மாற்றம் தந்த கலைஞர்களை பார்க்க இருக்கிறோம். 

1930களில் பாடல் பாடத் தெரிந்தவர்கள் தான் கதாநாயகர்களாக நடிக்க முடியும் என்று இருந்தது. ஆனால், 1950களில் வசன உச்சரிப்பு, நடிப்பு, முகப்பாவனை என்று பல விஷயங்களை நடிகர் திரையில் காட்ட வேண்டியதாக இருந்தது. பாடல், இசை எல்லாம் பின்னனியில் பார்த்துக் கொண்டனர். ஆன்மீக படங்களை விட சமூகப் படங்கள் அதிகமாக எடுக்கத் தொடங்கினர். படங்களில் பாடல்களும் முன்பை விட குறையத் தொடங்கியது. 

 தியாகராஜர் பாகவதர் – பி.யு.சின்னப்பா போன்றவர்கள் மறக்கடிக்கப்பட்டு எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற மூன்மூர்த்திகளும், ஜெய்சங்கர், எஸ்.எஸ்.ஆர், முத்துராமன், எவிஎம்.ராஜன் போன்ற இடைநிலை நடிகர்களும் காலுன்ற தொடங்கினார்கள். 

எம்.ஜி.ஆர் 

தமிழ்த்திரையில் சூப்பர் ஸ்டாராகவும், பிறகு தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர் எம்.ஜி.ஆர். சாதாரன குடும்பத்தில் பிறந்து, குடும்ப கஷ்டங்களுக்காக நாடக கம்பேனியில் இவரும், இவரது சகோதரர் சக்ரபாணியும் சிறு சிறு வேடகங்களில் நடித்தனர். 1936ல் 19 வயது இருக்கும் போது எஸ்.எஸ்.வாசன் எழுதிய “சதிலீலாவதி” படத்தில் நாயகனாக அறிமுகமானார். ஆனால், அவருக்கு தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் (வீர ஜெகதீஷ், மாயா மச்சீந்திரா,பிரகலாதா, சீதா ஜனனம்) தான் நடிக்க வேண்டியதாக இருந்தது. 


11 வருடங்களுக்கு போராட்டத்திற்கு பிறகு 1947ல் வெளியான ‘ராஜகுமாரி’ படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தை இயக்கியவர் ஏ.எஸ்.ஏ.சாமி. ஜூபிடர் பிலிம்ஸ் தயாரித்து. 

திரையுலகில் ஆரம்பக்கட்டம் என்பதால் “அபிமன்பு” படத்தில் அர்ஜுனனாக சிறு வேடத்தில் மீண்டும் நடித்தார். இந்த படத்திற்கு வசனம் எழுதியவர் மு.கருணாநிதி !! 

சிறையில் வெளிவந்த பாகவதர் ‘ராஜமுக்தி’ என்ற படத்தை தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தில் அவருக்கு அடுத்து, தளபதி பாத்திரத்தில் (இரண்டாவது நாயகனாக) எம்.ஜி.ஆர் நடித்தார். அதில் கதாநாயகியாக நடித்தவர் வி.என்.ஜானகி அம்மா அவர்கள். இந்த படத்தில் தான் இருவரும் முதன் முதலில் சந்தித்தனர். ’ராஜமுக்தி’ படம் மிகப் பெரிய தோல்வியை தழுவியது. 

இதற்கடுத்து, எம்.ஜி.ஆர் – வி.என்.ஜானகி இணைந்து நடித்த ‘மோகினி’ படம் வெற்றிப் பெற்றது. அதைத் தொடர்ந்து ’மருதநாட்டு இளவரசி’ படமும் வெற்றிப் பெற்றது. பிறகு, இருவரும் வாழ்க்கையிலும் இணைந்தனர். 

மர்மயோகி (முதல் ‘ஏ’ சர்டிபிகேட் படம்), என் தங்கை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தாலும், எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது ‘மலைக்கள்ளன்’ படம் தான். குலேபகாவலி, மதுரை வீரன், அலிபாபாவும் 40 திருடங்கல் என்று அடுக்கடுக்காக வெற்றிப்படங்களை குவித்து தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாக மாறினார். அவருடைய ‘கால்ஷீட்’ பெற ஒரு பெருபடை காத்திருந்தது. 

இந்த காலக்கட்டத்தில் ‘எம்.ஜி.ஆர்’ பிக்சர்ஸ் பெயரில் ‘நாடோடி மன்னன்’ படத்தை அவரே தயாரித்து, இயக்கி நடித்தார். இந்த படமும் வசூல் குவித்த வெற்றிப் படமாக அமைந்தது. 1963ல் மட்டும் 9 படங்கள் அவர் கதாநாயகனாக நடித்து, அனைத்து படங்களும் வசூல் குவித்து வெற்றிப்பெற்றது. 

அரசியல் காரணத்திற்காக தி.மு.க கட்சியை விட்டு விலகி, அ.தி.மு.க கட்சி தொடங்கினார். 1977ல் தேர்தலில் பெரும்பான்மை பெற்று வெற்றிப் பெற்றார். அவர் கடைசியாக நடித்த ‘மதுரை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்து கொடுத்த பிறகே முதல் அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார். 

’சிவாஜி’ கணேசன் 

கணேசனாக நாடகத்தில் நடித்துக் கொண்டு இருந்தவர், பெரியாரால ‘சிவாஜி’ என்று பெயர் சூட்டப்பட பின்பு இதுவே இவரின் பெயராக மாறிவிட்டது. ஆரம்பக் காலத்தில் நாடகத்தில் சிறு சிறு வேடங்களில் நடத்தவர், இவரது திறமையை பார்த்து முதல் படமே நாயகனாக ’பராசக்தி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

‘பராசக்தி’ படத்தில் கொண்ட பகுத்தறிவு பிரச்சாரத்தால், பொறுக்க முடியாத பலர் அந்த படத்திற்கு தடைவிதிக்க முயற்சித்தனர். ஆனால், எதுவும் அவர்களால் செய்ய முடியவில்லை. முதல் படமே வெற்றிப் பெற்றதால் ’சிவாஜி’ கணேசன் பலரது கவனத்தை ஈர்க்கத் தொடங்கினார்.


பணம், மனோகரா, தூக்குத் தூக்கி போன்ற படங்கள் நல்ல நாயகனாகவும், திரும்பி பார், அந்த நாள், கூண்டுக்கிளி போன்ற படங்களில் எதிர்மறை நாயகனாகவும் நடித்தார். இந்த பாத்திரத்திற்கு தான் இவர் பொருந்துவார் என்ற முத்திரையும் இவர் மேல் விழவே இல்லை. எப்படிப்பட்ட பாத்திரத்தை கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பார் என்று பெயர் எடுத்தார். 

புராணப்படங்கள், சமூகப்படங்கள், மாயாஜாலப் படங்கள் என்று சிவாஜி கணேசனுக்கு எந்த வித்தியாசமும் கிடையாது. படத்தில் சிறு வேடம் கொடுத்தால் கூட, மற்றவர்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கு அவருடைய நடிப்பு இருந்தது. 

கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற விடுதலை வீரர்களை பற்றி மக்கள் சிவாஜி உருவத்தில் தான் தெரிந்துக் கொண்டனர். படிக்காத மேதை, பாசமலர், உயர்ந்த மனிதன் போன்ற உணர்வு மிக்க படங்களிலும், தில்லாணா மோகனாம்பாள், திரிசூலம், வியாட்நாம் வீடு போன்ற படங்களில் நடிப்பின் எல்லா பரிநாபத்தையும் காட்டினார். 

முழுவதுமாக சொல்ல வேண்டும் என்றால், நடிப்பு இலக்கணம் வகுத்துக் கொடுத்தவர் ‘சிவாஜி’ கணேசன் என்று சொல்லும் அளவிற்கு அவருடைய நடிப்பு இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில் சிவாஜி நடித்த தோல்விப்படங்கள் கூட இவர் நடித்ததற்காகவே இன்று வரை ரசித்து பார்க்கும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. 

பல தலைவர்களில் வேடத்தில் நடத்த சிவாஜி, கடைசி வரையில் தனக்கு ‘சிவாஜி’ என்று பெயர் வைத்த பெரியார் வேடத்தில் நடிக்கவில்லை என்ற குறை இருந்து கொண்டே இருந்தது. ரஜினி, கமல் போன்ற அடுத்த தலைமுறைகளோடு இல்லாமல், அதற்கடுத்த தலைமுறை நடிகரான விஜய் வரை சிவாஜி கணேசன் நடித்திருக்கிறார். 

’ஜெமினி’ கணேசன் 

சண்டைக்காட்சிக்கு எம்.ஜி.ஆர், நடிப்புக்கு ‘சிவாஜி’ கணேசன் என்றால் காதலுக்கு ‘ஜெமினி’ கணேசன். ( நிஜ வாழ்க்கையிலும் இவர் காதல் மன்னன் என்பது வேறு கதை.) 

இவர் பெயரும் கணேசன் தான். ஆரம்பக்காலத்தில் ‘ஜெமினி’ ஸ்டூடியோவில் வேலைப்பார்த்ததால் இவரை பின்னாளில் ‘ஜெமினி’ கணேசன் என்று அழைக்கத் தொடங்கினர். இவர் முதல் படமான ‘மிஸ் மாலினி’ படத்தில் துணை பாத்திரமாக தான் அறிமுகமானார். பெரும்பாலும் ஜெமினி தயாரிப்பு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். 


பிறகு, ’தாய் உள்ளம்’ படத்தில் ஆர்.எஸ்.மனோகர் கதாநாயகனாக நடிக்க, ஜெமினி கணேசன் வில்லனாக நடித்தார். ( பின்னாளில் நிலைமை தலைக்கீழாக மாறியது.) 

’மனம் போல் மாங்கல்யம்’ படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் இரட்டை வேடத்தில் நடித்தார். அந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி கூட இரட்டை வேடத்தில் நடித்ததில்லை. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் சாவித்திரி அம்மா அவர்கள். 

பெண், மிஸ்ஸியம்மா, கணவனே கண்கண்ட தெய்வம் போன்ற வெற்றிப்படங்களில் நடித்தார். குறிப்பாக, ’கணவனே கண்கண்ட தெய்வம்’ படத்தில் கூனன் வேடத்தில் நடித்தது ஜெமினி கணேசனா என்று கேட்கும் அளவிற்கு அவருடைய ஒப்பனைகள் இருந்தது. 

ஏற்கனவே திருமணமானவர் என்றாலும் ’நடிகை திலகம்’ சாவித்திரி அம்மாவை திருமணம் செய்துக் கொண்டார். இருவரும் திரைத்துரையில் மட்டுமில்லாமல் பல சமூக காரியங்களுக்கும் நல் உதவி செய்துவந்தார்கள். காலத்தின் கட்டாயத்தால் சாவித்திரி அம்மாவை பிரிய வேண்டியதாக இருந்தது. 

பிரபு, கார்த்திக் போன்ற அடுத்த தலைமுறை நடிகரோடு இல்லாமல், அஜித், பிரபு தேவா போன்ற மூன்றாவது தலைமுறையோடும் நடித்திருக்கிறார். ’கிருஷ்ணதாசி’ என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்திருக்கிறார். 

1950-70களில் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி தமிழ் சினிமாவின் முவேந்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

தமிழ் சினிமா தியாகராஜர் பாகவதர் – பி.யு.சின்னப்பா கொடிக்கட்டி பறந்தாலும் இறக்கும் போது பொருளாதார நெருக்கடியில் இருந்தனர். ஆனால், அவர்களுக்கு அடுத்த நட்சித்திரங்களான எம்.ஜி.ஆர் – சிவாஜி – ஜெமினி இருந்தவர்கள் தங்கள் பாதையில் சரியாக பயனித்தனர். இன்றைய நடிகர்களும் இவர்கள் அமைத்த பாதையில் ஒன்றில் பயணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கல். 

எம்.ஜி.ஆரை போல் தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரத்துடிக்கும் நடிகர்கள், ஜெமினி போல் காதல் வசப்படும் நடிகர்கள், சிவாஜி போல் அரசியல் – சினிமா இரட்டை கப்பலில் பயணம் செய்யும் நடிகர்கள் என்று இந்த மூவேந்தர்கள் வழி காட்டிய பாதை தான்.

நன்றி : நம் உரத்தசிந்தனை இதழ் ( டிசம்பர், 2014 மற்றும் பிப்ரவரி,2015)

Wednesday, November 19, 2014

சினிமா 1913 -2013 : 10. மறக்க முடியாத நகைச்சுவை கலைஞர்கள் (1930-50)

காலையில் ஒரு சிலர் பூங்காவில் வாய்விட்டு சிரித்து பயிற்சி எடுப்பதை பார்த்து வருகிறோம். பொருள் தேடும் வாழ்க்கையில் பலர் முகத்தில் சிரிப்பு எப்படி இருக்கும் என்பதை அவர்களே மறந்துவிட்டார்கள். உடம்பில் இருக்கும் அத்தனை உறுப்புகளும் இயல்பாய் இயங்க இப்போது செய்ற்கை சிரிப்பு தேவைப்படுகிறது.

சிரிப்பு. நமக்கும், மிருகத்துக்கும் உள்ள வேறு. 

என்.எஸ்.கிருஷ்ணன் 

’சிரிப்பு என்பது வியாதிகளை விரட்டும் மருந்து’ என்று மருத்துவர்கள் சொல்லும் முன்பே, மக்களுக்கு புரிய வைத்தவர் கலைவாணர் என்.எஸ்.கே அவர்கள். 

1935ல் மேனகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். 1936ல் ‘சதிலீலாவதி’, ‘வசந்தசேனா’ போன்ற படங்களில் நடிக்கும்போதே மதுரம் அம்மாவை திருமணம் செய்துக் கொண்டார். 

கலைவாணர் முற்போக்கு சிந்தனைகள் உடையவர். தனது படங்களிலும் தனது கருத்துக்களை நகைச்சுவையாக சொல்லி மக்களை சிரிக்க வைத்தவர். இன்று பல நகைச்சுவை நடிகர் கையாலும் கிண்டலும், கேலியும் கலைவாணர் வகுத்துக் கொடுத்த பாதையில் பயணம் செய்கிறார்கள்.

‘அம்பிகாபதி’ படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதருடன் முதன் முதலாக நடித்தார். அன்று தொடங்கிய அவர்களது நட்பு லட்சுமிகாந்தன் வழக்கு வரை தொடர்ந்தது. இந்த வழக்கு இரண்டு பெரும் கலைஞர்களை வாழ்க்கையிலும், நடிப்புலகத்திலும் புயலை வீசியது. 

வழக்கில் இருந்து மீண்டு வந்த கலைவாணர் நடிப்போடு படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார். 

1957ல் தனது 49 வயதில் இறந்தார். 



டி.ஏ.மதுரம் 

என்.எஸ்.கே – டி.கே.மதுரம் அவர்களைப் போன்ற கலை தம்பதிகள் என்று சொல்லுவதை விட எங்கும் காண முடியாத தம்பதிகள் என்று சொல்லலாம். கணவன் – மனைவி சேர்ந்து நூறுக்கு மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். 

கணவரின் எல்லா சுகத் துக்கத்திலும் பங்கு கொண்டு இருக்கிறார். கலைவாணர் சிறையில் இருக்கும் போது அவரது நாடக சபாவை திறம்பட நிறுவாகம் செய்தார். கலைவாணர் சிறையில் இருக்கும் போது ‘பைத்தியக்காரன்’ படத்தை தயாரித்தார். 

பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட “சந்திரலேகா” படத்தில் என்.எஸ்.லே - டி.ஏ.மதுரம் நகைச்சுவை பிரமாதமாக அமைந்தது. கலைவாணர் மறைவுக்கு பிறகு ஒரு சிலப்படங்கள் நடித்தார். மே 23, 1974 காலாமானார். 

காளி என். ரத்தினம் 

கலைவாணர் காலத்தில் புகழ்ப் பெற்ற இன்னொரு நகைச்சுவை நடிகர் காளி என். ரத்தினம் அவர்கள். நடிப்பு, பேச்சு, பாட்டு பாடுவது என்று தனி திறமை வாய்ந்த அவரை ‘ரத்தின வாத்தியார்’ என்று பலராலும் அன்புடன் அழைக்கப்பட்டார். 

1936ல் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி உரிமையாளரான எஸ்.எம்.சச்சிதானந்தம் பிள்ளையின் மேற்பார்வையில் உருவான ‘பதிபக்தி’ படத்தின் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருக்கு இரண்டு வேடங்கள் !!! 

அதைத் தொடர்ந்து சந்திரகாந்தா, ராஜமோஹன், பஞ்சாப் கேசரி, மாத்ருபூமி, போலி பஞ்சாலி, போன்ற பல படங்களில் நடித்தார். 

சந்திரகாந்தா படத்தில் “சுவாமிகளே ! யோகாப்பியாசம் செய்யலாமா?” என்று போலி சாமியார்களை சாடும்படி இரட்டை அர்த்த வசனங்களை பேசியிருக்கிறார். ஆனால், கலைவாணரைப் போல் பகுத்தறிவு, தீண்டாமை, அடிமைத் தனம் சமுக சிந்தனைகள் இவர் தனது நகைச்சுவையில் சேர்த்ததில்லை. தனது நகைச்சுவையில் கிராமிய பாணியை அதிகம் கலந்து நடித்திருக்கிறார்.


டி.ஆர்.ராமசந்திரன் 

 நாடகங்கள் நடித்தவாரே சினிமாவில் நடித்து புகழ்ப் பெற்ற நகைச்சுவை நடிகர் டி.ஆர்.ராமசந்திரன் அவர்கள். 

ஏவி.எம். செட்டியார் இயக்கிய முதல் படமான ’சபாபதி’ படத்தில் அறிமுகமானார். சபாபதியாக டி.ஆர்.ராமசந்திரனும், வேலைக்காரனாக காளி என்.ரத்தினமும் நடித்தக் காட்சிகள் அந்தக் காலத்தில் புகழ் பெற்றது. 

‘ஸ்ரீ வள்ளி’ போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். ‘வாழ்க்கை’ படம் இவரை நாயகன் அந்தஸ்த்தைப் பெற்று தந்தது. ஒரு பக்கம் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, வித்யாபதி போன்ற நாயகனாகவும், கள்வனின் காதலி, வண்ணக்கிளி போன்ற படங்களில் நகைச்சுவை பாத்திரங்களிலும் நடிப்பார். 

அஞ்சலி தேவி தயாரித்த ‘அடுத்த வீட்டு பெண்’ படத்தில் இவரும், தங்கவேலு செய்த நகைச்சுவை காட்சி இன்று எல்லா மொழிகளிலும் ரீமேக் வடிவத்தில் பலர் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

கே.சாரங்கபாணி 

அந்த காலத்தில் நகைச்சுவை கலந்த அப்பா பாத்திரத்தில் பொருந்தக் கூடிய நடிகர் கே.சாரங்கபாணி அவர்கள். எல்லா இயக்குனர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் மரியாதையுடன் பழகக் கூடிய நடிகர் என்று பெயர் எடுத்தவர்.

’வேதாள உலகம்’ படத்தில் தன்னை கொல்ல வந்த ராட்சர்களை வயிறு முழுக்க சாப்பிட வைப்பார். ’மிஸ்சியம்மா’ படத்தில் ஒவ்வொரு விஷயத்தை சொல்லுவதற்கு பணத்தை பெறுவதும் பல நகைச்சுவை நடிப்பில் பல பரிமானங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

 துகாரம் படத்தில் தொடங்கி பந்துலுவின் ‘தங்கமலை ரகசியம்’, டி.ஆர்.மகாலிங்கத்தின் ‘மோகனசுந்தரம், சிவாஜியின் ‘தெய்வப்பிறவி’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

நன்றி : நம் உரத்தசிந்தனை, நவம்பர், இதழ், 2014

Monday, November 3, 2014

தமிழ் சினிமா 100 - பூபால் சிங் எதிர்வினை

நம் உரத்தசிந்தனை மாத இதழில் ‘தமிழ் சினிமா 100’ பற்றிய வரலாறு தொடர் எழுதி வருகிறேன். செப்டம்பர் மாத இதழில் 1930-40 களில் அறிமுகமாகி 1950-60 குணச்சித்திர நடிகர்களாக (9வது தொடர்) மாறிய நடிகர்களை பற்றி எழுதியிருந்தேன். ( அந்த கட்டுரையை வாசிக்க... )

அதற்கு, ’பூபால் சிங்’ சென்ற வாசகர் எஸ்.வி.சுப்பையாவை எப்படி எழுதாமல் விடுப்பட்டது என்று எதிர்வினை புரிந்திருக்கிறார். 1950-70 பற்றிய குணச்சித்திர நடிகர்களைப் பற்றி குறிப்பிடும் போது எஸ்.வி.சுப்பையா, மேஜர் சுந்தரராஜன், எம்.ஆர்.வாசு (நகைச்சுவை + குணச்சித்திரம்) போன்ற நடிகர்களை குறிப்பிட வேண்டும் என்று வைத்திருந்தேன் என்கிற விளக்கத்தை தொலைப்பேசி மூலம் அவருக்கு தெரிவித்தேன்.


சென்ற ஆக்டோபர் மாத இதழில் சினிமாவைப் பற்றிய எனது கட்டுரைக்கு பதிலாக இவருடைய வாசகர் கடிதம் இடம் பெற்றுயிருக்கிறது.

உரத்த சிந்தனை போன்ற தன் நம்பிக்கையூட்டும் இதழில் சினிமாவுக்கும், இலக்கியத்திற்குமான பக்கங்கள் மிக அறிதாகவே கிடைக்கும். அதில் சினிமாவைப் பற்றிய தொடர் எழுத வாய்ப்பு கொடுத்து, வாசகர்களில் கவனத்தை பெறுகிறது என்றால் மிகப் பெரிய விஷயம். மாதம் 10-15 பேர் தொலைப்பேசியில் பாராட்டுகிறார்கள். இந்த தொடருக்காக இன்னும் உழைக்க வேண்டும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

பூபால் சிங் எதிர்வினையை விட, அதை பிரசுரம் செய்த உரத்த சிந்தனை இதழுக்கு தான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

Wednesday, September 17, 2014

சினிமா 1913 -2013 : 9. குணச் சித்திர நடிகர்கள் !

சினிமாவில் கதாநாயகிகள் அதிகப்பட்சமாக ஐந்தாண்டுகள் நடிக்கலாம். அதன்பின் அக்கா, அன்னி, அம்மா பாத்திரங்களுக்கு நடிக்க வந்துவிட வேண்டியதாக இருக்கும். நாயகர்கள் அவர்களை விட கொஞ்சம் அதிகம். ஆனால், அவர்களுக்கு ஒரு காலக்கட்டத்தில் அண்ணன், அப்பா பாத்திரங்களுக்கு மாற வேண்டியது இருக்கும் என்பது தான் சினிமாவின் விதி. (எம்.ஜி.ஆர், ரஜினி, கமல் போன்ற விதி விளக்குகளும் சினிமாவில் உண்டு.)

1930, 40 களில் புகழ் பெற்ற நாயகர்களாக கொடிக் கட்டி பறந்து, பின்பு ஐம்பது சினிமாவில் குணச் சித்திர பாத்திரங்களில் பிரபலமானாவர்கள் பலர் இருக்கிறார்கள்.



எம்.ஆர்.ராதா 

1954ல் வெளியான “ரத்தக்கண்ணீர்” படத்தின் மூலம் வித்தியாசமான நடிப்புக்கு வித்திட்ட நடிகர். இன்று வில்லன நடிகர்கள் தங்கள் நடிப்பில் நகைச்சுவை கலந்து செய்கிறார்கள் என்றால் அதற்கு முன்னோடியாக இருப்பவர் எம்.ஆர்.ராதா அவர்கள் தான்.

எம்.ஆர்.ராதா அவர்கள், தமிழில் சினிமா 1937ல் “ராஜசேகரன்” என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் நடிக்கும் போது குதிரை மீது குதிக்கும் காட்சியில் அவருக்கு கால் முறிவு ஏற்ப்பட்டது. அதன் பிறகு, “பம்பாய் மெயில்” என்ற படத்திலும் நடித்தார். என்ன காரணத்திற்காகவோ அதன்பின் சினிமாவை விட்டு ஒதுங்கி நாடகத்தில் மட்டுமே நடித்து வந்தார்.

”ரத்தக் கண்ணீர்” வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். ஆனால், அவருக்கு பொருத்தமான பாத்திரம் கொடுக்க முடிக்க முடியுமா என்று அஞ்சியே யாரும் அவரை அனுகவில்லை. தயாரிப்பு ஒத்துழைப்பு தரமாட்டார் என்ற பேச்சு அப்போது அவர் மேல் இருந்தது.

மூன்று வருடம் கலித்து ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் “நல்ல இடத்து சம்பந்தம்” படத்தில் நடித்தார். இந்தப் படம் வெளிவந்த பிறகு தயாரிப்பாளர் எம்.ஆர்.ராதா அவர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார் என்ற நம்பிக்கை வந்தது. மாறுப்பட்ட வேடங்களில் ராதா அண்ணன் நடிக்க முடியும் பலரது நம்பிக்கைப் பெற்ற குணச்சித்திர நடிகராக உயர்ந்தார்.

டி.ஆர். மகாலிங்கம். 

தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா போன்ற இரண்டு சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் மூன்றாவது சூப்பர் ஸ்டாராக மின்னியவர் டி.ஆர்.மகாலிங்கம். சிறு வயதில் இருந்தே பாடும் திறமைக் கொண்டவர். 1938ல் ஏவி.எம்மின் படமான “நந்தகுமார்” படத்தின் மூலம் அறிமுகாமானார். அப்போது அவருக்கு வயது 14 !!

தனது முதல் படத்திலேயே பலரது கவனத்தை ஈர்த்த டி.ஆர். மகாலிங்கம் பரசுராமர், பூலோக ரம்பை போன்ற படங்களில் நடித்தார். அதன் பின் வெளியான “ஸ்ரீ வள்ளி” படம் டி.ஆர்.மகாலிங்கத்தை முக்கிய நடிகராக மாற்றியது. அதை தொடர்ந்து வந்த “நாம் இருவர்” படமும் டி.ஆர்.மகாலிங்கத்தை பெரிய நட்சத்திரமாக உயர்த்தியது. அடுத்து ஐந்து ஆண்டுகளில் வேதாள உலகம், ஞானசவுந்தரி, மாயாவதி, பவளக்கொடி என்று பல படங்களில் நடித்தார்.

புகழ் உச்சியில் இருக்கும் போது தனது மகனின் பெயரில் “சுகுமார் புரொடக்ஷனஸ்” என்ற கம்பெனி சொந்தமான படம் தயாரிக்கத் தொடங்கினார். மச்சரேகை, மோகசுந்தரம், சின்னத்துரை, விளையாட்டு பொம்மை போன்ற படங்களை தயாரித்தார். இதில், ’சின்னத்துரை’ படத்தின் டைரக்ஷன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதில் எந்த படங்களும் வெற்றிப் பெறவில்லை. அது வரை அவர் சம்பாதித்த பணத்தை எல்லாம் இழக்க வேண்டியதாக இருந்தது. கடன்காரர்களை சமாளிக்க முடியாமல் தன் சொத்துக்களை அனைத்தையும் இழந்தார்.

கண்ணதாசன் இவருக்கு உதவுவதற்காக “மாலையிட்ட மங்கை” என்ற படத்தை தயாரித்தார். படம் வெற்றிப் பெற்றாலும், இவரால் மீண்டும் ‘நாயகன்’ அந்தஸ்தில் நடிக்க முடியவில்லை. குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்க வேண்டியதாக இருந்தது. திருவிளையாடல், அகத்தியர், ராஜராஜ சோழன் போன்ற படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்தார். 1978ல் உடல் நலக்குறைவால் இறந்தார்.

ரஞ்சன் 

’நாயகன்’ என்றால் நல்லவனாக இருக்க வேண்டும், நான்கு பேருக்கு உதவ வேண்டும், வில்லனோடு சண்டைப் போட வேண்டும் என்று இருந்த காலக்கட்டத்திலே ரஞ்சன் அவர்கள் வில்லன் தன்மைப் பொருந்திய நாயகனாக நடித்தவர். இவர் நடித்த ‘சந்திரலேகா’ இன்று வரை காலத்தால் மறக்க முடியாத காவியப்படமாக இருக்கிறது.

”ரிஷ்யசிருங்கர்” என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடித்த “மங்கம்மா சபதம்” மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இதில், அப்பா – மகன் என்று இரட்டை வேடத்தில் நடித்தாலும், அப்பா பாத்திரத்தில் இவர் நடித்த வில்லன் பாத்திரம் தான் அதிகம் பேசப்பட்டது.

“சந்திரலேகா” படத்தில் எம்.கே.ராதா தான் நாயகன் என்றாலும், நாயகனுக்கு இணையாக ரஞ்சனின் வில்லன் பாத்திரப்படைப்பு இருந்தது. இறுதிக் காட்சியில் இவர்களின் கத்திச் சண்டை பிரமாதமாக அமைந்தது. எம்.கே.ராதா நடித்த “அபூர்வ சகோதர்கள்” படத்தை இந்தி பதிப்பான “நிஷான்” படத்தில் நாயகனாக நடித்தார்.

வி.நாகையா

தெலுங்கு பட உலகில் கொடிக்கட்டி பறந்தவர் வி.நாகையா. 1938ல் கண்ணம்மாவோடு “கிரகலட்சுமி” என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர், சுமங்கலி, தேவதா போன்ற பல படங்கள் நடித்தார். 1950ல் தமிழில் இவர் நடித்த “ஏழை படும் பாடு” மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.

”என் வீடு” (1953) என்ற படத்தை தமிழ், தெலுங்கில் தயாரித்ததோடு இல்லாமல் டைரக்ஷ்ன், இசை இவரே ஏற்றுக் கொண்டார். எம்.ஜி.ஆரின் “சர்வாதிகாரி”, சிவாஜியின் “தெனாலிராமன்”, மீரா, பாவமன்னிப்பு என்ற பல படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்தார். நடிப்புக்காக மத்திய அரசின் “பத்மஸ்ரீ” விருது பெற்றவர், தனது கடைசிக் காலத்தில் பொருளாதாரத்தால் சிரமப்பட்டு இறந்தார்.

