வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, March 21, 2014

சினிமா 1913-2013 – 4. மறக்க முடியாத கறுப்பு வெள்ளை சினிமா

ஒரு துறை நூற்றாண்டு காண்கிறதென்றால் அந்த துறையில் இருப்பவர்கள் தொடர்ந்து வெற்றிக்கரமாக பங்களிப்பு அளித்திருக்கிறார்கள் என்பது பொருள். காலத்திற்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றிக் கொண்டுயிருக்கிறார்கள். மாற்றிக் கொள்ளதாவர்கள் ஒறம் கட்டப்பட்டிருக்கிறார்கள். அப்போது தான் அந்த துறை பல வருடங்கள் இருக்கும் முடியும். சினிமாத்துறை இந்த விஷயங்களை தவறாமல் செய்து வருகிறது. அதனால் தான், மக்கள் தங்கள் சொந்த கஷ்டங்கள் நடுவிலும் மனதில் சினிமா இருந்துக் கொண்டு இருக்கிறது. 

சென்ற தொடரில் தமிழில் தயாரான முதல் பேசும் படமான ’காளிதாஸ்’ பற்றி பார்த்திருந்தோம். அதேப் போல், தமிழ் சினிமாவின் அதன் முக்கிய படங்கள் சிலவற்றை கண்டிப்பாக நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். 



ஸ்ரீனிவாச கல்யாணம். (1934) 

பம்பாய், கோலாப்பூர், கல்கத்தா போன்ற இடங்களில் எடுக்கப்பட்ட வந்த தமிழ் படங்களில் முதல் முறையாக தமிழ்நாட்டில், தமிழர்களால் சென்னையில் தயாரிக்கப்பட்ட படம். புராணக் கதையான ஸ்ரீனிவாச – லஷ்மி திருமணத்தை மையமாக கொண்ட கதை. 

பூந்தமல்லி சாலையில் இருக்கும் நேரு பார்க் எதிரே ‘ஸ்ரீனிவாச சினிடோன்’ (பிறகு ‘சவுண்ட் சிடி’) நிறுவப்பட்டு படப்பிடிப்பு எடுத்தனர். கால ஒன்பது மணி தொடங்கி மாலை நான்கு மணி சூர்ய வெளிச்சத்தில் படப்பிடிப்பு நடத்தினர். 

மேனகா (1935) 

 தமிழில் வெளிவந்த முதல் சமூகப்படம். அதுவரை புராணக் கதைகளை படங்கள் எடுத்தவந்தவர்களுக்கும், தமிழ் ரசிகர்களுக்கும் புது அனுபவமாக இருந்தது. இந்த படத்திற்கு கதை எழுதியவர் வடூவூர் துரைசாமி அய்யங்கார். ராஜா சாண்டோ இயக்கிய இப்படம் பம்பாய் ரஞ்சித் ஸ்டூடியோவில் மூன்று மாதத்தில் இந்த படம் எடுக்கப்பட்டது. 

டி.கே சகோதரர்களான சண்முகம் அவர்கள் கதாநாயகனாகவும், பகவதி, சங்கரன், முத்துசாமி போன்றவர்கள் துணைபாத்திரத்தில் நடித்தனர். படத்தில் நடத்த அனைவருமே “பால ஷண்முகானந்த சபா” நாடகக் குழுவினர். 

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் தோன்றினார். இவரின் முதல் படம் ’சதிலீலாவதி’ என்றாலும், முதல் படமாக வெளிவந்தது ‘மேனகா’ தான். 

சதிலீலாவதி (1936) 

தமிழ் திரை உலகில் மறக்க முடியாத கலைஞர்களை உருவாக்கியப் படம்.

எம்.ஜி.ஆர், டி.எஸ்.பாலையா, கலைஞவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் போன்றவர்களின் முதல் படம் இது தான். அமெரிக்கரான எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய படம். 

ஆனந்த விகடனில் எஸ்.எஸ்.வாசன் அவர்கள் எழுதிய “சதிலீலாவதி” தொடரை தான் படமாக எடுத்தார்கள். எஸ்.எஸ்.வாசன் அவர்களின் திரையுலகப் பயணம் இந்த படத்தில் இருந்து தான் தொடங்கியது. மதுவால் ஒரு குடும்பத்தில் ஏற்படும் தீய்மையை விளக்கும் படம். 

சிந்தாமணி (1937) 

கதைகளே படத்திற்கு ஆணிவேர் என்று இருந்த காலத்தில் தமிழின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே.தியாகராஜ பாகவதரை புகழ் உச்சிக் கொண்டு சென்றப் படம். ஐம்பது வாரங்கள் மேல் வெற்றிக்கரமாக ஓடியப்படம். 

இந்த படத்தில் இடம் பெற்று இருக்கும் இருபத்தியாறு பாடல்களில் ஒன்பது பாடல்கள் மிகவும் பிரபலம். 

