“இஸ்லாம், மனிதனுடைய உள்ளத்தை மட்டுமில்லாமல், அவனது அறிவையும் முன்னிறுத்தியே பேசுகிறது. அறிவாற்றல் சந்திப்பதுதான் உண்மை நிலையின் பக்கம் உள்ளம் சென்றடைவதற்குரிய வழியாகும் என்பதும் அது ஈமானை உறுதிப்படுத்தக்கூடிய நேரிய வழிகளில் ஒன்றாக இருக்கிறது என்பதும் இஸ்லாத்தின் தத்துவங்களாகும்.”
– பேராசிரியர் அப்பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறியதாக இந்நூலில் (பக்.37) இடம் பெறுகிறது.
இன்று, உலகில் அதிகம் பேசப்படும், விமர்சிக்கப்படும் இஸ்லாம்தான், ஒரு பக்கம் தாலிபன், அல் கொயிதா, I.M, ISIS போன்ற பல இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் மூலம் பல தாக்குதல் நடத்தியுள்ளது. பலர் இவர்களால் இறந்திருக்கிறார்கள். தாக்குதல் நடத்துபவர்கள் தங்கள் கொள்கையோடு மதத்தையும் முன் நிறுத்துகிறார்கள்.
இன்னொரு பக்கம் குரானில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாழ்வியல் நெறி, வழிமுறைகள் உலகிற்கு எடுத்துக் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். உலகத்தில் மிகப் புனிதமான மார்க்கமாக இஸ்லாம் மதத்தை முன் நிறுத்துகிறார்கள்.
இரு தரப்பினரும் நேர் எதிரில் இருப்பவர்கள். ஆனால், உலகப்பார்வையில் இருவருமே ஒன்றாகத் தெரிகிறார்கள். இரண்டு எதிர் பக்கத்தில் இருப்பவர்களை ஒரே மாதிரியாக விமர்சனம் செய்கிறார்கள்.
“நீ என்னை வெட்டுவதற்காக உன் கையை என்னளவில் நீட்டினா(ல் அந்நேரத்தி)லும், நான் உன்னை வெட்டுவதற்காக என்னுடைய கையை உன்னளவில் நீட்டவே மாட்டேன். ஏனென்றால் நிச்சயமாக நான் அகிலத்தார் யாவரையும் படைத்துப் போஷித்து இரட்சிப்போனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றேன். என்னுடைய பாவத்தையும் நீ சுமந்துகொண்டு (இறைவனிடம்) வருவதையே நான் விரும்புகிறேன். அவ்வாறாயின், நீ நரகவாசிகளில் உள்ளவனாகி விடுவாய்; இதுதான் அக்கிரமக்காரர்களுக்குரிய கூலியாகும்”, (இவ்வாறு ஹாபீல் கூறினார்) – (அல்குர் ஆன் 5:28, 29)
தன்னைக் கொல்ல வருபவனை கொலை செய்யக்கூடாது என்பதை குரான் சொல்கிறது. அப்படி இருக்கும்போது பள்ளிச் சிறுவர்களை கொன்று குவித்தவர்களை உண்மையான இஸ்லாமியர்களாக எப்படிச் சொல்ல முடியும்? வன்முறை தூண்டுபவர்கள் எப்படி இஸ்லாமியராக இருக்க முடியும்? உண்மையில் குரானுக்கு எதிராகதான் இஸ்லாமியத் தீவிரவாதிகள் போராடுகிறார்கள் என்பதை இந்த வரிகள் உணர்த்துகிறது.
மதத்தின் பெயரில் தனது மதத்திற்காக கொலை செய்பவன் என்று சொல்பவன்தான், தனது மதத்திற்கு உண்மையான எதிரியாகிறான். அதற்கு, மதத்தின் பெயரால் தாக்குதல் நடத்துபவர்களே சாட்சி!
பல இடங்களில் கிறிஸ்தவ மதங்கள் விமர்சிக்கப்படுகிறது. இஸ்லாமுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் பரப்பிய பிரசாரத்தைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக இஸ்ரேலியர்கள் எழுதும் விரிவுரைகள் இஸ்லாமிற்கு களங்கம் விளைவிப்பதாக இருப்பதை எடுத்துக் கூறுகிறார்.
“மனிதர்களின் மூலம் நீ உண்மையை அடையாளம் கண்டுகொள்ள முடியாது. முதலில் நீ உண்மை எதுவென்று தெரிந்துகொள்! அதன் பின்னர் உண்மை கூறுபவர் யார் என்பது தானாகவே உனக்கு தெரிந்துவிடும்” என்ற அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் அமுதமொழி இங்கே குறிப்பிடத்தக்கது. (பக்.110)
அல்லாஹ் உங்களின் வெளித் தோற்றங்களை மட்டும் பார்ப்பதில்லை. உங்களின் உள்ளங்களைத்தான் பார்க்கிறான் என்பதாக ஒரு ஹதீஸ் கூறுகிறது.
தன்னை வணங்குவதற்காகவும், காணிக்கை செலுத்துவதற்காகவும் கடவுள் மனிதனை படைக்கவில்லை.
இந்த செயல் வீரர்களில் பெண்கள் இருக்கிறார்களா என்பது தெளிவாகக் குறிப்பிடவில்லை. செயல்வீரர்கள் என்பது பெண்களும் அடக்கம்தானே என்று நம்முள் தோன்றினாலும், இந்து – கிறிஸ்தவ மதத்தில் பெண் மத போதகர்கள் இருப்பதுபோல் இஸ்லாமில் இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
இஸ்லாம் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறது என்ற இன்னொரு பொதுவான விமர்சனத்துக்கு இந்த நூல் பதில் அளிக்கவில்லை.
இஸ்லாம் பற்றி தெரிந்துகொள்ள மேலும் சில நூல்களை ஆசிரியர் பரிந்துரைக்கிறார்.
**
இஸ்லாம் மதத்தினரை என்னதான் பலர் விமர்சனம் செய்தாலும் ‘இஸ்லாமிய வங்கி’ (Islamic Banking) முறைக்கு உலக அளவில் வரவேற்பு உண்டு.
“பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள ஒரு ஏழை, தன்னுடைய அல்லது தன்னுடைய குடும்ப அவசியத் தேவைகளைக்கூட முழுமையாக சரிக்கட்ட முடியாத நிலையிலிருக்கின்றான். வேறு யாரிடமாவது கடன் வாங்குவதைத் தவிர வேறு வழி எதுவும் அவனுக்கு இல்லை. 10 ரூபாய் கடன் வாங்கினால், 11 அல்லது 12 ரூபாயாக அல்லது இதைவிட கூடுதல் குறைவாக திரும்ப இவனிடம் கேட்பவர்கள்தான், கடன் கொடுக்க முன்வருகிறார்கள். இந்த வட்டி முதலைகளைத் தவிர பெரிய பணக்காரர்கள் கடன்கொடுக்க முன்வராததினால் இவர்களிடமே அந்த ஏழை வட்டிக்கு பணம் வாங்கும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறான். இதனால்தான் வட்டியை இஸ்லாம் தடை செய்துள்ளது என்ற வாதம் இந்த ஒரு நிலைக்கு மட்டுமே பொருந்தும்.” (பக். 183, 184)
இஸ்லாமிய வங்கி முறை பணம் கொடுப்பவர் நமது தொழிலில் ஒரு பங்குதாரராகவே ஆகிறார். லாபத்திலும், நஷ்டத்திலும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். நாம் நஷ்டப்பட்டாலும் வட்டி கட்டவேண்டும் என்கிற முறை இல்லை. அதே சமயம் அந்த வங்கியில் பணம் போட்டிருப்பவர்களுக்கு வட்டி கிடைக்காததால், உலகளாவிய நாடுகளில் வரவேற்பு இல்லை.
இஸ்லாமிய செயல் வீரர்களின் அடிப்படைத் தகுதி குரானை முழுமையாக வாசித்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைத்தான் நூல் முன்மொழிகிறது. அப்படி குரானை முழுமையாக வாசித்தவன் அன்பை மட்டுமே ஏந்துவான். ஆயுதங்களை அல்ல…!
**
இஸ்லாமிய செயல் வீரர்களின் அடிப்படைத் தகுதிகள்,
- டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி,
இலக்கியச் சோலை, ரூ. 130
No comments:
Post a Comment