எஸ்.வி.சகஸ்ரநாமம்

நாடகத்துறை மட்டுமில்லாமல் திரைப்படத்துறையிலும் பல சாதனைப் புரிந்தவர் எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்கள்.

டி.கே. சண்முகம் அவர்கள் “சண்முகானந்தா சபா” நாடகக் குழுவில் பணியாற்றியவர், 1935ல் “மேனகா” படத்தில் முதன் முதலாக நடித்தார். இந்தப் படத்தில் அறிமுகமான இன்னொரு நடிகர் என்.எஸ்.கே !!

”என்.எஸ்.கே நாடக சபை” யின் முக்கிய நடிகராக விளங்கியதோடு இல்லாமல் அந்த நாடகக் குழுவின் நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டார். லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் என்.எஸ்.கே சிறைச் சென்ற போது, அந்த காலக்கட்டத்தில் உருவான “பைத்தியக்காரன்” படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.

1949ல் ஏ.வி.எம் தயாரிப்பான “வாழ்க்கை” படத்தில் எதிர்மறை நாயகன் பாத்திரத்தை ஏற்றார். ”பராசக்தி” படத்தில் சிவாஜி அண்ணனாக நடித்தவர், பிறகு சிவாஜி நடித்த பல படங்களில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.

“போஸ்காரன் மகள்” படத்தில் இவர் ஏற்று நடித்த தந்தைப் பாத்திரம் மறக்க முடியாதவை.

எஸ்.வி. ரங்கா ராவ்

ராவணா, கடோத்கஜன், துரியோதனன், இரணியன் என்று புராணப் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த கலைஞர் எஸ்.வி.ரங்கா ராவ் அவர்கள். 1946ல் ’வரோதினி’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர், இரு மொழியில் எடுக்கப்பட்ட “பாதாள பைரவி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

ஒரு பக்கம் இராவணன், ஏமன் என்று புராணப் பாத்திரங்கள், இன்னொரு பக்கம் “பேசும் தெய்வம்”, “படிக்காத மேதை”, “முத்துக்கு முத்தாக” படங்களில் குடும்பத் தலைவன் பாத்திரம், மாயஜாலப் படங்களில் வில்லன் பாத்திரம் என்று சகலமும் ஏற்று நடிக்கக் கூடிய வல்லவர்.

”பக்த பிரகலாதா” படத்தில் கிட்டதட்ட பதினைந்து கிலோ எடையுள்ள ஆபரணங்களை அணிந்து நடித்தார்.

“விஸ்வ நாடக சக்கரவர்த்தி” என்று புகழ்ப் பெற்ற இவர் தனது 56வது வயதில் இறந்தார்.

அடுத்த இதழில் மறக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள் !!!!

நன்றி : நம் உரத்தசிந்தனை, செப்டம்பர், இதழ், 2014

Wednesday, August 27, 2014

சினிமா 1913 -2013 - 8. தமிழ் சினிமாவில் ஆரம்ப எழுத்தாளர்கள்

சென்ற மாதம் தொடருக்கு தொலைப்பேசி அழைத்து வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. எந்த காலத்திலும் “நடிகைகள்” பற்றி எழுதினால் அதிக வரவேற்பு இருக்கும் என்பதை தங்களின் பாராட்டு நிருபிக்கிறது.

அதில், ஒருவர் 1940,50 சினிமாவில் எழுதிய வசனக்கர்த்தா, பாடலாசிரியர்களை பற்றி சொல்லாமலே 60களில் இருக்கும் சினிமாவுக்கு செல்வதை குறையாக கூறினார்.

1940, 50 சினிமாவில் பிலிம் சுருள்கள் அழிந்த நிலையில் அந்த படங்களுக்கு பாட்டெழுதியவர்கள், வசனம் எழுதியவர்கள் குறிப்பு சேகரிப்பது என்பது மிகவும் சிரமமான காரியம். பிரபலமான படங்களில் பாடல், வசனம் எழுதியவர்கள் விவரங்கள் மட்டுமே கிடைத்தது.

மலையாளப்படங்கள் இன்று விருதுகள் குவிக்கும் பல காரணங்களில் முக்கிய காரணம் கதை, வசனம் இயக்குனர்கள் எழுதுவதில்லை. அதற்கென்று தனி நபர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்படும்.

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் இயக்குனர்களே கதை, வசனம் எழுதிவிடுவதால் அதன் பிரிவுப் பற்றி யாரும் பெரிதாக நினைப்பதில்லை. கதை, வசனம் எழுத முடிந்தவர்களால் இயக்க முடியும் என்ற மாயை தோன்றிவிட்டது. எது சரி, தவறு என்று இயக்குனருக்கு எடுத்து சொல்லவும் யோசிக்கிறார்கள்.

அடுத்த மாதம் 60களில் வரும் சினிமாவை பார்ப்போம் என்று கூறி, இந்த மாதம் தமிழ் சினிமா ஆரம்பக்கால பாடலாசிரியர், வசனக்கர்த்தா பற்றி பார்ப்போம்.

பாபநாசன் சிவன்

தமிழ்ப்பட உலகில் பாகவதர், பி.யு.சின்னப்பா போன்றவர்கள் கொடிக்கட்டிப் பறந்த காலக்கட்டத்தில் அவர்களின் படங்களுக்கு பாடல் எழுதியவர் பாபநாசன் சிவன் அவர்கள். பல படங்களுக்கு இசை அமைப்பாளராகவும் இருந்திருக்கிறார். “தமிழ்நாட்டின் தியாகையா” என்று போற்றப்பட்ட இசை மேதை.

1933ல் “சீதா கல்யாணம்” என்ற தமிழ்ப்படத்திற்கு அவர் இசை அமைக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் தியாகராஜர் அறிமுகமான “பவளக் கொடி” படத்திற்கும் இசை அமைத்தார். அடுத்து தமிழின் மெகா சூப்பர் ஹிட் படமான “சிந்தாமணி” க்கு பாடல் எழுதி இசையமைத்திருக்கிறார். இவர் பாடல் எழுதிய கையோடு, அதை எப்படி பாட வேண்டும் என்ற மெட்டையும் கொடுத்துவிடுவார்.

1933 முதல் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் பணியாற்றியிருக்கிறார். பக்த குசேலா, குபேர குசேலா, தியாக பூமி போன்ற படங்களில் நடித்தும் இருக்கிறார். பாகவதர் நடித்த “அம்பிகாபதி”, திருநீலகண்டர், அசோக்குமார், சிவகவி, ஹரிதாஸ் போன்ற படங்களுக்கு அவர் எழுதிய பாடல் காலத்தை வென்று இன்றும் இருக்கிறது. இவரின் நினைவாக மைலாப்பூர் சாந்தோம் பகுதியில் இருக்கும் ஒரு தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கொத்தமங்கலம் சுப்பு 




எஸ்.எஸ்.வாசனின் மிகவும் நம்பிக்கைக்குரியவர், ஜெமினி நிறுவனத்தின் மிகப் பெரிய தூண் என்று சொல்லக் குடியவர் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள்.

நடிகர், ’அவ்வையார்’ படத்தின் இயக்குனர் என்பதோடு இல்லாமல் காலத்தால் அழியாத “தில்லானா மோகனாம்பாள்” படத்தின் கதையை எழுதியவர் இவர். பத்திரிகைகளுக்கு கதை, கட்டுரை எழுதி வந்த கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் 1941ல் ஜெமினி தயாரித்த “தாசி அபரஞ்சி” என்ற படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி நடித்தார்.

அதன்பின் “மிஸ் மாலினி” படத்தை இயக்கி, அந்த படத்தில் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்தார். 1953ல் ஜெமினியின் பிரமாண்டமான தயாரிப்பான “அவ்வையார்” படத்தை இயக்கி தமிழ் சினிமாவின் அழியா புகழ் பெற்றார்.

கவிஞர் கம்பதாசன்

1940களில் மிகப் பெரிய பாடல் ஆசிரியராக விளங்கியவர் கவிஞர் கம்பதாசன். ”வாமனாவதாரம்” என்ற படத்திற்கு ஏழு பாடல்கள் எழுதி தனது திரையுலகப் பயணத்தை தொடங்கினார்.

“ஞானசவுந்தரி” யில் இவர் எழுதிய “அருள் தாரும் தேவ மாதாவே” என்ற பாடலும், “அவன்” படத்தில் இடம் பெற்ற :கல்யாண ஊர்வலம் வரும்” போன்ற புகழ் பெற்றவை. தனது திருமண வாழ்க்கை முறிவால், மதுவுக்கு அடிமையாக்கி இறுதி வாழ்நாளில் மிகவும் சிரமப்பட்டு இறந்தார்.

நாஞ்சில் ராஜப்பா

பாகவதர் நடித்த “ராஜமுக்தி” படத்திற்கு வசன எழுதிய புதுமைபித்தன் உடல் நலம் குன்றி மரணம் அடைந்தார். அப்போது, மீதி வசனத்தை எழுதியவர் நாஞ்சில் ராஜப்பா அவர்கள்.

ஆரம்பக்காலங்களில் சில நாடகத்தை டைரக்ட் செய்து, அதில் முக்கிய பாத்திரத்தில் நாஞ்சில் ராஜப்பா நடித்து வந்தார். இவர் நடித்த “திருமழிசை ஆழ்வார்” நாடகம் சென்னையில் தொடர்ந்து ஒரு வருடம் மேல் நடந்தது. 1948ல் “சிட்டாடல் மூவிஸ்” திரைப்பட நிறுவனத்தின் முதல் படமான “ஞானசவுந்தரி” என்ற படத்தில் முதன் முதலாக கதை, வசனம் எழுதினார்.

இதய கீதம், மல்லிகா, விஜய புரி போன்ற 12 படங்களுக்கு கதை – வசனம் எழுதியிருக்கிறார். 1971ல் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது அரசு திரைப்படக் கல்லூரியின் துணை விரிவுரையாளராக நாஞ்சில் ராஜப்பா நியமிக்கப்பட்டார்.