தியாக பூமி (1939) 

இன்று விஸ்வரூபம், தலைவா போன்ற படங்களுக்கு அரசியல் காரணங்களுக்காக தடைவிக்கப்பட்டிருக்கலாம். முதன் முதலில் வெள்ளையர்களால் தமிழில் தடைவிதிக்கப்பட்ட கல்கி அவர்கள் எழுதிய கதையை படமாக்கப்பட்ட “தியாக பூமி” தான். கல்கி அவர்கள் முதன் முதலின் திரைக்கதை அமைத்ததும் இதில் தான். 

இந்த படத்திற்கு பலர் எதிர்குரல் எழுப்பியதால் ஆங்கிலேயர்கள் தடைவித்தனர். 1952ல் படத்திற்கு போடப்பட்ட தடையது அரசு விலக்கிக் கொண்டது. இந்த படத்தில் நடித்த எஸ்.டி.சுப்புலட்சுமி சில காட்சிகளில் ஆண் வேடம் போட்டு நடித்திருப்பார். தமிழ் படங்களில் ஒரு பெண் ஆண் வேடம் போட்டு நடித்த முதல் படமாகவும் “தியாக பூமி” கருதப்படுகிறது. 

மாத்ரு பூமி (1939) - முதன் முதலில் சரித்திரங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட படம். 

பக்த சேதா (1940) – தீண்டாமை ஒழிப்பை பின்னனியாக வைத்து எடுக்கப்படம். 

குமாஸ்தாவின் பெண் (1941) – வரதட்சணையினால் ஒரு குடும்பமே எப்படி பாழாகிறது என்பதை எடுத்துச் சொன்ன முதல் படம். 

கண்ணகி (1942) 

தியாகராஜ பாகவதரை அடுத்து திரையுலகின் பெரிய நட்சத்திரமான பி.யூ.சின்னப்பா அவர்களை புகழ் உச்சிக்கு கொண்டு சென்றப் படம். எத்தனை பக்கம் வசனமாக இருந்தாலும், சரியாக பேசக் கூடிய நடிகை என்று பெயர் எடுத்த பி.கண்ணம்பா அவர்கள் சரியாக வசனம் பேச முடியாமல் தடுமாறிய காலத்தில் எடுத்தனர். 

மனோன்மணி (1942) 

சினிமா செட் போட்டு படங்கள் எடுக்கப்பட்ட காலத்தில் முதல் முதலில் வெளிப்புறப் படப்பில் எடுக்கப்பட்ட படம். 

ஹரிதாஸ் (1944) 

அன்று மட்டுமல்ல…. இனி என்றும் தமிழ் திரையுலகில் இந்த படத்தின் சாதனையை யாராலும் உடைக்க முடியாதப் படம். மூன்று தீபாவளி கொண்டாடிய ஒரே தமிழ்ப்படம் இது தான். இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் தியாகராஜ பாகவதர்தான். அவருடைய ரசிகர் பலம் தான் இந்தப் படம் இமாய சாதனையை சாதித்தது. அதே சமயம் பாகவதரின் கடைசி வெற்றிப்படமாகவும் ‘ஹரிதாஸ்’ இருந்தது அவருடைய துரதிஷ்டம். 

மீரா (1945) 

 தமிழ் திரையுலகில் அழிக்க முடியாத பாடல்களை கொண்டு உருவாக்கப்பட்ட படம் மீரா. எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் நடித்த கடைசிப்படம் இது தான். 

நாம் இருவர் (1947) 

குடும்ப உறவுகளின் பின்னனியில் அரசியல் வசனங்கள் கொண்டு வந்த முதல் படம். 

சந்திரலேகா (1948)

ஒரு படத்திற்கு ஒருவர் பணத்தை இவ்வளவு செலவு செய்வார்களா என்று வியக்க வைத்த முதல் பிரமாண்ட தமிழ் படம். இந்த படத்தை இயக்கிய எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தனது சொந்த செலவில் தயாரித்தார். விளம்பர சக்தி ஒரு படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த படத்தின் விளம்பரம் மூலம் எஸ்.எஸ்.வாசன் அவர்கள் உணர்த்தினார். தமிழில் மட்டுமில்லாமல் இந்தியிலும் இந்த படம் மிக பெரிய வெற்றிப் பெற்றது. 

கிடைத்த தகவலில் தொகுக்கப்பட்டது. இதில் சில படங்கள் விடப்பட்டிருந்தால், அது முக்கியமான படம் இல்லை என்று பொருள் அல்ல. எதாவது படங்கள் விடப்பட்டிருப்பது தெரிவித்தால், தெரியப்படுத்துங்கள். 

கட்டுரைக்கு உதவியது : 
சரித்திரம் படைத்த திரைப்படங்கள் – திரையோகி , விஜயா பதிப்பகம்

நன்றி : நம் உரத்தசிந்தனை, மார்ச் இதழ், 2014

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails