கடந்த பத்து மாத தொடரில் 1930-50களில் சினிமா இயங்கி, அறிமுகமான கலைஞர்களை பார்த்து வந்தோம். மறக்கமுடியாத சிலரை தெரிந்துக் கொண்டோம். இனி, அடுத்த காலக்கட்டமான 1950-70களில் தமிழ் சினிமாவில் பங்களித்து மாற்றம் தந்த கலைஞர்களை பார்க்க இருக்கிறோம்.
1930களில் பாடல் பாடத் தெரிந்தவர்கள் தான் கதாநாயகர்களாக நடிக்க முடியும் என்று இருந்தது. ஆனால், 1950களில் வசன உச்சரிப்பு, நடிப்பு, முகப்பாவனை என்று பல விஷயங்களை நடிகர் திரையில் காட்ட வேண்டியதாக இருந்தது. பாடல், இசை எல்லாம் பின்னனியில் பார்த்துக் கொண்டனர். ஆன்மீக படங்களை விட சமூகப் படங்கள் அதிகமாக எடுக்கத் தொடங்கினர். படங்களில் பாடல்களும் முன்பை விட குறையத் தொடங்கியது.
தியாகராஜர் பாகவதர் – பி.யு.சின்னப்பா போன்றவர்கள் மறக்கடிக்கப்பட்டு எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற மூன்மூர்த்திகளும், ஜெய்சங்கர், எஸ்.எஸ்.ஆர், முத்துராமன், எவிஎம்.ராஜன் போன்ற இடைநிலை நடிகர்களும் காலுன்ற தொடங்கினார்கள்.
எம்.ஜி.ஆர்
தமிழ்த்திரையில் சூப்பர் ஸ்டாராகவும், பிறகு தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர் எம்.ஜி.ஆர். சாதாரன குடும்பத்தில் பிறந்து, குடும்ப கஷ்டங்களுக்காக நாடக கம்பேனியில் இவரும், இவரது சகோதரர் சக்ரபாணியும் சிறு சிறு வேடகங்களில் நடித்தனர். 1936ல் 19 வயது இருக்கும் போது எஸ்.எஸ்.வாசன் எழுதிய “சதிலீலாவதி” படத்தில் நாயகனாக அறிமுகமானார். ஆனால், அவருக்கு தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் (வீர ஜெகதீஷ், மாயா மச்சீந்திரா,பிரகலாதா, சீதா ஜனனம்) தான் நடிக்க வேண்டியதாக இருந்தது.
11 வருடங்களுக்கு போராட்டத்திற்கு பிறகு 1947ல் வெளியான ‘ராஜகுமாரி’ படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தை இயக்கியவர் ஏ.எஸ்.ஏ.சாமி. ஜூபிடர் பிலிம்ஸ் தயாரித்து.
திரையுலகில் ஆரம்பக்கட்டம் என்பதால் “அபிமன்பு” படத்தில் அர்ஜுனனாக சிறு வேடத்தில் மீண்டும் நடித்தார். இந்த படத்திற்கு வசனம் எழுதியவர் மு.கருணாநிதி !!
சிறையில் வெளிவந்த பாகவதர் ‘ராஜமுக்தி’ என்ற படத்தை தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தில் அவருக்கு அடுத்து, தளபதி பாத்திரத்தில் (இரண்டாவது நாயகனாக) எம்.ஜி.ஆர் நடித்தார். அதில் கதாநாயகியாக நடித்தவர் வி.என்.ஜானகி அம்மா அவர்கள். இந்த படத்தில் தான் இருவரும் முதன் முதலில் சந்தித்தனர். ’ராஜமுக்தி’ படம் மிகப் பெரிய தோல்வியை தழுவியது.
இதற்கடுத்து, எம்.ஜி.ஆர் – வி.என்.ஜானகி இணைந்து நடித்த ‘மோகினி’ படம் வெற்றிப் பெற்றது. அதைத் தொடர்ந்து ’மருதநாட்டு இளவரசி’ படமும் வெற்றிப் பெற்றது. பிறகு, இருவரும் வாழ்க்கையிலும் இணைந்தனர்.
மர்மயோகி (முதல் ‘ஏ’ சர்டிபிகேட் படம்), என் தங்கை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தாலும், எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது ‘மலைக்கள்ளன்’ படம் தான். குலேபகாவலி, மதுரை வீரன், அலிபாபாவும் 40 திருடங்கல் என்று அடுக்கடுக்காக வெற்றிப்படங்களை குவித்து தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாக மாறினார். அவருடைய ‘கால்ஷீட்’ பெற ஒரு பெருபடை காத்திருந்தது.