ஏ.எஸ்.ஏ.சாமி

ஏ.எஸ்.ஏ.சாமி அழைக்கப்படும் ஆரோக்கிய சாமி தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இன்னொரு முகம். இவர் எழுதிய “பில்ஹணன்” என்ற வரலாற்று நாடகம் 40களில் திருச்சி வானொலி ரேடியோ நாடகமாக ஒலிபரப்பானது. இந்த நாடகத்தை டி.கே.சண்முகம் அவர்கள் மேடை நாடகமாக மாற்றி வெற்றிப் பெற செய்தார்.

இவரின் எழுத்து திறமையை வியந்த ஜூபிடர் பிக்சர்ஸார் தங்கள் படத்தின் கதை பிரிவுக்கு வேலைக்கு அழைத்தனர். பின்னர், அவர்களின் தயாரிப்பான மோகினி, அபிமன்யூ, ராஜகுமாரி போன்ற படங்களை இயக்கவும் வாய்ப்பளித்தனர்.

அறிஞர் அண்ணாவின் “வேலைக்காரி” கதையை திரைப்படமாக எடுத்த பெருமை இவருக்கு உண்டு. அதை தொடர்ந்து மர்மயோகி, துளிவிஷம், தங்கப்பதுமை, அரசிளங்குமரி, கற்புக்கரசி போன்ற இயக்கி இருக்கிறார்.

கலைஞர் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கும் போது ஏ.எஸ்.ஏ.சாமியிடம் உதவியாளராக பணியாற்றினார். தமிழக முதல்வர்களாக அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் போன்ற மூன்று முதல்வர்களிடம் பண்யாற்றிய பெருமை இவருக்கு உண்டு.

நன்றி : நம் உரத்தசிந்தனை, ஆகஸ்ட், இதழ், 2014


Saturday, August 9, 2014

சினிமா 1913 -2013 – 7. ஆரம்பக் கால கதாநாயகிகள்

எந்த தொழிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பணிப்புரிகிறார்கள். ஓய்வு எடுக்கும் வயது வரை ஆண்கள் வேலை செய்யலாம். ஆனால், பெண்கள் குடும்பம், சொந்த கடமைகள் என்று வலையத்திற்குள் சிக்கி கொள்வதால் தங்களுக்கு திறமையிருந்தும் அந்த துறையில் முழுமையாக பணி செய்ய முடியாத நிலையில் பலர் இருக்கிறார்கள்.

மற்ற துறைகள் இப்படி இருக்கும் போது சினிமாத்துறை பற்றி சொல்ல வேண்டியதில்லை. புகழின் உச்சத்தில் இருக்கும் போது திருமணம் செய்து கொண்டு சினிமா விட்டு ஒதுங்கிவிடுவார்கள். ஒரு சிலருக்கு சினிமாவில் தொடர்ந்து பணி செய்ய வேண்டும் என்ற விரும்பம் இருந்தாலும், வயது காரணமாக ஓரம் கட்டப்படுவார்கள். எந்த தொழிற்துறை காட்டிலிலும் சினிமாவில் பெண்கள் பல சவால்களை சந்தித்துக் கொண்டு தான் சாதிக்கிறார்கள்.

சினிமாவில் வேண்டுமானால் பெண் உரிமைப் பற்றி பேசலாம். ஆனால், சினிமாவில் வேலை செய்யும் பெண்கள், வேலை செய்யும் போது பெண் உரிமைப் பற்றி பேசினால் ஓதுக்கிவிடுவது இன்றைய சூழ்நிலை. இந்த காலத்திலேயே இப்படி இருக்கும் போது சினிமாவின் ஆரம்பக் காலத்தில் பெண்கள் நடிப்பது என்றாலே கேவலமாக பார்த்த காலத்தில் அவர்களின் நிலைமை அதைவிட பரிதாபம். அதையும் மீறி சாதித்த சில பெண்களை தான் இந்த வாரம் பார்க்க போகிறோம்.

டி.பி.ராஜலட்சுமி 

தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி என்று இல்லாமல், முதல் பெண் இயக்குனர் என்ற புகழுக்குரியவர் டி.பி.ராஜலட்சுமி அம்மா அவர்கள். எட்டு வயதில் பாலிய திருமணத்தில் வரதட்சனை கொடுமையால் அம்மா வீட்டுக்கு வந்தார். தன் தந்தையின் மரணத்திற்கு பிறகு குடும்ப சுமையை ஏற்க ராஜலட்சுமி அம்மா சுமக்க வேண்டியதாக இருந்தது.



அப்போது சி.எஸ்.சாமண்ணா நாடக கம்பெனியில் நடிக்க சென்றார். ராஜலட்சுமி அம்மா பார்க்க அழகாகவும், நல்ல குரல் வளமும் இருந்ததால் மாதம் ரூ.30 சம்பளம் கிடைத்தது. (அன்றைய தேதியில் ஒரு சவரன் ரூ.13)

பல நாடகங்களில் நடிக்க பெண் கிடைக்காததால் ஆண்கள் (சிறுவர்கள்) பெண் வேடமிட்டு நடிப்பார்கள். ஆனால், டி.பி.ராஜலட்சுமி அம்மா முதல் முறையாக ‘அர்ஜூனன்’ வேடமிட்டு நடித்தார். முதல் ஆண் வேடமிட்ட பெண் நடிகையும் இவர் தான்.

டி.பி.ராஜலட்சுமி அம்மா தனது ஆபார திறமையால் பல நாடக கம்பெனியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கோவலன், உஷா சுந்தரி போன்ற மௌனப் படங்களில் நாயகியாக நடித்ததோடு இல்லாமல், முதல் தமிழ் பேசும் படமான ‘காளிதாஸ்’ படத்தின் நாயகியாகவும் நடித்தார்.

பத்திரிக்கைகளும், ரசிகர்களும் இவருக்கு ’சினிமா ராணி’ என்ற பெயரும் சூட்டினர். டி.வி.சுந்தரம் என்பவரை மணந்து கடைசி வரை வசதியுடன் வாழ்ந்து இறந்தார்.

எஸ்.டி.சுப்புலட்சுமி 

“பவளக்கொடி” நாடகத்தை பார்த்த அழகப்ப செட்டியாரும், மானகிரி லேனாவும் தாங்கள் தயாரிக்கும் படத்திற்கு இவர்கள் தான் நாயகன், நாயகி என்று முடிவு செய்துவிட்டார்கள். படத்தை இயக்கவிருந்த கே.சுப்பிரமணியனும் ’சரி’ என்று சொல்லிவிட்டார். அந்த நாடகத்தில் நாயகனாக நடித்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். நாயகியாக நடித்தவர் எஸ்.டி.சுப்புலட்சுமி.



தனது கணீர் வசனத்தால் இந்த வாய்ப்பினைப் பெற்றார். ‘பவளக்கொடி’ படத்தில் நடித்த தியாகராஜ பாகவதருக்கு ரூ.1000 சம்பளம். இயக்குனர் கே.சுப்பிரமணியனுக்கு ரூ.700 தான். ஆனால், நாயகியாக நடித்த எஸ்.டி.சுப்புலட்சுமி அம்மாவுக்கு ரூ.2000 சம்பளம் வழங்கப்பட்டது.

கே.சுப்பிரமணியன் இயக்கிய மற்றொரு படமான ‘நவீன சாரங்கதரா” படத்திலும் நடித்தார். கே.சுப்பிரமணியன் முன்பே திருமணமானவர் என்றாலும், எஸ்.டி.சுப்புலட்சுமி அம்மா அவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

கே.பி.சுந்தரம்மாள்

இன்று வரை தமிழ் சினிமாவில் மறக்க முடியாத முகம். மறக்க முடியாத குரல். நினைவில் நிற்கும் பாடல்கள். முதல் படமான “நந்தனார்” படத்தில் ஒரு லட்ச ரூபாய் சம்பளமாக பெற்ற நடிகை என்ற புகழ். அனைத்திற்கும் சொந்தமானவர் கே.பி.சுந்தரம்மாள் அவர்கள்.

இளமையின் வறுமையின் காரணமாக நாடகத்தில் நடிக்க வந்தார். எஸ்.ஜி.கிட்டப்பாவுடன் “வள்ளி திருமணம்”, “கோவலன்”, “ஞானசவுந்தரி” போன்ற பல நாடகங்கள் நடித்ததோடு இல்லாமல் அவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். சுந்தரம்மாளுக்கு 25 வயது இருக்கும் போது கிட்டப்பா அவர்கள் உடல் நலக்குறைவால் இறந்தார். அதன் பின் துறவி போல் கடவுள் பாடல்கள் மட்டுமே பாடி வந்தார். ஆன்மீக சொற்பொழிவு, ஆன்மீக கூட்டங்களில் மட்டும் கலந்துக் கொண்டார்.

அதன் பின் வந்த சினிமா வாய்ப்புகளிலும் பக்தி பாடல்கள் பாடும் பாத்திரங்களை மட்டும் ஏற்று நடித்தார்.

எம்.எஸ். சுப்புலட்சுமி

இன்னும் எத்தனை நூற்றாண்டு கொண்டாடினாலும் ”காற்றினிலே வரும் கீதம்” (’மீரா’ படம்) பாடலை யாராலும் மறக்க முடியாது. காலையில் அவரது சுப்ரபாதம் பாடல் கேட்டாமல் கண் விழிப்பவர்கள் குறைவு. அந்த அளவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் குரல் நம்மை வசியம் செய்து வைத்திருக்கிறது.

“சேவா சதனம்” படத்தில் அறிமுகமான எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா அவர்கள் தமிழ் சினிமா முக்கிய ஆளுமையாக இருக்கிறார். “சாவித்திரி” என்ற படத்தில் நாரதர் வேடத்தில் நடப்பதற்கு ரூ.40,000 சம்பளமாகவும் பெற்று இருக்கிறார். திரைப்படங்களில் நடித்ததோடு இல்லாமல் பல ஆன்மிக பாடல்களை பாடியும் இருக்கிறார்.

“எம்.எஸ்.சுப்புலட்சுமி இசையரசி. நான் வெறும் பிரதம மந்திரி தான்” என்று நேரு புகழாராம் சூட்டி இருக்கிறார்.

தனது குடும்பத்திற்கு உதவியாக இருந்த சதாசிவம் என்பவரை திருமணம் செய்து கொண்டு தனது 88வது வயதில் இறந்தார்.



டி.ஆர்.ராஜகுமாரி

இன்று தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கு என்று அளவுக் கோள் இல்லாமல் இருக்கிறது. சென்சார் போர்ட் ‘ஏ’ சான்றிதழை வாங்குவதைக் கூட பெருமையாக நினைக்கும் அளவிற்கு மாறிவிட்டனர். ஆனால், தனது காந்தப் பார்வையாலே பலரது கனவுக் கன்னியாக இருந்தவர் டி.ஆர்.ராஜகுமாரி அவர்கள்.

“கச்சதேவயானி” என்ற படத்தில் அறிமுகமான டி.ஆர்.ராஜகுமாரி அவர்கள் ‘ஹரிதாஸ்’, சந்திரலேகா போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். நாயகியாக மட்டும் இல்லாமல் வில்லி பாத்திரங்களில் ஏற்று நடித்து ’வில்லி’ பாத்திரத்திற்கு புது இலக்கணத்தை அமைத்திருக்கிறார்.

ஐந்து சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த நடிகை என்ற பெயரும் டி.ஆர்.ராஜகுமாரி அம்மாவுக்கே சேரும்.

மேலும் பானுமதி, டி.கே.மதுரம், புஷ்பவல்லி போன்ற நாயகிகளை பட்டியல் போட்டு பேச தொடங்கினால் நீண்டு கொண்டே போகும்.

நன்றி : நம் உரத்தசிந்தனை, ஜூன் இதழ், 2014

Wednesday, June 18, 2014

சினிமா 1913 -2013 – 6. இயக்குனர்களின் சினிமா

"சார் ! நீங்க நூறு பேர ஒரு கொம்பால சுத்தி சுத்தி அடிக்கிறது. அதுலையும் கடைசி பத்து பேரு உங்க சுண்டு விரல் பட்டதும் விழுந்துடுறாங்க..."

 "இந்த படத்துல மூனு ஹீரோயின். மூனு பேரு உங்கள மாத்தி மாத்தி லவ் பண்ணுறாங்க. ஆனா, நீங்க கண்பார்வையில்லாதவளுக்கு வாழ்க்கை கொடுக்குறீங்க.."

 "உங்க அப்பா, அம்மாவ ஒருத்தர் கொன்னுடுறான். அவன நீங்க வளர்ந்து அப்புறம் பழி வாங்குறீங்க" 

“ஒரே பாட்டுல பெரிய பணக்காரர் ஆகுறீங்க..”

 தமிழ் சினிமாவில் பெரும்பாலான இயக்குனர்களின் இன்றைய நிலை இது தான். கதாநாயகர்களுக்கு என்று பத்து கதைவைத்து திருப்பி திருப்பி எடுத்து, தங்கள் நாயகர்களை திருப்தி படுத்துகிறார்கள். நாயகர்களை சந்தோஷப்படுத்துவது போல் கதை சொல்லிவிட்டால் சினிமாவுக்குள் நுழைந்துவிடலாம் என்று நிலை. நாயகன் சம்மதித்துவிட்டால், தயாரிப்பாளரும் தானாகவே வந்துவிடுகிறார். ஆனால், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தான் சலித்துவிட்டது.

 சினிமாவை தொடங்கிய காலத்தில் இயக்குனர்கள் தான் பிரதானம். இயக்குனர் சொன்னதை செய்வார்கள். நடிகர், நாயகிகள், மற்றவர்கள் அனைவரும் அவர் சொல்லும் வேலை தான் செய்பவர்கள். இன்றும் அப்படி தான். ஆனால், படப்பிடிப்பு தளங்களில் தயாரிப்பாளர், இயக்குனர்கள் காட்டிலும் நாயகனுக்கு தான் அதிக மரியாதை வழங்கும் சூழ்நிலை.

 1930, 1940 களில் இயக்குனர்களுக்கான சினிமா இல்லை. தியாகராஜர் பாகவதர், சின்னப்பா போன்றவர்களுக்கு மவுசு இருந்தாலும் தின வேலைகளின் நடுவில் திரைப்படத்திற்கு செலவு செய்து படம் பார்க்கும் அளவிற்கு இல்லாத காலக்கட்டம். சினிமா வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இல்லாத காலக்கட்டத்தில் மிக முக்கியமாக திகழ்ந்த இயக்குனர்களை பார்ப்போம்.

ராஜா சாண்டோ 



  புதுகோட்டையில் பிறந்த ராஜா சாண்டோ அவர்கள் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத முகம். மௌனப்படக் காலங்களில் இருந்து மறக்க முடியாத சகாப்தம். இன்று பல இயக்குனர் தயாரித்து நடிக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் ராஜா சாண்டோ தான் முன்னோடி.

 தமிழ் சினிமாவில் முத்த காட்சிகளை அறிமுகப்படுத்தியவர் இவர் தான். இதிகாசப் படங்களில் இருந்த தமிழ் சினிமாவை சமூகக் கதைகளை படமாக்கினார். "உங்கள் கதையை படமாக பார்க்க தவறாதீர்கள்" என்று விளம்பரப்படுத்தினார். தமிழ் சினிமாவின் எடுக்கப்பட்ட மௌனப்படங்கள் இப்போது ஒன்று கூட காணக்கிடைக்கவில்லை என்றாலும், இவரைப் பற்றிய பதிவுகள் மட்டும் அழிந்து போகவில்லை.

 ’பக்த போதனா’ (1922) மௌனப் படத்தின் மூலம் நடைக்க தொடங்கியவர், 'ஸ்நேக் ஜோதி' (1928) என்ற மௌனப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். பேசும் படம் வந்த பிறகு தமிழ், ஹிந்தி என்று இரண்டு மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கி நடித்திருக்கிறார். ‘சந்திரகாந்தா’ என்ற படத்திற்கு திரைக்கதையும் அமைத்திருக்கிறார்.

 இவர் இயக்கிய கடைசி படம் தியாகராய பாகவதர் நடித்த 'சிவகாமி' (1943). அந்த படத்தில் தயாரிப்பாளருடன் கருத்துவேறுபாட்டோடு படத்தில் இருந்து விலகிக் கொண்டார். இறுதியில் அந்தப்படத்தின் தயாரிப்பாளரே இயக்க வேண்டியதாக இருந்தது.

40, 50 களில் இருந்த மிகப் பெரிய சினிமா கலைஞர்கள் எல்லாம் இவரோடு பணியாற்றியிருக்கிறார்கள். தமிழக அரசு இவர் பெயரில் வருடா வருடம் தமிழ் சினிமாவுக்கு முக்கிய பங்காற்றியவர்களுக்கு விருது வழங்கி வருகிறது.

கே.சுப்பிரமணியம்

 பிரபல பரத கலைஞர் பத்மா சுப்பிரமணியம் அவர்களின் தந்தை. ராஜா சண்டோவின் மௌனப்படங்களில் உதவியாளராக பணியாற்றியவர்.

 'பவளக்கோடி' படத்தின் மூலம் தனது இயக்குனர் பயணத்தை தொடங்கினார். அந்தபடத்தில் தான் எம்.கே.தியாகராய பாகவதரும் அறிமுகமானர். தமிழ் சினிமாவில் முதல் தடை செய்யப்பட்ட படமான 'தியாக பூமி' படத்தை இயக்கியவரும் இவர் தான். பாலயோகி, சேவா சாதனம் போன்ற படங்களையும்இயக்கியிருக்கிறார்.

எல்லி டங்கன் 



 கே.பி.சுந்தரம்மாளுக்கு ஒரு லடசம் ரூபாய் சம்பளம் வழங்கியதாக சொல்லும் ‘நந்தனார்’ (1935) படம் தான் இவருடைய முதல் படம். ஆனால், இயக்குனரின் பெயர் மனிக் லால் தண்டோன் என்பவர் இருந்தது. அதன் பின் இவர் இயக்கி, எம்.ஜி.ஆர் அறிமுகமான ‘சதிலீலாவதி’ (1936) படம் இவருக்கு அதிக பெயர் எடுத்துக் கொடுத்தது.

 அமெரிக்காவில் பிறந்த டங்கன் அவர்கள் தனது நண்பரோடு இந்திய சினிமாவில் பணியாற்றத்தொடங்கினார். பின்னாளில், 1950ல் வரை தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராக மாறிவிட்டார். இரு சகோதரர்கள், அம்பிகாபதி, மீரா, மந்திரி குமாரி, பொன்மூடி போன்ற பல படங்களில் தமிழில் இருக்கியிருக்கிறார். 1950களுக்கு பிறகு ஆங்கில படங்கள் இயக்குவதில் தனது கவனத்தை செலுத்த தொடங்கினார்.

ஆர். பத்மநாபன் 

 1930களில் தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனர். ஆரம்பத்தில் திரைப்படங்களில் விநியோகம் செய்வதில் தொடங்கிய இவரது திரைப்பயணம் திரைப்படங்களை இயக்கவும், தயாரிக்கவும் செய்தார். சேது பந்தம், ஆசை, துரோபதி வஸ்த்ராபிஹாரம் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.

டி.ஆர். சுந்தரம் 



இன்று தமிழ் சினிமாவில் எத்தனையோ கார்ப்பிரேட் நிறுவனங்கள் படங்களை தயாரித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் கார்ப்பிரேட் கலாச்சாரம் இல்லாத காலத்தில் கார்ப்பிரேட் நிறுவனம் போல் ‘மார்டன் தியேட்டர்’ நிர்வாகம் செய்திருக்கிறார். இரண்டு மாதத்திற்கு ஒரு படமாவது மார்டன் தியேட்டரில் மூலம் வெளிவரும் அளவிற்கு அவரது நிறுவனம் செயல்பட்டது.