இந்த காலக்கட்டத்தில் ‘எம்.ஜி.ஆர்’ பிக்சர்ஸ் பெயரில் ‘நாடோடி மன்னன்’ படத்தை அவரே தயாரித்து, இயக்கி நடித்தார். இந்த படமும் வசூல் குவித்த வெற்றிப் படமாக அமைந்தது. 1963ல் மட்டும் 9 படங்கள் அவர் கதாநாயகனாக நடித்து, அனைத்து படங்களும் வசூல் குவித்து வெற்றிப்பெற்றது.
அரசியல் காரணத்திற்காக தி.மு.க கட்சியை விட்டு விலகி, அ.தி.மு.க கட்சி தொடங்கினார். 1977ல் தேர்தலில் பெரும்பான்மை பெற்று வெற்றிப் பெற்றார். அவர் கடைசியாக நடித்த ‘மதுரை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்து கொடுத்த பிறகே முதல் அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
’சிவாஜி’ கணேசன்
கணேசனாக நாடகத்தில் நடித்துக் கொண்டு இருந்தவர், பெரியாரால ‘சிவாஜி’ என்று பெயர் சூட்டப்பட பின்பு இதுவே இவரின் பெயராக மாறிவிட்டது. ஆரம்பக் காலத்தில் நாடகத்தில் சிறு சிறு வேடங்களில் நடத்தவர், இவரது திறமையை பார்த்து முதல் படமே நாயகனாக ’பராசக்தி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
‘பராசக்தி’ படத்தில் கொண்ட பகுத்தறிவு பிரச்சாரத்தால், பொறுக்க முடியாத பலர் அந்த படத்திற்கு தடைவிதிக்க முயற்சித்தனர். ஆனால், எதுவும் அவர்களால் செய்ய முடியவில்லை. முதல் படமே வெற்றிப் பெற்றதால் ’சிவாஜி’ கணேசன் பலரது கவனத்தை ஈர்க்கத் தொடங்கினார்.
பணம், மனோகரா, தூக்குத் தூக்கி போன்ற படங்கள் நல்ல நாயகனாகவும், திரும்பி பார், அந்த நாள், கூண்டுக்கிளி போன்ற படங்களில் எதிர்மறை நாயகனாகவும் நடித்தார். இந்த பாத்திரத்திற்கு தான் இவர் பொருந்துவார் என்ற முத்திரையும் இவர் மேல் விழவே இல்லை. எப்படிப்பட்ட பாத்திரத்தை கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பார் என்று பெயர் எடுத்தார்.
புராணப்படங்கள், சமூகப்படங்கள், மாயாஜாலப் படங்கள் என்று சிவாஜி கணேசனுக்கு எந்த வித்தியாசமும் கிடையாது. படத்தில் சிறு வேடம் கொடுத்தால் கூட, மற்றவர்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கு அவருடைய நடிப்பு இருந்தது.
கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற விடுதலை வீரர்களை பற்றி மக்கள் சிவாஜி உருவத்தில் தான் தெரிந்துக் கொண்டனர். படிக்காத மேதை, பாசமலர், உயர்ந்த மனிதன் போன்ற உணர்வு மிக்க படங்களிலும், தில்லாணா மோகனாம்பாள், திரிசூலம், வியாட்நாம் வீடு போன்ற படங்களில் நடிப்பின் எல்லா பரிநாபத்தையும் காட்டினார்.
முழுவதுமாக சொல்ல வேண்டும் என்றால், நடிப்பு இலக்கணம் வகுத்துக் கொடுத்தவர் ‘சிவாஜி’ கணேசன் என்று சொல்லும் அளவிற்கு அவருடைய நடிப்பு இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில் சிவாஜி நடித்த தோல்விப்படங்கள் கூட இவர் நடித்ததற்காகவே இன்று வரை ரசித்து பார்க்கும் ரசிகர் கூட்டம் இருக்கிறது.
பல தலைவர்களில் வேடத்தில் நடத்த சிவாஜி, கடைசி வரையில் தனக்கு ‘சிவாஜி’ என்று பெயர் வைத்த பெரியார் வேடத்தில் நடிக்கவில்லை என்ற குறை இருந்து கொண்டே இருந்தது. ரஜினி, கமல் போன்ற அடுத்த தலைமுறைகளோடு இல்லாமல், அதற்கடுத்த தலைமுறை நடிகரான விஜய் வரை சிவாஜி கணேசன் நடித்திருக்கிறார்.
’ஜெமினி’ கணேசன்
சண்டைக்காட்சிக்கு எம்.ஜி.ஆர், நடிப்புக்கு ‘சிவாஜி’ கணேசன் என்றால் காதலுக்கு ‘ஜெமினி’ கணேசன். ( நிஜ வாழ்க்கையிலும் இவர் காதல் மன்னன் என்பது வேறு கதை.)
இவர் பெயரும் கணேசன் தான். ஆரம்பக்காலத்தில் ‘ஜெமினி’ ஸ்டூடியோவில் வேலைப்பார்த்ததால் இவரை பின்னாளில் ‘ஜெமினி’ கணேசன் என்று அழைக்கத் தொடங்கினர். இவர் முதல் படமான ‘மிஸ் மாலினி’ படத்தில் துணை பாத்திரமாக தான் அறிமுகமானார். பெரும்பாலும் ஜெமினி தயாரிப்பு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.
பிறகு, ’தாய் உள்ளம்’ படத்தில் ஆர்.எஸ்.மனோகர் கதாநாயகனாக நடிக்க, ஜெமினி கணேசன் வில்லனாக நடித்தார். ( பின்னாளில் நிலைமை தலைக்கீழாக மாறியது.)
’மனம் போல் மாங்கல்யம்’ படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் இரட்டை வேடத்தில் நடித்தார். அந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி கூட இரட்டை வேடத்தில் நடித்ததில்லை. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் சாவித்திரி அம்மா அவர்கள்.
பெண், மிஸ்ஸியம்மா, கணவனே கண்கண்ட தெய்வம் போன்ற வெற்றிப்படங்களில் நடித்தார். குறிப்பாக, ’கணவனே கண்கண்ட தெய்வம்’ படத்தில் கூனன் வேடத்தில் நடித்தது ஜெமினி கணேசனா என்று கேட்கும் அளவிற்கு அவருடைய ஒப்பனைகள் இருந்தது.
ஏற்கனவே திருமணமானவர் என்றாலும் ’நடிகை திலகம்’ சாவித்திரி அம்மாவை திருமணம் செய்துக் கொண்டார். இருவரும் திரைத்துரையில் மட்டுமில்லாமல் பல சமூக காரியங்களுக்கும் நல் உதவி செய்துவந்தார்கள். காலத்தின் கட்டாயத்தால் சாவித்திரி அம்மாவை பிரிய வேண்டியதாக இருந்தது.
பிரபு, கார்த்திக் போன்ற அடுத்த தலைமுறை நடிகரோடு இல்லாமல், அஜித், பிரபு தேவா போன்ற மூன்றாவது தலைமுறையோடும் நடித்திருக்கிறார். ’கிருஷ்ணதாசி’ என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்திருக்கிறார்.
1950-70களில் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி தமிழ் சினிமாவின் முவேந்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
தமிழ் சினிமா தியாகராஜர் பாகவதர் – பி.யு.சின்னப்பா கொடிக்கட்டி பறந்தாலும் இறக்கும் போது பொருளாதார நெருக்கடியில் இருந்தனர். ஆனால், அவர்களுக்கு அடுத்த நட்சித்திரங்களான எம்.ஜி.ஆர் – சிவாஜி – ஜெமினி இருந்தவர்கள் தங்கள் பாதையில் சரியாக பயனித்தனர். இன்றைய நடிகர்களும் இவர்கள் அமைத்த பாதையில் ஒன்றில் பயணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கல்.
எம்.ஜி.ஆரை போல் தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரத்துடிக்கும் நடிகர்கள், ஜெமினி போல் காதல் வசப்படும் நடிகர்கள், சிவாஜி போல் அரசியல் – சினிமா இரட்டை கப்பலில் பயணம் செய்யும் நடிகர்கள் என்று இந்த மூவேந்தர்கள் வழி காட்டிய பாதை தான்.
நன்றி : நம் உரத்தசிந்தனை இதழ் ( டிசம்பர், 2014 மற்றும் பிப்ரவரி,2015)
நன்றி : நம் உரத்தசிந்தனை இதழ் ( டிசம்பர், 2014 மற்றும் பிப்ரவரி,2015)
No comments:
Post a Comment