 சதி அகால்யா, பத்ம ஜோதி , மாணிக்கவாசகர், உத்தம புத்திரன் போன்ற படங்களையும் இயக்கியிருக்கிறார். திரையுலகின் தயாரிப்பாளர்கள் தான் ‘முதலாளி’. ஆனால், தமிழ் திரையுலகில் முதலாளி என்று கூறினால் அது டி.ஆர்.சுந்தரம் அவர்கள் தான். இன்னும் பல இயக்குனர்கள் இருக்கிறார்கள். படச் சுருல் அழிந்தது போலவே அவர்களுடைய பெயர்களும் அழிந்துவிட்டது. ஒரு படத்தின் வெற்றி இயக்குனர் கையில் இருந்தாலும், வியாபாரத்திற்கு நாயர்கள் நம்பி தான் இருக்கிறது.

அதையும் மீறி சில இயக்குனர்கள் ரசிகர்களுக்கான படங்களை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

நன்றி : நம் உரத்தசிந்தனை, மே இதழ், 2014

Friday, June 13, 2014

சினிமா 1913 -2013 – 5. ஆவணப்படங்கள்

(Disclaimer : இது என்னுடைய தேடலின் பட்டியல். இன்னும் நல்ல ஆவணப்படங்கள் இருக்கிறது. விடுப்பட்டிருந்தால் அது என்னுடைய தேடலின் குறையே !)

குடும்ப நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுப்பது, திருமணத்தை வீடியோ படம் பிடிப்பது, குடும்பமாக புகைப்படம் எடுத்துக் கொள்வது என்று நம் வாழ்நாளில் பசுமையான நினைவுகளை பதிவு செய்து அன்றாட விஷயம். தங்கள் வாழும் நாட்களின் நினைவுகளை பதிவு செய்வது, பின்னாளில் அதுவே ஆவணமாக மாறுகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மதராஸ் மகாணத்தில் வெள்ளையர்கள் எடுத்தப்படம், சென்னை எப்படி இருந்ததற்கு காட்டுகிறது. ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் நடத்தும் போது எடுத்தப்படம், அணு ஆயுதத்தின் விபரிதத்தை எதிர்காலத்திற்கு சொல்கிறது. ஈழத்தில் ஏழுபதுகளில் எடுக்கப்பட்ட ஒரு படம் யாழ்பாணம் பல்கலைக்கழகம் இருந்தத்தற்கு சாட்சியாக இருக்கிறது.

பண்டைய பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டிருந்தால் எவ்வளவு ஆவணமாக இருந்திருக்கும் பலருக்கு தோன்றும். இன்று விடைத் தெரியாத பல கேள்விகளுக்கு பதில் கிடைத்திருக்கும். அப்படி ’சினிமா’ என்ற ஒளி பொழுதுப்போக்கு சாதனமாக மட்டுமில்லாமல் முந்தைய வரலாற்றை பதிவு செய்யவும், அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல பாடமாகவும் பல ஆவணப்படங்கள் இருகின்றன.




வியாபார நோக்கம் இல்லாமல் முடிந்தவரை வரலாற்றை பதிவு செய்தும், எதிர்காலத்தில் கொண்டு செல்லவும் உதவியாக இருந்திருக்கிறது. திரைப்படங்களுக்கு இருக்கும் வணிகம் இதற்கு இல்லாததால் ஆவணப்படம் எடுப்பவர்கள் பல சோதனைகள் சந்திக்க வேண்டியது தான் இருக்கிறது.

இந்தியாவின் முதல் ஆவணப்படம் உண்மை நிகழ்வுகளை படம் எடுப்பது என்கிற ரீதியிலே எடுக்கப்பட்டது. டாக்டர் ஆர்.பி.பராஞ்சபே (இவர் இயக்குநர் சாய் பராஞ்சபேயின் தாத்தா) என்ற வழக்கறிஞருக்கு பம்பாய் சந்பாத்திக் கடற்கரையில் பொதுமக்கள் ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தினர். இந்த நிகழ்வை 1901-ஆம் ஆண்டு ஹரிசந்திர சகாரம் பட்வடேகர் என்பவர் படமாக எடுத்தார். நூறு வருடங்கள் பம்பாய் சந்பாத்திக் கடற்கரை, பொது மக்கள் கூட்டம் போன்ற விஷயங்களில் இந்தப் படம் ஆவணமாக இருக்கிறது.

இந்திய முதல் திரைப்படத்தை எடுத்த பால்கே, தான் படம் எடுப்பதை கேமிரா மூலம் பதிவு செய்திருக்கிறார். படக்காட்சி எப்படி எடுக்கப்பட்டது, பிலிம் ரோல் சரிப்பார்ப்பது என்று மௌனப்படத்தின் காலத்திலேயே பதிவு செய்திருக்கிறார். இதை பாடம் வகை சேர்ந்த படம் என்று சொல்லலாம். இன்று, தங்கள் படப்பிடிப்பு தளத்தில் நடப்பதை படம் பிடித்து பட விளம்பரத்து பயன்படுத்துவதை பார்க்கிறோம். ஷங்கர் முதல் அறிமுகமாகும் இயக்குனர்கள் வரை இதை கையாள்கிறார்கள். சன் டி.வி, விஜய் டி.வியில் படப்பிடிப்பு பற்றி அனுபவங்களை பகிரும் போது பயன்படுத்தப்படுகிறார்கள். இதற்கு முன்னோடியாக பால்கே இருந்திருக்கிறார்.

1903 முதல் 1911 வரை எடுக்கப்பட்ட ஆவணப்படங்கள் படங்களின் நிகழ்வுகள் சம்மந்தப்பட்டது தான். இந்திய அரசரின் திருமண விழாக் காட்சிகள், டெல்லி தர்பார் காட்சிகள், தசரா திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்களின், தினசரி வாழ்க்கை காட்டும் படங்களாக எடுக்கப்பட்டன.

தமிழ் சினிமாவில் ஆவணப்படங்களுக்கும், குறும்படங்களுக்கும் வரவேற்பு இல்லாதக் காலத்தில் அதற்காக பாடுப்பட்டவர் பீ.லெனின் அவர்கள். எடிட்டிங் துறையில் பிரபலம் என்றாலும், குறும்படங்கள் இயக்கியிருப்பது பலருக்கு தெரியாது. குத்துச்சண்டை வீரனைப் பற்றி அவர் இயக்கிய ‘நாக் அவுட்’ குறும்படம் பல விருதுகள் பெற்றுள்ளது.

வருடம் தோறும் லெனின் அவர்களை கௌரவிப்பதற்காக தமிழ் ஸ்டூடியோ ‘லெனின் விருது’ என்று சிறந்த ஆவணப்பட இயக்குனர்களுக்கு வழங்கி வருகிறார்கள். ஆம்ஷன் குமார், ஆர்.ஆர்.சீனிவாசன், லீனா மணிமேகலை போன்றவர்கள் இந்த விருதை பெற்றுள்ளார்கள்.

தமிழ் ஆவணப்படங்கள் உலகளவில் எடுத்து சென்ற பெருமை சொர்ணவேல் அவர்களுக்கு இருக்கிறது. இவர் இயக்கிய தங்கம், வில், ஐ.என்.ஏ, கார்கில் போன்ற ஆவணப்படங்கள் மிக முக்கியமானவை.



முன்பெல்லாம் பல ஆவணப்படங்களை பொதிகைத் தொலைக்காட்சி மட்டும் பார்க்க முடிந்தது. சமீபத்தில் தந்தி டி.வியில் முருகன், சாந்தன், பெறளிவாணன் போன்றவர்களின் தூக்கி தண்டனையை ரத்து செய்வதாக எடுப்பப்பட்ட ‘உயிர்வலி’ ஆவணப்படம் போட்டிருக்கிறார்கள். இப்படி ஆவணப்படத்திற்கு ஊடகங்களில் ஆதரவு கிடைப்பது மிக சொற்பமே !

தமிழில் எடுக்க வேண்டிய ஆவணப்படங்கள் இன்னும் நிறைய இருந்தாலும், அதை பயன்படுத்திக் கொள்ள இன்றைய ஊடகங்கள் தயாராக இல்லை. அதை பெரிதாக அங்கிகரிக்கவும் இல்லை என்பது தான் உண்மை. இன்று பல தமிழ் செய்தி தொலைக்காட்சிகள் இருக்கின்றன. தமிழில் வரும் ஆவணப்படங்களை அவர்கள் ஒளிப்பரப்பினால், ஆவணப்பட எடுப்பவர்களுக்கு ஊக்கமளிக்கும்.

முன்பு 1967ல் ஆவணப்படத்திற்கு பிலிம் பேர் விருதுகள் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. எதோ சில காரணங்களுக்காக 1998ல் அந்த விருது வழங்குவதை நிறுத்திவிட்டனர். தென்னிந்திய பிலிம் பேர் திரைப்பட விழாவிலும் ஆவணப்படத்திற்கு விருதுகள்கிடையாது.

உலகில் சினிமாவுக்காக விருதாக இருக்கும் ஆஸ்கர் விருதுகளில் குறும்படத்திற்கும், ஆவணப்படத்திற்கும் விருது வழங்கி கௌரவிக்கிறார்கள். ஆனால், சினிமா வளர்க்கிறோம் என்ற பெயரில் திறமையை ஊக்கவிப்பதாக சொல்லி விருது வழங்குபவர்கள் ஆவணப்படங்களை கண்டுக் கொள்வதில்லை என்பது தான் நிதர்சன உண்மை.

கதையே இல்லாமல் திரைப்படம் எடுக்கலாம். வெற்றி பெறலாம். ஆனால், எந்த வித தகவலும், திட்டமும் இல்லாமல் ஒரு ஆவணப்படத்தை எடுக்க முடியாது.

படம் எடுக்கப் போகும் களனை முதலில் ஆய்வு செய்ய வேண்டும். அதைப் பற்றி படிக்க வேண்டும். அதை திரையில் எது பதிவு செய்ய வேண்டும், வேண்டாம் என்ற முடிவு எடுத்து அதற்கான திட்டம் இருக்க வேண்டும்.

வருங்காலத்திற்கு பாடமாகவும், பதிவாகவும் இருக்க போகும் ஆவணப்படத்திற்கு சந்தை விருதுகள் மட்டுமில்லாமல், ஊடகங்களின் ஆதரவு இருந்தால் இன்னும் விரைவாக முன்னேற முடியும்.

தமிழில் சில முக்கியமான ஆவணப்படங்கள்.
பீ – இயக்குனர் சு.அமுதன்,
நதியின் மரணாம் – சீனிவாசன்,
பேசாமொழி – செந்தமிழன்,
காவிரிப்படுகை : துரோகமும் துயரமும் - யாமினி,
தேவதைகள் – லீனா மணிமேகலை,
மூன்றாம் தியேட்டர் – அம்ஷன் குமார்

கட்டுரைக்கு உதவியது
சொல்லப்படாத சினிமா – ப,திருநாவுக்கரசு

நன்றி : நம் உரத்தசிந்தனை, எப்ரல் இதழ், 2014

Friday, March 21, 2014

சினிமா 1913-2013 – 4. மறக்க முடியாத கறுப்பு வெள்ளை சினிமா

ஒரு துறை நூற்றாண்டு காண்கிறதென்றால் அந்த துறையில் இருப்பவர்கள் தொடர்ந்து வெற்றிக்கரமாக பங்களிப்பு அளித்திருக்கிறார்கள் என்பது பொருள். காலத்திற்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றிக் கொண்டுயிருக்கிறார்கள். மாற்றிக் கொள்ளதாவர்கள் ஒறம் கட்டப்பட்டிருக்கிறார்கள். அப்போது தான் அந்த துறை பல வருடங்கள் இருக்கும் முடியும். சினிமாத்துறை இந்த விஷயங்களை தவறாமல் செய்து வருகிறது. அதனால் தான், மக்கள் தங்கள் சொந்த கஷ்டங்கள் நடுவிலும் மனதில் சினிமா இருந்துக் கொண்டு இருக்கிறது. 

சென்ற தொடரில் தமிழில் தயாரான முதல் பேசும் படமான ’காளிதாஸ்’ பற்றி பார்த்திருந்தோம். அதேப் போல், தமிழ் சினிமாவின் அதன் முக்கிய படங்கள் சிலவற்றை கண்டிப்பாக நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். 



ஸ்ரீனிவாச கல்யாணம். (1934) 

பம்பாய், கோலாப்பூர், கல்கத்தா போன்ற இடங்களில் எடுக்கப்பட்ட வந்த தமிழ் படங்களில் முதல் முறையாக தமிழ்நாட்டில், தமிழர்களால் சென்னையில் தயாரிக்கப்பட்ட படம். புராணக் கதையான ஸ்ரீனிவாச – லஷ்மி திருமணத்தை மையமாக கொண்ட கதை. 

பூந்தமல்லி சாலையில் இருக்கும் நேரு பார்க் எதிரே ‘ஸ்ரீனிவாச சினிடோன்’ (பிறகு ‘சவுண்ட் சிடி’) நிறுவப்பட்டு படப்பிடிப்பு எடுத்தனர். கால ஒன்பது மணி தொடங்கி மாலை நான்கு மணி சூர்ய வெளிச்சத்தில் படப்பிடிப்பு நடத்தினர். 

மேனகா (1935) 

 தமிழில் வெளிவந்த முதல் சமூகப்படம். அதுவரை புராணக் கதைகளை படங்கள் எடுத்தவந்தவர்களுக்கும், தமிழ் ரசிகர்களுக்கும் புது அனுபவமாக இருந்தது. இந்த படத்திற்கு கதை எழுதியவர் வடூவூர் துரைசாமி அய்யங்கார். ராஜா சாண்டோ இயக்கிய இப்படம் பம்பாய் ரஞ்சித் ஸ்டூடியோவில் மூன்று மாதத்தில் இந்த படம் எடுக்கப்பட்டது. 

டி.கே சகோதரர்களான சண்முகம் அவர்கள் கதாநாயகனாகவும், பகவதி, சங்கரன், முத்துசாமி போன்றவர்கள் துணைபாத்திரத்தில் நடித்தனர். படத்தில் நடத்த அனைவருமே “பால ஷண்முகானந்த சபா” நாடகக் குழுவினர். 

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் தோன்றினார். இவரின் முதல் படம் ’சதிலீலாவதி’ என்றாலும், முதல் படமாக வெளிவந்தது ‘மேனகா’ தான். 

சதிலீலாவதி (1936) 

தமிழ் திரை உலகில் மறக்க முடியாத கலைஞர்களை உருவாக்கியப் படம்.

எம்.ஜி.ஆர், டி.எஸ்.பாலையா, கலைஞவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் போன்றவர்களின் முதல் படம் இது தான். அமெரிக்கரான எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய படம். 

ஆனந்த விகடனில் எஸ்.எஸ்.வாசன் அவர்கள் எழுதிய “சதிலீலாவதி” தொடரை தான் படமாக எடுத்தார்கள். எஸ்.எஸ்.வாசன் அவர்களின் திரையுலகப் பயணம் இந்த படத்தில் இருந்து தான் தொடங்கியது. மதுவால் ஒரு குடும்பத்தில் ஏற்படும் தீய்மையை விளக்கும் படம். 

சிந்தாமணி (1937) 

கதைகளே படத்திற்கு ஆணிவேர் என்று இருந்த காலத்தில் தமிழின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே.தியாகராஜ பாகவதரை புகழ் உச்சிக் கொண்டு சென்றப் படம். ஐம்பது வாரங்கள் மேல் வெற்றிக்கரமாக ஓடியப்படம். 

இந்த படத்தில் இடம் பெற்று இருக்கும் இருபத்தியாறு பாடல்களில் ஒன்பது பாடல்கள் மிகவும் பிரபலம். 

தியாக பூமி (1939) 

இன்று விஸ்வரூபம், தலைவா போன்ற படங்களுக்கு அரசியல் காரணங்களுக்காக தடைவிக்கப்பட்டிருக்கலாம். முதன் முதலில் வெள்ளையர்களால் தமிழில் தடைவிதிக்கப்பட்ட கல்கி அவர்கள் எழுதிய கதையை படமாக்கப்பட்ட “தியாக பூமி” தான். கல்கி அவர்கள் முதன் முதலின் திரைக்கதை அமைத்ததும் இதில் தான். 

இந்த படத்திற்கு பலர் எதிர்குரல் எழுப்பியதால் ஆங்கிலேயர்கள் தடைவித்தனர். 1952ல் படத்திற்கு போடப்பட்ட தடையது அரசு விலக்கிக் கொண்டது. இந்த படத்தில் நடித்த எஸ்.டி.சுப்புலட்சுமி சில காட்சிகளில் ஆண் வேடம் போட்டு நடித்திருப்பார். தமிழ் படங்களில் ஒரு பெண் ஆண் வேடம் போட்டு நடித்த முதல் படமாகவும் “தியாக பூமி” கருதப்படுகிறது. 

மாத்ரு பூமி (1939) - முதன் முதலில் சரித்திரங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட படம். 

பக்த சேதா (1940) – தீண்டாமை ஒழிப்பை பின்னனியாக வைத்து எடுக்கப்படம். 

குமாஸ்தாவின் பெண் (1941) – வரதட்சணையினால் ஒரு குடும்பமே எப்படி பாழாகிறது என்பதை எடுத்துச் சொன்ன முதல் படம். 

கண்ணகி (1942) 

தியாகராஜ பாகவதரை அடுத்து திரையுலகின் பெரிய நட்சத்திரமான பி.யூ.சின்னப்பா அவர்களை புகழ் உச்சிக்கு கொண்டு சென்றப் படம். எத்தனை பக்கம் வசனமாக இருந்தாலும், சரியாக பேசக் கூடிய நடிகை என்று பெயர் எடுத்த பி.கண்ணம்பா அவர்கள் சரியாக வசனம் பேச முடியாமல் தடுமாறிய காலத்தில் எடுத்தனர். 

மனோன்மணி (1942) 

சினிமா செட் போட்டு படங்கள் எடுக்கப்பட்ட காலத்தில் முதல் முதலில் வெளிப்புறப் படப்பில் எடுக்கப்பட்ட படம். 

ஹரிதாஸ் (1944) 

அன்று மட்டுமல்ல…. இனி என்றும் தமிழ் திரையுலகில் இந்த படத்தின் சாதனையை யாராலும் உடைக்க முடியாதப் படம். மூன்று தீபாவளி கொண்டாடிய ஒரே தமிழ்ப்படம் இது தான். இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் தியாகராஜ பாகவதர்தான். அவருடைய ரசிகர் பலம் தான் இந்தப் படம் இமாய சாதனையை சாதித்தது. அதே சமயம் பாகவதரின் கடைசி வெற்றிப்படமாகவும் ‘ஹரிதாஸ்’ இருந்தது அவருடைய துரதிஷ்டம். 

மீரா (1945) 

 தமிழ் திரையுலகில் அழிக்க முடியாத பாடல்களை கொண்டு உருவாக்கப்பட்ட படம் மீரா. எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் நடித்த கடைசிப்படம் இது தான். 

நாம் இருவர் (1947) 

குடும்ப உறவுகளின் பின்னனியில் அரசியல் வசனங்கள் கொண்டு வந்த முதல் படம். 

சந்திரலேகா (1948)

ஒரு படத்திற்கு ஒருவர் பணத்தை இவ்வளவு செலவு செய்வார்களா என்று வியக்க வைத்த முதல் பிரமாண்ட தமிழ் படம். இந்த படத்தை இயக்கிய எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தனது சொந்த செலவில் தயாரித்தார். விளம்பர சக்தி ஒரு படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த படத்தின் விளம்பரம் மூலம் எஸ்.எஸ்.வாசன் அவர்கள் உணர்த்தினார். தமிழில் மட்டுமில்லாமல் இந்தியிலும் இந்த படம் மிக பெரிய வெற்றிப் பெற்றது. 

கிடைத்த தகவலில் தொகுக்கப்பட்டது. இதில் சில படங்கள் விடப்பட்டிருந்தால், அது முக்கியமான படம் இல்லை என்று பொருள் அல்ல. எதாவது படங்கள் விடப்பட்டிருப்பது தெரிவித்தால், தெரியப்படுத்துங்கள். 

கட்டுரைக்கு உதவியது : 
சரித்திரம் படைத்த திரைப்படங்கள் – திரையோகி , விஜயா பதிப்பகம்

நன்றி : நம் உரத்தசிந்தனை, மார்ச் இதழ், 2014

LinkWithin

Related Posts with Thumbnails